Published:Updated:

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

நந்தனம் சிக்னலில் நின்றிருந்தபோது காரின் கண்ணாடியை யாரோ தட்டினார்கள். கண்ணாடியைத் திறந்தால் கழுகார். கேள்விக்குக் காத்திருக்காமல் காருக்குள் வந்து அமர்ந்தார்.

‘‘அது சரண்டர் சண்டே!” - ஆகிவிட்டது என்று பேசவும் ஆரம்பித்தார்.

‘‘நீர்தான் அது பற்றி ஒரு வாரத்துக்கு முன்பே தகவலைச் சொல்லிவிட்டீரே!” என்றோம். ‘‘ஆமாம்! நீர்தான் அட்டைப்படமே போட்டு இருந்தீரே!” என்று கழுகாரும் நினைவு படுத்தினார்!

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘கடந்த 19.04.15 தேதியிட்ட இதழில், ‘கூட்டணி பேச்சு... பேரம் ஆரம்பம்!’ என்ற தலைப்பிட்டு எழுதி இருந்தோம். ‘தி.மு.க-வின் முதல் இலக்கு விஜயகாந்த். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போதே விஜயகாந்த்தைச் சேர்க்க தி.மு.க முயற்சித்தது. ஆனால், பி.ஜே.பி அணி என்று அவர் முடிவெடுத்துவிட்டதால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போது முன்கூட்டியே தி.மு.க தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டது. ஸ்டாலினே களத்தில் இறங்கிவிட்டார். அடுத்தடுத்த வாரங்களில் இந்தப் பேச்சுகள் சூடுபிடிக்க ஆரம்பிக்கலாம் என்கிறார்கள்” என்று கழுகார் சொல்லியிருந்தார். அந்த விஷயத்தைச் சுட்டிக்காட்டித் தொடங்கிய கழுகார், ‘‘இரண்டு வாரங்கள்கூட ஆகவில்லை, கோபாலபுரத்தை நோக்கி தனது பார்வையைச் செலுத்த ஆரம்பித்துவிட்டார் விஜயகாந்த்! காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேக்கேதாட்டு என்ற இடத்தில் புதிய அணை கட்டுவதைத் தடுக்க வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த எம்.பி-க்கள் ஒன்றாக சேர்ந்து கடந்த மார்ச் 28-ம் தேதி பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அதன் தொடர்ச்சியாக, கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் அந்த மாநில அனைத்துக் கட்சிக் குழுவினர் பிரதமர் மோடியை சந்திக்க ஏப்ரல் 22-ம் தேதி நேரம் ஒதுக்கித் தருமாறு பிரதமருக்குக் கோரிக்கை வைத்தனர். அதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை. இதுதொடர்பாக கூட்டிய அனைத்துக் கட்சி எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்துக்கு பின்னர், பேட்டி அளித்த முதல்வர் சித்தராமையா, ‘காவிரியில் புதிய அணையை கட்டியே தீருவோம். அதை அரசியல் ஆக்க வேண்டாம்’ என்று வெளிப்படையாக கர்நாடக நிலைப்பாட்டை அறிவித்தார்.’’

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்?”

‘‘இந்தச் சூழ்நிலையில்தான் விஜயகாந்த், ஓர் அறிக்கை வெளியிட்டார். ‘ஏற்கெனவே, தமிழக எம்.பி-க்கள் குழு பிரதமரை சந்தித்தும் பயன் அளிக்காத நிலையில், நம்முடைய நியாயத்தை மத்திய அரசிடம் வலுவாகப் பதியவைக்க தமிழக அனைத்துக் கட்சிக் குழு, உடனடியாக பிரதமரை சந்திக்க ஆளும் கட்சியின் இந்நாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார். இந்த அறிக்கை வெளிட்ட பிறகு தமிழக அரசிடம் இருந்து ஏதாவது அறிவிப்பு வருகிறதா என்று விஜயகாந்த் எதிர்பார்த்தார். வரவில்லை. உடனடியாகப் பிரதமரை சந்திக்க முடிவெடுத்தார். பொன்.ராதாகிருஷ்ணன் மூலமாக பிரதமரிடம் அப்பாயின்ட்மென்ட் கேட்க, சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டது.’’

‘‘ஓஹோ!”

‘‘இது இங்கிருந்த ஆளும் கட்சிக்கு உளவுத் துறை மூலமாகத் தெரியவந்தது. விஜயகாந்த் போவதற்கு முன், நாம் பிரதமரைப் பார்த்துவிட வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். கடந்த 25-ம் தேதி ‘நிதி ஆயோத்’ மாநாட்டில் பங்கேற்க டெல்லி சென்ற முதல்வர் பன்னீர்செல்வம், பிரதமர் மோடியை சந்தித்து, ‘தமிழக அரசின் அனுமதி பெறாமல் காவிரியில் எந்தத் திட்டத்தையும் மேற்கொள்ளக் கூடாது, காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும்’ என்று வலியுறுத்தி தனது கடமையை முடித்துவிட்டு வந்தார். தனது வேண்டுகோளை ஏற்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டாதது மட்டுமல்லாமல், முதல்வர் தனியாகச் சென்று பிரதமரைப் பார்த்தது விஜயகாந்த்துக்கு கோபத்தை ஏற்படுத்தியது. நாமே களத்தில் குதிப்போம் என்று  அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்க முடிவெடுத்தார். மற்றவர்களை சந்தித்தது பெரிய விஷயம் அல்ல. கருணாநிதியை சந்திக்கலாம் என்று விஜயகாந்த் முடிவெடுத்ததுதான் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆளும் கட்சியினர் இதனை எதிர்பார்க்கவே இல்லை!”

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘உண்மைதான்!”

‘‘விஜயகாந்த் சந்திக்க வருகிறார் என்ற தகவல் கருணாநிதிக்கு சொல்லப்பட்டதும் அவர் அதனை நம்பவில்லை. ஏனென்றால், பலதடவை இப்படி அவருக்குச் சொல்லப்பட்டு அவரும் ஏமாந்த நாளும் உண்டு. அதனால் அவர் அலட்டிக் கொள்ளவில்லை. ‘இன்று காலையிலேயே சந்திக்க வேண்டும்’ என்கிறார் என்றதும்தான் சம்பவம் உண்மை என்பதை உணர்ந்தார். கருணாநிதிக்குச் சொல்லியா தர வேண்டும். அவரது பொக்கிஷங்களில் இருந்து ஒரு படத்தைத் தேடி எடுத்தார். பழைய பிளாக் அன்ட் ஒயிட் படத்தில் விஜயகாந்த், பிரேமலதா இருவரும் இருக்கிறார்கள். கோபாலபுரம் வீட்டில் ஒரு காலத்தில் எடுக்கப்பட்ட படம் அது. விஜயகாந்த் உள்ளே வரும்போது தனது மேஜையில் தயாராக வைத்திருந்தார் கருணாநிதி. 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.50 மணிக்கு கோபாலபுரம் வீட்டுக்கு கருணாநிதியை பார்க்க வந்தார் விஜயகாந்த். தரைதளத்தில் காத்திருந்து ஸ்டாலின் அழைத்துச் சென்றார். கருணாநிதியைப் பார்த்த உடனே, ‘அண்ணன் (ஸ்டாலின்) லிஃப்ட்லயே என்னை உங்ககிட்ட கூட்டிட்டு வந்துட்டாரு’ என்றாராம். சால்வையை எடுத்து கருணாநிதிக்கு போர்த்தி சந்தோஷமாகப் போஸ் கொடுத்தார் விஜயகாந்த். உட்கார்ந்ததுமே, ‘உங்களைப் பற்றி நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா....’ என்று குரல் கம்மிய நிலையில் ஏதோ சொல்லியிருக்கிறார் விஜயகாந்த். ‘அதுனால என்னய்யா... இருக்கட்டும் இருக்கட்டும்’ என்றாராம் கருணாநிதி. கருணாநிதியின் உடல்நிலை குறித்து முதலில் விஜயகாந்த் விசாரித்தார். அதுபோல கருணாநிதியும், விஜயகாந்த் வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்தது பற்றியெல்லாம் விசாரித்தார். அதன்பின், விஜயகாந்த் திருமணத்தை மதுரையில் 1990-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி மூப்பனார் முன்னிலையில் தாம் தலைமை தாங்கி நடத்தி வைத்ததை நினைவுகூர்ந்துள்ளார் கருணாநிதி. அப்போது விஜயகாந்த் தன் வீட்டில் இருந்து எடுத்து வந்த ஒரு புகைப்படத்தை ஸ்டாலினிடம் கொடுக்க... அதை அவர் பார்த்துவிட்டு கருணாநிதியிடம் கொடுத்துள்ளார். ‘திருமணம் முடிந்த பிறகு சென்னைக்கு வந்து கோபாலபுரம் வீட்டுக்கு வந்தப்ப எடுத்தது’ என்று  இடம் சுட்டிப் பொருள் விளக்கிய விஜயகாந்த், அந்தப் படம் எடுக்க வந்தபோதும், அன்றைய சூழ்நிலையையும் சொல்ல... கலகலப்பானது இடம்!”

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘பலே!”

‘‘அதன் பிறகுதான் வந்த விஷயத்தை விஜயகாந்த் சொல்லியிருக்கிறார்! ‘மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதைத் தடுப்பது, முல்லை பெரியாறு பிரச்னை, 20 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, மீனவர்கள் பிரச்னை, நிலம் கையகப்படுத்தும் மசோதா ஆகிய ஐந்து விஷயங்கள் குறித்து கடிதம் எழுதுவதாலோ, போராட்டங்கள் நடத்துவதாலோ இந்தப் பிரச்னைகளுக்கு முழுமையான தீர்வு காண முடியாது. கர்நாடகாவில் பொதுப்பிரச்னை என்றால் அனைத்துக் கட்சியினரும் ஒற்றுமையாக ஓரணியில் நிற்கிறார்கள். அதற்கு தமிழகத்தில் தலைமை தாங்கி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய அ.தி.மு.க அரசு நொடிந்துப் போய்க் கிடக்கிறது. எனவேதான் எதிர்க் கட்சித் தலைவர் என்ற முறையில் உங்கள் ஆதரவை நாடி வந்துள்ளேன்’ என்றாராம் விஜயகாந்த். அதற்கு கருணநிதி, ‘தமிழக உரிமைகளுக்காகவும் ஏழை மக்கள் பிரச்னைகளுக்காகவும் உங்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். ‘நாளைக்கே பிரதமரை சந்திக்கலாம். தி.மு.க சார்பில் பிரதிநிதியை அனுப்பி வைக்க வேண்டும்’ என்று சொல்ல சம்மதம் தெரிவித்தார் கருணாநிதி. அடுத்து, காங்கிரஸ், ம.தி.மு.க., த.மா.கா., பி.ஜே.பி., விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தலைவர்களைப் பார்க்கச் செல்வதாகச் சொல்லியிருக்கிறார். விஜயகாந்த் சென்ற பிறகும் அவரைப் பற்றி பேசிக்கொண்டு இருந்துள்ளார் கருணாநிதி. ‘தம்பி விஜயகாந்த் எடுத்துள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன்’ என்றும் கருணாநிதி சொல்லியிருக்கிறார்!”

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘கூட்டணி...?”

‘‘கூட்டணிக்கான முயற்சி என்று இதனை எடுத்துக்கொள்ளலாமா என்று நிருபர் ஒருவர் கேட்க, ‘கூட்டணி தேவை என்பதும், கூட்டணி ஏற்பட்டால்தான் தமிழகத்தைக் காப்பாற்ற முடியும்’ என்றும் கருணாநிதி சொல்லியிருக்கிறார். இரண்டு கட்சிகளுக்கும் இது தேவை என்பதை கருணாநிதியின் வார்த்தைகள் சொல்கின்றன!”

‘‘இதில் பா.ம.க மட்டும் ஒதுக்கப்பட்டுவிட்டதோ?”

‘‘அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்தித்த விஜயகாந்த், அ.தி.மு.க-வை ஒதுக்கி வைத்ததுபோல பா.ம.க-வையும் கண்டுகொள்ளவே இல்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் இருந்தாலும் ஒட்டாமல் இருந்தன அந்த இரண்டு கட்சிகள். சேலத்தில் தே.மு.தி.க திட்டமிட்டு பா.ம.க-வால் தோற்கடிக்கப்பட்டது என்று விஜயகாந்த் நினைக்கிறார். எனவே அவர்களோடு எந்தக் காலத்திலும் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதில் உறுதியாக இருக்கிறாராம். அன்புமணி தனது மகளின் திருமண பத்திரிகை கொடுப்பதற்கு விஜயகாந்த்தைத் தேடி வந்தபோதும், அவர் வருகிறார் என்று தெரிந்து எஸ்கேப் ஆனார் விஜயகாந்த் என்று அப்போதே சொல்லியிருந்தேன் அல்லவா? இப்போது பா.ம.க கூட்டங்களில் அதிகப்படியாக விஜயகாந்த் விமர்சிக்கப்படுகிறார். எனவே, பா.ம.க-வினரை அவர் சந்திக்காததில் ஆச்சர்யம் இல்லை!”
‘‘சத்தியமூர்த்தி பவனுக்கு விஜயகாந்த் போகும்போது அங்கு இளங்கோவனும் சிதம்பரமும் சேர்ந்து தரிசனம் தந்துள்ளார்களே?”

‘‘காங்கிரஸ்காரர்களுக்கு இது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது! டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா ஆலோசனைக் கூட்டத்துக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அழைப்பை ஏற்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வந்திருந்தார். குஷ்புவும் அந்த இடத்தில் இருக்க.. அதேசமயத்தில்தான் விஜயகாந்த் உள்ளே வந்தார். வந்த விஷயத்தை இளங்கோவனிடம் சொல்லிவிட்டு குஷ்பு பக்கம் திரும்பினார், விஜயகாந்த். ‘எப்படி இருக்கீங்க? அரசியலுக்கு வந்த பிறகு பேசவே முடியலை. புள்ளைங்க என்ன படிக்கிறாங்க? சுந்தர் எப்படி இருக்காரு’ என்று விஜயகாந்த் விசாரித்திருக்கிறார்.’’

‘‘விஜயகாந்த் - குஷ்பு சேர்ந்து நடித்தது ‘கருப்புநிலா’தானே?’’

மிஸ்டர் கழுகு : உங்களை தப்பா பேசியிருந்தா...

‘‘அதுமட்டும் இல்லை. ‘என்கிட்ட மோதாதே...’ ‘சிம்மாசனம்’, ‘வீரம் வெளைஞ்ச மண்ணு’ என்று நான்கு படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்’’ என்று சிரித்தபடியே நிறுத்த... அலுவலகம் வந்து சேர்ந்தோம்.
உள்ளே வந்து உட்கார்ந்ததும் விஜய​காந்த்தின் டெல்லி சந்திப்பு பற்றி சொல்ல ஆரம்பித்தார். ‘‘விஜயகாந்த் தலைமையில் சென்ற தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் 27-ம் தேதி பிரதமர் மோடியைச் சந்தித்தனர். தமிழக பிரச்னைகள் பற்றி விஜயகாந்த் மனு கொடுக்க... அதை மோடி படித்துப் பார்த்தார். பிறகு மோடி, ‘எனது அருமை நண்பர் விஜயகாந்த்தை மீண்டும் நேரில் சந்திக்க கிடைத்த வாய்ப்புக்காக உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கையில் இப்போது நமது நாட்டுடன் இணக்கத்தோடு செயல்படும் அரசு அமைந்​துள்ளது. தமிழர்கள் பிரச்னைக்கும் மீனவர்கள் பிரச்னைக்கும் தீர்வுகாண இலங்கை அரசு தயாராக இருக்கிறது. அதற்கு தமிழகமும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வுகாண போராடும் வைகோ அந்தப் பிரச்னை என்றாலே எமோஷனல் ஆகி விடுகிறார். ஆக்கபூர்வமான தீர்வு ஏற்படுத்த அனைவரும் முயற்சி செய்வோம்’ என்று சொல்லியிருக்கிறார்!”

‘‘மற்ற யாரும் பேசவில்லையா?’’

‘‘கனிமொழி, திருமாவளவன் என்று எல்லோருமே பேசி இருக்கிறார்கள். இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, எல்.கே.சுதீஷ் ஆகியோர் தனியாக கால் மணி நேரம் மோடியைச் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது, விஜயகாந்த் உடல் நிலை குறித்து மோடி விசாரித்துள்ளார். ‘உங்களை என் மனதில் உயரிய இடத்தில் வைத்துள்ளேன். உரிய வாய்ப்பு வரும்போது கவனித்துக்கொள்வேன்’ என்று சொல்லி அனுப்பினாராம். விஜயகாந்த் குடும்பத்தின் இந்தத் தனியான சந்திப்பை அவரோடு சென்ற மற்ற கட்சித் தலைவர்கள் ரசிக்கவில்லையாம்!”

‘‘பவானி சிங் பணால் ஆகிவிட்டாரே?”

‘‘ஆமாம்! பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துவிட்டது. இது ஜெயலலிதாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின்போதே, ‘பவானி சிங் நியமனம் விதிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல’ என்று சொல்லியிருந்தார்கள். அதனால் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று ஜெயலலிதா தரப்பு அறிந்திருந்தது. ஆனால், மூன்று நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் மிகக்கடுமையான வார்த்தைகளைச் சொல்லி, பவானி சிங்கின் எந்த வாதங்களையும் ஏற்கக் கூடாது என்றும், குன்ஹா கொடுத்த தீர்ப்பு, அன்பழகன் தரப்பு வாதம், கர்நாடக அரசின் வாதம் ஆகிய மூன்றை வைத்து நீதிபதி குமாரசாமி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் சொல்லியிருந்தது அதிர்ச்சியை அதிகப்படுத்தியது. கடந்த 24, 25 ஆகிய இரண்டு நாட்களும் ஜெயலலிதாவிடம் நிறைய கையெழுத்து வாங்கி இருக்கிறார்கள் ஜெ. தரப்பு வழக்கறிஞர்கள். வழக்கு விவகாரங்களுக்குத்தான் என்கிறார்கள். தமிழக உளவுத் துறை போலீஸார் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள். பாதுகாப்புப் பிரிவு போலீஸாரும் முகாமிட்டுள்ளனர். தீர்ப்புக்காகத்தான் இந்தக் காத்திருப்புகள்” என்று சொல்லிவிட்டு எழுந்த கழுகார்,

‘‘தென் மாவட்டத்தில் உள்ள கோயிலில் கடந்த வாரம் ஆன்மிக பெரியவர் ஒருவர் யாகம் ஒன்றை நடத்தினார். இந்த யாகத்துக்காக தனி சார்ட்டர்ட் விமானத்தில் பறந்து வந்தாராம். ‘எதிரிகளை அழிப்பதற்காக நடத்தப்பட்ட சத்ரு சம்ஹார யாகம் இது’ என்றும் சொல்கிறார்கள். தன்னை துன்புறுத்தியவர்களை பழிவாங்க இதனை நடத்தினாராம்” என்றபடி பறந்தார்!

அட்டை மற்றும் படங்கள்: ஆ.முத்துகுமார்
படங்கள்: ஜெ.வேங்கடராஜ்,
தி.ஹரிஹரன், தி.குமரகுருபரன்