Published:Updated:

மோடி 365

ப.திருமாவேலன், ஓவியங்கள்: ஹாசிப்கான்

ரேந்திர மோடி ஆட்சிக்கு, வயது 1. நாடு வளர்ந்துள்ளதா... நல்லாட்சி மலர்ந்துள்ளதா? 

'இந்தியாவே முதன்மையானது என்பதே, எனது அரசின் மதம். இந்திய அரசியல் சட்டம்தான், எனது அரசின் ஒரே புனித நூல். தேசபக்தியே, எனது அரசின் ஒரே பக்தியாகும். 'அனைவரின் நலன்’ என்பதே எனது அரசின் பிரார்த்தனை. மதரீதியில் அபத்தமான கருத்துக்களைத் தெரிவிப்பதை, இந்த நாட்டின் பிரதமர் என்ற முறையில் என்னால் அனுமதிக்க முடியாது. மதரீதியில் பாகுபாடு காட்டுவதற்கு, யாருக்கும் அதிகாரம் கிடையாது. சட்டத்தை யாரும் தங்கள் கையில் எடுத்துக்கொள்ளவும் அதிகாரம் கிடையாது. இந்த நாடே வேற்றுமையில் நிரம்பியுள்ளது. நாட்டின் தனித்தன்மையே அதுதான். தேசக் கொடியின் மூவர்ணம்தான் எனது கண்களுக்குத் தெரிகிறது. வேறு எந்த எண்ணமும் எனக்குத் தெரிவது இல்லை!’ - இந்திய நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியது இது. படிக்கப் பரவசமாக இருக்கிறது. இப்படித்தான் நடந்தாரா, நடக்கிறாரா, நடப்பாரா?

கடந்த 365 நாட்களை மீண்டும் யோசிப்போம்!

காங்கிரஸை வீழ்த்தினார்!

அதிகார போதையில் கெட்ட ஆட்டம் ஆடிக்கொண்டிருந்த காங்கிரஸ் ஆட்சியை, வீட்டுக்கு அனுப்பியது மோடியின் மிகப் பெரிய சாதனை. 2004-14 காலகட்டத்தில் இருந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி, எல்லாவிதமான சீரழிவுகளுக்கும் வழிவகுத்தது. ஊழல் அதன் பிறப்புரிமையாக மாறிப்போனது. ஊழலைப் பட்டவர்த்தனமாக நியாயப்படுத்திப் பேசுவதை, காங்கிரஸ் அமைச்சர்கள் கூச்சம் இல்லாமல் செய்தார்கள். 2ஜி, நிலக்கரி, ஆதர்ஷ், காமன்வெல்த்... என வண்டிவண்டியாக ஊழல் ஒரு பக்கம் வளர்ந்துகொண்டே போக... வறுமையும் வேலையில்லாத் திண்டாட்டமும் இன்னொரு பக்கம் சாமானியர்களின் கழுத்தை இறுக்கின. அரசின் நோக்கம், பணம் சம்பாதிப்பது மட்டும்தானா? என்ற சந்தேகம் அதிகமாகவே வேரூன்றியது. 'இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்த எங்களுக்கு, சுரண்ட உரிமை இல்லையா?’ எனக் கேட்கவில்லையே தவிர, அப்படித்தான் நடந்துகொண்டார்கள். இந்த எதேச்சதிகார சக்திகளை வீழ்த்த, அவர்களை விமர்சிக்க பா.ஜ.க-வுக்கு மிக அரிய பிம்பமாக மோடி கிடைத்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி இல்லாவிட்டாலும் காங்கிரஸ் ஆட்சி வீழ்த்தப்பட்டிருக்கும். மோடி இருந்ததால் தேர்தலுக்கு முன்பே ஓர் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எதிர்பார்க்காத அளவுக்கு பெரும்பான்மையும் அந்தக் கட்சிக்குக் கிடைத்தது!

மோடி 365

இந்தியாவைத் திரும்பிப் பார்க்கவைத்தார்!

ராஜீவ் காந்திக்குப் பிறகு, கவர்ச்சிகரமான மக்கள் தலைவர்கள் இந்தியாவுக்குப் பிரதமராக வரவில்லை. வி.பி.சிங், நரசிம்மராவ், தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன் சிங்... போன்றவர்கள் வட்டார செல்வாக்கும் கட்சித் தலைவர்கள் என்பதாலும் விதிவசத்தாலும் வேறு வழி இல்லாததாலும் பிரதமர் ஆனவர்களே தவிர, இந்திரா, ராஜீவ் போல, ஏக இந்தியாவுக்கும் தெரிந்த முகங்களாக இல்லை. அதனாலேயே அவர்களது ஆட்சி, அதற்குரிய அனைத்துப் பலவீனங்களுடனும் நடந்தது. இந்தியாவுக்கு வெளியே இதர நாடுகளால் மலினமாகவும் கணிக்கப்பட்டது. அதிக மக்கள்தொகை கொண்டதால், இந்தியா மிகப் பெரிய சந்தை என்றே பார்த்தார்கள். 'இல்லை, அது ஒரு சக்தி’ என்பதை, மிகப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, உலகத்துக்கு உணர்த்தியவர் மோடி. ஒபாமாவே ஓடி வந்ததற்கு மிக முக்கியக் காரணம் இது!

முதலீடே முதலீடு!

'முதலீடு’ எல்லோரையும் மயக்கும் கவர்ச்சிகரமான சொல். உள்நாட்டு/வெளிநாட்டு நிறுவனங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறதோ, அந்த அளவுக்கு நாடு வளர்ந்து வருகிறது என்பது பரவலானவர்களின் நம்பிக்கை. இப்படி முதலீடு செய்ய வருபவர்களுக்கு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாமல் திறந்துவிடுபவர்தான் நல்ல பிரதமர்(!). வளர்ச்சியை 'மட்டுமே’ நோக்கமாகக்கொண்ட பிரதமர். நரசிம்மராவ் போட்டுக்கொடுத்த பாதையில் மோடியின் பயணமும் தொடர்கிறது. 'இந்தியாவில் புதிய பொருளாதாரப் பாதையை நாங்கள் தொடங்கியுள்ள நிலையில் முதலீடு செய்ய உங்களை அழைக்கிறோம்’ என எல்லா நாடுகளுக்கும் சென்று அழைக்கிறார் மோடி. அவர்களுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது அரசு. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்படும் பகீரதப் பிரயத்தனங்கள் இதனால்தான். ஊருக்குத் தெரியாத உதாரணம் ஒன்று உண்டு.

ஒரு தனியார் செல்பேசி நிறுவனம் 3,200 கோடி ரூபாய் வருமானவரி கட்ட வேண்டும். 'கட்டத் தேவை இல்லை’ என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டுமல்லவா மத்திய அரசு? 3,200 கோடி எவ்வளவு பெரிய தொகை. ஆனால், 'மேல்முறையீடு செய்வது இல்லை’ என மத்திய அமைச்சரவை முடிவெடுத்தது. வெளிநாடுகளில் உள்ள முதலீட்டாளர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 'எங்கள் முடிவுகள் அனைத்தும் நேர்மையாகவும், வெளிப்படையாகவும், சட்டத்துக்கு உட்பட்டதாகவும் இருக்கும் என்ற தகவலை, உலகமெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு தெரிவிக்க அரசு விரும்புகிறது’ என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சொல்லியிருப்பதற்கு என்ன பொருள்? 'இங்கே வாருங்கள்... யார் நிலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள், தொழில் செய்யலாம். வருமானவரி கூடக் கட்டத் தேவை இல்லை’ என்பதுதானே!

சமீபத்தில் அமெரிக்கா சென்ற மோடி, இந்தியாவில் முதலீடு செய்துவரும் 20 பெரிய நிறுவனங்களிடம் பேசிவந்துள்ளார். அவர்கள் பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளார்கள். இந்த வாக்குறுதிகளில் 50 சதவிகிதம்கூட ஒப்பந்தம் ஆவது இல்லை என்பதுதான் 'குஜராத் யதார்த்தம்’! ஒருவேளை ஒப்பந்தமானாலும் தொழில் தொடங்கப்படுவது இல்லை. தொழில்

தொடங்கினாலும் சொன்ன அளவுக்கு லாபம் ஈட்டுவது இல்லை. 'சர்க்கரை’ என எழுதினாலே இனிக்கும் என்பதைப்போலத்தான் இதுவும்!

காங்கிரஸ் குக்கரில் பா.ஜ.க சோறு!

பேரை மாற்றி புதுப்புனுகு பூசுவது, தமிழ் மக்கள் அதிகமாகப் பார்த்ததுதான். 'அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என தி.மு.க வைத்தால், 'புதிய அண்ணா மறுமலர்ச்சி திட்டம்’ என ஜெயலலிதா நாமகரணம் சூட்டுவார். இதுதான் இப்போது மத்தியிலும் நடக்கிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியின் திட்டங்களுக்குத்தான் புதுப் பெயர் சூட்டு விழா நடந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் உற்பத்திக் கொள்கையாக மன்மோகன், சோனியாவால் அறிவிக்கப்பட்டதுதான் மோடி சொல்லிவரும் 'இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம். மன்மோகன் சிங் காலத்தில் உருவாக்கப்பட்ட 'நிர்மல் பாரத்’ என்ற திட்டம்தான் மோடியின் 'தூய்மை பாரதம்’. 'மக்கள் நிதித் திட்டம்’ என மோடி சொல்லிவருகிறார். காங்கிரஸ் அரசு, அதை 'ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் நிதி உள்ளடக்கத்துக்கான இயக்கம்’ என அறிவித்திருந்தது. ராஜீவ் காந்தி கிராமப்புற மின் விநியோகத் திட்டத்துக்கு மாற்றாக வந்திருப்பதுதான் 'தீனதயாள் உபாத்யாயா கிராமப்புற ஜோதி திட்டம்’. இப்படித்தான் திட்ட கமிஷன் 'நிதி யோக்’ ஆனது.

பேர் வைப்பதில் கருணாநிதியையும் மிஞ்சிவிட்டார் மோடி!

மோடி 365

அன்று எதிர்ப்பு; இன்று ஆதரவு!

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எதையெல்லாம் பா.ஜ.க எதிர்த்ததோ, அதையெல்லாம் இன்று விழுந்து விழுந்து அமல்படுத்துகிறது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களால் பயனடைபவர்களுக்குக் கிடைக்கும் மானியத்தை, பணமாகச் செலுத்தும் 'நேரடி பணம் பெறும் திட்டம்’ காங்கிரஸால் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 'ஏழை மக்களின் எதிர்காலத்துடன் விளையாடும் விளையாட்டு இது. மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார்கள்’ என பா.ஜ.க கருத்து கூறியது. 'ஆஹா... இதனால் மானியச் சுமை குறைகிறது’ என இப்போது சொல்கிறார் மோடி. 'ஆதார்’ அட்டையை பா.ஜ.க விமர்சித்தது. மாநில அரசுகளின் பங்கு குறித்து குஜராத் முதலமைச்சராக இருந்தபோது மோடி சந்தேகம் கிளப்பிக்கொண்டிருந்தார். இன்று 'ஆதார்’ அட்டையை தங்களின் முகமாகக் காட்டிக்கொள்கிறார்கள். 'இதுதான் தர்க்கரீதியான பொருளாதாரச் சிந்தனை’ என நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இப்போது சொல்கிறார். எனவே, இவர்கள் மாற்றுப் பாதையில் அல்ல... காங்கிரஸ் பாதையிலேயே போகிறார்கள்!

தேய்ந்துபோன தேர்தல் வாக்குறுதிகள்!

'வெளிநாட்டில் பதுக்கிவைக்கப்பட்ட கறுப்புப் பணத்தை 100 நாட்களில் மீட்போம்’ என்றார் ராஜ்நாத் சிங். அதைவிட ஒரு படி மேலேபோன மோடி, 'ஒவ்வோர் இந்தியனுக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கிடைக்கும்’ என்றார். இன்றோ 100 நாட்கள் அல்ல... அதைக் காட்டிலும் மூன்று மடங்கு நாட்கள் ஆகிவிட்டன. எதுவும் நடக்கவில்லை. கேட்டால், 'கறுப்புப் பணம் வைத்திருப்பவர் பட்டியலை வெளியிடுவது நாட்டுக்கு நல்லது அல்ல’ எனச் சொல்கிறார்கள். உச்ச நீதிமன்றம் உச்சந்தலையில் கொட்டிய பிறகு அதற்கான குழு அமைக்கப்பட்டதே தவிர, அந்தக் குழுவும் ஆராய்ச்சிதான் செய்துகொண்டிருக்கிறது. புதுச் சட்டம் வந்துள்ளது. ஏற்கெனவே இருந்த சட்டங்களை செயல்படுத்தாததால்தான் கறுப்புப் பணமே வெளியேறியது. புதுச் சட்டங்களை அமல்படுத்துபவர்களும் பழைய ஆட்கள்தானே? '100 நாட்களில் மீட்போம் எனச் சொல்லவே இல்லை’ எனத் திரும்பத் திரும்ப அமைச்சர் வெங்கய்யா நாயுடு சொல்வதே சந்தேகமாக இருக்கிறது. தனியரு மனிதராக நின்று ராம்ஜெத் மலானிதான் இன்னும் போராடிக்கொண்டிருக்கிறார்.

இதேபோலத்தான் லோக்பால். பிரதமர் உள்பட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் முறைகேட்டை விசாரணை நடத்தும் இந்த அமைப்பை, வரவிடாமல் காங்கிரஸ் தடுத்தது. ஆட்சி முடியும்போது ஒரு குழு போட்டு, தனது கடமையை முடித்தது. அந்தக் குழுவின் தலைவரான முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ், 'தனக்கு இதில் விருப்பம் இல்லை’ எனச் சொல்லிவிட்டார். பா.ஜ.க வந்து ஒரு வருடம் ஆகியும் கோமா நிலையில்தான் இருக்கிறது லோக்பால். 'நான் பிரதமரானால் முதல் வேலை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க குழு அமைப்பேன்’ என்றார் மோடி. அப்படி ஒன்று நடக்கவே இல்லை. 'விவசாயிகளின் நலனுக்கு, கடுமையாக உழைப்பேன்’ என்றார். 'நிலம் கையகப்படுத்தும்போது விவசாயிடம் கேட்கத் தேவை இல்லை’ என்ற சட்டம்தான் வந்தது. அகில இந்திய அளவில் விவசாயிகளை அரசுக்கு எதிராக ஓரணியில் திரளவைத்ததுதான் மோடியின் சாதனை!

'மதம்’ பிடித்து ஆட்டுவது!

மோடி 365

பா.ஜ.க-வின் நிறமும் குணமும் மதம்தான் என்றாலும், ஆட்சியைக் கைப்பற்ற நினைக்கும்போது அடக்கிவாசிப்பார்கள். நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட தனது இயல்பு முழக்கங்களை மோடி மறந்தும் உச்சரிப்பது இல்லை. ஆனால், அவருக்குக் கீழே இருப்பவர்கள் நித்தமும் வீசும் வார்த்தைகள் குண்டுகளாக வெடித்து, இந்தியச் சமத்துவத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. 'ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம்’, '370-வது சட்டப்பிரிவை நீக்குவோம்’, 'முஸ்லீம்கள் குடியேறியவர்கள்’, 'சிறுபான்மையினருக்குத் தேசப்பற்று இல்லை’, 'கோட்ஷே... தேச பக்தர். அவருக்குக் கோயில் கட்டுவோம்...’ இப்படி வம்புதும்பு மூலம் பிரபலமாகிக்கொண்டிருக்கிறார்கள் பலர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்பால் பதவிப்பிரமாணம் எடுத்த அமைச்சர்கள், 'பகவத் கீதையை தேசிய நூல் ஆக்குவோம்’, 'சம்ஸ்கிருத வாரம் கொண்டாடுவோம்’ எனப் புறப்படுகிறார்கள். இவை அனைத்தும் எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்க்கப்பட்ட பிறகுதான் திரும்பப் பெறப்படுகிறதே தவிர, இப்படி ஏதாவது கருத்தைச் சொன்னதும் பிரதமரே கண்டித்து நடவடிக்கை எடுத்தார் என்ற சூழ்நிலை இல்லை. குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் வேலையாக இது போய்க்கொண்டிருக்கிறது.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் உள்ள மதச்சார்பின்மை, சோஷலிசம் என்ற சொற்கள் இல்லாமல், குடியரசு தின அணிவகுப்பு ஊர்வலம் நடத்தப்படுகிறது. கேட்டால், '1950-ல் உள்ள லோகோவை எடுத்துவைத்துவிட்டார்கள்’ என்கிறார்கள். வாஜ்பாய், அத்வானி, ஜோஷி ஆகியோர் கோலோச்சிய 10 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்ட லோகோவை இப்போது போட்டால் ஏற்றுக்கொள்வார்களா?

'இந்திய முஸ்லீம்கள், இந்தியாவுக்காக வாழ்பவர்கள்; இந்தியாவுக்காக, உயிரையும் கொடுப்பார்கள்’ என, பிரதமர் மோடி பேட்டியளித்தார் (22.9.2014). இது மனதில் இருந்து வந்த வார்த்தைகளாக இருந்தால், அதுதானே கட்சிக் கொள்கையாகவும் கட்சியினர் கருத்தாகவும் இருக்க முடியும். ஆனால், இதற்கு மாறாகவே குரல்கள் திட்டமிட்டு எழுப்பப்படுகின்றன.

'இந்தியா இதுவரை மதச்சார்பற்ற நாடாக இருக்கிறது. இது இன்னும் எத்தனை ஆண்டு காலத்துக்கு நீடிக்கும் என எங்களுக்குத் தெரியவில்லை’ என சமீபத்தில் உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. நீடிப்பதும் நீடிக்காமல்போவதும் மோடி கையில்தான் இருக்கிறது. மதவாதம் என்பது, அவர் பேசும் வளர்ச்சிக்கு எதிரானது. 'சண்டைக்காரன் வீட்டுக்கும் சம்பந்தம் பேச ஆள் வராது’ என்பது கிராமத்துப் பழமொழி!

'தி கிரேட் டிக்டேட்டர்!’

கட்சியிலும் ஆட்சியிலும் எல்லாமே மோடி... மோடி... மோடிதான்!

மோடியின் அரசியல் நுழைவுக்கு அடித்தளம் இட்டவர் முரளி மனோகர் ஜோஷி. மோடிக்கு கட்சியில் நெருக்கடி ஏற்பட்டபோது காப்பாற்றியவர் அத்வானி. இவர்கள் இருவரையுமே ஒதுக்கி ஓரமாக வைத்துவிட்டார் மோடி. குஜராத் முதலமைச்சராக இருந்த மோடியை, பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவைக்க எல்லா முயற்சிகளையும் எடுத்தவர் ராஜ்நாத் சிங். மோடி பிரதமரானதும் பறிக்கப்பட்டது ராஜ்நாத் சிங்கின் தலைவர் பதவிதான். குஜராத்தில் தனக்குக் கீழே இருந்த அமித் ஷாவை அழைத்துவந்து, பா.ஜ.க-வின் அகில இந்தியத் தலைவராக்கிவிட்டார் மோடி. தனக்கு அடிபணியும் ஆளை அந்த இடத்தில் உட்காரவைத்த திருப்தி. பா.ஜ.க-வின் அடுத்தகட்டத் தலைவர்கள் என எதிர்பார்க்கப்பட்ட சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, நிதின் கட்கரி போன்றவர்களும் அமைதியாக்கப்பட்டுவிட்டார்கள். 'நிதின் கட்கரி அலுவலகத்தில் ஓட்டுக்கேட்புக் கருவி வைத்தது யார்?’ என காங்கிரஸ் கட்சியால் கேட்க முடிந்தது. நிதின் கட்கரிக்கு, கவலைப்படக்கூட முடியவில்லை. ராஜ்நாத் சிங்கின் மகனை அழைத்து மோடி கண்டித்தார் என, ஏதோ ஒரு கிசுகிசு பரவியது. அதை உறுதிப்படுத்துவது மாதிரியே பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஓர் அறிக்கை வெளியானதில் ராஜ்நாத் சிங்கே ஆடிப்போனார். அத்வானி நிலைமையைப் பார்த்து, சுஷ்மா வாயே திறப்பது இல்லை. மத்தியப்பிரதேச சௌகானும், ராஜஸ்தான் வசுந்தரா ராஜே சிந்தியாவும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்கள். மோடி சறுக்கினால் பிடிக்க ஆள் இல்லை என்பது, அந்தக் கட்சிக்கும் நல்லது அல்ல... மோடிக்கும் நல்லது அல்ல!

கவர்ச்சிகர முழக்கங்கள் வேண்டாம்!

'இந்தியாவில் தயாரிப்போம்’ என்பது மோடியின் முழக்கங்களில் ஒன்று. நினைத்தால் பெருமிதமாகத்தான் இருக்கிறது. உலகத் தயாரிப்புத் தளத்தில் இந்தியாவின் பங்கு 2012-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி 2.5 சதவிகிதம் மட்டுமே. (அமெரிக்கா 21%, சீனா 18%, ஜப்பான் 11%, கொரியா 7%). மோடி அறிவித்ததுமே இதனை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ரகுராம் ராஜன் விமர்சித்தார். 'பொருளாதார மேம்பாட்டுக்கு இது உத்தரவாதம் அளிக்காது. இந்தியாவில் தயாரிப்போம் என்பதை, இந்தியாவுக்காகத் தயாரிப்போம் என மாற்றுங்கள்’ என்றார். இதேபோலத்தான் முதலீடுகள் குவிந்துவிட்டால், இந்தியா முன்னேறிவிடும் என்பதும். இந்தியாவின் யதார்த்தம் வேறு மாதிரியானது.

குடிசைப் பகுதியில் வசிப்பவர்களின் எண்ணிக்கை 5.23 கோடியாக இருந்து 6.55 கோடியாக உயர்ந்துவிட்டதாக மத்திய அரசுதான் அறிவித்துள்ளது. இதில் 43 சதவிகிதக் குடிசைப் பகுதிகளில் குடிநீர் வசதி இல்லை. 63 சதவிகிதப் பகுதிகளில் கழிப்பிட வசதி கிடையாது. இந்த மக்கள் அனைவரும், நிலத்தை, விவசாயத்தை நம்பி இருப்பவர்கள். இவர்கள் நிலைமையைப் பரிசீலிப்பதில் இருந்தே மாற்றத்தைத் தொடங்க வேண்டும். 'இந்தியாவில் பொருளாதாரத்துக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டுமானால், வேளாண்மையை ஊக்குவிக்க வேண்டும்’ என்றும், 'விவசாயிகளுக்கு ஏன் சரியான விலை கிடைக்கவில்லை? விவசாயிகள் ஒன்றும் பிச்சை கேட்கவில்லை’ என்றும் தேர்தலுக்கு முன் பேசிய, எழுதிய மோடிதான், ஆட்சிக்கு வந்த பிறகு, 'பொது கொள்முதல் முறையில் வாங்கப்படும் நெல்லுக்கு, மாநில அரசுகள் ஊக்கத்தொகை வழங்கக் கூடாது’ என்றும் உத்தரவிட்டுள்ளார். தேர்தலுக்கு முன்னும் பின்னுமாக மாறிய மனம் இது. '2022-ம் ஆண்டு நாடு எல்லா வகையிலும் முன்னேறிவிடும்’ என மோடி காணும் கனவை நிறைவேற்றும் பாதை இது அல்ல.

குபீர் வளர்ச்சி நிலைக்குமா?

திடீரென வெடித்துக் கிளம்பியவர் மோடி. நின்று நிலைப்பாரா, நிலைக்கும் அளவுக்குச் செயல்படுவாரா என்பதை வருங்காலம்தான் சொல்ல வேண்டும். கடந்த ஓர் ஆண்டு, கிட்டத்தட்ட தேர்தல் காலம்போலவே கழிந்துவிட்டது. அவர் கலந்துகொள்ளும் அரசு விழாக்களின் பேச்சுகளும், தேர்தல் மேடைகளையே நினைவூட்டுகின்றன. சவால்களுக்குப் பஞ்சம் இல்லை. நாடாளுமன்ற நிகழ்வுகளில் முழுமையாகப் பங்கேற்கவில்லை. சர்ச்சைக்குரிய விஷயங்களில், மோடி தன் கருத்தை வெளியிடுவது இல்லை. பிரதமர்களுக்கு வெளிநாட்டுப் பயணங்கள் தவிர்க்க முடியாததுதான். ஆனால், மாதம்தோறும் அது சுற்றுலாவாக மாறிக்கொண்டிருக்கிறது. அவரது உடை, படாடோ பத்தின் உச்சம். ஒரு தடவை உடுத்தியதை இன்னொரு தடவை பார்க்க முடியவில்லை. 10 லட்ச ரூபாய் கோட்-சூட், பலத்த சர்ச்சைக்குப் பிறகே ஏலத்துக்கு வந்தது. அன்பளிப்பாகத் தரப்பட்டது என்றால், 'எதற்காக?’ என்ற கேள்விக்கு அவரே பதில் தர முடியவில்லை. 'நரேந்திர மோடி மீது குற்றம் சாட்டப்பட்டால், அது விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற நிலைமையில் என் ஆட்சி இருக்கும்’ என்றார் மோடி. 'ஆஸ்திரேலியாவுக்கு பிரதமர் சென்ற விமானத்தில் அருகில் அதானியும் அவருக்கு 6,300 கோடி ரூபாய் கடன் கொடுக்க வங்கி அதிகாரியும் போனது ஏன்?’ என காங்கிரஸ் கேட்டதற்கு மோடி இதுவரை ட்விட்டரில் பதில் தரவில்லை.

ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான கோவிந்தாச்சார்யா, 'தொழிலதிபர்களிடம் நெருங்கிக் உறவாடும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களில் தொழிலதிபர்களை அழைத்துச் செல்லக் கூடாது. மோடி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவராக நடந்துகொள்ள வேண்டும்’ எனச் சொல்லும் அளவுக்குப் போனது.

அனைத்துக்கும் மேலாக மோடியின் மனைவி யசோதா பென், எப்போதும் சுற்றிலும் போலீஸ்காரர்கள் பாதுகாப்பில் இருக்கிறார். 'எனக்கு எதற்குப் பாதுகாப்பு? யார் பாதுகாப்பு தரச் சொன்னது? எந்த அடிப்படையில் தருகிறீர்கள்?’ என அவர் குஜராத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு, இதுவரை பதில் இல்லை. அப்பீல் போயிருக்கிறார்.

அபலைகள் மனதில் கவலைகள் தீரவில்லை!

அடுத்த கட்டுரைக்கு