Published:Updated:

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே நெருக்கடியில் இருக்கின்றன !

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே நெருக்கடியில் இருக்கின்றன !

விடுதலைச் சிறுத்தைகள் ஆரம்பித்து 25 ஆண்டுகள் முடிந்துவிட்டன. வெள்ளிவிழா கொண்டாட்டங்களில் இருக்கிறார் தொல்.திருமாவளவன். வெள்ளி விழா மாநாடு மதுரையில் இந்த மாதம் 25-ம் தேதி நடக்கிறது. இந்த நிலையில் திருமாவளவனை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்தோம். 

 ‘‘1990-ம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் நூற்றாண்டு விழா நாளில்தான் விடுதலைச் சிறுத்தைகளின் முதல் கொடியை வடிவமைத்தேன். அதை மதுரை கோ.புதூர் பேருந்து நிலையத்தில் ஏற்றிவைத்து, ‘இன்று எமது இயக்கக் கொடி, நாளை நமது தேசியக் கொடி’ என்று உரத்து முழங்கினேன். விடுதலைச் சிறுத்தைகளின் கொடி அறிமுகப்படுத்தப்பட்டு 2015 ஏப்ரல் 14-ம் தேதியோடு 25 ஆண்டுகள் நிறைவுபெறுகின்றன. அதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் கொடி ஏற்றிவைத்து வெள்ளிவிழாவைக் கொண்டாடுகிறோம். மதுரையில் இந்த இயக்கத்தின் கொடியை அறிமுகப்படுத்தியதால், மதுரையிலேயே மாநாடு ஒருங்கிணைக்கப்படுகிறது. ஒரு தலைமுறைக் காலம் கடந்துவிட்டது. புதிய தலைமுறை வந்துவிட்டது. ஆகவே, அடுத்த தலைமுறையைத் தயார்படுத்துவதும் அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவதும் இன்றியமையாத தேவையாக உள்ளது. அதனை பிரகடனப்படுத்துகிற ஒரு நிகழ்ச்சியாகத்தான் மதுரையில் இதைக் கொண்டாட இருக்கிறோம்’’ என்றவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளே  நெருக்கடியில் இருக்கின்றன !

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

‘‘இந்த 25 ஆண்டுகால அரசியல் பயணம் எப்படி இருந்தது?’’

‘‘மதுரைக்கு ஓர் அரசு ஊழியராகத்தான் பணிக்குச் சென்றேன். அப்போது, நான் சட்டக் கல்லூரி மாணவன். இறுதித் தேர்வுக்குத் தயாராகிக்கொண்டிருந்த வேளையில், வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் எனக்குத் தடய அறிவியல் துறையில் அறிவியல் உதவியாளராகப் பணியாற்றக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அந்தச் சமயத்தில், ‘பாரதிய தலித் பேந்தர்’ என்ற அமைப்பை நடத்திக்கொண்டிருந்த வழக்கறிஞர் மலைச்சாமியை சந்திக்க நேர்ந்தது. நட்பு மலர்ந்தது. அவரோடு பழகிய சில காலங்களில், அவர் உடல் நலிவுற்று காலமாகிவிட்டார். அவருக்கு ஓர் இரங்கல் கூட்டத்தை ஏற்பாடு செய்தோம். அந்த நிகழ்சியில் பங்கேற்ற முன்னணி பொறுப்பாளர்கள்தான் அந்த இயக்கத்தைத் தொடர்ந்து நடத்தும்படியும் பொறுப்பேற்றுக்கொள்ளும்படியும் என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.

1990-ம் ஆண்டு ஜனவரி 21-ம் தேதி அந்தக் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் 20, 30 பேர் என்னை மாநில அமைப்பாளராகத் தேர்வு செய்தார்கள். அப்படித்தான் நான் தலித் அரசியலில் அடியெடுத்து வைத்தேன். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அப்போது எனக்கு இருந்தது இல்லை.’’

‘‘அதன் பிறகு தேர்தல் புறக்கணிப்பை கைவிட்டது ஏன்?’’

‘‘1990-1999 வரையில் தேர்தல் அரசியலில் ஈடுபடவில்லை. திட்டமிட்டே தவிர்த்தோம். ஆனால், தவிர்க்கமுடியாத நிலையில் விழுப்புரத்தில் கூடிய மாநில செயற்குழுவில், ‘கொண்ட கொள்கையில் உறுதியை காட்டுவோம். தேவை எனில் கொள்கை சிதையாமல் யுக்தியை மாற்றுவோம்’ என்று தீர்மானம் நிறைவேற்றினோம். அதற்குக் காரணம், அந்தக் காலகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மீது தீவிரவாத முத்திரை குத்தப்பட்டது. காவல் துறை வேட்டை அதிகரித்தது. முன்னணிப் பொறுப்பாளர்கள் பலரும் சிறைப்படுத்தப்பட்டார்கள். அதுவும் குண்டர் தடுப்பு, தேசியப் பாதுகாப்புச் சட்டங்களில் சிறைப்படுத்தப்பட்டார்கள். அந்த நெருக்கடிகளை நாங்கள் விவாதித்தபோது தேர்தலைப் புறக்கணிப்பதும் அதற்கு ஒரு காரணம் என்பதை நாங்கள் உணர்ந்துகொண்டோம். எனவே, தேர்தல் அரசியலில் இறங்கினோம். சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் குரல் கொடுத்தோம். தமிழகம் எங்கும் தவிர்க்கமுடியாத அரசியல் சக்தியாக உருவெடுத்து உள்ளோம் என்று நம்புகிறோம். அடுத்தகட்டமாக, தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறத்தக்க வகையில் எங்களை நாங்கள் தகுதிப்படுத்திக்கொண்டு வருகிறோம்.’’

‘‘வரும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்துவிட்டீர்களா?’’

‘‘விடுதலைச் சிறுத்தைகள் ஒரு கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்று நினைத்தால், அதை சாதித்துவிட முடிவதில்லை. ஏனென்றால், கூட்டணிக்குத் தலைமை தாங்கக்கூடிய கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் தங்களுடைய நல்லது கெட்டதுகளை எல்லாம் அலசி ஆராய்ந்து பார்த்து, தங்களுக்கு ஏற்ற ஓர் அரசியல் சூழலைப் பொறுத்து யாரோடு கூட்டணி வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்கின்றன. யாரை இணைத்துக்கொள்ள வேண்டும்; யாரை தவிர்க்க வேண்டும் என்பதைக் கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற கட்சிகள்தான் முடிவு செய்கின்றன. இது விடுதலைச் சிறுத்தைகளுக்கு மட்டுமல்ல, வளரும் எல்லாக் கட்சிகளுக்கும் அதுதான் நிலை. ஆகவே, கூட்டணி எப்படி அமையப்போகிறது என்பதை கூட்டணிக்குத் தலைமை தாங்குகிறவர்கள்தான் முடிவு செய்கிற இடத்தில் இருக்கிறார்கள். எனவே, தேர்தலுக்கு முன்கூட்டியே எந்த முடிவையும் நாம் அறிவித்துவிட முடியாது.’’

‘‘வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி எப்படி அமையும் என்பதாவது தெரிகிறதா?’’

‘‘2016 - தேர்தல் அறிவிப்புக்குப் பின்னர்தான் தமிழக அரசியல் சூழலில் நாம் எந்தக் கருத்தையும் கூற முடியும். எங்களைப் பொறுத்தவரை 2016-ம் ஆண்டு தேர்தல் ஒரு நெருக்கடியான தேர்தல்தான். அரசியல் ரீதியாக தி.மு.க-வுக்கும் நெருக்கடி இருக்கிறது.

அ.தி.மு.க-வுக்கும் அதே போன்றதொரு நெருக்கடி இருக்கிறது. கூட்டணிக்குத் தலைமை தாங்குகின்ற கட்சிகள் நெருக்கடியான சூழலில் இருப்பதால் அடுத்து அதை யார் முன்னெடுத்துச் செல்லப்போகிறார்கள்? இன்னும் எத்தனை அணிகள் உருவாகும்? யார் அடுத்த முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது? இவை போன்ற கேள்விகள் இன்றைக்கு ஏராளம் குவிந்துகொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் விடுதலைச் சிறுத்தைகளின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதும் ஒரு கேள்வியாக இருக்கிறது.’’

‘‘தேர்தலில் பங்கெடுப்பதன் மூலமாக உங்களது கொள்கையை அடைய முடியும் என்று நினைக்கிறீர்களா?’’

‘‘விடுதலைச் சிறுத்தைகள் என்ற  இந்த இயக்கத்தை ஆரம்பித்தபோது தேர்தல் அரசியல் என்ற எண்ணமே இல்லை. ஆனாலும் அரசியல் அதிகாரத்தை நோக்கிய பார்வை இருந்தது. அதாவது, ஒடுக்கப்பட்ட மக்கள் அரசியல் அதிகாரத்தோடு தொடர்பில்லாமல் இருக்கிறார்கள். அவர்களை அதிகார வலிமை உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் என்ற பார்வையும் நோக்கமும் இருந்தது. அதனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளை எதிர்ப்பதில் கூடுதல் கவனம் செலுத்தினோம். பொதுவாக, படுகொலைகள் போன்ற வன்கொடுமைகள் தலைவிரித்தாடும்போது தலித் மக்கள் அச்சப்பட்டு சிதறுவதுதான் ஒரு நிலையாக இருந்தது. அவ்வாறு இல்லாமல் அதை எதிர்த்து பல்லாயிரக்கணக்கில் பேரணியாகத் திரண்டு தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்யக்கூடிய அளவுக்கு மக்களை அமைப்பாக்கியது விடுதலைச் சிறுத்தைகள்.
 
சாதி கொடுமைகளை எதிர்ப்பது என்பது வேறு. மக்களிடம் இயல்பாக உள்ள சாதி உணர்வுகளை பயன்படுத்திக்கொள்வது என்பது வேறு. சாதியவாதிகள், மக்களிடம் இயல்பாக உள்ள சாதி உணர்வுகளைத் தூண்டிவிட்டு, மோதவிட்டு அவர்கள் சிந்தும் ரத்தத்தில் ஆதாயம் பெறத் துடிக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரையில் தலித்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் இழப்பு ஏற்பட்டாலும் சமூக நல்லிணக்கத்தையே பெரிதாக, முதன்மையாகக் கருதுகிறோம். அதனால்தான் தர்மபுரி சம்பவத்தில் மூன்று கிராமங்கள் சூறையாடப்பட்டபோதும்கூட என் மீது அபாண்டமாகப் பழியை சுமத்தியபோதும்கூட அதையெல்லாம் பொறுத்துக்கொண்டோம். இன்றைக்கும் ஏராளமான அடக்குமுறைகள், ஒடுக்குமுறைகள், அபாண்டமான அவதூறுகள் திட்டமிட்டு எங்களுக்கு எதிராகத் தூண்டப்படுகின்றன.

ஏனென்றால், விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் சக்தியாக வளர்ந்துவிடக் கூடாது என்பதுதான் தூண்டுகிறவர்களின் நோக்கம். அதையெல்லாம் சகித்துக்கொண்டு சமூக நல்லிணக்கத்தைப் பேணி வருகிறோம். புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார், கார்ல் மார்க்ஸ் போன்ற மாபெரும் தலைவர்களின் கொள்கை வழியில் உறுதியாக நின்று களமாடி வருகிறோம்.’’

- எஸ்.முத்துகிருஷ்ணன்
படம்: ஜெ.வேங்கடராஜ்