Published:Updated:

''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு வேணும்!" - பழங்குடியினப் பெண் முத்தம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்

''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு  வேணும்!" - பழங்குடியினப் பெண் முத்தம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்
''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு வேணும்!" - பழங்குடியினப் பெண் முத்தம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்

''ஈஷா ஆக்ரமிச்ச 44 ஏக்கர் நிலம் எங்க சனத்துக்கு வேணும்!" - பழங்குடியினப் பெண் முத்தம்மாளின் கோரிக்கையும் ஈஷா விளக்கமும்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

பிரதமர் கையால் திறந்துவைக்கப்பட்ட 112 அடி உயரத்திலான உலகிலேயே மிகப்பெரிய ஆதியோகி திருமுகம், பெரும்பாலான மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்த ‘நதிகளை மீட்போம்’ நெடும்பயணம்... என ஏதாவது ஒரு வகையில் பிரமாண்டம் காட்டிக்கொண்டிருக்கிறது ஈஷா அமைப்பு. உறுதிகொண்ட பெண்மணியாக உச்சநீதிமன்றம்வரை சென்று  ஈஷாவை எதிர்த்துவருகிறார் வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் முத்தம்மாள். அவரிடம் பேசினோம்.  

''உங்களுக்கும் ஈஷாவுக்கும் என்ன பிரச்னை?''
 
''மடக்காடு, முட்டத்துவயல், கரும்புக்காடு, முள்ளாங்காடு, பட்டியார்பதி, செம்மேடு, பச்சாம்வயல்னு ஈஷாவைச் சுத்தி பல கிராமங்கள் இருக்குது. இந்தக் கிராமங்கள்ல வாழ்ற கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இப்போ இருக்கிறதுக்கு இடமில்லாமப் போச்சு. ஒரு வீட்டுக்குள்ள அஞ்சு, ஆறு குடும்பங்கள் வாழுது.  ஒருகாலத்துல இந்தக் கிராமமெல்லாம் பண்ணையாதான் இருந்துச்சு. நாங்கயெல்லாம் அந்தப் பண்ணைங்கள்ல அடிமை வேலைசெஞ்சவங்களோட வம்சாவழியில வந்தவங்கதான். அமெரிக்கக் கவுண்டர்ங்கிறவர் தன் பண்ணையில வேலைபார்த்த 13 பேருக்கு முள்ளாங்காடு பகுதியில (ஈஷாவை ஒட்டியுள்ள பகுதி) 44 ஏக்கர் இடம் கொடுத்திருக்கார். அப்போ வி.ஏ.ஓவா இருந்த சுப்பையாங்கிறவர்  எங்க மக்களோட அறியாமையைப் பயன்படுத்தி அந்த இடத்தையெல்லாம் அவரோட பேர்லயும், அவர் சொந்தக்காரங்க பேர்லயும் மாத்தி எழுதி வெச்சிக்கிட்டார்.  ஆனா, இதெல்லாம் எங்க சனங்களுக்குத் தெரியாது; அதை நாங்கதான் அனுபவிச்சிகிட்டு வந்தோம்.  2014ம் வருஷம்தான் நாங்க ஏமாற்றப்பட்ட விஷயமே எங்களுக்குத் தெரிய வந்துச்சு.  நாங்க கோயம்புத்தூர் கலெக்டர்கிட்ட மனு கொடுத்தோம். ஆர்.டி.ஓ விசாரணையெல்லாம் நடந்துச்சு. அப்போதான், அந்த 44 ஏக்கரும் கரூர், கேரளான்னு பல ஊர்களைச் சேர்ந்தவங்க பேர்ல இருக்குங்கிறதும், அவங்கயெல்லாம் இப்போ ஈஷாவுக்குள்ள இருக்காங்கங்கிற  உண்மையையும் கண்டுபிடிச்சோம்.

2016ல நடந்த ஆர்.டி.ஓ விசாரணையில, இதுக்கு ஒரு முடிவு வர்ற வரைக்கும் அந்த இடத்தை ஈஷாவோ, நாங்களோ...  ரெண்டு தரப்புமே பயன்படுத்தக்கூடாதுனு சொன்னாங்க. ஆனா, மோடி வர்றதைக் காரணம் காட்டி அந்த இடத்தை ஈஷா கைப்பத்திடுச்சி. இப்போ நாங்க அந்த இடத்துக்குள்ள நுழையமுடியல. அந்த இடத்தைத் திருப்பிக் கொடுங்கனு நாங்க ஈஷாகாரங்ககிட்ட  சண்டைபோடலை, போடவும் முடியாது. ஏன்னா அது ஈஷா பேர்ல இல்ல. ஆனா,  அவங்கதான் அனுபவிக்கிறாங்க.  
யார் பேர்ல இருந்தாலும் சரி, எங்களோட நெலத்தை எங்களுக்கே மீட்டுத்தாங்கனு நாங்க அரசாங்கத்துகிட்டதான் இப்போ கேக்குறோம் .அரசாங்கத்துக்கு எங்களோட தவிப்பு புரியமாட்டேங்குது. இன்னொரு பக்கம், விதிகளை மீறி கட்டடங்களை கட்டியிருக்காங்கனு ஈஷா மேல கேஸ் போட்டிருக்கோம். அந்த கேஸ்லயும் இன்னும் தீர்ப்பு வரலை. நியாயம் ஜெயிக்கும்னு நம்புறோம்.''

''தங்களோட யோகா மையத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைத் தத்தெடுத்திருக்கிறதா ஈஷா நிர்வாகம் சொல்லுது. 'நாங்க இருக்க இடம் இல்லாமல் தவிக்கிறோம்'னு நீங்க சொல்றீங்க..?" 

''என்ன செஞ்சிருக்காங்க?! எங்க ஊர்ப் பிள்ளைங்களுக்கு சிலம்பம், ஆட்டம்னு கத்துத்தர்றாங்க. எதுக்காக கத்துத்தர்றாங்க? இவுங்களுக்கெல்லாம் இதெல்லாம் கத்துக்கொடுத்திருக்கோம்னு மேடையில் ஏத்தி போட்டோ புடிச்சி விளம்பரப்படுத்திக்கிறாங்க. விளம்பரத்துக்காகத்தான் இதெல்லாம் செய்யுறாங்களே தவிர வேற ஒண்ணும் இல்லை. எங்க நெலத்தை பறிச்சிகிட்டு எங்களுக்கு சிலம்பமும், டான்ஸும் சொல்லிக்கொடுத்துத் துரத்தியடிக்க நினைக்கிறதுக்குப் பேருதான் தத்து எடுக்கிறதா?''

''மரம் நடுவதாகச் சொல்றாங்க. நதிகளை மீட்க நடைபயணம் போறாங்க. எல்லாம் நல்ல விஷயங்கள்போல தோன்றினாலும், ஈஷா மீது பல விமர்சனங்கள் உள்ளதே?" 

''இப்போதான் இதோட பேர் 'ஈஷா'. ஆரம்பத்துல நாங்கயெல்லாம் இதை ஆசிரமம்னுதான்  சொல்லுவோம். ஒரு குழந்தையைக் கையில புடிச்சிகிட்டு ஜக்கி வாசுதேவ் ஐயா  எங்க ஊருக்கு வந்தார். அப்போ தாடியெல்லாம் வச்சிருக்கமாட்டார். வாரத்துல ரெண்டு நாளுதான் இங்க இருப்பார்.  மத்த நாளெல்லாம் எங்க போவார்னு எங்களுக்குத் தெரியாது. நாங்க விவசாயம் இல்லாதப்போ,வேலை இல்லாம தவிச்சப்போ நெறைய பேருக்கு வேலைகொடுத்து சோத்துக்கு வழிசெஞ்சது இந்த ஆசிரமம்தான்.  அதையெல்லாம் நாங்க இல்லைன்னு சொல்லலை. 

ஆனா, லிங்கம் வெச்சி, 'ஈஷா'னு பேர் வெச்சதுக்கு அப்புறம் அவங்க கடகடனு வளர்ந்துட்டாங்க. எங்கெங்கிருந்தோ ஆளுங்க வர ஆரம்பிச்சாங்க. என்ன நடக்குதுன்னு இப்போ வரைக்கும் எங்களுக்கு ஒண்ணுமே புரியலை. காலம்காலமா இருந்த யானைங்க பாதையையெல்லாம் அடைச்சிட்டாங்க. காட்டை கொஞ்சம் கொஞ்சமா அழிச்சி  விதிகளை மீறி கட்டடம் கட்டிட்டாங்க. இவங்க எங்க மரம் நட்டிருக்காங்க? இருந்த மரங்களையெல்லாம் வெட்டினாங்க. இங்க இவ்வளவையும் செஞ்சிட்டு, நதிகளைக் காப்பாத்தப் போறேன்னு சொல்றாங்க. முதல்ல எங்க காடும், யானைகளும் வாழ வழிவிடச் சொல்லுங்க.'' 

''பள்ளிக்கூடம் போனதே இல்லை. கூலிவேலை செய்ற இந்த சாமான்ய மனுஷியோட உறுதியும் உரமும் ஆச்சர்யமா இருக்கே..?!"  

''பள்ளிக்கூடம் போனவங்களெல்லாம், பெரிய படிப்பு படிச்சவங்களெல்லாம், தான் நல்லா இருக்கணும், தன் குடும்பம் நல்லா இருக்கணும்னுதானே நெனைக்குறாங்க?  அதனாலதான் இவ்வளவு பிரச்னையும். எங்க அப்பா  கான்ட்ராக்ட் வேலையெடுத்து செஞ்சிகிட்டு இருந்தார். அவர் வீட்டுக்கு வந்து கணக்கு வழக்குப் பேசும்போது அதைப் பாத்துகிட்டே இருப்பேன். உலக விஷயங்கள் கொஞ்சம் புரிஞ்சது. அப்புறம் மகளிர் சுய உதவிக்குழுவுல சத்யஜோதி மேடமும், காமராஜு சாரும் நெறைய கத்துக்கொடுத்தாங்க. பேங்க்னா என்னனு தெரிஞ்சது. கலெக்டர் ஆபீஸுக்குப் போக, வரத் தெரிஞ்சது. மலைவாழ் மக்களுக்கு நல்லது செய்யணும்கிற நோக்கத்துல வந்த நல்ல மனுஷங்கயெல்லாம் நிறைய விஷயங்கள் கத்துக்கொடுத்தாங்க.  

இப்போ எங்களோட நிலைமை ரொம்ப மோசமா இருக்கு. இவ்வளவு காலமா வாழுறோம், எங்களுக்குனு ஒரு இடம் இல்லை. பட்டா இல்லை. ஆதிவாசிகளுக்குத்தான் காட்டுல எல்லா உரிமையும் இருக்குனு வாய்ப்பேச்சுக்கு வேணும்னா சொல்லுவாங்க.  ஆனா, அதுக்கான எந்த அத்தாட்சியுமே எங்களுக்குத் தர்றது இல்லை. நாங்களும் மனுஷங்கதானே? எங்களை ஏன் மனுஷங்களாவே மதிக்க மாட்டேங்குறாங்கனு  ஆதங்கமா இருக்கு. இவ்வளவு காலம் அடிமை வாழ்க்கை வாழ்ந்தாச்சு. இனிமேல் வர்ற சந்ததிகளாச்சும் நல்லபடியா வாழணும். அதுக்கு எங்களுக்கு இடம் வேணும். இதுவரைக்கும் 25 போராட்டங்களுக்கும் மேல பண்ணிட்டோம். கலெக்டர்கிட்ட மனு கொடுத்திருக்கோம்.  கோர்ட்ல கேஸ் போட்டிருக்கோம். நல்லது நடக்கும்னு நம்புவோம்.''  

''உங்க குடும்பம் பற்றி..?"

''எனக்கு ரெண்டு பசங்க, ஒரு பொண்ணு. நான் ஈஷாவை எதிர்க்கிறதைப் பார்த்து பயந்துகிட்டு என் ரெண்டு பசங்களும் எங்களைவிட்டு விலகிட்டாங்க. ‘அது கடலும்மா... கடலுகிட்ட மோதணும்னு நெனைக்காத’னு சொல்லிட்டு  ஈஷாவுக்கே வேலைக்குப் போயிட்டா என் பொண்ணு. நான் ஈஷாவை எதிர்த்து கேஸ் போட்டப்போ, நான் ஒரு லூசுனு  என் மகளை பத்திரிகைகள்ல பேட்டி கொடுக்கவெச்சு  என்னை அவமானப்படுத்தினாங்க. என் கதையைக் கேட்டா உங்களுக்கு தூக்கம் வராது. பெத்த பிள்ளைங்களெல்லாம் என்னைவிட்டுட்டுப் போயிட்டாங்க.  எனக்கு இருக்கிற ஒரே ஆதரவு என் வீட்டுக்காரர்தான். எதைப்பத்தியும் எனக்குக் கவலை இல்லை. யார் என்னைவிட்டுப் போனாலும் எனக்கு பிரச்னையில்லை. எங்க மக்களுக்காகப் போராடி அவங்களோட நெலத்தை மீட்டுக் கொடுக்கணும்.  அதுதான் என்னோட லட்சியம்.''

''பிரதமரே  ஈஷாவுக்கு வந்துபோயிருக்கிறார். அரசியல்வாதிகளின்  ஆதரவும் ஈஷாவுக்கு இருக்குது. எந்த நம்பிக்கையில் ஈஷாவை எதிர்க்கிறீங்க?"  

''நியாயத்தை நம்பித்தான் போராடுறோம். வெள்ளியங்கிரி சாமி எங்களை கைவிடாதுனு நாங்க நம்புறோம். ஆதியோகி சிலையைப் பாக்குறதுக்கு வந்த பிரதமர், பக்கத்துல இருக்குற ஆதிவாசிகளோட போராட்டத்தைப் பத்தி தெரிஞ்சுக்கிட்டு எங்களையும் பார்த்துப் பேசியிருந்தாருன்னா உண்மை என்னன்னு தெரிஞ்சிருக்கும். ஆதியோகிகிட்ட பணம் இருக்கு, ஆதிவாசிகள்கிட்ட இல்லை. பணம் இருக்கிறவங்களைத்தான் எல்லோரும் பார்க்குறாங்க. பாமர சனங்களெல்லாம்  எக்கேடு கெட்டுப்போனா என்னனு விட்டுடுறாங்க. இங்க பயந்தா வாழவே முடியாது.  இன்னைக்குச் செத்தாலும் சாவுதான், என்னைக்குச்  செத்தாலும் சாவுதான். அந்த 44 ஏக்கரை மீட்குற வரைக்கும் என் போராட்டம் நிக்காது. அதுக்குள்ள நான் செத்துப்போனாலும், ஏன் இன்னைக்கே நான் செத்துப்போனாலும்... அந்த இடத்துக்காகப் போராடியே  முத்தம்மா செத்துப்போயிட்டான்னுதான் இருக்கும்.''


இது குறித்து ஈஷா மையத்தின் பதிலாக நாம் கேட்டபோது, அவர்கள் தரப்பிலிருந்து... 


வணக்கம்.

ஆதியோகி சிலை நிறுவுவதைத் தடுக்கவும், மஹாசிவராத்திரி விழாவை தடைசெய்வதையும் உள்நோக்கமாய்க் கொண்டு சுயநல நோக்கம் உள்ள சிலர் 20.11.2016 தேதியில் துவங்கிய அமைப்புதான், இந்த வெள்ளியங்கிரி மலை பாதுகாப்புக் குழு. இந்த அமைப்பின் தலைவர் முத்தம்மா தொடுத்துள்ள வழக்கு முற்றிலும் அடிப்படையற்றது, ஆதாரமற்றது.

குறிப்பிடப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலத்திற்கும் ஈஷாவிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. இதுபோல், முழுக்க முழுக்கப் பொய்யான கதைகளைப் புனைந்து, எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல், பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி, ஏமாற்றுப் பாதையில் அழைத்துச் செல்கின்றனர்.

இதற்கு முன் பலமுறை கூறப்பட்டது போல, ஆதியோகி சிலை, ஈஷா அறக்கட்டளைக்குச் சொந்தமான பட்டா நிலத்தில்தான் அமைந்துள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை கூறுகிறோம். கிராம நிர்வாக அலுவலர் முதல், மாவட்ட ஆட்சியர் வரை இந்நிலத்தை ஆய்வுசெய்த பின்னர், முறையான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர்தான் ஆதியோகி சிலை நிறுவப்பட்டது.

ஈஷா அறக்கட்டளையைச் சேர்ந்த அனைத்து கட்டிடங்களுக்கும் மலைத்தளப் பாதுகாப்புக் குழுவிடமிருந்து (HACA) தொழில்நுட்ப இசைவு பெறப்பட்டுள்ளது. காடுகள் ஆக்கிரமிப்பு, யானை வலசைப் பாதையில் அமைந்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களை முற்றிலுமாக நிராகரித்து, தமிழக வனத்துறையே பலமுறை பதிலளித்துள்ளது. 

இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமான அனைத்து ஆவணங்களும் எங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

பொது மக்களின் பங்கேற்புடன் 3 கோடிக்கும் அதிகமான (3,03,39,094) மரங்களை ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம் நட்டுள்ளது. மத்திய மாநில அரசுகளின் சுற்றுச்சூழலுக்கான உயரிய விருதுகளை, ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு ஆண்டும், தமிழகக் கிராமங்களின் கிராமிய உணர்வினை பறைசாற்றும் வகையில், அங்கு மிக விரிவான, ஈஷா கிராமோத்சவம் எனும் விளையாட்டுப் போட்டிகள், கொண்டாட்டமாய்க் கோலாகலமாய் நடைபெறுகின்றன. கிராமியக் கலை, இசை, கிராமிய உணவுத் திருவிழாக்கள் இதில் முக்கிய இடம்பெறகின்றன. ஜாதி, மத, பாலின பாகுபாடுகளைக் கடந்து, கிராமப்புறங்களின் உயிர்துடிப்பை வெளிப்படுத்துவதாய் இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது.

இவ்வளவு பன்முகப்பட்ட  சேவைகளை ஒரே குடையின் கீழ அற்பணிப்புடன் செய்து வரும் நிறுவனங்கள் நாட்டிலேயே வெகு சில. இந்தச் சேவைகளின் தாக்கத்தைக் குறைத்துக்காட்டியும் நோக்கத்தைக் கொச்சைப்படுத்தியும் கிளம்பும் பொய்யான குற்றச்சாட்டுகளுக்குச் சில அமைப்புகளும் துணை போவது வேதனை அளிக்கிறது.

ஈஷா மையம் சார்பாக அளித்த பதில்களை முத்தம்மாவிடம் கூறியபோது, அவர், "எங்களைப் போராட்டத்தை நீர்த்துபோகச் செய்ய இந்த விஷயங்களைத் திரும்பத் திரும்பச் சொல்றாங்க. எங்கள் தரப்பு நியாயத்தை நிரூபிக்க நாங்க எப்பவுமே தயாராக இருக்கிறோம்." என்றார். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு