Published:Updated:

“மக்களின் தேவைக்கு மருத்துவப் படிப்பை மாத்துவோம்” - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 4

“மக்களின் தேவைக்கு மருத்துவப் படிப்பை மாத்துவோம்” - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 4
“மக்களின் தேவைக்கு மருத்துவப் படிப்பை மாத்துவோம்” - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 4

கியூபாவில் பாடிஸ்டா ஆட்சியில் இருந்ததற்கு நேர்மாறாக, காஸ்ட்ரோவின் புரட்சிகர அரசாங்கம் வந்த பின்னர், குடிமகள்/ன் யார் ஒருவரும் தாங்கள் விரும்பும் எந்தப் படிப்பையும் படிக்கமுடியும் என்பது அரசியல்சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டது. இதன் மூலம் புதிய அரசின் ஊக்குவிப்பால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து, ஆறு ஆண்டுகளில் மருத்துவர் ஆனார்கள். அலைஅலையாக அதிகம் பேர் மருத்துவக் கல்விக்கு வந்துசேர்ந்தார்கள். அவர்களில் கணிசமானவர்கள் குறிப்பிட்ட சிறப்பு மருத்துவத் துறைகளில் மட்டுமே, மேற்படிப்பு அதாவது இரண்டாம் பட்டம் பெறுவதில் ஆர்வம் காட்டினர். இதனால் குடும்ப மருத்துவத் துறையில் பணியாற்றுவோரின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது. புதிய புரட்சிகர அரசாங்கத்தின் ஒரு முடிவினால் மக்களுக்குக் குறை உண்டாகிவிட்டதே என நாடு முழுவதும் விமர்சனம் எழுந்தது. குடும்ப மருத்துவம் எனப்படும் பொது மருத்துவத்துறையை வலுப்படுத்தவேண்டியது அரசுக்கு உடனடிச் சவாலாக அமைந்தது. 1984-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ‘ஒருங்கிணைந்த பொது மருத்துவத் திட்டம்’ இப்பிரச்னைக்கு முடிவுகட்டியது. 

புதிய பாடத்திட்டத்தின்படி, இளநிலை மருத்துவப் பட்டப்படிப்பில், முதலாம் ஆண்டிலிருந்து ஆறாவது ஆண்டுவரை, குடும்ப மருத்துவத் துறைப் பயிற்சியைப் பெறுவது கட்டாயம் ஆனது. அதாவது ஒருவர் எந்த மருத்துவத்துறையிலும் சிறப்புப் பட்டம் பெற விரும்பினாலும் குடும்ப மருத்துவத் துறையை ஒதுக்கிவிட்டு படிப்பை முடிக்கமுடியாது. மேலும், சிறப்பு மருத்துவத் துறையில் பொது (குடும்ப) மருத்துவமும் ஒரு துறையாக உருவாக்கப்பட்டது. 

இந்தத் தொடக்கநிலை மருத்துவக் கட்டமைப்பின் மூலம், உள்நோயாளிகளின் எண்ணிக்கை இருபது ஆண்டுகளில் பாதி மடங்கு குறைந்தது. 1984-ல் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டவர்கள் ஆயிரத்துக்கு 15.1% என்பது 2003-ல் 10.8% ஆனது. ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளின் இறப்புவீதமானது, 1960-ல் ஆயிரத்துக்கு 39 ஆக இருந்தது 2004-ல் ஆயிரத்துக்கு 6 ஆகக் குறைக்கப்பட்டது. 

குடும்ப மருத்துவர்-செவிலியர் (கு.ம.செ.) குழுவைப் பொறுத்தவரை, ஒரு பக்கம் சிகிச்சையளிக்கும் அமைப்பாக மட்டுமில்லாமல் பாலிகிளினிக், நகராட்சி, மாகாண மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வீடுதிரும்பியவர்களின் நிலவரத்தைக் கவனித்து, தேவையையொட்டி தொடர் சிகிச்சைக்கு அனுப்பவும் பரிந்துரைக்கிறது. இத்துடன் அந்தந்த பகுதிகளின் பொதுசுகாதாரத்தைக் கண்காணிப்பதிலும் கு.ம.செ. குழு ஈடுபடுகிறது. எடுத்துக்காட்டாக, ஓரிடத்தில் குப்பையைக் கொட்டியிருக்கிறார்கள் என்றால், அதை அகற்றச்செய்வது கன்சல்ட்டோரியாவின் பொறுப்பும் ஆகும். நோய் வரும்முன் தடுப்பதற்கு பொதுசுகாதாரத்தைப் பாதுகாப்பது முக்கிய வழிமுறை என்பதில் கியூபப் புரட்சிகர அரசின் உறுதி கீழ்மட்டம்வரை எதிரொலித்தது.

நோய்த்தடுப்பு நடவடிக்கையின் இன்னொரு பகுதியாக, பொதுசுகாதாரம் பற்றிய விவரத்தொகுப்புப் பணியும் உள்ளது. ஒவ்வொரு கன்சல்ட்டோரியாவிலும், ஒவ்வொருவரைப் பற்றிய தனிப்பட்ட நலவிவரங்கள் தனித்தனியாகச் சேகரிக்கப்படும். இது, தனிநபர்களைப் பற்றிய விவரமாக மட்டுமில்லாமல், அந்தப் பகுதி அளவிலான விவரத் தொகுப்பாகவும் அந்தப் பகுதியைப் பற்றிய பொதுசுகாதாரச் சித்திரமாகவும் இருக்கும்.

எடுத்துக்காட்டாக, வயதுவாரியாக, ஒரு வயதுக்கும் கீழே, 1-9 வயது, 10-14, 15-29, 30-49, 50-69, 70-79, 80-ம் அதற்கு மேலும் எனப் பிரிக்கப்பட்டிருக்கும். கல்விநிலையைப் பள்ளிக்குச் செல்லாதோர், தொடக்கப்பள்ளிக்குச் சென்றவர், தொடக்கக்கல்வி முடித்தவர், நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, தொழில்நுட்பப் பட்டம், பல்கலைக்கழகப் பட்டம் என்கிறபடி வகை பிரிக்கப்பட்டுள்ளது. 

நாள்பட்ட - தொற்றாநோய் பாதிப்பு உள்ளவர்களில், உயர் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, முதல்வகை சர்க்கரை நோய், 2-ம் வகை சர்க்கரை நோய், உடல்பருமன் நோய், புகைப்பழக்கம், குடிநோய், புற்றுநோய், பால்வினைத் தொற்று, பெருமூளை அழற்சி நோய் பாதிப்பு விவரங்கள் விவரக்குறிப்பில் பதியப்படுகின்றன. 

இந்த விவரங்களை வைத்து, தனிநபர்களின் நலநிலையானது, நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. 1. பொதுவாக நலமாக இருப்பவர்கள், 2. வீட்டிலோ பணியிடத்திலோ சுகாதாரப் பிரச்னைவர அதிக வாய்ப்புள்ளவர்கள், 3. நாள்பட்ட, தொற்றும்- தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் 4. உடல், மனத்திறன் குறைவால் தற்காலிகமாகவோ நிரந்தரமாகவோ சராசரியாக இயங்கமுடியாமல் இருப்பவர்கள் என அனைவரின் விவரங்களும் ஒரு பட்டியலுக்குள் கொண்டுவரப்படும். 

இவ்வாறு ஆவணப்படுத்தப்படும் கன்சல்ட்டோரியாக்களின் சுகாதார விவரங்களை, அந்த வட்டாரத்தின் பாலிகிளினிக் புள்ளியியலாளர், தொகுத்துவைப்பார். அடுத்தடுத்து நகராட்சிகள், மாகாணங்கள், தேசிய அளவில் விவரங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒட்டுமொத்த கியூபாவின் சுகாதாரத் தகவல்தொகுப்பு உருவாக்கப்படுகிறது. அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும் உடனடியாகப் பதிவுசெய்யப்படுகின்றன. 

இவை எல்லாம் சரி, இதனால் என்ன சாதிக்கப்பட்டது எனும் கேள்வி எழுவது இயல்பு! 

நடப்பு சுகாதார விவரத்தொப்பு எப்போதும் தயாராக இருப்பதால், குறிப்பிட்ட கால இடைவெளியில் அதைப் பற்றிய பகுப்பாய்வுகள் மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எந்தெந்தப் பகுதிகளில் பொதுசுகாதாரம் மோசமாக இருக்கிறது, எங்கெங்கு தொற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்பு இருக்கிறது, குறிப்பிட்ட பகுதிகளில் குறிப்பிட்டவகை பாதிப்புகள் மட்டும் இருப்பது, குறிப்பிட்ட தொழில்செய்பவர்களுக்கென, குறிப்பிட்ட வயதினருக்கென, குறிப்பிட்ட இனப்பிரிவினருக்கென உண்டாகும் உடல்நலக் குறைபாடுகள், குறிப்பிட்ட நோய்கள் வருவது, மருத்துவ வசதியளிக்கும் நிலைமை எப்படி இருக்கிறது எனக் கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும், தொற்றுநோய்கள் பரவுவதற்கு முன்பே உரிய நடவடிக்கைகளில் ஈடுபடவும் முடிந்தது.

நாடெங்கும் கொள்ளைநோய் பரவும் சமயங்களில், எந்தப் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும் என்பதைத் தீர்மானிக்க, இந்தச் சுகாதாரத் தகவல்தொகுப்பு மிகவும் உதவியாக இருந்துவருகிறது. கியூபாவில் கொள்ளைநோயாக டெங்குக் காய்ச்சல் பரவியபோதெல்லாம் பாதிப்பைத் தடுப்பதில் கியூப மருத்துவக் கட்டமைப்பும் அதன் சுகாதாரத் தகவல்தொகுப்பும் முழுமையாகப் பயன்பட்டது. 

கியூபா முழுவதையும் பாதிக்கச்செய்த கொள்ளை டெங்குவின் உயிர்ப்பலிகளை, படிப்படியாகக் குறைத்து ஒரு கட்டத்தில் அதை முற்றிலுமாகத் தடுத்துநிறுத்தி சாதனை படைத்தது, கியூபா. அது எப்படி சாதித்துக்காட்டப்பட்டது? 

(அடுத்து வரும்..)