Election bannerElection banner
Published:Updated:

‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம்

‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம்
‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம்

‘ஆன்டி ஹ்யூமனாக’ இருப்பது சரியா ஹெச்.ராஜா அவர்களே..! - ஒரு சாமானியனின் கடிதம்

ரியாதைக்குரிய, மரியாதை தெரியாத ஹெச்.ராஜா அவர்களுக்கு,

வணக்கம். ‘என்னடா இது, எடுத்தவுடனே இப்படிச் சொல்லிவிட்டார்களே' என்று நீங்கள் வருத்தப்பட மாட்டீர்கள் என்று நம்புகிறேன். ஏனென்றால், அடுத்தவர் மனம் புண்படுமோ என்று அளந்து அளந்து பேசுபவர்கள்தான் தன் மனம் புண்படுவது பற்றிக் கவலைப்படுவார்கள். ஆனால், வெந்த புண்ணில் வெந்நீரையும் விஷத்தையும் ஊற்றுவதுதான் உங்கள் இயல்பு என்பதைச் சமீபகாலமாகப் பார்த்துவருகிறோம்.

‘வெந்த புண்' என்று சொல்லும்போதுதான் சமீபத்தில் நீங்கள் தெரிவித்த கருத்து நினைவுக்குவருகிறது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் நீங்கள் உதிர்க்கும் 'கருத்து முத்து'க்களால் கதிகலங்கி நிற்கிறது தமிழகம். ஆனால், நீங்கள் வீசிய அணுகுண்டுகளிலேயே மோசமான வெடிகுண்டு இதுதான். நெல்லை கலெக்டர் அலுவலகத்தில், கந்துவட்டியால் பாதிக்கப்பட்ட இசக்கிமுத்து தன் மனைவியுடனும் இரு பச்சிளம் குழந்தைகளுடனும் தீக்குளித்தார். அந்தச் செய்தியைப் படித்தும் அந்தப் புகைப்படங்களைப் பார்த்தும் கதறிக் கண்ணீர் சிந்தாதவர்களை 'மனிதர்' என்ற நான்கு எழுத்துகளில் அழைக்கவே முடியாது.

இதைப் பார்த்த, படித்த தமிழர்கள் இறந்துபோன இசக்கிமுத்து குடும்பத்துக்காக இரக்கப்பட்டுக் கண்ணீர் சிந்தினார்கள் அல்லது கந்துவட்டிக் கொடுமை கண்டு கொதித்துக் குரல் எழுப்பினார்கள். ஆனால் நீங்கள்...? யாருக்கும் உதிக்காத ஒரு மகா சிந்தனை உங்கள் மூளையில் உதித்தது. அதை வார்த்தைகளாக்கிக் கொட்டினீர்கள். 'இதுக்கெல்லாம் காரணம், கடவுள் பக்தி இல்லாததுதான். ஈ.வெ.ராவும் அவர் ஆள்களும் நாத்திகத்தைப் பரப்பினதுதான் காரணம்' என்றதோடு, ‘வட நாட்டில யாரும் தீக்குளிக்கிறாங்களா, திராவிடக் கட்சி ஆள்கள்தான் தீக்குளிக்கிறாங்க, தேசியக் கட்சியில யாராவது தீக்குளிக்கிறாங்களா? பகுத்தறிவு என்ற பெயரில் அடிப்படை அறிவே இல்லை' என்றெல்லாம் பொளந்துகட்டியிருக்கிறீர்கள்.

கந்துவட்டிக் கொடுமையையும் கண்டுகொள்ளாத அதிகார வர்க்கத்தையும் பற்றிப் பேச வேண்டிய நேரத்தில் ‘நாத்திகத்தை’ப் பற்றிப் பேசுவதற்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் அகில இந்திய அறிவாளியான நீங்களே சொல்லிவிட்டதால்தான் இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது. இறந்துபோன இசக்கிமுத்துவோ அவர் குடும்பமோ நாத்திகர்கள் என்பதற்கோ... அவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாமல் போனதால்தான் தீக்குளிக்கும் முடிவுக்கு வந்தார்கள் என்பதற்கோ இதுவரை எந்த ஆதாரமும் இல்லை. ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்துவிட்டு, பத்தாயிரம் ரூபாய்க்கு வட்டி வசூலித்தும் 'கடன் அடையவில்லை' என்று கசக்கிப்பிழியும் கந்துவட்டிக்காரர்கள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தானா, திரு ஹெச்.ராஜா?

எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்பதுதானே பகுத்தறிவு, அந்தப் பகுத்தறிவுதானே வேண்டாம் என்று நீங்கள் எங்களுக்குப் போதிக்கிறீர்கள்? 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் வார்த்தைகளை, 'ஆன்மிகம்' என்று நம்பும் தமிழர்கள் நாங்கள். ஆனால், நீங்களோ நான்கு மனித உயிர்கள் கருகியபோதும் நாத்திகம்தான் காரணம் என்று அடாவடித்தனமாகக் கருத்து உதிர்த்துவிட்டு, அதற்கு 'ஆன்மிக ஈடுபாடு' என்று பெயர் சூட்டுகிறீர்கள். பொதுவாக நீங்கள் பதில் சொல்ல முடியாத கேள்வியை யார் கேட்டுவிட்டாலும் அல்லது மோடியை விமர்சித்தாலும் அவர்களுக்கு 'ஆன்டி இந்தியன்' என்று பட்டம் சூட்டுவீர்கள். உங்கள் வரையறையின்படி, 'ஆன்டி இந்திய'னாக இருப்பதுகூட அவமானமில்லை. ஆனால், உங்களைப்போல் 'ஆன்டி ஹியுமனா'க (anti human) மட்டும் இருந்துவிடக் கூடாது என்பதே எங்களின் இப்போதைய விருப்பம், திரு ஹெச்.ராஜா.

உங்கள் வாதத்துக்கே வருவோம். வி.பி.சிங் மண்டல் கமிஷன் கொண்டுவந்தபோது, 'பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது' என்று கோஸ்வாமி என்ற உயர்சாதி இளைஞர் தீக்குளித்தாரே, அவரும் நாத்திகர்தானா? 'வைகோ பிரிந்தபோது சில இளைஞர்கள் தீக்குளித்தார்கள். திராவிடக் கட்சிகளில்தான் தீக்குளிப்பு இருக்கிறது. தேசியக் கட்சிகளில் தீக்குளிப்பு இல்லை' என்று சொன்னதோடு, நாத்திகத்தையும் முடிச்சுப்போட்டிருக்கிறீர்கள். நாத்திகக் கட்சியான கம்யூனிஸ்ட் கட்சிகளும் தேசியக் கட்சிகள்தானே? அங்கே யாரும் இதுவரை தீக்குளித்ததில்லை என்பது உங்கள் மூளைக்கு எட்டாதது ஏன்?

தன் உடலைத் தானே எரித்துக்கொள்ளும் தற்கொலை முடிவு என்பது எவராலும் ஏற்க முடியாததுதான். எப்போதுமே இத்தகைய தற்கொலைகளைத் தவிர்க்க வேண்டும் என்றுதான் எல்லா அரசியல் தலைவர்களும் வலியுறுத்தியிருக்கிறார்கள். தீக்குளிப்புக்குக் காரணம் நாத்திகம் என்கிறீர்களே, ஒடிசாவில் ஸ்டெயின்ஸ் கிரஹாம் என்ற பாதிரியாரையும் அவர் குழந்தைகளையும் ஒரு மதவெறிக் கும்பல் எரித்துக்கொன்றதே, அவர்களும் நாத்திகர்கள்தானா. 2002-ல் குஜராத் பெஸ்ட் பேக்கரியில் 14 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்களே, அவர்களும் நாத்திகர்கள்தானா. தற்கொலைக்குக் காரணம் நாத்திகம் என்றால், இந்தக் கொலைகளுக்குக் காரணம் என்ன சித்தாந்தம் என்றும் சொல்வீர்களா ஹெச்.ராஜா?

இனி 'மெர்சல்' விவகாரத்துக்கு வருவோம். 'மெர்சல்' படத்தில் விஜய் பேசிய வசனங்கள் ஜி.எஸ்.டி குறித்துத் தவறான கருத்துப்பரப்பல் என்றும் மோடி எதிர்ப்பு நோக்கம் கொண்டவை என்றும் விமர்சிக்கவும் எதிர்ப்புத் தெரிவிக்கவும் உங்களுக்கும் தமிழிசைக்கும் நிச்சயம் உரிமை உண்டு. ஆனால், ஆட்சி அதிகாரத்தைக் கொண்டு மிரட்டவும் கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கவும் உங்களுக்கு உரிமையில்லை.

'தவறான தகவல்கள் என்பதால் காட்சிகளை வெட்ட வேண்டும்' என்கிறீர்கள். சரி, இன்னும் சில 'தவறான தகவல்'களையும் பார்த்துவிடலாமா. 'பிள்ளையார் தலையை ஒட்டவைத்ததன் மூலம் பிளாஸ்டிக் சர்ஜரிக்கு முன்னோடியே இந்தியர்கள்தான்' என்று மோடி பேசியதை வரலாற்றுக் கவுன்சில் கண்டித்ததே! அதுவும் மோடி வேறெங்கு பேசினாலும் பரவாயில்லை, விஞ்ஞானிகள் கூட்டத்திலேயே பேசினாரே! இந்தத் 'தவறான தகவலுக்கு' மோடியை என்ன செய்வது ஹெச்.ராஜா? 

மோடி அரசு புதிய 2,000 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியபோது, 'இந்த ரூபாய் நோட்டில் ஜிப் பொருத்தப்பட்டுள்ளது' என்றாரே, உங்கள் கட்சியைச் சேர்ந்த காமெடி நடிகர் எஸ்.வி.சேகர், எங்கே ரெண்டாயிரத்தில் ஜிப்? அதுமட்டுமா, '35 மார்க் எடுத்த தாழ்த்தப்பட்டவருக்கு டாக்டர் சீட் கிடைக்கிறது' என்று பொருமினாரே எஸ்.வி.சேகர். கடந்த பத்தாண்டுகளின் கட் ஆஃப் மதிப்பெண்களை எடுத்துப் பார்ப்போம், 35 மதிப்பெண் எடுத்த எந்தத் தாழ்த்தப்பட்டவருக்கு எம்.பி.பி.எஸ் சீட் கிடைத்தது? நோட்டு விவகாரத்திலும் சீட் விவகாரத்திலும் 'தவறான தகவல்' தந்த எஸ்.வி.சேகரை என்ன செய்வது ஹெச்.ராஜா அவர்களே. சமீபத்தில்கூட 'மோடியின் தாயார் தீபாவளி கொண்டாடும் வீடியோ' என்று தவறான வீடியோவை ட்விட்டரில் வெளியிட்ட கிரண்பேடிக்கு என்ன தண்டனை ஹெச்.ராஜா. அவ்வளவு ஏன், 'மோடி விஜய்யைச் சந்திக்க வரவில்லை. விஜய்தான் மோடியைச் சந்தித்தார்' என்று நீங்கள் முதலில் சொன்னீர்கள். ஆனால், ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் 'எனக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி' என்று அந்தக் காலகட்டத்தில் விஜய் போட்ட ட்வீட்டை ஆதாரமாகக் காட்டிக் கேட்கப்பட்டபோது, ''அதனால் என்ன தப்புங்கிறேன்?" என்று சமாளித்தீர்களே ஹெச்.ராஜா, இப்படித் தவறான தகவல் தந்த உங்களை என்ன செய்வது ஹெச்.ராஜா?

‘ ‘மெர்சல்’ படத்தை இணையத்தில் பார்த்தேன்' என்றீர்கள். எதிர்ப்பு வந்ததும், 'இல்லையில்லை, சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் பார்த்தேன்' என்றீர்கள். பிறகு 'வாட்ஸ்அப்பில் வந்தது. என் போன். நான் பார்ப்பேன். என்ன தப்பு?' என்றீர்கள். தமிழிசை உள்பட பி.ஜே.பி. தலைவர்கள் எதிர்ப்புத் தெரிவித்த பிறகு, சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படப்போவதாகச் செய்திகள் வந்தபிறகுதான் அந்தக் காட்சிகள் மட்டும் வாட்ஸ்அப்பில் பரவின. ஆனால், நீங்களோ அதற்கு முன்பே பார்த்ததாகச் சொல்லியிருந்தீர்கள். ஒருவேளை, மொத்தப் படத்தையுமே உங்களுக்கு மட்டும் யாராவது வாட்ஸ்அப்பில் அனுப்பிவிட்டார்களா, அதற்குப் பெயர்தான் 'டிஜிட்டல் இந்தியா'வா?

ஜி.எஸ்.டி-யை விமர்சித்ததால் விஜய்யை 'ஜோசப் விஜய்' என்கிறீர்கள். மோடி அவரே விரும்பிச் சந்தித்தாரே, அப்போது விஜய்யின் பெயர் என்ன ராமகிருஷ்ண விஜயா? 'மெர்சல்' வெளியாவதற்கு முதல்நாள்தான் அவர் மதம் மாறினாரா? 

‘கோயிலுக்குப் பதிலாக ஹாஸ்பிட்டல் கட்டச் சொல்பவர் சர்ச்சுக்குப் பதிலாக ஹாஸ்பிட்டல் கட்டச் சொல்வாரா?' என்று கேட்கிறீர்கள். 'ஜோசப் விஜயாவது' கோயிலுக்குப் பதில் மருத்துவமனைதான் கட்டச் சொன்னார். 'கோயில் கட்டுவதைவிட கழிப்பறை கட்டுவதுதான் முக்கியம்' என்று 'யங் இந்தியா நியு இந்தியா' மாணவர்கள் மாநாட்டில் பேசியவர் நரேந்திர மோடி. ஹாஸ்பிட்டல் கட்டச் சொன்னவர் 'ஜோசப் விஜய்' என்றால், கோயிலுக்குப் பதில் கழிப்பறையே கட்டச் சொன்ன மோடி என்ன 'ஜோசப் மோடி'யா, 'யூசுப் மோடி'யா... திரு ஹெச்.ராஜா அவர்களே?

'இரட்டை இலைச் சின்னம் முடக்கப்படும்' என்றார் தமிழிசை. முடக்கப்பட்டது. 'ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்படும்' என்றார், அதே தமிழிசை. ரத்து செய்யப்பட்டது. 'இணையத்தில் படம் பார்த்ததாக ஹெச்.ராஜா சொல்வது கண்டிக்கத்தக்கது' என்றார் விஷால். அடுத்தநாளே, அவர் வீட்டில் ரெய்டு நடக்கிறது. ஆணவத்தின் உச்சியில் இருக்கும் யாரும் வரலாற்றின் சிகரங்கள் ஏறியது இல்லை என்பதை உணர்ந்துகொள்ளுங்கள் ஹெச்.ராஜா.

'ராஜா' என்று பெயர் இருப்பதால், தமிழகத்துக்கே ராஜா என்று நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். ஒரு தேசியக் கட்சியின் தேசியச் செயலாளர் என்ற பொறுப்பான பதவியில் இருந்தாலும் நாலாந்தரப் பேச்சாளரைப்போலவே நடந்துகொள்கிறீர்கள். பேசிப்பேசியே ஆட்சிக்கு வந்தவர்கள் தமிழகத்தில் உண்டு. ஆனால், தமிழகத்தில் பி.ஜே.பி-க்கு இருக்கும் எச்சம் சொச்சம் வாக்குகளையும் காலி பண்ணக்கூடிய 'திறமை' உங்கள் வாக்குக்கும் நாக்குக்கும் மட்டும்தான் இருக்குங்கிறேன்.

இப்படிக்கு

'ஆன்டி இந்தியன்' பட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும்

தமிழன்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு