Published:Updated:

முப்பது ஆண்டுகளாக பார்க்க முடியாத நிர்வாகிகளைப் பார்க்கிறோம் !

ஜி.கே.வாசன் பொதுக்குழுவில் பொங்கிய மகிழ்ச்சி

ஜி.கே.வாசன் தனது கட்சியின் முதல் அடியை எடுத்து வைத்து விட்டார்!

தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் கடந்த 24-ம் தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் அதிகாரியாக பி.எஸ்.ஞானதேசிகனும் துணைத் தேர்தல் அதிகாரியாக சி.ஞானசேகரனும் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

மைக்கைப் பிடித்த பி.எஸ்.ஞானதேசிகன், ‘‘கட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிட விரும்புபவர்கள் மனதைத் திடப்படுத்திக் கொண்டு வேட்புமனுவைத் தாக்கல் செய்யலாம். இது ஜனநாயக முறையில் நடக்கும் தேர்தல்’’ என்று பேச, ‘எங்களுக்கு எல்லாம் ஒரே தலைவர் ஐயா ஜி.கே.வாசன்தான்’ என்று கூட்டத்தில் இருந்து குரல்கள் ஒலித்தன.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

பிறகு ஜி.கே.வாசனை, தலைவர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் முன்மொழிய, அதை முன்னாள் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸ் வழிமொழிந்தார். தொடர்ந்து, கட்சியின் முன்னோடிகள் ஒவ்வொருவராகத் தலைவர் பதவிக்கு ஜி.கே.வாசனை வழிமொழிந்தனர். தேர்தல் அதிகாரி பி.எஸ்.ஞானதேசிகன் மதியம் 12.30 மணிக்கு தமிழ் மாநில காங்கிரஸின் தலைவராக ஜி.கே.வாசன் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார்.

முப்பது ஆண்டுகளாக பார்க்க முடியாத நிர்வாகிகளைப் பார்க்கிறோம் !

புதிய தலைவரை வாழ்த்திப் பேச முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் மைக்கைப் பிடித்தார். “இந்தக் கட்சி தொடங்கப்பட்டது காலத்தின் கட்டாயம். கட்சியில் லட்சியம் முக்கியமானது. அதைவிட தலைமை முக்கியமானது. ஜி.கே.வாசன் தலைமைப் பொறுப்பை ஏற்று இருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் சிறுபான்மை சமுதாயத்துக்கு சவாலும், அச்சமும் ஏற்பட்டுள்ளது. கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை மதமாற்றம் செய்ய வேண்டும் என்று பேசுகிறார்கள். வாக்குரிமையைப் பறிக்கவும், கட்டாயக் கருத்தடை செய்யவும் சொல்கிறார்கள்” என்று பி.ஜே.பி-யை ஒருபிடி பிடித்தார்.

அடுத்ததாகப் பேசிய முன்னாள் எம்.எல்.ஏ பீட்டர் அல்போன்ஸ், “தமிழ் மாநில காங்கிரஸ் என்ற இயக்கம் இன்று கண் திறந்து இருக்கிறது. இந்தப் பொதுக்குழு மூலம் கடந்த 30 ஆண்டுகளாகப் பார்க்க முடியாத நிர்வாகிகளைப் பார்க்க முடிந்துள்ளது. 90 வயதினரும் 19 வயதினரும் விரும்பும் தலைவர் ஜி.கே.வாசன். தமிழகத்தில் சத்துணவு ஊழியர்கள், அதிகாரிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் என யாருமே மகிழ்ச்சியாக இல்லை. அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. எல்லா அரசியல் கட்சிகளும் தேர்தல் என்ற பரீட்சை எழுதியாக வேண்டும். ஆட்சி மாற்றம் என்பது நினைத்தவுடன் வந்துவிடுவது இல்லை. எதிரிகளிடம் அதிகாரம், பணம் என்ற ஆயுதங்கள் இருக்கின்றன. சத்தியம், வாய்மை, கடின உழைப்பு ஆகியவை நமக்கு வெற்றியைப் பெற்றுத்தரும்’’ என்றார்.

முன்னாள் எம்.எல்.ஏ ஞானசேகரன், “தமிழகத்தில் ஊழல், லஞ்ச லாவண்யத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், ஜி.கே.வாசன் முதல்வராக வேண்டும்” என்றார்.

பி.எஸ்.ஞானதேசிகன், “96-ம் ஆண்டை நோக்கி நினைவுகள் செல்கின்றன. 2 நாளில் முடிவு எடுத்து தமிழ் மாநில காங்கிரஸை மூப்பனார் தொடங்கினார். அவரது மறைவுக்குப் பிறகு 2002-ல் காங்கிரஸ் கட்சியுடன் தமிழ் மாநில காங்கிரஸை ஜி.கே.வாசன் இணைத்தார். அப்போது காங்கிரஸ் ஆட்சி இல்லை. ஆனால் 10 ஆண்டுகள் பதவி சுகத்தை அனுபவித்துவிட்டுச் சென்றதாகக் கூறுகிறார்கள். தன்னை வருத்திக்கொண்டு நமக்கு எல்லாம் அரசியல் முகவரியைக் கொடுத்தவர் ஜி.கே.வாசன். அவருக்கு நன்றிக் கடனை செலுத்துகிற நேரம் இது. சபதம் ஏற்கக்கூடிய நாள் இது” என்றார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட ஜி.கே.வாசன், “தமிழக வரலாற்றில் இடம்பிடிக்கப் போகும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் இது. இது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பிறருக்கு மருட்சியைத் தருகிறது. கடந்த 6 மாத கால உழைப்பால் இன்று த.மா.கா-வின் உறுப்பினர்கள் 45 லட்சம் பேர். பி.ஜே.பி அரசு பொறுப்பேற்று 11 மாதங்களாகிவிட்டன. இதுவரை 11 அவசரச் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. பல திட்டங்கள் முடக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசின் வேகம் குறைந்து தயக்கமும் தடுமாற்றமும் அதிகரித்துள்ளது. இப்போதுள்ள ஆட்சி ஆள்பலம், அதிகார பலம், பணபலத்தை மையமாகக் கொண்டதாக மாறிவிட்டது.

போட்டி போடும் மாநிலங்கள் நிறைந்த நாடாக இந்தியா இன்று உருவாகி வருகிறது. இத்தகைய நவீன சவால்களை சந்திக்கக் கூடிய, சக்தி வாய்ந்ததாக மாநில அரசு இருக்க வேண்டும். தமிழகத்தின் நான்கு திசைகளிலும் பிரச்னை. ஒரு பக்கம் ஆந்திராவில் வேலைக்குப் போனால் தமிழர்கள் சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். கர்நாடகாவில் தீராத காவிரிப் பிரச்னை. கேரளாவில் முல்லை பெரியாறு பிரச்னை. அண்டை நாடான இலங்கையில் கடற்படையினரால் கடலில் தமிழன் நிம்மதியாக மீன்பிடிக்க முடியவில்லை. ஆந்திரா, கேரளா, கர்நாடகா நமது அண்டை மாநிலங்களா, சண்டை  மாநிலங்களா என்பது தெரியவில்லை” என்று பேசினார்.
த.மா.கா-வின் தேர்தல் பயணம் தொடங்கிவிட்டது!

- எஸ்.மகேஷ், படம்: எம்.உசேன்