Election bannerElection banner
Published:Updated:

''பி.ஜே.பி. தலைமை ஹெச்.ராஜாவை அடக்கிவைக்க வேண்டும்!'' - சுப.வீரபாண்டியன்

''பி.ஜே.பி. தலைமை ஹெச்.ராஜாவை அடக்கிவைக்க வேண்டும்!'' -  சுப.வீரபாண்டியன்
''பி.ஜே.பி. தலைமை ஹெச்.ராஜாவை அடக்கிவைக்க வேண்டும்!'' - சுப.வீரபாண்டியன்

''பி.ஜே.பி. தலைமை ஹெச்.ராஜாவை அடக்கிவைக்க வேண்டும்!'' - சுப.வீரபாண்டியன்

ந்துவட்டிக் கொடுமையால், குடும்பத்தையே தீ நாக்குகளுக்குத் தின்னக்கொடுத்துவிட்ட திருநெல்வேலி சம்பவம் ஏற்படுத்தியிருக்கும் அதிர்ச்சி அலைகள் இன்னமும் நம்மைவிட்டு விலகவில்லை. நாட்டையே உலுக்கியிருக்கும் இச்சம்பவம் குறித்தான சமீபத்திய விவாதங்கள் மக்களிடையே பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திவருகின்றன. 

கரூரில், செய்தியாளர்களைச் சந்தித்த பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா, ''திராவிட இயக்கங்களாலும் பகுத்தறிவு சிந்தனைகளாலுமே இதுபோன்ற தீக்குளிப்புச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெருகிவருகின்றன'' என்றதொரு கருத்தைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 'திராவிட இயக்கத் தமிழர் பேரவை'த் தலைவர் சுப வீரபாண்டியனிடம் பேசியபோது...

''ஹெச்.ராஜா ஒவ்வொருநாளும் பேசுகிற செய்திகளைப் பார்க்கும்போது, அரசியலில் இப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்களே என்ற வேதனைதான் எழுகிறது. உண்மையை அப்படியே மாற்றிப்பேசுகின்ற அவருடைய கருத்துகளால் பொதுமக்களிடையே குழப்பங்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே இப்போது நான் பதிலளிக்க வேண்டியிருக்கிறது'' என்ற வேதனையோடு நமது கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆரம்பித்தார்.

'' 'ஆன்மிக நம்பிக்கை குறைந்துபோனதுதான் இதுபோன்ற சம்பவங்களுக்கான காரணம்' என்று ஹெச்.ராஜா விமர்சித்திருக்கிறாரே?''

''திருநெல்வேலியில், கந்துவட்டிக் கொடுமையைத் தாங்க முடியாமல், குடும்பத்தோடு தீக்குளித்தவர்கள் பற்றிய வேதனைச்செய்தி இன்னமும் தாங்கமுடியாத வலியைத் தந்துகொண்டிருக்கிறது. இதயத்தில் ஈரமே இல்லாதவர்கள்கூட அந்தக் காட்சியைப் பார்க்கும்போது பெரிய கலக்கத்துக்கு உள்ளாவார்கள். அப்படிப்பட்ட தாங்கமுடியாத ஒரு துயரச் சம்பவத்தைப் பற்றிப் பேசும்போதுகூட, 'கடவுள் நம்பிக்கை இருந்திருந்தால், இப்படியெல்லாம் ஆகியிருக்காது' என்று எந்தத் தொடர்புமின்றி ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார் ஹெச்.ராஜா. 'நாத்திகத்தை நாட்டைவிட்டே விரட்டவேண்டும்' என்றும் சொல்லியிருக்கிறார். நடந்துபோன இந்தச் சம்பவத்துக்கும் நாத்திகத்துக்கும் என்ன தொடர்பு என்று எனக்குத் தெரியவில்லை. இறந்துபோனவர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாத பகுத்தறிவுவாதிகள் என்று  ஹெச்.ராஜாவுக்கு யாராவது சொன்னார்களா?

மனித நேயம் கொண்டவர்கள் யாராகயிருந்தாலும் அந்த நிகழ்வுக்காக தங்களது இரங்கலை, வருத்தத்தைத் தெரிவிப்பார்களே தவிர... யாராவது இதையும் கொண்டுவந்து அரசியலாக்குவார்களா? இன்றைக்கும் நாட்டில் உள்ளவர்களில் 99 விழுக்காட்டினர் கடவுள் நம்பிக்கையாளர்கள்தான். கோவில்கள் கூடியிருக்கின்றன, திருவிழாக்கள் பெருகியிருக்கின்றன, பக்தி அதிகரித்திருக்கிறது.... என்றெல்லாம் ராஜாவைப் போன்றவர்கள்தான் அடிக்கடி சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மக்களிடையே பக்தி அதிகரித்திருக்கிறது என்று சொல்லும் இவர்கள், மக்களிடையே ஒழுக்கமும் அதிகரித்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? 
பக்தி கூடியிருக்கிறது கூடவே கொலை, கொள்ளை, மோசடிகளும்தான் கூடியிருக்கிறது என்றால், பக்தி கூடினால் என்ன... கூடாவிட்டால் என்ன? இதையும் அதையும் முடிச்சுப் போட்டு நான் பேசவில்லை. ஆனால், இதுபோன்ற நிகழ்வுகளுக்கெல்லாம் பகுத்தறிவு - நாத்திகம்தான் காரணம் என்று ஹெச்.ராஜாதான் முடிச்சுப் போட்டுப் பேசிவருகிறார்.'' 

''மெர்சல் திரைப்பட வசனம் தொடர்பான பிரச்னை, நடிகர் விஜயில் ஆரம்பித்து விடுதலைச் சிறுத்தைகள் வரை நீண்டுகொண்டே போகிறதே...?''

''விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரை நோக்கி, ரவுடிகள், அரசியலைவிட்டே அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள் என்றெல்லாம் சொல்கிறார் ஹெச்.ராஜா. கொஞ்சம்கூட அரசியல் நாகரிகம் இல்லாமல், வெறுப்பை உருவாக்குகிற விதமாக ஒவ்வொருநாளும் அவர் பேசிவருகிற சொற்கள் எல்லை மீறிக்கொண்டிருக்கின்றன. 

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய், பிரதமர் மோடியைச் சந்தித்தபோது நடிகர் விஜயாக இருந்தார். ஆனால், இப்போது அவரது படத்தில், ஜி.எஸ்.டி-யைப் பற்றி விமர்சித்துவிட்டார் என்பதாலேயே அவரை 'ஜோசப் விஜய்' என்று சொல்கிறார். இப்படி எல்லாவற்றுக்குள்ளும் மதத்தைச் சேர்ப்பது, வலுக்கட்டாயமாகத் தன்னுடைய கருத்தைத் திணிப்பது என்று வெறுப்பு அரசியலை - அருவருப்பு அரசியலைத் தமிழ்நாட்டில் நடத்திக்கொண்டிருக்கிறார். இது அவர் சார்ந்திருக்கும் கட்சிக்குத்தான் மிகப்பெரிய கேடு. இந்திய அளவிலே அந்தக் கட்சியின் தலைவர்களாக இருப்பவர்கள், உண்மையிலேயே அவர்களுடைய கட்சி இந்த மண்ணில் கொஞ்சமாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைத்தால், இப்படிப் பேசுபவர்களை அடக்கி வைத்தாக வேண்டும்.''

''திராவிட இயக்கங்களினால்தான் இதுபோன்ற தீக்குளிப்புச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் பெருகிவிட்டதாகக் கூறுகின்றாரே...?'' 

''திராவிட இயக்க சிந்தனைகளைத் பழித்துப்பேசுவதென்பது இன்றைக்கு ஒரு நாகரிகமாகிவிட்டது. தமிழ்நாட்டில்தான் பெரியார் பிறந்தார், பகுத்தறிவுக் கொள்கைகள் வளர்ந்தன அதனால் எல்லாம் கெட்டுப்போய்விட்டது என்கிறார். சரி, அப்படியே வைத்துக்கொள்வோம். கடவுள் நம்பிக்கை உள்ள வட இந்தியாவில் இப்படிப்பட்ட நிகழ்வுகளோ, கொலை, கொள்ளையோ நடக்கவே இல்லையா? 

திராவிட இயக்கம்தான் இந்த மண்ணில் படிப்பைக் கொண்டுவந்தது, சுயமரியாதையைக் கொண்டுவந்தது. மனிதனை மனிதனாக மதித்து நடந்துகொள்ள வேண்டும் என்ற உணர்வைக் கொண்டுவந்தது. ஆனால், எல்லாவற்றையும் அப்படியே மாற்றிச் சொல்கிறார்கள். ஆக, எந்த ஒன்றிலும் சம்பந்தமே இல்லாமல், அரசியலோடும் கட்சிகளோடும் தொடர்புப்படுத்திப் பேசுவதென்பது எந்தப் பொருத்தமும் இல்லாதது. விஷத்தை உமிழும் ஹெச்.ராஜாவின் இந்தப் பேச்சுக்களை அவர் சார்ந்த கட்சியே தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும். 

தமிழகத்திலே தீக்குளிக்கும் பழக்கம் அதிகரித்திருப்பதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என்று பேசியிருக்கிறார் ஹெச்.ராஜா. அவருக்குப் புராணங்கள், இதிகாசங்கள் எல்லாம் தெரியாதா? சீதை நெருப்பில் குளித்ததாக அவர்கள்தானே சொன்னார்கள்? நந்தனாரை நெருப்பிலே தள்ளியவர்கள் யார்? மண்டல் போராட்டத்தின்போது ஓர் இளைஞனை நெருப்பிலே தள்ளிவிட்டவர்கள் யார்?

நெருப்பில் விழுகிற கலாசாரம், நெருப்பை வணங்குகிற கலாசாரம் எல்லாமே அவர்களுடையதுதான். கணவன் இறந்தவுடன் அந்தச் சிதையை எரிக்கிற நெருப்பிலேயே அவனது மனைவியையும் தூக்கிப் போட்டு எரித்துக்கொல்லும் 'உடன்கட்டை' பழக்கம் எங்கிருந்து வந்தது? திராவிட இயக்கத்திலிருந்தா? இந்தக் கொடுமைகளையெல்லாம் மாற்றுவதற்குத்தான் திராவிட இயக்கம் போராடியது. 
1829-ல் 'சதி' என்கிற உடன்கட்டை ஏறும் பழக்கத்தை வெள்ளைக்காரன் சட்டம் போட்டு தடுத்தபோது, 'தடை செய்யக் கூடாது' என்று தடுத்தவர்கள்தான் ஹெச்.ராஜாவைப் போன்றவர்கள். நீர், மண், பெண்களை வணங்குவதுதான் தமிழர்களின் மரபாக இருந்துவந்தது. சிந்துசமவெளி நாகரிகத்திலிருந்து பல எடுத்துக்காட்டுகளை இதற்கு உதாரணமாகக் காட்டமுடியும். ஆக, நெருப்பை வணங்குகிற பழக்கமே இவர்கள் கொண்டுவந்ததுதான்.  எந்தச் சுயமரியாதை திருமணத்திலே நாங்கள் நெருப்பை வளர்த்து வணங்குகிறோம்? அக்னி குண்டம் வளர்ப்பது, யாகம் வளர்ப்பது, நெருப்பை வணங்குவது என நெருப்பை அடிப்படையாகக் கொண்ட கலாசாரமே அவாளுடைய கலாசாரம்தான்!''

''வாழ்க்கையில் கஷ்டங்களை எதிர்கொள்ள கடவுள் நம்பிக்கை அவசியம் என்கிறாரே ஹெச்.ராஜா?''

''பகுத்தறிவு இயக்கம் வளர்ந்ததால்தான் தங்கள் மீதான நம்பிக்கையை மக்கள் இழந்துவிட்டார்கள் என்று அப்படியே உண்மையை மாற்றிச்சொல்கிறார் ஹெச்.ராஜா. 'ஏதோ விதி... இப்படி நடந்துவிட்டது, நாம் என்ன செய்யமுடியும்? நமக்கு மேலே ஒரு கடவுள் இருக்கிறான் என்றெல்லாம் கற்பிதங்களை நம்பி பயந்து நீ இறந்துபோகக் கூடாது. நீ உன்னை நம்ப வேண்டும்' என்று தன்னம்பிக்கையைச் சொல்லிக்கொடுத்ததுதான் திராவிட இயக்கம். அதனால்தான் 'கடவுளை மற; மனிதனை நினை' என்றார் பெரியார். உண்மையிலேயே பகுத்தறிவுச் சிந்தனையோடு தன்னம்பிக்கை பெருகியிருந்திருக்குமானால், இப்படியொரு துயரச் சம்பவமே நிகழ்ந்திருக்காது என்பதுதானே உண்மை. எனவே, இதுபோன்ற நிகழ்வுகள் எல்லாம் திராவிட இயக்கங்களோடு தொடர்புடையவை அல்ல; இவற்றையெல்லாம் ஒழித்துக்கட்டத்தான் திராவிட இயக்கமே தோன்றிற்று!

மற்ற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், திராவிட இயக்கச் சிந்தனைகள் தமிழகத்திலே தோன்றிய காரணத்தினால்தான் குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஆக, உண்மையிலிருந்து சற்று விலகிப் பேசுவதென்பது வேறு; உண்மையிலிருந்து அப்படியே நேர் எதிராக விலகிப் பேசுவதென்பது வேறு. ஹெச்.ராஜாவைப் போன்றவர்கள் இந்த உண்மைகளை அப்படியே மாற்றிப் பேசி மறைக்க நினைக்கிறார்கள்; ஆனால், திராவிட இயக்கச் சிந்தனைகளையும் அதன் விளைவான பகுத்தறிவு மாற்றங்களையும் வரலாற்றிலிருந்து யாராலும் மறைக்கமுடியாது!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு