Published:Updated:

மிஸ்டர் கழுகு : பேரம் ஆரம்பம் !

மிஸ்டர் கழுகு : பேரம் ஆரம்பம் !

மிஸ்டர் கழுகு : பேரம் ஆரம்பம் !

‘‘அரசியல் மேகங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. நிழல் மனிதர்கள் தங்களது பேச்சுவார்த்தைகளைத் தொடங்கிவிட்டார்கள்” என்ற பீடிகை போட்டபடியே நம்முன் ஆஜரானார் கழுகார்.
 

‘‘இந்த ஆண்டு டிசம்பருக்குள் தேர்தல் நடக்கலாம் என்று தகவல் தந்துவிட்டதால் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கி இருக்கலாம்’’ என்று கழுகாரைத் தூண்டினோம். தலையாட்டியபடி ஆரம்பித்தார் கழுகார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டதை வரிசையாகச் சொல்கிறேன்.

கடந்த வாரத்தில் சென்னை வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவரான சீதாராம் யெச்சூரி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசனைச் சந்தித்தது பற்றி சொல்லியிருந்தேன். தி.மு.க., அ.தி.மு.க அல்லாத கூட்டணியை உருவாக்க வேண்டும் என்றும் அதில் தே.மு.தி.க., ம.தி.மு.க., த.மா.கா., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், மனித நேய மக்கள் கட்சி போன்றவை இணைந்து
ஒரு கூட்டணி அமைக்க வேண்டும் என்று யெச்சூரி நினைக்கிறார். அதைத்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் சொல்லியிருக்கிறார். இரண்டு பெரிய கட்சிகளும் வழக்கில் மாட்டிக்கொண்டு இருப்பது பற்றி கம்யூனிஸ்ட்கள் இந்தப் பேச்சுவார்த்தைகளில் சொல்லி இருக்கிறார்கள். தனது கட்சியின் பொதுக்குழு கூடி, மாநில நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட பிறகு அதுபற்றி பேசலாம் என்று ஜி.கே.வாசன் சொல்லிவிட்டார். ‘இந்தக் கூட்டணிக்குள் விஜயகாந்த்தைக் கொண்டு வரவேண்டும், அது நீங்கள் நினைத்தால்தான் செய்ய முடியும்’ என்றும் அப்போது பேசினார்கள். ‘இன்னும் சில மாதங்கள் ஆகலாம்’ என்று ஜி.கே.வாசன் மையமாகச் சொல்லி அனுப்பிவிட்டார். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.ராஜா எம்.பி-யும் ஜி.கே.வாசனிடம் பேசியிருக்கிறார். அப்போதும் கூட்டணி சம்பந்தமான பேச்சுகள் போயுள்ளன.”

‘‘ஓஹோ!”

‘‘இவை அனைத்தும் தி.மு.க வட்டாரத்துக்கு வந்து சேர்ந்தது. இப்படி ஒரு தனிக் கூட்டணி அமைக்கப்படுவதை தி.மு.க விரும்பவில்லை. ‘அ.தி.மு.க எதிர்ப்பு வாக்குகளை இந்தக் கூட்டணி உடைத்து, மீண்டும் ஜெயலலிதாவை வரவைத்துவிடும்’ என்று தி.மு.க நினைக்கிறது. அதனால் விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் தங்கள் அணிக்குள் இழுத்துக் கொள்ள தி.மு.க திட்டமிட்டுள்ளது.
தி.மு.க-வின் முதல் இலக்கு விஜயகாந்த். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே தி.மு.க விஜயகாந்த்தைச் சேர்க்க முயற்சித்தது. ஆனால், பி.ஜே.பி அணி என்று முதலிலேயே முடிவெடுத்துவிட்டார் விஜயகாந்த்.

அதனால், அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது முன்கூட்டியே தி.மு.க தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டது. ஸ்டாலினே களத்தில் குதித்துவிட்டார். மருமகன் சபரீசன், இளைஞர் அணியைச் சேர்ந்த அன்பில் மகேஷ் ஆகியோர் இதற்கான வேலைகளில் இறங்கிவிட்டார்கள். தி.மு.க என்ன நினைக்கிறது என்பதை விஜயகாந்த் கவனத்துக்கு இவர்கள் கொண்டு போய்விட்டார்களாம். ‘கடந்த தேர்தலில் அ.தி.மு.க கொடுத்த எண்ணிக்கையிலான இடங்களை தி.மு.க தரத் தயாராக இருக்கிறது’ என்ற அளவில் தகவல் அனுப்பியிருப்பதாகச் சொல்கிறார்கள். இதுபற்றி தே.மு.தி.க-வினரைக் கேட்டால், ‘அப்போது அ.தி.மு.க எங்களுக்குக் கொடுத்ததே குறைவான தொகுதிகள்தான். எனவே, அந்தக் கணக்கை இந்தத் தேர்தலில் பொருத்திப் பார்க்க முடியாது’ என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.

மிஸ்டர் கழுகு : பேரம் ஆரம்பம் !

சட்டமன்றத்தில் தே.மு.தி.க-வினர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைக் கண்டித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டது, அந்தத் தண்டனையைக் குறைக்கச்சொல்லி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியது, சட்டமன்ற வளாகத்தில் கறுப்புத்துணியைக் கட்டிக்கொண்டு போராட்டம் நடத்திய தே.மு.தி.க எம்.எல்.ஏ-க்களை ஸ்டாலின் சந்தித்துக் கை கொடுத்தது, ‘தே.மு.தி.க-வுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த கட்சிகளுக்கு நன்றி’ என்று விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டது... என பல்வேறு சம்பவங்கள் பரபரவென நடக்க ஆரம்பித்துள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் இந்தப் பேச்சுகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கலாம் என்றே சொல்கிறார்கள்!”

‘‘அப்படியா?”

‘‘விஜயகாந்த்தை இணைப்பதோடு, ஜி.கே.வாசனையும் சேர்த்துக்கொள்ள தி.மு.க நினைக்கிறது. கடந்த வாரத்தில் த.மா.கா பிரமுகர் சைதை ரவி இறந்துபோனார். அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஸ்டாலின் சென்றிருந்தார். அப்போது ஜி.கே.வாசனை சந்திப்பதற்கான திட்டமும் இருந்தது. ஜி.கே.வாசன் வரும் வரை காத்திருந்தார் ஸ்டாலின். இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக்கொண்டனர். பத்திரிகையாளர்கள் நடத்திய கருத்துச் சுதந்திரக் கூட்டமைப்புக் கூட்டத்தில் ஸ்டாலினுடன் ஜி.கே.வாசனும் கலந்துகொள்வதாகத்தான் பெயர் போடப்பட்டு இருந்தது. திடீரென ஜி.கே.வாசன் வராமல், வேலூர் ஞானசேகரனை அனுப்பிவிட்டார். இதே கூட்டத்தில் ம.தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா கலந்துகொண்டார். இப்படி பல கட்சிகளையும் தங்கள் அணிக்குள் கொண்டுவருவதற்கான முஸ்தீபுகளை ஸ்டாலின் தொடங்கிவிட்டார் என்றே சொல்கிறார்கள்.”

‘‘வைகோ- திருமாவளவன் சந்திப்பும் நடந்துள்ளதே?”

‘‘இது தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் எடுத்த முயற்சியாம். ஆந்திர வனத் துறையால் 20 தமிழர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து ஒவ்வொரு கட்சியும் தனித்தனியாகப் போராட்டம் நடத்துவதைவிட கூட்டுப் போராட்டம் அவசியம் என்று நினைத்தாராம் வேல்முருகன். அவர்தான் வைகோ, திருமாவளவன் ஆகிய இருவரையும் சென்னை நிருபர்கள் சங்கத்துக்கு வரவைத்து கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்துள்ளார். ஏப்ரல் 28-ம் தேதி சென்னையில் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் பேரணி நடக்க இருப்பதாக அறிவித்துள்ளார்கள். அன்று கவர்னர் ரோசய்யாவை சந்தித்து கோரிக்கை மனுவும் கொடுக்கிறார்கள்.”

‘‘வேல்முருகன் அ.தி.மு.க அணியில் இருப்பவர் ஆயிற்றே?”

‘‘இதன் பின்னணியில் அ.தி.மு.க இருக்கலாமோ என்று தி.மு.க-வும் உஷார் ஆகிவருகிறது.’’

‘‘பா.ம.க.?”

‘‘அவர்கள்தான் தனியாக முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்துவிட்டார்களே. கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன என்று பா.ம.க-வுக்கும் தெரிந்துவிட்டது. அதனால்தான் சேலத்தில் பேசிய அன்புமணி, ‘கட்சிகள் அனைத்தும் தங்களது கூட்டணி முடிவை உடனடியாக அறிவிக்க வேண்டும்’ என்று கேள்வியைப் போட்டுள்ளார்.”

‘‘எப்போது சூடு பிடிக்கும்?”

‘‘வரும் 15-ம் தேதி பெங்களூரு வழக்கு சம்பந்தமான சர்ச்சையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரப்போகிறது. அதை வைத்துத்தான் கூட்டணிப் பேச்சுகள் சூடு பிடிக்கும்” என்ற கழுகார், அடுத்து நெல்லை ஃபாலோ அப் சொல்ல ஆரம்பித்தார்.

‘‘வேளாண் பொறியாளர் முத்துக்குமாரசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கத்தினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதற்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர். இது அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது என்பதால், அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கமான திருவண்ணாமலையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இதுவரை விசாரணை அதிகாரியாக இருந்த இன்ஸ்பெக்டர் பிறைச்சந்திரனுக்கு பதிலாக டி.எஸ்.பி-யான பிரபாகரன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. தற்காலிக ஓட்டுநர் தேர்வுக்கான குழுவில் முத்துக்குமாரசாமியுடன் வேளாண்மைத் துறை இயக்குநர் சந்திரசேகரனும் இடம்பெற்று இருந்தார். அதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி உள்ளார்கள். குமரி மாவட்டத்தில் காவல் துறையில் உள்ள ஒருவரும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு இருக்கிறாராம். முன்னாள் அமைச்சர் ஒருவருடன் நெருக்கமாக உள்ள உளவுத் துறை அதிகாரி ஒருவருக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சில வருடங்களுக்கு முன் விமான நிலையத்துக்குள் துப்பாக்கியுடன் பிடிபட்டாராம். அப்போது முன்னாள் அமைச்சர் தனது செல்வாக்கு காரணமாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்படாமல் பார்த்துக்கொண்டுள்ளார். அதன் பின் இருவருக்கும் நட்பு அதிகரித்துவிட்டது. முத்துக்குமாரசாமி வரவழைக்கப்பட்டு மிரட்டப்பட்டபோது இந்த அதிகாரியும் உடன் இருந்துள்ளார். இருவரும் விரைவில் விசாரணைக்கு அழைக்கப்படலாம்!’’

‘‘ம்!’

‘‘அடுத்து ஒரு ஆடியோ வெளியாகி ஆளும் கட்சியை அதிரவைத்துள்ளது. ‘வட்டச் செயலாளர் பதவி 13 லட்சம்’ என ஏலம் போட்டு விற்கும் கொடுமை அ.தி.மு.க-வில் அரங்கேறி வருவதை அம்பலப்படுத்தும் ஆதாரம் இது. தொகுதிச் செயலாளர் ஒருவரும் வட்டச் செயலாளரும் போனில் பேசிக்கொள்ளும் அந்த உரையாடல்தான் வாட்ஸ் அப்பில் வைரலாகப் பரவிக் கொண்டிருக்கிறது. பேசிய விவரத்தை அப்படியே தருகிறேன்...

வட்டம்: ‘அண்ணே நீதானே ஆபீஸ் பக்கம் வரவேண்டாம்னு சொன்னே. நானே மேட்டர முடிக்கிறேன்னு சொன்னே... இப்ப இளங்கோ பையன் புதுசா தகவல் சொல்றான். பாஸ்கரனை போய் பார்க்கிறதில்லையா? பேசுறதில்லையா...னு சொல்லிட்டு என் பேப்பரை மாத்தி போடுறாங்கன்னு சொல்றான்.’

தொகுதி: ‘நான் எதுவும் யாருகிட்டயும் சொல்லலையே.. அவனுங்க ட்ரை பண்ணுறதா தகவல். அண்ணனைப் போய் பாத்துட்டு வந்தா டீடெய்ல் தெரியும்.’

வட்டம்: ‘10-ம் தேதி வர்றேன்.’

தொகுதி: ‘நீ காலம் தாழ்த்துறது அவனுக்குதான் ப்ளஸ் ஆகும். ஏற்கெனவே அவங்க 10 ரூபாய் கொடுத்திருக்கானுங்க.’

வட்டம்: ‘அப்படியா?’

தொகுதி: ‘அவனுங்க 10 ரூபாய் கொடுத்தது ஊருக்கே தெரியும். அவர் சொல்லிட்டாரு இவர் சொல்லிட்டாருனு சொல்ல வேண்டாம். பெரம்பூர் தொகுதின்னா நான்தான். இங்கே என்ன நடக்குதுனு எனக்குத்தான் தெரியும். ஓ.பி... கி.பி-னு யாரும் தலையிட மாட்டாங்க. உண்மை எனக்கு மட்டுமே தெரியும். நாம் யார்கிட்ட கொடுத்தோமோ அவங்ககிட்டதான் கொடுத்திருக்கானுங்க. திருப்பி ஒரு மூணு லட்சம் கொடுத்திருக்கானுங்க.. அவர் போன் பண்ணி பணத்தை வாங்கிட்டு போங்கனு சொன்னாரு. இதுக்கு முழுக்க முழுக்க நீதான் காரணம். போஸ்டிங் போடாம அவன் காசை நான் எப்படி வெச்சிக்க முடியும்னு அவர் கேட்கிறார். அவர் சொல்லுறது நியாயம்தானே? அதைக் காப்பாத்திக்க வேண்டியது உன் பொறுப்பு.’

வட்டம்: ‘இரண்டு நாளில் கொடுத்துடுறேன்.’

தொகுதி: ‘இது லைஃப் பிரச்னை. ஒவ்வொருத்தனும் எவ்வளவு பணத்தை வெச்சுகிட்டு சுத்திகிட்டு இருக்கான் தெரியுமா? அதுகேத்த மாதிரி நாம இருக்கணும். ‘இப்ப பணத்தைக் கொடுத்தவன் சுத்திச் சுத்தி வர்றான். என்ன சொல்றது’ன்னு அண்ணன் கேட்கிறார். அவருக்கு ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கு. பத்து நாள் அவரை யாரும் சந்திக்க முடியாது. நான் மட்டும் போய் பார்க்க முடியும். சீக்கிரம் ஏற்பாடு செய்’ - என உரையாடல் முடிகிறது.”
‘‘பக்காவான பேரமாக இருக்கிறதே?”

‘‘ ‘வட சென்னை ஏரியாவில் இருக்கும் ஒரு வட்ட செயலாளரும் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் என்.எம்.பாஸ்கரனும்தான் பேசிக்கொள்கிறார்கள். பாஸ்கரன் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக இருக்கிறார். வட சென்னை வடக்கு மாவட்டச் செயலாளரும் எம்.பி-யுமான வெங்கடேஷ் பாபுவுக்கு நெருக்கமாக இருக்கிறார். மாவட்டச் செயலாளர் மூலம் போஸ்டிங் போடத்தான் பாஸ்கரன் பேரம் பேசினார். வெங்கடேஷ் பாபுவுக்குதான் ஆஞ்சியோ செய்யப்பட்டிருக்கிறது’ என்று அ.தி.மு.க-வினர் சொல்கிறார்கள். இது வட சென்னை அ.தி.மு.க-வினரைக் கொந்தளிக்க வைத்துள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டையும் போயஸ் கார்டனையும் அ.தி.மு.க-வின் கட்சி அலுவலகத்தையும் அ.தி.மு.க நிர்வாகிகளும் தொண்டர்களும் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்” என்று சொல்லிவிட்டுப் பறந்தார் கழுகார்.


நீ எப்பவும்போல இரு !

மிஸ்டர் கழுகு : பேரம் ஆரம்பம் !

தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திடீர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் ஒரு வாரம் அட்மிட் ஆகி சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிவிட்டார். கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு, திடீரென மு.க.அழகிரி சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அன்பழகனின் நண்பர் வில்லிபுத்தூர் அமுதன் அங்கே இருந்திருக்கிறார். ‘அப்பா எப்படி இருக்கீங்க?’ என்றுதான் அழகிரி பேச்சை ஆரம்பித்திருக்கிறார். தனது உடல்நலம் பற்றிப் பேசிய அன்பழகனிடம், ‘நேற்றே வந்து உங்களைப் பார்க்கணும்னு நினைச்சேன். சந்தர்ப்ப சூழ்நிலையால வர முடியலை. உடம்பைப் பார்த்துக்கோங்க!’ என்று சொல்லிவிட்டுக் கிளம்ப... ‘நீ எப்பவும்போல இரு!’ என்று சொல்லி அனுப்பினாராம் அன்பழகன். எந்த அர்த்தத்தில் அன்பழகன் அப்படிச் சொன்னாரோ?

அட்டை மற்றும் படங்கள்: எம்.விஜயகுமார்