Published:Updated:

முன்னேற்றப்பாதையில் பெரம்பலூர்

சபாஷ் தாரேஸ் அகமது !

“எங்கள் மாவட்டத்தின் ஹீரோ! என்று பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமதுவைப் பாராட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் ஃப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பெண் குழந்தைகள் பாதுகாப்பில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடியிடம் விருது பெற்றுள்ளார் தாரேஸ் அகமது. எங்கள் மாவட்டத்துக்கு மட்டுமல்லாமல், தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்த்துள்ளார் தாரேஸ் அகமது என்று பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்கள் பெரம்பலூர் மாவட்ட மக்கள்.

விவசாயிகளுடன் ஒன்றாக பஸ் பயணம் செய்வது, நெருங்கிய நண்பர்களைப்போல விவசாயிகளின் தோள் மீது கைபோட்டு அவர்களின் பிரச்னைகளைக் கேட்டறிந்து தீர்வுகாண்பது, பெண் சிசுக்கொலை மற்றும் குழந்தைத் திருமணம் ஆகியவற்றின் தீமைகள் குறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதற்காக மக்களுடன் மக்களாக விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது என பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தாரேஸ் அகமது மேற்கொண்டுவரும் வரவேற்கத்தக்க நடவடிக்கைகளால் அந்த மாவட்டம் பல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது.

முன்னேற்றப்பாதையில் பெரம்பலூர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

கல்வி, சுகாதாரம் போன்ற பல விஷயங்களில் மிகவும் பின்தங்கிய மாவட்டமாக இருந்த பெரம்பலூர், தமிழ்நாட்டின் முதன்மையான மாவட்டங்களில் ஒன்றாக மாறிவருகிறது. அதற்காக தாரேஸ் அகமது, கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசிடமிருந்து ஆறு விருதுகளையும் மத்திய அரசிடம் இருந்து ஒரு விருதையும் பெற்றுள்ளார்.

தாரேஸ் அகமதுவுக்கு வாழ்த்துச் சொல்லிவிட்டு, அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

‘‘மிகவும் பின்தங்கிய மாவட்டமான பெரம்பலூரை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டுவர என்ன திட்டங்களை வைத்துள்ளீர்கள்?’’

‘‘விவசாயத்துக்கு முன்னுரிமை அளிக்கிறேன். இது, மிகவும் வறட்சியான மாவட்டம் என்பதால், விவசாயம் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான சில திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். 2012 முதல் 2013 வரை ‘ஒரு ஹெக்டேரில் ஒரு லட்சம்’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தேன். மண் பரிசோதனை, சொட்டுநீர் பாசனம், தண்ணீர் பிரச்னையைப் போக்க நடவடிக்கை, வங்கிகள் மூலம் கடன், உரங்களைக் குறைப்பதற்கான நடவடிக்கை என பல முயற்சிகளைச் செய்தேன். இவற்றைச் செயல்படுத்தவும் கண்காணிக்கவும் குழுக்களை அமைத்தேன்.

முன்னேற்றப்பாதையில் பெரம்பலூர்

அந்தக் குழுக்களின் செயல்பாடுகளை அடிக்கடி ஆய்வு செய்வேன். இந்தத் திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 378 மெட்ரிக் டன் விவசாய நிலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 2,100 விவசாயிகள் பலன் அடைந்துள்ளனர்.

வெங்காயம், பருத்தி, சோளம் ஆகியவை இங்கு அதிகமாக விளையக்கூடிய பயிர்கள். இந்த விளைபொருட்களை இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகளே நேரடியாக விற்பனை செய்வதற்கு சில நடவடிக்கைகளை எடுத்தேன். செட்டிகுளத்தில் ரூ.2.81 கோடி செலவில் வெங்காய கிடங்கு அமைக்கப்பட்டது. இதுவரைக்கும் 1.5,837 மெட்ரிக் டன் வெங்காயத்தை விவசாயிகள் நேரடியாகக் கொடுத்து பணம் பெறுகிறார்கள். அதேபோல, ஆவின் பால் பண்ணை வரவுள்ளது. விவசாயிகள் வழங்கும் பாலுக்கு நியாயமான விலை கிடைக்கும். இடைத்தரகர் பிரச்னை இருக்காது.

பாடாலூரில் ஜவுளிப் பூங்கா வரவுள்ளது. இதில், குறைந்தது 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை கிடைக்கும். இந்த மாவட்டத்தில் நீர் ஆதாரத்தைப் பெருக்குவதற்கு விசுவக்குடி அணைத்திட்டம் நிறைவடையும் தறுவாயில் உள்ளது. மருதையாற்று நீர்த்தேக்கமும் தொடங்கப்பட உள்ளது. இவை இரண்டும் செயல்பட்டால் நிலத்தடி நீர்மட்டம் பெருகும். விவசாயம் வளரும்.’’

