Election bannerElection banner
Published:Updated:

பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு? கேள்வி எழுப்பும் முத்தரசன்

பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன  தொடர்பு? கேள்வி எழுப்பும் முத்தரசன்
பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு? கேள்வி எழுப்பும் முத்தரசன்

பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு? கேள்வி எழுப்பும் முத்தரசன்

பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி கேட்கிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்.

திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வந்துள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் அயிலை சிவசூரியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் சகிதமாக, பத்திரிகையாளர்களிடம் பேசிய முத்தரசன்,  “திருநெல்வேலி ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் கந்துவட்டிக் கொடுமையால் தொழிலாளி இசக்கி முத்து மற்றும் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் என குடும்பத்துடன் தீக்குளித்த சம்பவம் மிகக் கொடூரமானது. ஜெயலலிதா இருந்தபோது, கந்துவட்டியைக் கட்டுப்படுத்த தனிச்சட்டம் கொண்டுவந்தார். அதன்பிறகு, கந்துவட்டி கட்டுக்குள் இருந்தது. இந்தச்சூழலில், தற்போது தமிழகம் முழுவதும் கந்துவட்டி பிரச்னை அதிகரித்துள்ளது. ஏழை எளிய மக்களின் அன்றாடத் தேவைக்குப் பணம் தேவைப்படுகிறது. கந்துவட்டிக்காரர்கள் இதைப் பயன்படுத்திக்கொள்வதுடன், கடன் கொடுத்து, வட்டியைப் பலவகையில் வசூல்செய்கிறார்கள். இதற்கு, பல இடங்களில் காவல் துறையும் உடந்தையாகச் செயல்படுகிறது. இந்த விவகாரத்தில், கந்துவட்டிக்காரர்கள்மீது நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பொறுப்பற்ற அதிகாரிகள்மீதும் நடவடிக்கை எடுத்திட வேண்டும். கந்துவட்டி தடைச்சட்டத்தை முறையாகக் கடைபிடிக்க வேண்டும்.

பாசனத்துக்குத் தண்ணீர் திறக்கப்பட்டிருந்தாலும், பணம் இல்லாததால் விவசாயப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. சென்ற ஆண்டு வாங்கிய கடனை ரத்துசெய்து, புதுக் கடன்களைக் கொடுக்க வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், கேரளாவில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்கிற சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்கு முன்மாதிரியாக இருந்தது, தமிழகம். இங்கு அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்கள் நீதிமன்றத் தடையினால் பணி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தடையை நீக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடு முழுவதும் தலித் மக்கள்மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதைக் கண்டித்தும், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதை நாடு முழுவதிலும் அமல்படுத்தக் கோரியும், விவசாயக் கடன்களைத் தள்ளுபடிசெய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், வரும் டிசம்பர் 6-ம் தேதி இந்தியா முழுவதிலும் விவசாய சங்கம் சார்பாகப் போராட்டம் நடத்தப்படும்.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் முறையைத் தவிர்த்து, மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் ஆணையம், பி.ஜே.பி-யின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிட்டது. வேளாண்துறையை மத்திய பட்டியலில் சேர்க்கும் நிதி ஆயோக் பரிந்துரைகள் அனைத்தும் ரத்துசெய்யப்பட வேண்டும். மாநில உரிமைகளைப் பறிக்கும் அந்தக் குழுவை கலைக்க வேண்டும். 'மெர்சல்' திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள், தமிழிசை செளந்தரராஜனுக்கும் ஹெச்.ராஜாவுக்கும் நன்றி சொல்ல வேண்டும். சென்சார் போர்டு படத்தைப் பார்த்து, படத்தைத் திரையிட அனுமதியளித்த பிறகு, வசனங்களை நீக்க வேண்டும் என்று பி.ஜே.பி அறிக்கை விடுத்துள்ளது. இதுபோன்ற நாகரிகமற்ற அரசியல் மற்றும் மிரட்டும் போக்கு அதிகரித்துள்ளது. அரசியல் நாகரிகமற்ற முறையில் தனிநபர் தாக்குதலை பி.ஜே.பி கைவிட வேண்டும். அரசியல் பண்பாட்டை அவர்கள் காப்பாற்ற வேண்டும்.

தீபாவளியை முன்னிட்டு, பால் உற்பத்தியாளர்களுக்கு தலா ரூ.150 மதிப்புடைய வெடி, ஸ்வீட் கட்டாயமாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான தொகையை 3 தவணைகளில் வசூலிக்க பால்வளத்துறை ஆணையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் ராஜேந்திர பாலாஜிக்கும் பட்டாசு ஆலை அதிபர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது எனத் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்”என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு