
ஆனந்தவிகடனிலிருந்து...
இனி, விளையாடிக்கொண்டிருக்கும் உங்கள் குழந்தைகளை அதட்டாதீர்கள். படிக்கச் சொல்லி அவர்களை அதட்ட வேண்டிய அவசியம் இனி உங்களுக்கு இல்லை. சமச்சீர்க் கல்வித் திட்டத்தைத் தொடர்ந்து, மாணவர்களின் கற்றல் திறனை அதிகரிக்கும் நோக்கோடு தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை (Continuous and Comprehensive Evaluation) என்ற புதிய கல்வி முறையை அமல்படுத்தி இருக்கிறது தமிழகப் பள்ளிக் கல்வித் துறை. இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டு இருக்கும் இந்தத் திட்டம், இந்தக் கல்வி ஆண்டு முதலே செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
பாடங்களை வெறுமனே மனப்பாடம் செய்து தேர்வுகளில் பிரதி எடுக்கும் பழைய கல்வி முறைக்கு இனி 60 மதிப்பெண்கள் மட்டுமே. மீதி 40 மதிப்பெண்கள், மாணவர்கள் தத்தமது தனித் திறனைக் காட்டும் கல்வி சார்ந்த செயல்பாடுகளுக்கு வழங்கப் படும். புத்தகப் புழுக்களை மட்டும் உருவாக்காமல் மாணவப் பருவத்தில் இருந்தே இயல்பான சிந்தனையாளர்களை உருவாக் கும் இந்தக் கல்வி முறையின் அவசியத்தையும் பயன்களையும் விளக்குகிறார் கல்வியாளர் 'ஆயிஷா’ நடராசன். ''இந்த சி.சி.இ. முறையில் கல்வி பெறுவதன் மூலம் மிக இளம் பிராயத்தி லேயே மாணவர்களிடையே சச்சின், விஸ்வநாதன் ஆனந்த், பில் கேட்ஸ், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற திறமைசாலிகளைக் கண்டெடுக்கலாம். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இனி, இந்தப் பாடத்திட்டமே அமலில் இருக்கும்.

செய்முறை மூலமே எந்தவொரு விஷயத்தையும் அறிந்துகொள்ளக் கற்றுக்கொடுப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். உதாரணமாக, பூக்களைப் பார்க்காமலேயே பெயர்களைப் படித்துக் கொண்டு இருந்த மாணவன், இனிமேல் விதவிதமான பூக்களைச் சேகரித்து அதன் விவரங்களை அறிந்துகொள்ள வேண்டும். இப்படிச் செய்தால் அந்தப் பூக்கள் அவன் மனதில் என்றென்றும் நிலைத்து நிற்கும். பாடப் புத்தகச் சுமை குறைவதோடு, கற்றல் அனுபவம் மாணவர்களுக்கு மிக இனிமையானதாக அமையும். ஏனெனில், இனி ஒவ்வொரு மாணவனுக்கும் தனித் தனிப் பாடத்திட்டம். இனி ஒவ்வொரு மாணவனும் சிறப்புத் தகுதி வாய்ந்தவன்தான்!'' என்று பூரிக்கிறார் 'ஆயிஷா’ நடராசன்.

இதுகுறித்து மேலும் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் தேவராஜன். ''மாணவர்களின் சிந்திக்கும் திறனை வளர்க்கும் விதத்தில் பல பயிற்சிகள் இந்தத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும். உதாரணமாக ஒரு கிராமத்துப் பள்ளியின் மாணவன் தன் சொந்த ஊருக்கான பெயர்க் காரணத்தைக் கண்டுபிடித்து எழுதி வர வேண்டும். அக்கம் பக்கம் வீடுகளில் உள்ளவர்கள் செய்யும் தொழில்கள்பற்றிக் குறிப்பெடுத்து எழுதி வர வேண்டும். இதுபோன்ற இன்னும் பல எளிமையான - அதே சமயம் புதிய சூழலுக்கு - அறிமுக மாகும் வகையில் பல பயிற்சிகளை மாணவர்களுக்கு அளிப் போம். ஆசிரியர்களுக்கும் பாடங்களைத் தாண்டிக் கற்பிக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டு உள்ளது. இனி, ஒவ்வொரு மாணவனுக் கும் அவனது திறனுக்கு ஏற்ப சிலபஸ் அமைக்கப்படும். செயல்பாடுகள், செய்முறைகள் என எதற்கும் கட்டுப்பாடுகளோ, வரைமுறைகளோ கிடையாது. அந்த மாணவனே தனது திறமையை மதிப்பிட்டு அவனுடைய பலம் என்ன, பலவீனம் என்ன என்பதை அறிந்துகொள்ள வைக்கும் முயற்சிதான் இது. இந்த செயல்வழிக் கல்விமுறையைப் பொறுத்தவரை ஆசிரியர் களுக்கும் பெற்றோர்களுக்கும் நாம் வைக்கும் கோரிக்கை ஒன்றே ஒன்றுதான். குழந்தைகளுக்கு இனி, எதையும் சொல்லித்தராதீர்கள், செய்து தராதீர்கள். அதற்குப் பதில் அவர்கள் தாங்களே கற்பதற் கான சூழல், நேரம் ஆகியவற்றை ஏற்படுத்திக்கொடுங்கள். அது போதும்!'' என்ற வேண்டுகோளோடு முடிக்கிறார் தேவராஜன்.
கற்றலும் இனிது, கற்பித்தலும் இனிது என்ற சூழ்நிலை இளந்தளிர்களிடம் ஒரு சிந்தனைப் புரட்சியை உண்டாக்கும் நாள், இதோ வருகிறது!