Election bannerElection banner
Published:Updated:

" திரு. விஜய்க்கு பி.ஜே.பி.-யின் ஜி.எஸ்.டி சவால்!” - தமிழிசை சூளுரை

" திரு. விஜய்க்கு பி.ஜே.பி.-யின் ஜி.எஸ்.டி சவால்!” - தமிழிசை சூளுரை
" திரு. விஜய்க்கு பி.ஜே.பி.-யின் ஜி.எஸ்.டி சவால்!” - தமிழிசை சூளுரை

" திரு. விஜய்க்கு பி.ஜே.பி.-யின் ஜி.எஸ்.டி சவால்!” - தமிழிசை சூளுரை

"தமது கருத்துகள் ஏற்கப்படுகிறதோ இல்லையோ, ஆணித்தரமாக வெளிப்படுத்துவார். அதையொட்டி எத்தனை அவதூறுகள், தனிமனித எதிர்ப்புகள் வந்தாலும் அதை அனாயசமாக எதிர்கொள்வார். மெர்சலுக்கே மெர்சல் காட்டிய  அந்த தில்தான் எங்கள்  தமிழிசை செளந்தரராஜன்" என பி.ஜே.பி அலுவலகத்தில் நுழைந்த எனக்கு அவர்குறித்து இன்ட்ரோ கொடுத்தனர் பி.ஜே.பி-யினர். ஆம், 'மெர்சல்' ஒட்டி எழுந்த சில சச்சரவுகள் குறித்த நேர்காணலுக்காக பி.ஜே.பி-யின்  தமிழ்நாடு மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜனை நேரில் சந்தித்தேன்....

"வாங்க தம்பி எல்லோரும் நலமாக இருக்கிறார்களா?" அன்போடு நலம் விசாரித்தார். அவரிடம் , ''விஜயுடன் ஏன் மல்லுக்கட்டு?'' என நேர்காணலைத் தொடங்க, "அவர் வெளிப்படுத்திய வசனங்களுடன்தான் மல்லுக்கட்டு, அவரிடமல்ல..." என சிரித்தபடியே பதிலளித்தவரிடம் கேள்விகளை முன் வைத்தேன். 

''ஏன் மெர்சலை எதிர்க்கிறீர்கள்?''

''ஒரு நடிகர் தமது எண்ணங்களை திரையில் பிரதிபலிப்பதில் தவறில்லை. ஆனால், அவர் வெளிப்படுத்தும் கருத்துகளில் உண்மை இருக்க வேண்டும். விஜய் வெளிப்படுத்திய ஜி.எஸ்.டி குறித்த வசனங்களில் துளியும் உண்மையில்லை. 'ஒரே நாடு-ஒரே வரி' மூலம் ஒற்றுமையும், இதற்கு முன்பு நிலவிய வரிச் சுமைகளும் குறைந்துள்ளது என்பதே உண்மை. அந்தவகையில், ஜி.எஸ்.டி என்பது இந்தியாவை மென்மேலும் வளர்த்தெடுத்து வல்லரசாக்கும் ஒரு திட்டம். அதை ஏதோ போகிறபோக்கில், கிண்டலடித்துச் செல்வதை எப்படி ஏற்க முடியும்? இலவச மருத்துவம்குறித்து விஜய் பேசுகிறார். ஏதோ இவர் மக்களுக்காக சம்பளமே வாங்காமல் நடித்தது போல!  அரசுத் திட்டங்கள் மீது அவதூறு வீசுகிறார். நம் பிரதமர் மோடி, நாடு முழுக்க  அரசு மருத்துவமனைகள் திறந்துவருகிறார். ஏழை - எளிய மக்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். எனவே, தேவையில்லாமல் அவதூறு பரப்ப வேண்டாம் .  மத்திய அரசு திட்டங்களை அவதூறு செய்யும் காட்சிகளை 'மெர்சல்' படத்திலிருந்து நீக்க வேண்டும்.''

''தணிக்கை செய்யப்பட்டு வெளியான படத்தில் உள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என்பது கருத்துரிமை, படைப்புரிமை மீதான அதிகார தாக்குதலாக பார்க்கப்படுகிறதே?''

''இந்த வசனங்களைத் தணிக்கைத்துறை நீக்கத் தவறிவிட்டது என்றும் விமர்சிக்கிறோம். ஆட்சி என்பது மக்களால் உருவாக்கப்பட்டது. மக்கள் அளித்த வாக்குகள் என்பது எங்கள்மீது அவர்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு. அதை உணர்ந்தே பிரதமர் மோடி, மக்கள் மேம்பாட்டுக்கான பணிகளை இரவு-பகல் பாராமல் செய்துவருகிறார். அவ்வாறிருக்க, சினிமாவில் எதை வேண்டுமானாலும் பரப்பலாமா? ஆட்சிமீது களங்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை எதிர்க்கிறோம். அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது.  எனவே, காட்சிகளை நீக்க வேண்டும் என்கிறோம்.''

''தனிப் பெரும்பான்மையாக மத்தியில் ஆட்சி அமைக்கும் பி.ஜே.பி மீதான நம்பிக்கையை ஒரு திரைப்படத்தில் வரும் மூன்று நிமிட காட்சி சிதைத்துவிடுமா? அப்படி என்றால், விஜயைப் பார்த்துப் பயப்படுகிறீர்களா?''

''யாரைப் பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கில்லை. ஒழுங்கான கணக்கு வழக்கு காட்டாத அவர்கள் வேண்டுமானால் எங்களைக் கண்டு பயப்படலாம். சினிமா என்பது சில மணி நேரத்தில், மக்களுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திவிடும் மிகப் பெரிய ஊடகம். அதன்மூலம்  தவறான தகவலைப் பரப்பும்போது மக்களிடம் குழப்பம் ஏற்படும். எனவேதான் காட்சிகளை நீக்கச் சொல்கிறோம். திரையில் நல்லவர் போல பேசும் நடிகர்கள் எத்தனை பேர் முறையாக வருமான வரி கட்டுகின்றனர்? ஜெயலலிதா இருந்தபோது இதே விஜய்யின் வீரம் எப்படி இருந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். அப்போது ஓடி ஒளிந்தவர் இன்று திரையில் ஏதேதோ பேசுகிறார். அரசியலுக்கு வரணும்னா உண்மையிலேயே மக்களுக்கு நல்லது செய்து உழைத்துவிட்டு வர முயற்சி செய்யுங்கள். அதைவிடுத்து இப்படி தவறான தகவல்களைக் காட்சிகளில் பரப்புவதும், கைத்தட்டலுக்காக வசனம் வைத்து மக்களை ஏமாற்றுவதும் வேண்டாம்.''

''உங்கள் விமர்சனங்களில் அதிகாரம் வெளிப்படுவதாக கூறப்படுகிறதே?''

''எனக்கு கருத்துடன்தான் மாற்றுக் கருத்தே தவிர விஜயுடனோ, அவரின்  ரசிகர்களிடமோ இல்லை. ஆனால், இந்த நிமிடம் வரை மோசமான வசைபாடுகள், தவறான பேச்சுகள், தரம் தாழ்ந்த கேலிகள்  என எனக்கு போன் கால்கள், மெசேஜ்கள் வருகின்றன. இதை என்னவென்று சொல்வது? எந்தப் பூச்சாண்டிக்கும் நான் அஞ்சமாட்டேன். ஜி.எஸ்.டி குறித்து விவாதிக்க நான் தயார். விஜய் தயாரா?''

"மெர்சல் பட விவகாரத்தில் தலையிட்டு தமிழின் தன்மானத்தை மதிப்பு  இழக்கச் செய்யாதீர்கள்' என்று பி.ஜே.பி யைக் கண்டித்து ராகுல் ட்வீட் செய்துள்ளார்.   'பராசக்தி இப்போது வெளியாகி இருந்தால் பா.ஜ.க என்ன செய்யும்'? என ப.சிதம்பரம் ட்வீட் செய்திருக்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்" ?

"சரி நான் கேட்கிறேன் பராசக்தியும், மெர்சலும் நெருக்கடி நிலை காலத்தில் ரிலீஸாகியிருந்தால் இவர்கள் என்ன செய்திருப்பார்கள் ? நெருக்கடி நிலையைக் கொண்டு வந்து கருத்துரிமை, பேச்சுரிமையை ஒடுக்கிய இவர்கள், இன்று ஏதேதோ பேசுவதைக் கண்டு வேடிக்கையாக உள்ளது. ஃபேஸ்புக் விமர்சனத்துக்காக கல்லூரி மாணவிகள் என்று கூடப் பார்க்காமல் வழக்கைப் பாய்ச்சி கருத்துச் சுதந்திரத்தை ஒதுக்கினார்கள். ஏனோ இதை சிதம்பரம் மறந்துவிட்டார் போல."

''மெர்சல் விமர்சனங்களைக் கடந்து உங்களுக்குப் பிடித்த விஜய் படம் என்ன?''

''நான் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களை விரும்பிப் பார்ப்பவள். எம்.ஜி.ஆரின் சமூக கருத்துகள், சிவாஜி படங்களில் வெளிப்படும் குடும்ப கருத்துகள் எனக்குப் பிடிக்கும். இப்போதெல்லாம் நான் படங்கள் பார்ப்பதில்லை. அதற்கு நேரம் கிடைப்பதில்லை. விஜய் படங்களை நான் பார்த்ததில்லை. 'மெர்சல்' குறித்த காட்சிகள்கூட, கட்சியைச் சேர்ந்தவர்கள் சொல்லி, அதை விசாரித்து உண்மை என அறிந்த பின்பே எதிர்க்கிறேன். நீக்க வேண்டும் என்கிறேன்." என்றார் அழுத்தமான குரலில்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு