Published:Updated:

‘கொசு வளர்த்தால் அபராதம்’ எப்போது வந்தது? - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 5

‘கொசு வளர்த்தால் அபராதம்’ எப்போது வந்தது? - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 5
‘கொசு வளர்த்தால் அபராதம்’ எப்போது வந்தது? - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 5

மெரிக்கக் கண்டத்தைப் பொறுத்தவரையில் 1699-ல் பனாமா நாட்டில் டெங்கு கண்டறியப்பட்டாலும், கொள்ளைநோயாக டெங்கு பரவியது 18-ம் நூற்றாண்டில் அறியப்பட்டது. 1780-ம் ஆண்டில் பிலடெல்ஃபியாவில் கொள்ளைநோய் தாக்கியபோது டெங்குவைப் பற்றி பேசப்பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் முற்பாதியிலும் தென் அமெரிக்க நாடுகள் மற்றும் கியூபா உள்பட்ட கரீபியன் நாடுகளில் டெங்கு பரவியது பற்றியே அதிகமாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

அமெரிக்க நாடுகளில் டென் 2 எனும் டெங்கு வைரஸ் பாதிப்பானது முதல் முறையாக 1950-களில் கண்டறியப்பட்டது. 1960 முதல் 1980 வரை, மூன்று முறை கொள்ளைநோயாக டெங்கு தாக்கியது. 63-64 காலகட்டத்தில் டென் 3 வைரசும், 68-69 காலகட்டத்தில் டென் 2, டென் 3 வைரஸ்களும், 77-78 காலகட்டத்தில் டென் 1 வைரசும் கொள்ளைநோயைப் பரப்பிவிட்டன. 

மற்ற நாடுகளைவிட கியூபாவானது கொசு ஒழிப்பில் அதிரடியான நடவடிக்கைகளில் இறங்கியது. 

கியூபாவில் கொசு ஒழிப்புக்காக தேசிய அளவில் தகவல்தொகுப்பு மையம் அமைக்கப்பட்டது. அதுவே அரசின் பல்வேறு அமைப்புகளுக்கும் பொதுப் பிரச்சார இயக்கங்களுக்கும் ஒரு பாலமாகச் செயல்பட்டது. 16 மாகாணங்களிலும் அவற்றின் கீழ் உள்ள அனைத்து நகராட்சிப் பகுதிகளிலும் அதையடுத்து ஒவ்வொரு ஊர் அளவிலும் கொசு ஒழிப்பு இயக்கம் அமைக்கப்பட்டது. இந்த இயக்கமானது  மருந்து அடிப்பதுடன் மட்டும் நின்றுவிடாமல் கொசுப்பிரச்னை பற்றி தனிநபர் கண்காணிப்பையும் ஊக்குவித்தது. குறிப்பாக இதுபற்றி குழந்தைகளுக்கு உணரவைத்தது. 

கசிவை உண்டாக்கும் குடிநீர்க் குழாய்களைப் பழுதுபார்க்கவும் மாற்றவும் அரசே நிதியளித்தது. வீடுகளில் திறந்தபடி இருந்த தண்ணீர்த் தொட்டிகளை மூட இலவசமாக கவர்களும் விநியோகிக்கப்பட்டன. கொசுக்களின் இருப்பிடமாக இருந்த ஆயிரக்கணக்கான டன் குப்பைகளைக் கண்டறிந்து, அகற்றப்பட்டன. கொசு ஒழிப்புக்காக கியூபாவின் தலைநகரான ஹவாணாவிலேயே தினசரி ஆறு மணி நேரம் மின்சாரத்தை நிறுத்திவைக்கவும் செய்தது. 

தேசிய அளவிலான இந்த இயக்கத்தில் யாருக்கும் தயவுபார்க்கப்படவில்லை. ஒழுங்கு என்பது மேலிருந்து கீழ்வரை கறாராகக் கடைப்பிடிக்கப்பட்டது. மருந்தடிக்கவிடாமல் தடுப்பவர்களுக்கு அபராதமும் சிறைத்தண்டனைகூட விதிக்கப்பட்டது.  மர்டா பீட்ரிஸ் ரோக் எனும் பொருளாதார வல்லுநர், அவருடைய வீட்டுக்கு மருந்தடிக்கவந்த பணியாளர்களை அனுமதிக்கவிடாமல் வம்புசெய்ததால் அவர் நான்கு முறை கைதுசெய்யப்பட்டார். 

கியூப நாட்டவரில் பெரும்பாலானவர்கள் தங்களின் ஆப்ரோ கியூபக் கடவுளர்களுக்காக அல்லது கத்தோலிக்கப் புனிதர்களுக்காக டம்ளர்களில் தண்ணீரை வைக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். இதைப் புனிதநீராகக் கருதி வைக்கப்படும் இத்தண்ணீரை அப்படியே பல நாள்களுக்கு விட்டுவிடுவார்கள். அதையும் குறைந்தது இரு நாள்களுக்கு ஒரு முறையாவது மாற்றியாக வேண்டும் என கொசு ஒழிப்புத் திட்டத்தில் உத்தரவிடப்பட்டது. 

இதையெல்லாம் செய்தபின்னர், கொசுக்கள் உற்பத்தியாகும்படியாக தம்முடைய இடத்தை வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கும் முறையையும் கியூபா கொண்டுவந்தது. 

இது மட்டுமின்றி, பேசில்லஸ் துரிஞ்சியன் எனும் பாக்டீரியாவைப் பயன்படுத்தி ஏடிஸ் கொசுவின் லார்வாவை ஒழிப்பதையும் கியூபா கண்டறிந்தது. இதைப் பயன்படுத்தி, பிரேசில் நாட்டில் நோய்த்தொற்றின் அளவை 1.8% -லிருந்து 0.4% ஆகக் குறைத்துள்ளனர். நோய்த் தொற்றின் அளவு ஒரு சதவிகிதம் இருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. 

இந்தப் புள்ளிவிவரம் அனைத்துமே உலக சுகாதார நிறுவனம் உட்பட்ட ஐநா அமைப்புகளின் ஆய்வுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 
”கடைசி கொசு இருக்கும்வரை அதைத் துரத்திச்சென்று வேட்டையாடுவோம்” என்ற கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் வாசகத்தை, செயல்படுத்திக் காட்டினார்கள், கியூபாவின் குடிமக்கள். 

பல முறைகள் கியூபாவைத் தாக்கிய டெங்கு கொள்ளைநோயை வென்றது எப்படி?

(அடுத்து வரும்...)