‘‘பெரம்பலூர் மாவட்டத்தில் பெண் சிசுக்கொலை, குழந்தைத் திருமணங்கள் அதிக அளவில் நடக்க என்ன காரணம்?’’

‘‘பெண் குழந்தைகள் பிறந்தால் பாவம் என்று நினைக்கிறார்கள். மக்களுக்கு படிப்பறிவு இல்லாததாலும் போதிய விழிப்பு உணர்வு இல்லாததாலும் குழந்தைத் திருமணங்கள் நடக்கின்றன. இதுவரை,
350-க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. திருமணம் நிறுத்தப்பட்ட குழந்தைகள் படிப்பைத் தொடர வழிவகை செய்து தருகிறோம். 10 மற்றும் 12-ம் வகுப்புகளில் 70 பேர்களுக்கு மேல் தொடர்ந்து நல்ல மதிப்பெண்கள் எடுத்ததோடு இப்போது கல்லூரிப் படிப்பையும் தொடர்கிறார்கள்.

முன்னேற்றப்பாதையில் பெரம்பலூர்

நான் இங்கு பதவிக்கு வரும் வரை, பெண் சிசுக்கொலை அதிகமாக இருந்துள்ளது. இந்த நிலையைப் போக்க ஊராட்சித் தலைவர், சுகாதாரத் துறை, வருவாய்த் துறை, அங்கன்வாடி பணியாளர்கள் என எல்லோரையும் சேர்த்து குழுவாக அமைத்தேன்.

ஒரு பெண் கருவுற்றால் குழந்தை பிறக்கும் வரைக்கும் அரசு மருத்துவமனையாக இருந்தாலும் தனியார் மருத்துவமனையாக இருந்தாலும் அந்தக் குழுவின் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும். ஒருவருக்கு கரு கலைந்தாலும் அது குறித்து அறிக்கை அளிக்க வேண்டும். இல்லை என்றால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பேன்.

2010, 2011-ம் ஆண்டுகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு 865 பெண் குழந்தைகள் என இருந்தனர். 2012, 2013-ம் ஆண்டுகளில் 1,000 ஆண் குழந்தைகளுக்கு  1,016 பெண் குழந்தைகள் என உயர்ந்தது. இதுவே எனக்கு முதல் வெற்றிதான். இதற்குத்தான் இப்போது விருதும் கிடைத்துள்ளது.’’

‘‘கல்வியறிவில் முன்னேறிய மாவட்டமாக பெரம்பலூரை கொண்டுவந்துள்ளீர்கள். அது எப்படி சாத்தியமானது?’’

‘‘மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளையும் தேர்வு செய்து, அவற்றை  மூன்று வகைகளாகப் பிரித்தேன். தேர்ச்சியில் 50 சதவிகிதத்துக்கும் கீழ் உள்ள பள்ளிகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர், 70 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு  மஞ்சள் ஸ்டிக்கர், 80 முதல் 100 சதவிகிதம் உள்ள பள்ளிகளுக்கு பச்சை ஸ்டிக்கர் என அடையாளம் கொடுத்தோம். அதன்படி, தேர்ச்சி விகிதம் குறைவான பள்ளிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அந்தப் பள்ளிகளுக்கு, 10 நாட்களுக்கு ஒரு முறை நானே நேரில் சென்று வகுப்பு எடுத்தேன்.

அதன் விளைவாக, கடந்த முறை பெரம்பலூர் மாவட்டம் தேர்ச்சி விகிதத்தில் 93 சதவிகிதத்தை எட்டியது. இந்த ஆண்டும் அதே முறையைக் கடைபிடிக்கிறோம். இந்த ஆண்டு 100 சதவிகிதத்தைத் தொட்டு விடுவோம் என்று நம்புகிறோம். பெண்களுக்கு என்று தனியாக வேப்பூரில் உறுப்பு கல்லூரியும், வேப்பந்தட்டையில்  இரு பாலரும் படிக்கும் கலைக் கல்லூரிகளையும்  அமைத்து உள்ளோம். இதனால், முன்பைவிட நிறைய பெண்கள் இப்போது படிக்கின்றனர்.’’

‘‘உங்கள் பணிகளுக்கு அரசியல் குறுக்கீடு எதுவும் உள்ளதா?’’

‘‘அப்படி எதுவும் இல்லை. அரசு முழு ஒத்துழைப்பு கொடுத்ததால்தான் என்னால் சிறப்பாகச் செயல்பட முடிந்தது. இதுபோன்ற விருதுகளை வாங்கவும் முடிந்தது. எனக்குக் கீழ் உள்ள அதிகாரிகளும் உயர் அதிகாரிகளும் நல்ல ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். ஆகையால், இன்னும் சிறப்பாகச் செயல்படுவேன்.’’

- எம்.திலீபன்