Published:Updated:

கமல் சொன்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ என்றால் என்ன? #PlaceboEffect

கமல் சொன்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ என்றால் என்ன? #PlaceboEffect
கமல் சொன்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ என்றால் என்ன? #PlaceboEffect

நடிகர் கமல்ஹாசன் எழுதும் ‘என்னுள் மையம் கொண்ட புயல்!’ தொடரில், இந்த வாரம் தனக்கு இருந்த அல்சர் (குடல் புண்) பற்றி எழுதியிருந்தார். கேரளம் சென்று மருத்துவம் பார்த்தபோது, அல்சருக்கு மருந்தாக வாழைக்காய்ப் பொடி கொடுக்கப்பட்டதாகவும், நிவாரணம் தேடி அலைந்த அவருக்கு Placebo Effect-ல் வலி குறைந்ததுபோல் ஒரு மனமாயை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார். அது என்ன பிளாசிபோ எஃபக்ட்?

21 வயதுமுதல் 12 வருடங்களாக அல்சர் எனப்படும் குடல் புண்ணால் அவதிப்பட்டவன் நான். அலோபதி மருந்துகளை நம்பி 12 வருடங்கள் காத்திருந்தேன். மருந்துகளின் பெயர்களும் வீரியமும் மாறி மாறி வந்தவண்ணமிருந்தன. வலி போனபாடில்லை. இது நோயல்ல, பிணி. வாழ்நாள் முழுக்கவும் அனுபவிக்க வேண்டியதுதான் என்றது அலோபதி விதி. அறுவை சிகிச்சைக்குத் தயாராக இருக்கும்படி அறிவுரைகள் தந்தனர். நானும் தயாரானேன். வலி என்னைத் தயார்ப்படுத்திவிட்டது என்பதே உண்மை. ஒரு வருடம் முன்பாகக் கேரளம் சென்றபோது என் நண்பர் ஒருவரின் கேரள நாட்டு வைத்தியர் எனக்கு வாழைக்காய்ப் பொடி தந்தார். நிவாரணம் தேடி அலைந்த எனக்கு ஒரு Placebo Effect-ல் வலி குறைந்ததுபோல் ஒரு மனமாயை.

-கமல்ஹாசன் எழுதும் ‘என்னுள் மையம் கொண்ட புயல் ’ தொடரிலிருந்து

ஒரு குட்டிக் கதை. 

ஒரு விமானப் பயணத்தின்போது, 60 வயது முதியவர் ஒருவருக்குத் திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. அவர் மனைவி பதறிப் போனார். செய்வதறியாது தவித்த பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்களுக்கு மத்தியில், ஒருவர் எழுந்தார். தான் ஒரு மருத்துவர் என்று கூறிக் கொண்டு முதியவருக்கு அருகில் சென்றார். சோதித்துப் பார்த்து விட்டு தன்னிடம் இதற்கு மருந்து கையிலேயே இருக்கிறது என்று ஆச்சர்யப்படுத்தினார். குப்பியிலிருந்து ஒரு மாத்திரையை எடுத்துக்கொடுத்து உடனே தண்ணீர் இல்லாமல் விழுங்க வேண்டும் என்று கட்டளையிட்டார். முதியவரும் பதறியபடி அதை விழுங்கினார். பத்து நிமிடத்தில் அவருக்குக் குப்பென்று வியர்த்தது. நெஞ்சு வழி நின்றிருந்தது. அந்த மருத்துவருக்கு அவர் நன்றி சொல்ல, எல்லோரும் கரவொலி எழுப்பினர். அந்த முதியவரின் மனைவி மருத்துவரிடம் வந்து தனியாக நன்றி கூறினார். அந்த மாத்திரைக்கு ஏதேனும் பணம் தர வேண்டுமா என்று வினவினார்.

புன்முறுவலுடன் மருத்துவர், “அதெல்லாம் வேண்டாம். இது சாதாரண வைட்டமின் மாத்திரைதான். நெஞ்சு வலி மாத்திரை எல்லாம் இல்லை” என்று கூற முதியவரின் மனைவிக்கு அதிர்ச்சி.

“பெரும்பாலோனருக்கு இவ்வகை அபாயத்தின் போது நம்பிக்கை ஏற்பட்டாலே போதும், பாதி வியாதி ஓடிவிடும். நோய் பாதி என்றாலும், மீதி பாதிப்பிற்கு பதற்றமும், பயமும்தான் காரணம். உங்கள் கணவருக்கும் அதே பிரச்னைதான். நான் செய்தது முதலுதவி போலதான். ஊருக்குச் சென்றவுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள்” என்று முடித்தார் மருத்துவர். 

இந்தக் கதையின் நம்பகத்தன்மை, மருத்துவ தர்க்கம் படி இது சரியா, இப்படி எல்லாம் நடக்குமா என்று நாம் ஆராயத் தேவையில்லை. ஆபத்தின் போது பதற்றமும் பயமும் வேண்டாம் என்ற செய்தியைச் சொல்ல மட்டுமே இந்தக் கதை பேசப்படுகிறது. சரி, இங்கே எதற்கு இந்தக் கதை?

அந்த முதியவருக்கு அளிக்கப்பட்ட அந்தச் சாதாரண வைட்டமின் மாத்திரை ஒரு பிளாசிபோ போலதான். ஒரு நோய்க்கான மாத்திரையாக அளிக்கப்படும் இது உண்மையில் அந்த நோய்க்குத் தொடர்புடையதே அல்ல. நோயாளியின் மனத்திருப்தி, நாம் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நமக்கு எந்த பாதிப்பும் இனி வராது என்ற நம்பிக்கையை விதைக்க மட்டுமே இது பயன்படுகிறது. பிளாசிபோ மாத்திரைகள் மட்டுமில்லை, டானிக் மருந்துகள் கூட இருக்கின்றன. இவ்வகை பிளாசிபோ மருந்துகளால் ஏற்படும் இந்த வகை பாசிட்டிவ் தாக்கத்தைத் தான் பிளாசிபோ எஃபக்ட் (Placebo Effect) என்கிறார்கள். இதன் மூலம் உடலுக்கு எந்தத் தீங்கும் ஏற்படாது.

இந்த முறை வெற்றியா?

பொதுவாக, “டாக்டர் நைட் தூக்கமே வர்றதில்லை. ஏதாவது மாத்திரை குடுங்களேன்” என்று மருத்துவரிடமே நச்சரிப்பவர்களுக்கு, மருத்துவர்கள் ஒரு சில சமயம் பரிந்துரைப்பது பிளாசிபோ வகை மாத்திரைகளைத்தான். பிரத்தியேகமாகத் தயாரிக்கப்படும் இதில் எந்த வகை மருந்தும் கலந்திருக்க மாட்டார்கள். இதனால் எந்த பாதிப்பும் வராது. அவர்களும் மாத்திரை சாப்பிட்டு விட்டோம், நிச்சயம் தூக்கம் வந்துவிடும் என்று படுப்பதால்  தூக்கமும் வந்து விடும். உங்கள் மூளை ’இது சரியான மருத்துவம், உன்னை நீ சரி செய்துகொள்’ என்று உடலுக்குக் கட்டளையிட்டு விட்டால் போதும், உங்கள் உடல் தானாகவே சரி ஆகிவிடும். இதனாலே பிளாசிபோ வகை மருத்துவ முறை உளவியல் சார்ந்ததாகி விடுகிறது.

அதேபோல, எல்லோருக்கும் இந்த பிளாசிபோ முறையை மருத்துவர்கள் பரிந்துரைக்க மாட்டார்கள். இதன் வெற்றி விகிதமும் வெறும் 35 சதவிகிதம்தான். மிகவும் தெரிந்த நோயாளி, அவருக்கு உடலில் எந்தப் பாதிப்பும் இல்லை, எல்லாம் மனதளவில்தான் என்று தெரிந்தால் மட்டுமே இதைச் செய்வார்கள். அதுவும் இங்கே மிகவும் குறைவுதான்.

சரி, எல்லா வகை பிரச்னைக்கும் பிளாசிபோ பயன்படுத்தலாமா? கூடவே கூடாது என்கிறார்கள் மருத்துவர்கள். ஒரு சில பிரச்னைகளுக்கு உடல் ரீதியாகப் பாதிப்பு, மனோ ரீதியாகப் பாதிப்பு என்று இரண்டுமே கலந்திருக்கும். அங்கு பிளாசிபோ கொடுப்பது ஆபத்தானது. இது முறையான சிகிச்சை பெறுவதை தாமதப்படுத்துகிறது. கமல் எழுதியதிலும், தனக்கு வாழைக்காய்ப் பொடி பிளாசிபோ எஃபக்ட் போல் செயல்பட்டாலும், வலி தொடர்ந்ததாகவே குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்தக் கட்டுரை பிளாசிபோ வகை மருத்துவத்தைக் குறித்து விளக்க மட்டுமே, அதைப் பரிந்துரைக்க இல்லை.