Published:Updated:

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

கழுகார் பதில்கள்

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்.

ஜெயலலிதாவுக்காக இன்னும் வேண்டுதல் தொடர்ந்துகொண்டு இருக்கிறதே?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

வேண்டுதலுக்கான காரணம் இழுத்துக்கொண்டே போகிறதே? தீர்ப்பு வரும் வரை தொடரத்தானே வேண்டும்?

மேட்டுப்பாளையம் மனோகர்,  சென்னை-18.

ஆத்திகர் ராமானுஜரைப் பற்றி நாத்திகர் கருணாநிதி கதை - வசனம் எழுதுவது யாருக்குப் பெருமை?

ராமானுஜருக்குத்தான். நாத்திகர்களால் கூட ஏற்றுக்கொள்ளப்படுபவராக இருக்கிறார் அல்லவா?

மேலும், தி.மு.க-வை நாத்திகர்கள் கட்சி என்று சொல்லிவிட முடியாது. ‘ஒன்றே குலம், ஒருவனே தேவன்’ என்று அவர்கள் எப்போது சொல்ல ஆரம்பித்தார்களோ, அப்போதே நாத்திகம் பேசத் தகுதி உடையவர்கள் ஆக மாட்டார்கள். பெரியாரே இவர்களது நாத்திகத்தைக் கிண்டல் அடித்துள்ளார்.

‘திராவிடர் கழகத்தில் இருந்துகொண்டு கடவுள் இல்லை என்று சொன்ன இவர்கள், திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து, ஒரே ஒரு கடவுள் இருக்கிறது என்று கண்டுபிடித்ததுதான் இவர்கள் கண்ட முன்னேற்றம்’ என்று பெரியார் சொன்னார். எனவே, ஆத்திகம், நாத்திகம் பேசும் உரிமை தி.மு.க-வுக்கு இல்லை.

கழுகார் பதில்கள்

பொன்விழி, அன்னூர்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ பட்டம் மோடிக்குப் பொருந்துமா?

வாலிபரா அவர்?

எம்.சம்பத், வேலாயுதம்பாளையம்.

பட்ஜெட் உரையின்போது, 130 முறை ஜெயலலிதா பெயரை உச்சரித்தபோதெல்லாம் மேஜையைத் தட்டிய அ.தி.மு.க-வினர் ஒரே ஒரு முறை எம்.ஜி.ஆர் பெயரை உச்சரித்தபோது அமைதியாக இருந்த கொடுமை பற்றி?

எந்தச் செயல் தலைமைக்குப் பிடிக்கும், எது பிடிக்காது என்பது அவர்களுக்குத் தெரியும்.

எஸ்.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்.

‘உண்மையே உன் விலை என்ன?’ என்று அன்று சோ கேட்டார். இந்த 40 ஆண்டுகளில் அதன் நிலவரம் எப்படி மாறியுள்ளது?

2ஜி, நிலக்கரி, ஏர்செல் - மேக்ஸிஸ், ஆதர்ஷ், பெங்களூரு சொத்துக் குவிப்பு, முத்துக்குமாரசாமி... இப்படி பல நூறு விஷயங்கள் சிறியதும் பெரியதுமாக இருக்கின்றன. இவை அனைத்தையும் கூட்டிச் சொன்னால் விலை என்ன என்று சொல்லலாம்.

கழுகார் பதில்கள்

சரண்சுகன் சித்தப்பு, கருப்பம்புலம்.

என்ன போராட்டம் செய்தால் தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஒழியும்?

குடிக்க மாட்டோம் என்று சத்தியாகிரகம் செய்தால் டாஸ்மாக் முழுமையாக, நிச்சயமாக ஒழியும்.

வண்ணை கணேசன், சென்னை-110.

‘இனி ஸீட் யாருக்கு என்பதை சென்னைதான் முடிவு செய்யும். கட்சி வேலை செய்யாதவர்கள் சிபாரிசு செய்து டெல்லி போய் ஸீட் வாங்க முடியாது’ என்று இளங்கோவன் கூறி இருப்பது பற்றி?

இளங்கோவன் பலவிஷயங்களில் பேசுவதை உற்றுக் கவனித்தால் த.மா.கா-வைப் போல அவரும் தனிக்கட்சி நடத்துகிறாரோ என்ற சந்தேகம்தான் ஏற்படுகிறது. டெல்லித் தலைமையைப் பற்றிக் கவலைப்படாமல் பேசுகிறார். சபாஷ்!

தமிழினியன், விழுப்புரம்.

 போகிற போக்கைப் பார்த்தால் அரசியலையும் மதத்தையும் பிரிக்க முடியாதுபோல..?

அவை இரண்டும் சேர்வது சரியானது அல்ல.

1994-ம் ஆண்டு மார்ச் மாதம் 14-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதியரசர் ஜீவன்ரெட்டி தலைமையிலான ஆறு நீதிபதிகள் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பில்,
‘இந்தியாவில் எந்த ஓர் அரசியல் கட்சியும் ஒரேநேரத்தில் மதத்தையும் அரசியலையும் பிரசாரம் செய்ய முடியாது. மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பது அரசியல் சட்டத்தின் அடிப்படைக்கே எதிரானது. எங்களுடைய இந்தக் கருத்துகளை சிலர் ஜீரணிக்க முடியாமல் போகலாம். அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

அரசியல் சட்டத்தைக் காப்பாற்றுவோம் என்று உறுதியேற்று நாங்கள் பதவிப்பிரமாணம் எடுத்தவர்கள். எனவே அரசியல் சட்டத்தின் பிரிவுகள் கூறுவதையும் அது என்ன பொருளில் கூறப்பட்டுள்ளது என்பதையும் எங்களால் கூறமுடியும். மதச்சார்பின்மை என்பதுதான் அரசியல் சட்டத்தின் இலக்கு. அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமே மதச்சார்பின்மைதான். அரசியல் சட்டத்தின் இந்தக் கொள்கையோடு முரண்படுகிற எந்த நடவடிக்கையையும் அனுமதிக்க முடியாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வரைமுறைகளை அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டும்.

எஸ்.எம்.சுல்தான், கே.புதூர்.

பி.ஜே.பி கூட்டணியில் தே.மு.தி.க நீடிக்குமா?

விஜயகாந்த்தை முதலமைச்சர் வேட்பாளராக பி.ஜே.பி அறிவித்தால் நிச்சயமாக நீடிக்கும்.

இ.நாகராஜன், சாத்தூர்.

பதவியை இழந்த பிறகும் செல்வி ஜெயலலிதாவை இன்னமும் விளம்பரங்களில் ‘மாண்புமிகு மக்களின் முதல்வர்’ என்று விளம்பரம் செய்கிறார்களே. இதைப் பார்க்கும் மற்ற மாநில மக்களின் எண்ணம் எவ்வாறாக இருக்கும்?

அறம், அரசியல், நீதி, ஜனநாயகம் என்று அதிகமாகக் கூப்பாடு போடுகிறார்களே தமிழ்நாட்டு அறிவுஜீவிகள். அவர்கள் எல்லோரும் எங்கே போனார்கள் என்று மற்ற மாநிலத்து மக்கள் நினைக்கலாம்.


கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:
கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!