Published:Updated:

“அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!”

வெள்ளிவிழா மாநாட்டில் திருமா சபதம்!

துரை மண்ணில் 25 ஆண்டுகளுக்கு முன்பாகத் தொடங்கப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெள்ளிவிழா மாநாட்டை அதே மதுரை மண்ணில் வெற்றிகரமாக நடத்தி முடித்த உற்சாகத்தில் இருக்கிறார்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

மதுரை அய்யர் பங்களாவில் மாவீரன் மலைச்சாமி திடலில் கடந்த 25-ம் தேதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெள்ளிவிழா மாநாடு தொடங்கவிருந்த வேளையில் மேகங்கள் திரண்டு நின்றன. அம்பேத்கர் மற்றும் திருமாவளவனின் படங்கள் கொண்ட வெள்ளிவிழா மாநாட்டுச் சின்னம் மேடையை அலங்கரித்தது. மேடையின் இருபுறங்களிலும் இரண்டு சிறுத்தை சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மேடையில் மொய்த்து இருந்தனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து வந்து குவிந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் பேசினார் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்.

‘‘1990 ஏப்ரல் 14-ம் தேதி நீலம், சிவப்பு நட்சத்திரம் தாங்கிய கொடி ஒன்றை மதுரை மண்ணில் ஏற்றிவைத்தேன். இன்று அது, லட்சம் கொடியாக வளர்ந்து நிற்கிறது. பெண்களின் விடுதலைக்காக, திருநங்கைகளின் நலனுக்காக, ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை மனிதர்களுக்கான ஓர் இயக்கம் இருக்கிறது என்றால் அது விடுதலைச் சிறுத்தைகள்தான். இந்த இயக்கத்தை ஒடுக்குவதற்கு, நசுக்குவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்கள். தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், நக்சல்வாதிகள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்றெல்லாம் சொன்னார்கள்.      

“அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!”

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். மேலவளவில் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்டதற்காக முருகேசன் கொலை செய்யப்பட்டபோது, பல அரசியல் கட்சிகள் மௌனம் காத்தன. ஆனால், விடுதலைச் சிறுத்தைகள் களத்தில் இறங்கி போராடியது. தஞ்சையில் மண்ணுரிமை மாநாடு நடத்தியது. இப்படி ஒடுக்கப்பட்டவர்களின் பிரச்னைகளுக்காக முதலில் குரல் கொடுத்தது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. அத்துடன், ஈழத் தமிழர்களுக்காக தமிழ்நாட்டில் முதன் முதலாகக் குரல் கொடுத்த கட்சியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதான். அன்றைக்கு, பொடா சட்டம் இருந்தபோதும் விடுதலைப்புலிகளை ஆதரித்து மாநாடு நடத்தினோம். அதனால்தான், 2002-ல் இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த விடுதலைப்புலிகள் மாநாட்டில் பங்கேற்குமாறு அண்ணன் பிரபாகரன் என்னை அழைத்தார். தமிழ்நாட்டிலே விடுதலைப்புலிகள் நடத்திய மாநாட்டில் கலந்துகொண்ட ஒரே அரசியல் இயக்கம் விடுதலைச் சிறுத்தைகள் மட்டுமே.

தமிழ் மொழியைப் பாதுகாப்பதற்காக தமிழ் பாதுகாப்பு இயக்கம் உருவானது. அப்போது, ‘தமிழ் தேசியத்தின் தலைவராக, தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவராக தம்பி திருமாவளவன் இருக்க வேண்டும்’ என்று கவிஞர் காசி ஆனந்தன் சொன்னார். அதன் அடிப்படையில் இன்று சாதிக்கட்சிகள் நடத்துபவர்களும் அதை ஏற்றுக்கொண்டார்கள். அது, விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தின் வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.
விடுதலைச் சிறுத்தைகள் அரசியலுக்கு வந்தாலும், தேர்தல் களத்தில் இறங்க வேண்டும் என்று நான் சொன்னபோது, ‘அரசு வேலையைத் துறந்து விட்டு வா’ என்று மூப்பனார் சொன்னார். அதனால், 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி என் பிறந்தநாளில் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு வந்தேன். நான் அரசு வேலையில் இருந்த சமயத்திலும் வாங்கிய சம்பளத்தை வீட்டுக்கு அனுப்பாமல் பொது நோக்கங்களுக்காக செலவு செய்தேன். அந்தப் பணத்தில்தான் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்தேன். என் இளமையை ஒப்படைத்தேன். என்னுடன் இருந்து என்னை சந்திக்க வரும் நண்பர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்துவந்த என் தம்பி ராதாகிருஷ்ணன் விபத்தில் இறந்துவிட்டார். அப்போது என்னை யாரோ கொன்று விட்டார்கள் என்று வதந்தி கிளம்பியது. அதைக்கேட்டு என் பெற்றோர் கதறித் துடித்தனர்.

அனைத்தையும் கடந்து உங்கள் முன் நிற்கிறேன்.

1999-ல் முதன் முதலில் விடுதலைச் சிறுத்தைகள் தேர்தலில் நின்றது. அடுத்து 2001, 2004 என்று தேர்தல்களில் வரிசையாக நின்றோம். ஆனால் மற்ற கட்சிகளைப்போல அல்லாமல் தனியான சின்னத்தில் நின்றோம். 2006-ல் அ.தி.மு.க கூட்டணில் இருந்தபோது கூட மணி சின்னத்தில் தனியாக நின்று இரண்டு இடங்களைப் பிடித்தோம். பல்வேறு சிக்கலான காலங்களில் என்னுடன் நின்று எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள் இங்கு நிறைந்து இருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர் ரவிக்குமார். அவர் காட்டுமன்னார்குடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று முதன் முதலில் நரிக்குறவர்களுக்கு, புதிரை வண்ணார்களுக்கு, திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைத்துக் கொடுத்தார். எங்களுக்குக் கிடைத்த மிகச் சிறிய இடங்களிலும் ஒதுக்கப்பட்டவர்களின் உரிமைக்காக, நலனுக்காகக் குரல் கொடுத்து நின்றோம்.

“அடுத்த பாய்ச்சல் கோட்டையை நோக்கி!”

சாதி ஒழிப்பு, மத ஒழிப்பு, பெண் விடுதலை, ஏகாதிபத்திய எதிர்ப்பு, தமிழ் தேசியம், மனித உரிமையை நிலைநாட்டுவது... இதுதான் விடுதலைச் சிறுத்தைகளின் கொள்கைகள். முதல் கட்டமாக ஆங்காங்கே சிதறிக்கிடந்த ஒதுக்கப்பட்ட மக்களை ஒன்றாக இணைத்தோம். இது முதல் பாய்ச்சல். அடுத்த பாய்ச்சல் கொள்கையை வெல்வது, கோட்டையைப் பிடிப்பது. இனி, கோட்டையை நோக்கி அடுத்த பாய்ச்சலுக்குத் தயாராவோம்” என்று முடித்தார் திருமாவளவன்.

1990-ல் மதுரையில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி இன்று ஆலமரம்போல வளர்ந்து நிற்கிறது என்று கூட்டத்தில் கலந்துகொண்ட கட்சித் தொண்டர்கள் சிலாகித்தனர். தொல்.திருமாவளவன் இந்த அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பாக, தடய அறிவியல் துறையில்  பணியாற்றினார். அப்போது, இயக்கப்பணி தொடர்பாக தன்னை சந்திக்கவரும் நண்பர்களை தடய அறிவியல் துறை அலுவலகத்துக்கு வெளியே சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார் திருமாவளவன். தற்போது, வெள்ளிவிழா மாநாட்டுக்கு மதுரைக்கு வந்த திருமாவளவன், தடய அறிவியல் அலுவலகத்துக்கு வெளியே உள்ள பழச்சாறு கடைக்குச் சென்று கடைக்காரரிடம் நலம் விசாரித்தார். தான் பழகிய அந்த இடங்களை எல்லாம் நேரில் பார்த்துவிட்டு பழைய நினைவுகளில் மூழ்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் மாநாட்டுக்கு மதுரையில் கூடிய கூட்டத்தைப் பார்த்து இரண்டு பெரிய கட்சிகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம். கூட்டம் முடிந்த இரவே அ.தி.மு.க-வில் இருந்து முக்கிய அமைச்சர் ஒருவர் விடுதலைச் சிறுத்தைகளின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு போன் செய்து நட்பாகப் பேசினாராம். தி.மு.க தரப்பில் இருந்தும் முன்னாள் அமைச்சர் ஒருவர் வி.சி.க-வின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பேசினாராம்.

உற்சாகமாகத் தேர்தலுக்குத் தயாராகிவிட்டனர் விடுதலைச் சிறுத்தைகள்!

- சண்.சரவணக்குமார்,
படங்கள்: பா.காளிமுத்து

தொடர்ந்து போலீஸ் டார்ச்சர்!

ஏப்ரல் 25-ம் தேதி மதுரையில் வெள்ளிவிழா நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் அதற்கு அனுமதி தேவை என்றும் மதுரை கிழக்கு மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் செயலாளர் செல்லப்பாண்டியன் போலீஸுக்கு கடிதம் கொடுத்துள்ளார். பதில் கடிதம் வரவில்லை. 16-ம் தேதி நினைவூட்டல் கடிதம் கொடுத்துள்ளார்கள். அதற்கு போலீஸ் ஒரு கடிதம் கொடுத்துள்ளது. அதில் 25 கேள்விகளை எழுப்பி இதற்கு மூன்று நாட்களுக்குள் பதில் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இவர்கள் பதில் கொடுத்துள்ளார்கள். 23-ம் தேதி போலீஸிடம் இருந்து ஒரு கடிதம் வந்துள்ளது. அதில் மேலும் 23 கேள்விகள் இருந்துள்ளன. தீயணைப்புத் துறை சான்று வாங்கி வாருங்கள் என்று சொல்லி இருக்கிறார்கள். வாங்கித் தரப்பட்டது. ஆம்புலன்ஸ் புக் செய்து பணம் கட்டுங்கள் என்று சொன்னார்கள். அதையும் செய்தார்கள்.

வாகனங்கள் நிறுத்த ஒரு இடத்தை புக் செய்துள்ளார்கள். முதலில் அனுமதி கொடுத்த அந்த இடத்தின் பொறுப்பாளர் திடீரென மறுத்துள்ளார். மின்சாரத் துறையில் இருந்து ஒரு சான்றிதழ் கேட்டுள்ளார்கள். அது, பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் கலந்துகொள்ளும் கூட்டத்துக்கு மட்டுமே கேட்கும் கடிதமாம். அதை இந்த மாநாட்டுக்கு எதற்காகக் கேட்டார்களோ? இதையும் வாங்கிக் கொடுத்த பிறகு, எத்தனை வாகனங்கள் வருகின்றன, அதன் நம்பர், டிரைவர் பெயர், போன் நம்பர், அந்த வாகனத்தை எடுத்து வரும் கட்சிப் பொறுப்பாளர் போன் நம்பர் என்று எழுதிக் கொடுக்க கேட்டுள்ளார்கள். ‘‘எப்படியாவது அனுமதியை மறுக்கவும் தடுக்கவும் பார்த்தது போலீஸ்” என்று சொல்கிறார்கள் மதுரை விடுதலைச் சிறுத்தைகள்.