Published:Updated:

கழுகார் பதில்கள் !

கழுகார் பதில்கள் !

கழுகார் பதில்கள் !

தாமஸ் மனோகரன், புதுச்சேரி-4.

 2016-க்குள் அழகிரியும் ஸ்டாலினும் ஒன்று சேர்வார்களா?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

 அதற்கான முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். அழகிரி வெளியில் இருப்பது நல்லது அல்ல என்று ஸ்டாலின் ஆதரவாளர்களும் நினைக்கிறார்கள். பத்துப் பதினைந்து தொகுதிகளில் அழகிரி ஆட்கள் குட்டிக்கலாட்டா செய்யாமல் தடுக்கலாம் அல்லவா? தன்னை முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்துவிட்டார்கள் என்றால் ஸ்டாலின், அழகிரியிடம் சரண் அடையவும் செய்வார்!

ச.ந.தர்மலிங்கம், சத்தியமங்கலம்.

‘கலி முத்திப் போச்சு’ என்று எதை வைத்துச் சொல்கிறார்கள்?

எல்லாவிதமான நெறிமுறைகளும் கெட்டுப்போன காலத்தைத்தான் ‘கலி முத்திப் போச்சு’ என்று சொல்வார்கள். யுகங்களில் கலியுகம்தான் மிக மோசமானதாக  இருக்கும். மோசமானதாக இருந்தது. அதைப்போலவே இந்த யுகமும் மாறிக்கொண்டு வருவதால் அப்படிச் சொல்கிறார்கள். 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த நீலகண்ட தீட்சிதர், ‘கலி விடம்பநம்’ என்று ஒரு புத்தகம் எழுதினார். எது எல்லாம் முறைகேடான செயல் என்று அந்தப் புத்தகம் சொல்லும். அதனை படித்தால், இன்று நடப்பவை எதற்கும் கலியுகத்துக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்றே சொல்லலாம்!

டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

சகாயம் குழுவினருக்கு பாதுகாப்புக் கொடுப்பது தமிழக அரசின் கடமைதானே?

சகாயம் குழுவை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம். எனவே, அவரது குழுவுக்கான முழுப்பாதுகாப்பையும் தரவேண்டியது நீதிமன்றத்தின் கடமை. நீதிமன்றம் அமைத்த குழு என்பதால் அவர்களுக்கு உரிய பாதுகாப்பை தர வேண்டியது தமிழக அரசின் கடமை!

கழுகார் பதில்கள் !

பொம்மி சின்னத்தான், கருப்பம்புலம்.

‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியை கைதுசெய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தபிறகும் வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றக் கோருகிறார்களே எதிர்க் கட்சிகள்?
 
இன்னும் மர்மங்கள் விடுபடவில்லையே, அதனால்தான்! நெல்லை வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமியிடம் பணம் கேட்டது யார்? எவ்வளவு கேட்டார்கள்? அவர் வசூலித்தாரா அல்லது தனது பணத்தைத் திரட்டினாரா? கொடுத்தாரா, கொடுக்கவில்லையா? அவரை சென்னையில் இருந்து போனில் மிரட்டியது யார்? சென்னைக்கு வரவழைத்து மிரட்டியது யார்? நெல்லையில் யார் வீட்டுக்கு அவரை வரவழைத்து பணம் கேட்டார்கள்? அப்போது யார் யார் அந்த வீட்டில் இருந்தார்கள்? அவர் தற்கொலை செய்வதற்கு சில மணிநேரங்களுக்கு முன் பேசியது யார்? அப்போது என்ன சொல்லப்பட்டது? தற்கொலை செய்த இடத்தில் இருந்த மோட்டார் பைக்கை எடுத்துச் சென்றது யார்? அது இரண்டு வாரம் கழித்து மீண்டும் அவரது வீட்டு வாசலுக்கு வந்தது என்றால், கொண்டுவந்து வைத்தது யார்? அவரது வீட்டுக்கு வந்து கடிதம் கேட்ட அரசு அதிகாரிகள் யார்? முத்துக்குமாரசாமி எல்.ஐ.சி-யில் கடன் வாங்கி வீடு கட்டியதற்கான வருமானவரி விசாரணையை அவர் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்துள்ளதாக செய்தி பரப்பிய மர்ம மனிதர் யார்? முத்துக்குமாரசாமியின் மனைவியின் சகோதரரை இன்னமும் போனில் மிரட்டுவது யார்..? இப்படி பல நூறு கேள்விகள் விடை கிடைக்காமல் உள்ளன. எனவே, இது ஏதோ சாதாரண தற்கொலைக்குத் தூண்டிய வழக்கோ, ‘அக்ரி’ கிருஷ்ணமூர்த்தியின் கைதோடு முடிந்து போகக்கூடிய வழக்கோ அல்ல!

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக அல்லாமல் தனியாக பணியாளர்கள் நிரப்பப்படும் பின்னணி என்ன? இப்படி எவ்வளவு இடங்கள் நிரப்பப்பட்டுள்ளது என்றும் தகவல் எடுக்கப்பட வேண்டும். ‘அக்ரி’ விவகாரம் சிறு துளிதான்!

கழுகார் பதில்கள் !

வி.எம்.செய்யது புகாரி, அதிராம்பட்டினம்.

  சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா விடுதலை ஆவது வேறு, அ.தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது வேறு, இரண்டையும் ஒன்றாகப் பார்க்கக் கூடாது என்கிறார் எனது நண்பர். அவர் சொல்வது சரியா?
 
வழக்கின் தீர்ப்பும் தேர்தல் வெற்றி, தோல்வியும் ஒன்றுடன் ஒன்று சம்பந்தப்பட்டவை. ஏனென்றால் இரண்டுமே ஜெயலலிதா தொடர்புடையவைதானே!

ரேவதிப்ரியன், ஈரோடு-1.

‘20 ஆண்டுகளுக்கு மோடி ஆட்சியை அசைக்க முடியாது’ என்கிறாரே பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித்ஷா?

 20 ஆண்டுகள் மட்டும்தான் என்று குறைத்து கணக்குப்போடும் அளவுக்கு தைரியம் வந்துவிட்டதா அவருக்கு!?

பாரதி முருகன், மணலூர்பேட்டை.

அரசியல்வாதிகளுக்கு மன்மத வருடம் எப்படி?

‘மன்மத’ என்பது பெயரில் இருந்தால் போதும் அரசியல்வாதிகளே!?

ஏ.ஹெச்.இப்ராஹிம், மதுரை.

ஒரே ஒரு வழக்கில் 742 கோடி ரூபாய் முடக்கப்பட்டுள்ளது என்றால், மொத்த குடும்ப உறுப்பினர்களிடமும் எவ்வளவு கோடி இருக்கும்?

அமலாக்கத் துறைக்கே வெளிச்சம்!

அர்ஜுனன்.ஜி, திருப்பூர்-7.

விசித்திரம் நிறைந்த வழக்குகளை நீதிமன்றம் சந்தித்தது உண்டா?

கழுகார் பதில்கள் !

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு போதாதா? ஏழு ஆண்டுகாலம் (1997-2004) தமிழகத்தில் நடந்தது வழக்கு. 10 ஆண்டு காலம் (2004-14) கர்நாடக மாநிலத்தில் நடந்தது. மாநிலம் விட்டு மாநிலம் மாறி இவ்வளவு நீண்ட காலம் இழுத்த வழக்கு இது. இதில் அரசு வழக்கறிஞராக யார் வாதாடுவது என்பதற்காக நடந்த விவாதங்களே பெரிய கதை. அரசு வழக்கறிஞராக இன்னார்தான் வாதாட வேண்டும் என்று எதிர் தரப்பினர் நீதிமன்றம் போன வில்லங்கமான அதிர்ச்சியும் இதற்கு உண்டு.

வழக்குக்கு தீர்ப்பு வந்து மேல்முறையீடும் போய், அதில் தீர்ப்புக்கு காத்திருக்கும் நேரத்திலும், அரசு வழக்கறிஞர் யார் என்று சிக்கலான கேள்வி எழுந்ததும் இந்த வழக்கில்தான். ‘ஒரு கிரிமினல் வழக்கை எப்படி எல்லாம் நடத்தக் கூடாது என்பதற்கு இந்த மேல்முறையீட்டு வழக்கே சான்று’ என்று உச்ச நீதிமன்ற நீதிபதி மதன் லோகூர் சொல்லியிருக்கிறார். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூன்று பேர் கொண்ட அமர்வு விசாரிக்கப் போகிறது. அவர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ? அதற்கு முன் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வருமா? வர வாய்ப்பு இல்லை என்றால், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஓய்வுபெற்று விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அப்படியானால் இன்னொரு நீதிபதி வந்து மறுபடியும் விசாரிப்பாரா? இதனைவிட விசித்திரம் வேண்டுமா என்ன?

கேள்விகள் அனுப்ப வேண்டிய முகவரி:

கழுகார் பதில்கள், ஜூனியர் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை-600 002
kalugu@vikatan.com என்ற முகவரியிலும் அனுப்பலாம்!