Published:Updated:

சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1

சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1
சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1

சுகாதாரத்துறை கொசுக்களை விரட்டிய யுக்தி...! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம்-1

பொது சுகாதாரம், நோய்த்தடுப்பு, உயர்தரச் சிகிச்சை ஆகியவற்றுக்கு ஐரோப்பிய நாடுகளையும் அமெரிக்காவையும் உதாரணமாகப் பேசுவது இந்தியா போன்ற நாடுகளில் ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டது. இதேசமயம், லட்சக்கணக்கான மக்களைப் பாதித்த ’டெங்கு’ ஆபத்தை, தங்கள் நாட்டிலிருந்து விரட்டியடித்து சத்தமில்லாமல் சாதித்துக்காட்டியுள்ள கியூபாவின் வழிமுறையை, முன்மாதிரியாகப் பின்பற்றுமாறு ஐநா அமைப்புகளே கேட்டுக்கொண்டிருக்கின்றன. 

இதையெல்லாம்விட, கியூபாமீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை அரை நூற்றாண்டுகளாக இன்னும் முழுமையாக நீக்கப்படாதநிலையில், கியூபாவுடன் அமெரிக்கா அரசு ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த உடன்பாடு கையெழுத்தானது. அப்போது பேசிய அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மானுடசேவைகள் துறையின் செயலாளர் சில்வியா மேத்யூஸ் பன்வெல், “ சுகாதாரத்துக்கும் அறிவியலுக்கும் கியூபா குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளது. தாய் மூலம் குழந்தைக்கு எய்ட்ஸ் பரவுவதை ஒழித்த முதல் நாடாக ஆனது, மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய எபோலா வைரஸைக் கட்டுப்படுத்தியது ஆகியவற்றின் மூலம் சமீபமாக கியூபா தன்னை நிரூபித்துக்காட்டியுள்ளது” என்று பாராட்டினார். 

அமெரிக்க சுகாதார மற்றும் மானுடசேவைகள் உலக விவகார அலுவலகத்தின் தலைவர் ஜிம்மி கோல்கர்,” டெங்குக் காய்ச்சல் மற்றும் உலகம் முழுக்க பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள ஜிகா வைரஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள, உலக சுகாதார நிறுவனம் அமைத்துள்ள ஒத்துழைப்பு மையங்களுக்கு கியூபா ஒரு வீட்டைப் போன்றது. ஏடிஸ் எஜிப்டி கொசுவால் உண்டாகும் வெப்பமண்டல நோய்களை கியூப அரசு கையாண்ட அனுபவத்தை, இந்த உடன்பாட்டின் மூலம் அமெரிக்கா பெறமுடியும்” என்று குறிப்பிட்டது, வரலாற்று முக்கியத்துவம் உடையது! 

இந்த உடன்பாட்டுக்கு முன்னர்வரை, அமெரிக்காவில் மூட்டுமுடக்குவாத அபாயத்தில் இருந்த ஆயிரக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் நோயாளிகள், கியூப நாட்டுத் தயாரிப்பான ஹெபெர்பிராட்- பி எனும் மருந்தை சட்டரீதியாகப் பெறமுடியாமல் இருந்தனர். இத்துடன், தலை மற்றும் கழுத்துப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களுக்கு நிமோடுசுமாப் எனும் கியூப மருந்து ஒரு வரப்பிரசாதம் போல அருமையாக வேலைசெய்யக்கூடியது. இந்த மருந்துமே அமெரிக்க நோயாளிகளுக்குத் தேவைப்பட்டபோதும், கியூபாமீது அமெரிக்க அரசு விதித்திருந்த தடையால் கிடைக்காமல் இருந்துவந்தது. 

இந்த நிலையில்தான், புதிய உடன்பாட்டின் மூலம் இவ்விரண்டு மருந்துகள் உட்பட பல்வேறு மருத்துவ சிகிச்சைமுறைகளையும் இரு நாடுகளும் முறைப்படி பகிர்ந்துகொள்ள வழி ஏற்பட்டது, குறிப்பிடத்தக்கது. 

இதெல்லாம் சரி. டெங்குவை விரட்ட அப்படி என்னதான் செய்துவிட்டது, கியூபா? 

வெப்பமண்டலப் பகுதி நாடுகளுக்கான பிரச்னைகளில் ஒன்றான டெங்கு, கியூபாவையும் விட்டுவைக்கவில்லை. டெங்குவைப் பரப்பும் ஏடிஸ் எஜிப்டி கொசுக்களை அழிப்பதற்கு மட்டுமல்ல, அவை உருவாகாமலேயே தடுப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகளை கியூபா அரசு எடுத்தது. 

கியூபாவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட சுகாதாரத் துறை கவனிப்பும் கண்காணிப்புத் திட்டமுமே கொசு ஒழிப்பில் நல்ல பலனை அளித்தது என்கிறார், அறிவியல்/ நுட்பவியல் துறையின் இயக்குநர் லியனா மொரால்ஸ். 

பொதுசுகாதாரத் துறையில் அக்கறையோடு இயங்கிவரும் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறும் ஒரு சங்கதி, கியூப மாடலைப் பற்றி எளிமையாகப் புரிந்துகொள்ள உதாரணமாக இருக்கும். 

நம் நாட்டில் கொசுமருந்தை எப்படி அடிக்கிறார்கள் எனக் கேட்டால் சிறுவர்களும்கூட விளக்கிச் சொல்வார்கள். கியூபாவிலோ, (சென்னை போன்ற) ஒரு நகரத்தில் மருந்தடிக்கவேண்டும் என்றால், முதலில் நகரத்துக்கு வெளியிலிருந்து அதன் மையப்பகுதியை நோக்கி தொடர்ச்சியாக மருந்தடித்தபடி செல்வார்கள்; இடைவிடாமல் மீண்டும் நகரின் மையத்திலிருந்து புறநகர்ப் பகுதிகளில் தொடங்கிய இடம்வரை மருந்தடித்துக்கொண்டுவருவார்கள். 

”இப்படிச் செய்வதால் முதல்முறை மருந்தில் தப்பிய கொசுக்கள் இரண்டாம் முறையில் தப்பமுடியாது; பெரும்பாலான கொசுக்கள் அழிக்கப்பட்டுவிடும்” என விளக்குகிறார், டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத். 

மருத்துவக் கட்டமைப்பு:

சிறிய நாடான கியூபா, முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சுகாதாரத்துறையில் சாதித்துவருவதற்கு முக்கியக் காரணம், அதன் அடிப்படைக் கட்டமைப்பு. பத்து ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குப்படி, ஒரு கோடியே 10 இலட்சம் மக்கள்தொகை கொண்ட கியூபாவில், 200 பேருக்கு ஒருவர் எனும் அளவில் மருத்துவர்கள் இருக்கின்றனர். அதாவது 10 ஆயிரம் பேருக்கு 55 மருத்துவர்கள். 

(தொடரும்)

அடுத்த கட்டுரைக்கு