Published:Updated:

மிஸ்டர் கழுகு : திக்குத் தெரியாத தீர்ப்புத் தேதி !

மிஸ்டர் கழுகு : திக்குத் தெரியாத தீர்ப்புத் தேதி !

ழுகார் தலை தெரிந்ததுமே, ‘‘நீர் சொன்னது மாதிரியே தீர்ப்பின் தேதி குறிப்பதில் சிக்கல் வந்துவிட்டதே” என்றோம். சிரித்தபடியே தலையாட்டிய கழுகார், ‘‘டெல்லி நிலைமைகள் சீராக இல்லை என்பதால்தான் அப்படிச் சொன்னேன்” என்றபடி, 15.04.2015 தேதியிட்ட இதழை வாங்கிப் பார்த்தார்.

‘‘ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு விசாரணைகள் அனைத்தும் முடிந்த பிறகும் இன்னும் இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங் ஆஜரானது தவறு என்று அன்பழகன் தொடுத்த வழக்கின் தீர்ப்பு வரவில்லை. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் ஏப்ரல் 15-ம் தேதி தீர்ப்பு தர இருக்கிறது. அதுவரை இந்த வழக்கின் தீர்ப்பு வராது. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்புக்குத் தடை போட்டுவிட்டது. ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் பவானி சிங் நீக்கப்பட்டால், கர்நாடக அரசும் கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியும் சேர்ந்து புதிய அரசு வழக்கறிஞரை நியமிப்பார்கள். ஏப்ரல் 16-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை நீதிமன்றம் கோடை விடுமுறை என்பதால் மேற்கொண்டு இந்த வழக்கு நடைபெறாது. அதன் பிறகு ஜூன் மாதத்தில் அரசு வழக்கறிஞர் நியமிக்கப்பட்டால், அவர் இந்த வழக்கு விவரங்களைப் படிப்பதற்கு எப்படியும் ஓரிரு மாதங்கள் வாய்தா கேட்பார். ஆகஸ்ட் மாதம் வந்துவிடும். ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடக தலைமை நீதிபதி வகேலாவும் இந்த வழக்கை விசாரிக்கும் குமாரசாமியும் ஓய்வு பெறுகிறார்கள். இப்படியே போனால், டிசம்பர் வந்துவிடும்” என்று அந்த இதழில் கழுகார் குறிப்பிட்டு இருந்தார்.

அதனை சுட்டிக்காட்டித்தான் தொடங்கினார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு : திக்குத் தெரியாத தீர்ப்புத் தேதி !

‘‘மேல்முறையீட்டு மனு மீதான விவாதத்தில் பவானி சிங் ஆஜரானது சரியல்ல என்று அன்பழகன் தாக்கல் செய்திருந்த வழக்கை மதன் லோக்கூர், பானுமதி அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச் விசாரித்தது. பவானி சிங் ஆஜரானது செல்லும் என்று இரண்டு நீதிபதிகளும் ஒன்றுபட்ட தீர்ப்பைக் கொடுத்திருந்தால், நீதிபதி குமாரசாமி உடனடியாகத் தனது தீர்ப்பைத் தந்திருப்பார். எந்தத் தடையும் இல்லை. மாறாக, பவானி சிங் ஆஜரானது செல்லாது என்று நீதிபதி மதன் லோக்கூர் சொல்ல, செல்லும் என்று பானுமதி சொல்ல... விவகாரம் முற்றுப் பெறாமல் தொடர்கிறது. அடுத்து மூன்று நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இதனை விசாரிக்கப் போகிறது.”

‘‘அரசியல் சாசன பெஞ்ச் என்றால், அதற்குக் கால அவகாசம் இல்லையே?”

‘‘மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் 21-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கப்போகிறது. அந்த மூன்று நீதிபதிகளும் வேறுவேறு வழக்குகளில் வேறுவேறு நீதிபதிகளுடன் உட்கார்ந்து வழக்குகளை விசாரிப்பவர்களாக இருப்​பார்கள். ராஜீவ் கொலை வழக்கில், மூவர் தூக்கு சம்பந்த​மாக அரசியல் சாசன பெஞ்ச் அமைக்கப்பட்டது. ஆனால், இன்னும் அவர்கள் உட்காரவில்லையே! அப்படித்தான் இது கழியும்” என்றார் கழுகார்.
‘‘ஆனால், ‘இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கலாமா, வேண்டாமா என்பது குறித்து நீதிபதி குமாரசாமி முடிவெடுக்கலாம்’ என்று கிரீன் சிக்னல் காட்டிவிட்டார்களே, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்?” என்றோம்.
‘‘உண்மைதான். உச்ச நீதிமன்றம் - தமிழக அரசு - கர்நாடக அரசு ஆகிய முக்கூட்டு சர்ச்சைக்கு மத்தியில் புகுந்து தீர்ப்பு அளிக்கும் ரிஸ்க்கை நீதிபதி குமாரசாமி எடுப்பாரா என்று பலரும் பேச ஆரம்பித்துள்ளார்கள். சொத்துக் குவிப்பு மேல் முறையீட்டு விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கி மார்ச் 11-ம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 41 நாட்கள் நடைபெற்று தீர்ப்புத் தேதி அறிவிக்காமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கியபோது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்து, ‘மூன்று மாதங்களுக்குள் இந்த வழக்கை முடிக்க வேண்டும்’ என்றார். மேலும், ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட பெயில் காலமும் ஏப்ரல் 18-ம் தேதியுடன் முடிகிறது.

18-ம் தேதி சனிக்கிழமை என்பதால் 17-ம் தேதியே  ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் தங்களது பெயிலை நீட்டிக்க மனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நெருக்கடியில் என்ன முடிவெடுப்பது என்ற சிக்கல் அனைவருக்குமே வரத்தானே செய்யும்?”

மிஸ்டர் கழுகு : திக்குத் தெரியாத தீர்ப்புத் தேதி !

‘‘சொல்லும்!”

‘‘நீதிபதி குமாரசாமி, தான் தீர்ப்பு தருவதற்கான அவகாசத்தை 15 நாட்களுக்கு நீட்டித்துத் தருமாறு உச்ச நீதிமன்றத்துக்குக் கடிதம் அனுப்பியதாகச் சொல்கிறார்கள்.”

‘‘அப்படிப் பார்த்தால் ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பிறகு தீர்ப்பு வரலாம் அல்லவா?”

‘‘நீதிபதி குமாரசாமி கேட்டுள்ள கால அவகாசம் பற்றி இரண்டு விதமான கருத்துகள் உள்ளன. ‘நீதிபதி குமாரசாமி கேட்டுள்ள கால அவகாசம் என்பது தீர்ப்பு வழங்கலாமா, வேண்டாமா என்பதை யோசிப்பதற்காகத்தான்’ என்றும் சிலர் சொல்கிறார்கள். ‘உச்ச நீதிமன்றமும் அரசியல் சாசன பெஞ்சும் விசாரிக்க இருக்கும் வழக்குக்கு அவசரப்பட்டுத் தீர்ப்பு வழங்க முடியுமா’ என்று கர்நாடக கோர்ட்டில் வழக்கறிஞர்கள் மத்தியில் கடுமையான விவாதங்கள் நடக்கின்றன. ‘தீர்ப்பின் முழுவிவரம் தெரிந்த பிறகுதான் முடிவெடுப்போம்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றப் பதிவாளரும் சொல்லியிருக்கிறார். எனவே, இது நீதி பிரச்னை மட்டுமல்ல, நிர்வாக நடைமுறை சம்பந்தப்பட்டதாகவும் உள்ளது.”

‘‘ஓ... அப்படியானால் மே முதல் வாரம் வரைக்கும் எதையும் சொல்ல முடியாது!”

‘‘உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் முழு விவரங்களையும் உமது நிருபர்கள் எழுதி உள்ளார்கள். மதன் லோக்கூர் சொன்னதில் முக்கியமான ஒரு விஷயத்தை மட்டும் பலரும் சுட்டிக் காட்டுகிறார்கள். ‘இந்த விவகாரத்தில் தேதிதான் முக்கியம். செப்டம்பர் 27-ம் தேதி நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு வருகிறது. சிறைத் தண்டனை பெற்ற ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரும் தங்களது தீர்ப்பை எதிர்த்து செப்டம்பர் 29-ம் தேதி அப்பீல் மற்றும் ஜாமீன் மனுக்களைத் தாக்கல் செய்கிறார்கள். இதற்கு முன்பே தமிழக அரசு, தனது லஞ்ச ஊழல் ஒழிப்பு இயக்குநரகத்துக்கு பவானி சிங்கை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க அதிகாரம் வழங்குகிறது. 30-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வரும்போது பவானி சிங் ஆஜராகவில்லை. தான் ஆஜராக முறையான உத்தரவு வரவில்லை என்கிறார் அவர்.  பின்னர் இரண்டு நாட்கள் (அக்டோபர் 1-ம் தேதி) வழக்கு ஒத்திவைக்கப்பட, மீண்டும் முன்னாள் முதல்வர் மற்றும் மூன்று பேரின் அப்பீல் மற்றும் ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு வருகின்றன. இந்த சமயத்தில் பவானி சிங் தனக்கு ஆஜராக தமிழக அரசின் உத்தரவு கிடைக்க, வழக்கில் ஆஜரானார். அவர், எழுத்துபூர்வமான வாதத்தைத் தாக்கல் செய்தார். இதில் ஜெயலலிதா தரப்பினருக்குத் தண்டனைக்குத் தடை கொடுக்கக் கூடாது என்பதோடு ஜாமீனும் வழங்கக் கூடாது என்கிறார். பிறகு, தசரா விடுமுறை முடிந்து மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது பவானி சிங் வாய்மொழியாக வாதாடும்போது, ‘பெயில் கொடுக்க நீதிமன்றம் விரும்பினால் கொடுக்கலாம். அதில் தனக்கு ஆட்சேபனை இல்லை’ என்கிறார். இப்படி அவசர அவசரமாக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்துள்ளது’ என்று சொல்லப்பட்டுள்ளது. இந்த அவசரம்தான் மாட்டி விட்டுவிட்டது!”

‘‘இதில் கர்நாடக அரசு எப்படி நடந்துகொள்​கிறது?”

‘‘அவர்களுக்கு என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதே தெளிவாகத் தெரியவில்லை. ‘அரசு வழக்கறிஞரை நியமிக்கும் அதிகாரம் எங்களுக்கே உள்ளது. ஆனால், இந்த வழக்கில் தலையிட விரும்பவில்லை’ என்று வாதங்களை வைத்தார்கள். ‘நாங்கள் பவானி சிங்கை நியமனம் செய்திருந்தால் ரத்து செய்யமுடியும். ஆனால், அவரை தமிழக அரசு நியமனம் செய்தது. வேறொரு அரசு செய்த நியமனத்தில் நாங்கள் தலையிட முடியும்? எப்படி எங்களால் ரத்து செய்ய முடியும்? எங்களுக்கு இதில் என்ன தொடர்பு? எங்களை பலிகடா ஆக்குவது எப்படி’ என்று தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டார்கள். இரண்டும் கெட்டான் முடிவைத்தான் கர்நாடகா எடுத்தது!”

‘‘கர்நாடக தலைமை நீதிபதி வகேலா மாற்ற​மும் சர்ச்சைக்குரியதாக ஆகி உள்ள​தே?”

‘‘தலைமை நீதிபதி வகேலாவை மாற்றப் போகிறார்கள் என்றும் முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் நடந்துள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 7-ம் தேதி வகேலா நியமிக்கப்​பட்டார். அவரை கடந்த மார்ச் மாதமே மாற்றிவிட்டார்கள் என்று தகவல் பரவியது. ஆனால், தொடர்ந்து அவர் அந்தப் பதவியில் நீட்டித்தார். இப்போது அவர் ஒடிசா மாநில உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டார். இதில் அரசியல் தலையீடு இருப்பதாக தி.மு.க தலைவர் கருணாநிதியும் பா.ம.க தலைவர் ராமதாஸும் சொல்லியிருக்கிறார்கள்.”

‘‘என்னவாம்?”

‘‘வகேலாவை மாற்றப் போகிறார்கள் என்று 29.12.2014 தேதியிட்ட முரசொலியில் ஒரு பெட்டிச் செய்தியைக் கருணாநிதி வெளியிட்டார். ஜெயலலிதா மீதான வழக்கையும் இதில் குறிப்பிட்டு இருந்தார். பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகலாமா, கூடாதா என்று முன்பு வகேலா முன் வழக்கு நடந்தது. ‘பவானி சிங் நியமனம் தவறானது. கர்நாடக அரசு தானே நியமனம் செய்ய வேண்டும்’ என்று நீதிபதி வகேலா சொன்னார். வகேலா தனது வழக்கை விசாரிக்கக் கூடாது என்று பவானி சிங் சொன்னதால், வழக்கு வேறு நீதிபதிகளுக்கு மாறியது. இப்படிப்பட்ட பின்னணிக் கொண்டவர் வகேலா. அவரைத்தான் திடீரென்று மாற்றி இருக்கிறார்கள். இதற்கான உத்தரவை 12-ம் தேதி இரவு பிறப்பித்து உள்ளார்கள். இந்த சந்தேகங்களைத்தான் பலரும் கிளப்புகிறார்கள்” என்றபடி கழு​கார் அடுத்துச் சொல்ல ஆரம்பித்ததும் நீதிமன்ற மேட்டர்தான்.

‘‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய தொலைத்தொடர்பு துறை முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தினார் என்று டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அந்த வழக்கின் இறுதி வாதத்தில் சி.பி.ஐ மீண்டும் குற்றம்சாட்டியது. சி.பி.ஐ நீதிமன்றச் சிறப்பு நீதிபதி ஓ.பி.சைனி முன் சி.பி.ஐ சிறப்பு வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் புதன்கிழமை ஆஜராகி முன்வைத்த இறுதி வாதத்தில், ‘2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில் டாடா போன்ற நிறுவனங்களைப் புறம்தள்ளிவிட்டு, தொலைத்தொடர்பு துறையில் முன்அனுபவம் இல்லாத ஸ்வான் டெலிகாம், யூனிடெக் ஒயர்லெஸ் ஆகிய நிறுவனங்களுக்குச் சாதகமாக, ‘கட்-ஆஃப்’ தேதி, ‘முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிப்பது’ போன்ற நடவடிக்கைகளில் ராசா மாற்றம் செய்தார். இந்த விஷயத்தில் அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு முடிவின்படி செயல்படுமாறு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், சட்டத் துறை அமைச்சர் பரத்வாஜ் ஆகியோர் அளித்த பரிந்துரைகளைப் புறம்தள்ளிவிட்டு, ராசா தன்னிச்சையான முடிவுகளை எடுத்தார். இதன்மூலம், பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கை தவறாக வழிநடத்தியது ஆ.ராசா என்பது நிரூபணமாகியுள்ளது’ என்றார்.’’

‘‘ம்!’’

‘‘இந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட சந்தோலியா, ஷாஹித் உஸ்மான் பால்வா, ஆசிஃப் பால்வா, ராஜீவ் அகர்வால் ஆகியோர் சார்பில் வழக்குரைஞர் விஜய் அகர்வால் ஆஜராகி முன்வைத்த வாதத்தில், ‘டாடா நிறுவனம் மீது தொடரப்பட்ட முக்கிய வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. சி.பி.ஐ நீதிமன்றத்திலும் 2ஜி அலைக்கற்றை வழக்குடன் தொடர்புடைய எஸ்ஸார் நிறுவனத்தின் வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளின் விசாரணை முடிவடையும் வரை இறுதி வாதம் மேற்கொள்ள அனுமதிக்கக் கூடாது’ என்றார். இதைக் கேட்ட சிறப்பு நீதிபதி சைனி, வழக்கின் விசாரணையை மே 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக மத்திய அமலாக்கத் துறை தொடுத்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டோர் தரப்பு சாட்சிகளிடம் சாட்சியம் பதிவு செய்யும் நடைமுறையை சி.பி.ஐ நீதிமன்றம் தொடங்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக மற்ற சாட்சிகளிடம் விசாரணை நடைபெற உள்ளது.’’

‘‘காங்கிரஸ் என்ன சொல்கிறது?’’

‘‘தவறு செய்தது ராசாதான் என்பதில் உறுதியாக இருக்கிறது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ, ‘2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பான ஜேபிசி (நாடாளுமன்றக் கூட்டுக் குழு) விசாரணைக்கு நான் தலைமை தாங்கியவன். ‘முந்தைய பி.ஜே.பி அரசில் அலைக்கற்றை ஒதுக்க முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற கொள்கை கடைப்பிடிக்கப்பட்டது. அதையே நாமும் பயன்படுத்துவோம்’ என பிரதமரிடம் ராசா கூறினார். ஆனால், முதலில் பணம் செலுத்தியவர்களுக்கு அலைக்கற்றையை ராசா ஒதுக்கினார். ஜே.பி.சி விசாரணையிலும் இதை உறுதிப்படுத்தினோம். அந்த வகையில் மன்மோகன் சிங்குக்கு தவறான தகவலைத் தந்து அவரைத் தவறாக வழிநடத்தியது ராசாதான்’ என்றார் சாக்கோ.’’

‘‘காங்கிரஸ், பி.ஜே.பி இரண்டு தரப்பையும் எதிர்கொள்ள வேண்டிய சிக்கல் தி.மு.க-வுக்கு...’’ என்றோம்.

‘‘இரண்டு கழகங்களும் தீர்ப்பை எதிர்பார்த்து திக்திக் என்று காத்திருக்கின்றன!’’ என்றபடி கழுகார் விட்டார் ஜூட்!

மறுக்கிறார் மேகலா!

திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் பி.ஆர்.மேகலா நமக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், ‘‘கடந்த 15.04.15 தேதியிட்ட ஜூ.வி-யில் மிஸ்டர் கழுகு பகுதியில் முத்துக்குமாரசாமி தற்கொலை விவகாரத்தில் இன்னும் சிலரை விசாரிக்கப்போவதாகச் சொல்லி அதில், என்னுடைய பெயரையும் குறிப்பிட்டுள்ளீர்கள். எனது உறவினர்களும் நண்பர்களும் இதுபற்றி என்னிடம் விசாரித்தபோது, எனக்கு அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்தது. இந்தத் தகவல் ஆதாரமற்றது!’’ என்று குறிப்பிட்டுள்ளார். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கம் நமக்கு இல்லை.