

பெங்களூர்:காவிரியிலிருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை நிறுத்திவைக்கக் கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் முறையிட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று, தமிழகத்துக்கு அக்டோபர் 15-ஆம் தேதி வரை தினமும் விநாடிக்கு 9,000 கன அடி தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமையன்று உத்தரவிட்டது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக பெங்களூரில் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் தலைமையில் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகதீஷ் ஷெட்டர்,"உச்ச நீதிமன்ற உத்தரவு குறித்து கர்நாடக அமைச்சர்கள், சட்ட நிபுணர்கள், சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினோம். காவிரி விவகாரத்தில் முந்தைய அரசுகள் எடுத்த முடிவுகள், பா.ஜனதா அரசு எடுக்க வேண்டிய நிலைப்பாடு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கர்நாடகத்தில் நிலவும் வறட்சி நிலையை எடுத்துரைத்து, தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாத நிலை உள்ளதை எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. காவிரி நதி நீர் ஆணையத்தின் உத்தரவை ஏற்று தமிழகத்துக்கு தினமும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை மறு ஆய்வு செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங்கிடம் உடனடியாக மனு தாக்கல் செய்துள்ளோம். இதை விசாரித்து இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை தற்போதைய தீர்ப்பை ஒத்திவைக்குமாறும் உண்மை நிலையைக் கண்டறிய இரு மாநிலங்களுக்கும் நிபுணர் குழுவை அனுப்பி வைக்குமாறும் அந்த மனுவில் கேட்டுள்ளோம்.
##~~## |