Published:Updated:

“சமூகத்தில் சிறப்பான நிலையை திருநங்கைகள் அடைவார்கள்!”

மசோதா மகிழ்ச்சியில் திருச்சி சிவா

நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் உரிமைகள் மசோதா நிறைவேற்றப்பட்டதை, நாடு முழுவதும் திருநங்கைகள் கொண்டாடி வருகின்றனர். சமூகத்தின் புறக்கணிப்புக்கும் அவமதிப்புகளுக்கும் ஆளாகியுள்ள திருநங்கைகள் சமூகத்தின் முன்னேற்றத்துக்கான ஒரு பாதையை உருவாக்கிக் கொடுக்கும் இந்த மசோதா, மாநிலங்களவையில் சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு, தனிநபர் மசோதாவாகக் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டு உள்ளது. இந்த மசோதாவைக் கொண்டுவந்த தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவிடம் பேசினோம்.

“இந்த தனிநபர் மசோதாவின் வெற்றியை எப்படி பார்க்கிறீர்கள்?”

“இது ஒரு வரலாற்று நிகழ்வு. 1970-க்குப் பிறகு இதுவரை கொண்டுவரப்பட்ட எந்தவொரு தனிநபர் மசோதாவும் வெற்றி கண்டதில்லை. சில சமயங்களில் வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அமைச்சர்களால் நிராகரிக்கப்படும். இல்லாவிட்டால், ஏதாவது காரணத்தைச் சொல்லி வாதத்துக்கே எடுத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனால், இது அப்படி நிராகரிக்கப்படக் கூடிய ஒன்றல்ல. இது ஒரு சமூகத்துக்கான விடியல். இதனை யாரும் தடுக்க முடியாது. என்னதான் நடந்தாலும் இதனைக் கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் எடுத்த முயற்சியால்தான் இந்த வெற்றி. இருந்தபோதிலும், இது வாதத்துக்கு வைக்கப்பட்டபோது அமைச்சர்கள் தடுக்கப் பார்த்தார்கள்.”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
“சமூகத்தில் சிறப்பான நிலையை திருநங்கைகள் அடைவார்கள்!”

“இந்த மசோதா கொண்டுவருவதற்கு என்ன காரணம்?”

“நான் சார்ந்த இயக்கம் தி.மு.க. அது அடிப்படையிலேயே ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடும் ஓர் இயக்கம். எங்கள் ஆட்சிக்காலத்தில்தான் தமிழகத்தில் திருநங்கைகள் நலவாரியம் அமைத்தோம். அவர்களை சமூகத்தில் மோசமான பெயர் வைத்து அவமானப்படுத்தியபோது, ‘திருநங்கைகள்’ என்று அழைக்கும் சட்டத்தைக் கொண்டு வந்தோம். ஆனாலும், இந்திய அளவில் பார்க்கும்போது அவர்கள் இன்னமும் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்று யோசித்தால் துயரம்தான் மிஞ்சும். எனவே, அவர்களுக்கென்று சம உரிமைச் சட்டம் இருப்பதுதான் அவர்களின் சமூக ரீதியான பாதுகாப்புக்கு வழி செய்யும். அதை அரசுதான் செய்யும் என்று நாம் எதிர்ப்பார்க்க முடியாது. நியாயமான கோரிக்கைகளை யார் வேண்டுமானாலும் வைக்கலாம். இது, அவர்களின் வாழ்க்கைக்கு வழி செய்யும். இதைப்பற்றி நான் அவையில் பேசும்போது பார்வையாளர் பகுதியில் இருந்த திருநங்கைகளின் முகங்களில் வெளிப்பட்ட அந்தப் பதற்றமும் மகிழ்ச்சியுமே இதற்குச் சாட்சி.”

“இந்த மசோதாவினால் அவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும்?”

“சமூகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாக இவர்களும் மதிக்கப்படுவார்கள். சிறப்பான நிலையை அடைவார்கள். முக்கியமாக கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இவர்களுக்கு 2 சதவிகிதம் இட ஒதுக்கீடு கிடைக்கும். இவர்களுக்கென்று தனியாக மாநில ஆணையங்கள் அமைக்கவேண்டும். சிறப்பு நீதிமன்றங்கள், குடும்பத்தில் பாதுகாப்பு போன்றவை கிடைக்கும். இவர்கள் மீதான மக்களின் பார்வை மாறுவதற்கு இது ஒரு திறவுகோல். பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்கு 27 சதவிகிதம் ஒதுக்கீடு என்ற சட்டம்தான் இன்று அவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தியிருக்கிறது. கணக்கெடுப்பின்படி, 4.5 லட்சம் திருநங்கைகள் நாடு முழுவதிலும் இருக்கின்றனர் என்று சொல்லப்பட்டாலும் கணக்கில் வராமல் 20 - 25 லட்சம் பேர் இருப்பார்கள். எனவே, முதலில் அதற்கு சரியான முறைகளைக் கொண்டுவர வேண்டும். அத்துடன், பாலியல் தொழில், யாசகம் பெறுவது போன்றவற்றில் இருந்து மீட்டு அவர்களை சிறப்பான நிலைக்கு இந்த உரிமைகள் இட்டுச்செல்லும். இதை மட்டும் நாம் அவர்களுக்கு உறுதிப்படுத்திக் கொடுத்தால் அவர்களின் முன்னேற்றத்தை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.”

“சமூகத்தில் சிறப்பான நிலையை திருநங்கைகள் அடைவார்கள்!”

“இந்த மசோதாவுக்கான ஆதரவு, அவையில் எப்படி இருந்தது?”

“எதிர்பார்த்ததைவிட அதிகம் என்றுதான் சொல்லவேண்டும். காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் போன்ற கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவு கொடுத்தார்கள். இந்த மசோதா உணர்வுரீதியாக இருக்கிறது. இதனைக் கொண்டுவந்தால் சட்ட சிக்கல்கள் இருக்கும் என்று சொல்லி மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி முதலில் மறுத்தாலும், இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளில் அவை பிளவுபட்டு இருக்கக் கூடாது என்று சொன்ன பின்பு, அவர்களின் கட்சி உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு அளித்தனர். வரி தருகின்ற கடைசி குடிமகனுக்கும் இந்த அரசு தரும் உரிமையை திருநங்கையர் சமூகத்துக்கும் தர வேண்டும் என அனைத்து உறுப்பினர்களும் நினைத்தனர். அதனால்தான்  இந்த வெற்றி சாத்தியமாயிற்று.”

“அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆதரவளித்தார்களா?”

“இல்லை. அதுவரை அவையில் இருந்த அ.தி.மு.க உறுப்பினர்கள், இந்த மசோதா  வாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட உடனே அவையில் இருந்து வெளியேறிவிட்டார்கள். கட்சி கடந்த பிரச்னைப் பற்றி நாட்டின் முக்கிய மன்றத்தில் விவாதித்துக் கொண்டிருக்கும்போது அவர்கள் வெளியேறியது நியாயமற்றது.”

- மா.அ.மோகன் பிரபாகரன்