Published:Updated:

நல்லபாம்பு 71... கட்டுவிரியன் 108... பாம்புப் பண்ணைக்கு ஒரு திக் திக் விசிட்! #VikatanExclusive

நல்லபாம்பு 71... கட்டுவிரியன் 108... பாம்புப் பண்ணைக்கு ஒரு திக் திக் விசிட்! #VikatanExclusive
நல்லபாம்பு 71... கட்டுவிரியன் 108... பாம்புப் பண்ணைக்கு ஒரு திக் திக் விசிட்! #VikatanExclusive

நல்லபாம்பு 71... கட்டுவிரியன் 108... பாம்புப் பண்ணைக்கு ஒரு திக் திக் விசிட்! #VikatanExclusive

“இதோ, இதுதான் கட்டுவிரியன். நம்ம ஊர்ல இருக்கறதிலேயே இதுதான் ரொம்ப டேஞ்சரான பாம்பு. கடிச்சா, அடுத்த ரெண்டு மணி நேரத்துல ஆளை ஆஸ்பத்திரியில் சேர்க்கணும். இல்லாட்டி மரணம்தான்." - குச்சியின் முனையில் கட்டுவிரியனைப் பிடித்தபடியே, பார்வையாளர்களுக்கு விளக்கம் கொடுத்துக்கொண்டிருந்தார் செல்லப்பா. காஞ்சிபுரம் மாவட்டம், வடநெமிலி கிராமத்தைச் சேர்ந்த ‘இருளர் பாம்பு பிடிப்போர் தொழில் கூட்டுறவு சங்கத்தின்’ உறுப்பினர். 

பாம்புக்கடியால் இறப்பவர்களுக்குத் தரப்படும் விஷமுறிவு மருந்துக்குத் தேவையான முக்கியமான மூலப்பொருளே, பாம்பின் விஷம்தான். இந்த விஷத்தை குதிரையின் உடலில் செலுத்தி, பின்னர் குதிரையின் உடலில் சுரக்கும் எதிர்ப்புசக்தி மூலமாக, விஷமுறிவு மருந்து தயாரிக்கப்படும். இந்த மருந்தைத் தயாரிக்க ஹைதராபாத், புனே, சிம்லா எனப் பல இடங்களில் நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால் பாம்பு விஷத்தை எடுக்க, இந்தியாவில் இருக்கும் ஒரே நிறுவனம், இந்த ‘இருளர் கூட்டுறவு சங்கம்’ மட்டுமே. இங்கிருந்துதான்  மருந்து தயாரிப்பதற்காக பாம்பு விஷம் அனுப்பப்படுகிறது. இப்படி விஷம் எடுப்பதற்கான பாம்புகளைச் சேகரிப்பதற்காக ஆண், பெண் என மொத்தம் 367 பேர் இந்த சங்கத்தில் இருக்கின்றனர். வாரத்தின் திங்கட்கிழமை  தவிர மற்ற நாள்களில், பொதுமக்கள் இங்கே பாம்பிலி  ருந்து விஷம் எடுப்பதை நேரில் காணலாம். ஒரு வாரநாளில், பாம்புப் பண்ணைக்கு விசிட் அடித்தோம். அங்கே  கண்ட காட்சிதான் மேலே பார்த்தது..

நம் நாட்டில், சுமார் 275 வகையான பாம்பினங்கள் காணப்பட்டாலும், அவை அத்தனையும் விஷமுள்ளவை கிடையாது. வெறும் 50 இனங்கள் மட்டுமே விஷம் கொண்டவை. இவற்றின் எண்ணிக்கையும் மிகமிகக் குறைவு. நல்லபாம்பு, கட்டுவிரியன், கண்ணாடி விரியன் மற்றும் சுருட்டை விரியன் ஆகிய நான்கு பாம்புகள் மட்டும்தான் நம் மாநிலத்தில் அதிகமாகக் காணப்படும் விஷப்பாம்புகள். இவற்றிலி  ருந்து தினமும் விஷம் எடுத்து, அவற்றைப் பதப்படுத்தி மருந்து நிறுவனங்களுக்கு அனுப்புவதுதான் இங்கே இருக்கும் இருளர்களின் பணி. 

வனம் மற்றும் வனம் சார்ந்த இடங்களில் வாழ்ந்து வந்தவர்கள் இருளர்கள். சின்னச்சின்ன விலங்குகளை வேட்டையாடுவது, தேன், மூலிகை என வனங்களில் கிடைக்கும் பொருள்களைச் சேகரிப்பது போன்றவை இவர்களின் வாழ்வியலோடு இணைந்த ஒன்று. இந்த வனவாசத்தை முற்றிலும் சிதைத்தது, 1972-ம் ஆண்டு வந்த இந்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்டம். இதைத் தொடர்ந்து, காடுகளை விட்டு இருளர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர், காடுகளுக்கு மிகவும் அருகிலுள்ள கிராமங்களில் குடியேறினர். காடுகளிலிருந்து முற்றிலும் பிரிந்தாலும், விலங்குகள் மற்றும் வனம் ஆகியவை தொடர்பான இருளர்களின் அறிவு பிரமிக்கத்தக்கது. அதிலும் பாம்புகளுக்கும் இருளர்களுக்கும் இடையேயான உறவு வலுவானது. அவர்களின் அன்றாட வாழ்வியலிலிருந்து தெய்வ நம்பிக்கைகள் வரை, அனைத்திலும் பாம்புகளுக்கு முக்கிய இடமுண்டு. இப்படி பாம்புகளோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்துவந்த இருளர்கள், வனப்பாதுகாப்புச் சட்டத்துக்குப் பின்னர், செய்வதறியாது நின்றனர். இன்னும் சிலர் அவர்களைத் தவறாக வழிநடத்தினர். இதைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலும், இருளர்களின் வாழ்வை மேம்படுத்தும் நோக்கிலும் ரோமுலஸ் விட்டேகரால் உருவாக்கப்பட்டதுதான், இந்த இருளர் பாம்பு பிடிப்போர் கூட்டுறவு சங்கம்.

பாம்புக்கடிக்கு மருந்து தயாரிக்கும் நிறுவனங்களுக்காக, அதிக அளவில் பாம்பு விஷம் தேவைப்படும். இந்தப் பணியை மற்ற எல்லோரை விடவும் இருளர்களால் சிறப்பாகச் செய்யமுடியும். இத்துடன் அரசின் சட்டப்பாதுகாப்பு, முறையான வருமானம் போன்றவையும் கிடைக்கும். இப்படித்தான் 1978-ம் ஆண்டு, இந்தப் பண்ணை செயல்படத்துவங்கியது. 1982-83-ம் ஆண்டுகளில், இந்தச் சங்கத்தில் இருந்த இருளர்களின் எண்ணிக்கை 26. இன்று 372. அப்போது, இந்தப் பண்ணையின் வருடாந்திர லாபம் 6,000 ரூபாய். தற்போது இதன் ஆண்டு வருமானம் மூன்றரை கோடிக்கும் மேல். தமிழக அரசின் வனத்துறை அனுமதியுடனும் தொழில்துறையின் நிர்வாகத்தின் கீழும் இந்தப் பண்ணை இயங்கிவருகிறது. இதன்மூலம் கிடைக்கும் வருமானம் அனைத்துமே, இருளர்களின் மேம்பாட்டுக்காக மட்டுமே செலவிடப்படுகிறது.

"2,500 நல்லபாம்பு, 1,500 கட்டுவிரியன், 2,300 சுருட்டைவிரியன், 2,000 கண்ணாடி விரியன் என ஒரு வருடத்துக்கு மொத்தம் 8,300 பாம்புகளைப் பிடித்து விஷம் எடுப்போம். விஷம் எடுத்த பின்னர், மீண்டும் அவை காட்டுக்குள்ளேயே சென்று விடப்படும். எந்தப் பாம்பையும் கொல்வதோ, துன்புறுத்துவதோ கிடையாது" என்கிறார் இருளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் வரதன். 1984-லிருந்து பாம்பு பிடிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறார். பண்ணையின் நடுவே நின்றுகொண்டு பாம்புகளை, ஏதோ பூனைக்குட்டிகளைக் கையாள்வது போல அசால்ட்டாகக் கையாள்கின்றனர் இங்கிருப்பவர்கள். நாகப்பாம்பு படம் எடுக்கிறது; கண்ணாடி விரியன் சீறுகிறது; கட்டுவிரியன் காலுக்குக் கீழே ஓடுகிறது; ம்ஹூம்...துளியும் பயமின்றி, அவற்றை லாகவமாகக் கையில் பிடித்து விளையாடுகின்றனர் இருளர்கள். 
 "திடீர்னு பாம்பு கடிச்சா என்ன பண்ணுவீங்க?" என வரதனைப் பார்த்துக் கேட்டோம்.

"தனக்கு ஆபத்துனு நினைக்காத வரை பாம்பு யாரையும் கடிக்காது. அதேமாதிரி, பாம்பைக் கையாள்வதற்குத் தேவையான முதல் அம்சமே தைரியம்தான். அடுத்தது, அதை எப்படிக் கையாளணும்னு தெரியணும். இந்த ரெண்டு விஷயம் மட்டும் தெரிஞ்சா போதும். பாம்பை ரொம்ப ஈஸியா கையில் பிடிச்சுடலாம். நம்ம ஊர்ல நிறையப் பேரு, எந்தப் பாம்பு கடிச்சாலும் இறந்துடுவோம்னு நினைக்கிறாங்க. அப்படியெல்லாம் இல்லை. நல்லபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டை விரியன், கட்டு விரியன்னு மொத்தம் 4 பாம்புங்கதான் நம்ம ஊர்ல விஷப்பாம்புகள். நல்ல பாம்பு கடிச்சா அடுத்த 4 மணி நேரத்துக்குள்ள சிகிச்சை எடுக்கணும்; கண்ணாடி விரியன் கடிச்சா, 3 மணி நேரத்துக்குள்ளயும், கட்டு விரியன் கடிச்சா 2 மணி நேரத்திற்குள்ளயும் சிகிச்சை எடுக்கணும். இல்லைனா உயிருக்கே ஆபத்து. அளவுல, சுருட்டை விரியன் இருக்கிறதுலயே ரொம்ப சின்னப் பாம்பு. காரணம், இது அந்த அளவுக்குத்தான் வளரும். கடிச்சிட்டா, கடிச்ச இடம் யானைக்கால் மாதிரி வீங்கிடும். ரெண்டு நாளுக்குள்ள சிகிச்சை எடுத்தே ஆகணும். இல்லன்னா ஆபத்துதான். மத்தபடி சாரைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், பச்சைப் பாம்பு ஆகியவை விஷம் இல்லாதவைதான். சினிமால காட்டுற மாதிரி, கண்ணு நீலமா மாறுறது, நுரை தள்ளுறது எல்லாமே பொய்தான். பாம்பு கடிச்ச கடிவாயைத் தவிர, வேற எந்த வித்தியாசமும் இருக்காது. ஆனா, உடம்புக்குள்ள நிறைய மாற்றங்கள் நடக்கும். உடனே மருத்துவம் பார்த்துட்டா பிழைச்சிடலாம்" என்றவர், இருளர்கள் பாம்பு பிடிக்கும் வித்தையைப் பகிர்ந்துகொண்டார். 

"தனியா எப்போவுமே பாம்பு பிடிக்கப் போக மாட்டோம். நாலு அஞ்சு பேர் சேர்ந்துதான் போவோம். கடப்பாரை, மண்வெட்டி, துணிப்பை, குச்சி, பாம்பு கடிச்சா சாப்பிட மூலிகை, இவை எல்லாம்தான் எடுத்துட்டுப்போவோம். பாம்பு இருக்கா இல்லையான்னு சில அடையாளங்களை வெச்சு கண்டுபிடிச்சிடலாம். முதல் விஷயம் பாம்புச் சட்டை. எங்கேயாச்சும் பாம்புச் சட்டை கண்ணுல தட்டுப்பட்டா, அதைச் சுத்தி கொஞ்ச தூரத்திலேயே, எங்கயாச்சும் பாம்பு கண்டிப்பா இருக்கும். அடுத்தது அதோட கழிவு. பாம்போட கழிவுகள் எங்கயாச்சும் இருந்தா, அங்கயும் பாம்பு இருக்க வாய்ப்பிருக்கு. உடனே அந்தப் பகுதிகள்ல தேடுவோம். மூணாவது, பாம்போட வழித்தடம். பாம்பு ஊர்ந்துபோன திசை, அதைச் சுத்தியிருக்கிற பொந்துகள், இதையெல்லாம் வெச்சு கண்டுபிடிச்சிடலாம். சாரைப் பாம்பு நேரா போகும். அதனால, அதோட தடமும் நேரா இருக்கும். கண்ணாடி விரியன் வளைஞ்சு வளைஞ்சு போனாலும், அதோட வால் மட்டும் நேரா போகும். அதனால, அதோட தடத்துல வளைவுகளோட சேர்ந்து ஒரு கோடும் இருக்கும். நல்ல பாம்பு வளைவு வளைவா மட்டும்தான் போகும். கட்டுவிரியன் கொஞ்சம் கம்மியா வளையும். இப்படித் தடத்தை வெச்சே பாம்பைக் கண்டுபிடிச்சிடுவோம். பாம்பைப் பாத்ததும் குச்சிய அது பக்கத்துல நீட்டுவோம். கோபமா இருந்தா குச்சியைத் தாக்கும். கோபம் இல்லன்னா சாந்தமா இருக்கும். பிடிச்சு பைக்குள்ள போட்டுடுவோம்" என்றார்.

சரி... இப்படிப் பிடிக்கும் பாம்புகளிடமிருந்து எப்படி விஷம் எடுக்கிறார்கள்... எப்படி இவர்களுக்கு இதன்மூலம் வருமானம் வருகிறது... இருளர்களின் அடுத்த தலைமுறையினர் என்ன செய்கின்றனர்? சென்னையில் வெள்ளம் வந்தபோது, இந்தப் பண்ணை சந்தித்த பிரச்னை... இந்த விஷயங்கள் குறித்து நாளை பார்ப்போம்.

அடுத்த கட்டுரைக்கு