Published:Updated:

‘‘நாங்கள் கடல் எல்லையை மீறியது இல்லை’’

‘‘எல்லை தாண்டி வருவதை நிறுத்த வேண்டும்’’முற்றுப் பெறுமா மீனவர் பேச்சுவார்த்தை?

மீன்பிடித் தடைக்காலம் நீட்டிப்பு, மீனாகுமாரி கமிஷன் அறிக்கை, இலங்கை - தமிழக மீனவர் பேச்சுவார்த்தையில் இழுபறி... என அடி மேல் அடி விழுந்து நிலைகுலைந்து போயிருக்கிறார்கள் தமிழக மீனவர்கள்.

மூன்று கட்டங்களாக நடைபெற்றுள்ள இரு நாட்டு மீனவர்களின் பேச்சுவார்த்தை இப்போது இறுதி அத்தியாயத்தை எட்டியுள்ளது. இருதரப்பினருக்கும் சாதகமான முடிவை இலங்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பில் தமிழக மீனவர்கள் பதைபதைப்போடு காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

இதுபற்றி நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பின் தமிழக பிரதிநிதி அருளானந்தம், ‘‘இலங்கை மற்றும் தமிழக மீனவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ஏற்கெனவே, மார்ச் மாதத்தின்போது நடந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய அனைத்துக் கோரிக்கைகளையும் இலங்கை மீனவ சங்க பிரதிநிதிகளிடம் தெரிவித்துவிட்டோம். அதற்கு, அவர்கள் எங்கள் நாட்டு அரசுடன் கலந்து ஆலோசித்துவிட்டு சொல்வதாகக் கூறினர். அதேபோல், இலங்கை மீனவர்களும் எங்களிடம் பல கோரிக்கைகளை வைத்திருக்கிறார்கள். முக்கியமாக, தடை செய்யப்பட்ட இரட்டைமடி, சுருக்கு மற்றும் தங்கூசி வலைகளையும் இழுவை படகுகளையும் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். நாங்களும் அதற்கு ஒப்புக்கொண்டோம். மேலும், 365 நாட்களில் 83 நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிப்பது, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மாற 3 ஆண்டுகள் கால அவகாசம் போன்ற எங்களுடைய கோரிக்கைகளையும் இலங்கை மீனவப் பிரதிநிதிகளிடம் தெளிவாக விளக்கி விட்டோம். இனி முடிவு அவர்களுடைய கைகளில்தான் உள்ளது.

‘‘நாங்கள் கடல் எல்லையை மீறியது இல்லை’’

என்றுமே நாங்கள் இலங்கையை அந்நிய நாடாக கருதியதில்லை. மீனவனுக்குக் கடல் மட்டும்தான் ஒரே வாழ்வாதாரம். அவர்களுடைய வாழ்வாதாரத்தை சீர்குலைத்துவிட்டு நாங்கள் மட்டும் வாழ வேண்டும் என்று ஒருபோதும் எண்ணியது கிடையாது. இதுநாள் வரை இருதரப்புகளில் இருந்தும் நிறைய சேதங்களை சந்தித்துவிட்டோம். நாங்கள் செய்த தவறுகளுக்காகப் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கக்கூட தயாராக இருக்கிறோம். நம் இருநாட்டு மீனவர்களுக்குள்ளான ஒற்றுமை கடந்தகால பேச்சுவார்த்தைகளின் மூலம் இறுக்கமாகி உள்ளது.

அந்த உறவு சிதைந்துவிட நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. அடிதடி சண்டையெல்லாம் நம்மோடு முடிந்துவிடட்டும். இனி வருபவருக்கு ஆரோக்கியமான சூழலை உருவாக்கித் தருவோம்’’ என்றார் உருக்கமாக.

‘‘நாங்கள் கடல் எல்லையை மீறியது இல்லை’’

‘இலங்கையில், தற்போது சிறீசேன தலைமையிலான ஆட்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். மேலும், இலங்கை மீனவர்களுக்கு இவர்களுடைய ஆதரவு பலமாக இருப்பதால் இப்போது இருநாட்டு மீனவர் விவகாரம் வேறு ஒரு திசையை நோக்கி பயணிக்கத் தொடங்கியுள்ளது. இந்தப் போக்கு தமிழக மீனவர்களுக்கு எதிராக அமைய அதிக வாய்ப்புள்ளது’ என்று கருத்து தெரிவிக்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இன்னும் இரண்டு வாரங்களில்  இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை தொடர்பான இறுதி முடிவை எடுக்க தயாராகி வருகிறது இலங்கை அரசு. இது தொடர்பாக, கொழும்பு மீனவர் சங்கத் தலைவர் சதாசிவத்தைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘இந்த விவகாரத்தில் இலங்கை வடமாகாணத்தைச் சேர்ந்த மீனவர்கள்தான் அதிகம் பாதிப்புக்குள்ளாகின்றனர். தமிழக மீனவர்களோடு நடந்த பேச்சுவார்த்தையில் இன்னும் இரண்டு வார

‘‘நாங்கள் கடல் எல்லையை மீறியது இல்லை’’

காலத்துக்குள் இலங்கை அரசோடு பேசி முக்கிய முடிவுகளை எடுக்கவுள்ளோம். தமிழக மீனவர்களிடம் நாங்கள் வைத்த கோரிக்கைகளும் நியாயமானவைதான். நாங்கள் பாரம்பர்ய மீன்பிடி முறையைத்தான் இதுவரை கையாண்டு வருகிறோம். இரட்டைமடி வலை, சுருக்கு வலை மற்றும் இழுவை படகுகளைப் பயன்படுத்துவதில்லை.

கடல் வளத்தைக் காப்பதற்காக இவை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் பலரும் இதைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். அதை மாற்றிக்கொள்ளுங்கள் என்று கோரிக்கை வைக்கிறோம். பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருந்தபோதே தமிழக மீனவர்களால் ஈயக்குண்டு மற்றும் பெட்ரோல் பாம் கொண்டு இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டார்கள். நாங்கள் எப்போதும் இலங்கைக் கடல் எல்லையை கடந்ததில்லை. ஆனால், தமிழக மீனவர்கள் கச்சத்தீவையும் தாண்டி இலங்கைக்கு மிக அருகில் வந்து மீன்பிடித்துச் செல்கின்றனர். தமிழக மீனவர்களோடு இணக்கமாகச் செல்லவே விரும்புகிறோம். இருந்தும் அரசு அறிவிக்கும் முடிவே இறுதியானது’’ என்றார் அவர்.

யாழ்ப்பாண மாவட்ட கடல் தொழிலாளர்களின் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் எமிலியாம்பிள்ளை, ‘‘இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தையும் தொடங்கி 10 ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆனால், இந்த 10 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்களை மீனவர்கள் செய்திருக்கிறார்கள் என்றால் ஒன்றுமே கிடையாது. இது வெறும் பேச்சுவார்த்தைகளால் தீர்க்கக் கூடிய பிரச்னையல்ல. இரு நாட்டு அரசுகளும் தலையிட்டு எப்போதோ தீர்த்திருக்க வேண்டும். ஆனால், அதற்கான முயற்சிகளை இருநாட்டு அரசுகளுமே எடுத்ததில்லை. நாங்கள் தமிழக மீனவர்களை வெறுக்கவில்லை. அவர்களை தொப்புள் கொடி உறவுகளாகத்தான் பார்க்கிறோம். ஆந்திராவில் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்ட போதும் துடிதுடித்துப் போனோம். நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான், தயவுசெய்து எல்லை தாண்டி வராதீர்கள். எங்கள் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குறியாக்க வேண்டாம்’’ என்றார் வேதனையோடு.

இரண்டு தரப்பு மீனவர்களுக்குமான கருத்து மாறுபாட்டை போக்க வேண்டியது அரசின் கடமை!

- நா.இள.அறவாழி
படங்கள்: கு.பாலசந்தர்

தடைக்கால கொடுமை!

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த முன்னாள் விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் ராமகிருஷ்ணனிடம் தடைக்கால நீட்டிப்பு குறித்துப் பேசினோம். ‘மீன்களின் இனப்பெருக்கத்துக்காக 45-லிருந்து 61 நாட்களாக நீட்டிப்பு செய்திருப்பதாக மத்திய அரசு காரணம் சொல்கிறது. நாட்டுப் படகுகளுக்குத் தடைக்காலம் பொருந்தாது என்பதால், அவர்கள் என்ஜின்களைப் பொருத்தி மீன்களைப் பிடித்துவிடுகின்றனர். தடைக்காலத்தின்போது என்ஜின் பொருத்திய நாட்டுப் படகுகளைப் பயன்படுத்த அரசு அனுமதிக்கக் கூடாது. புதுச்சேரி மாநிலத்தில் தடைக்காலத்தின்போது மாநில அரசானது மீனவர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் பணம், 25 கிலோ அரிசி மற்றும் படகு பராமரிப்புக்காக 25 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறது. ஆனால், தமிழகத்தில் மாதம் 2,000 ரூபாய் மட்டுமே தருகின்றனர். அந்தத் தொகையும் தடைக்காலம் முடிந்தவுடன்தான் கிடைப்பதால், அது எதற்குமே பயனில்லாமல் போகிறது. தடைக்கால நிவாரணத்தை உயர்த்தி காலத்தோடு வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மீனவர்கள் நிராகரிக்கும் மீனாகுமாரியின் அறிக்கை!

ஆழ்கடல் மீன்பிடிப்பு குறித்து மீனாகுமாரி தலைமையில் அமைக்கப்பட்ட குழு தாக்கல் செய்த அறிக்கை பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் அறிக்கையின் பரிந்துரைகளை நிராகரிக்கக் கோரி மீனவர்கள் நடத்திய பேரணியால், டெல்லியே தடதடத்துள்ளது. தேசிய மீனவர் பேரவையின் தலைவர்  இளங்கோவிடம் பேசினோம். ‘‘நிபுணர் குழுவின் அறிக்கை இந்திய பாரம்பர்ய மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் வகையில் உள்ளது. மீனவர்களுக்கு எதிரான பரிந்துரைகளை மத்திய அரசு கண்டிப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது. இந்த கமிட்டியின் பரிந்துரைப்படி கட்டுமரம், வள்ளம், நாட்டுப் படகு, விசைப் படகுகள் என அனைத்தும் கடற்கரையில் இருந்து 12 மைல்களுக்குள்ளேயே மீன் பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவார்கள். மேலும், கோஷ்டி மோதலுக்கு இது வழிவகுத்து மீனவ கிராமங்களில் கலவரம் வெடித்து சட்டம் - ஒழுங்கு பாதிக்கும். எனவே, மீனாகுமாரி அறிக்கையின் பரிந்துரைகளை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும். மேலும், மோடியின் தேர்தல் வாக்குறுதிப்படி மீனவர்களுக்கான தனி அமைச்சகத்தை உடனடியாக அமைக்க வேண்டும்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு