ரயிலில் சரக்கு கட்டணத்திற்கு சேவை வரி: ஜெயலலிதா கண்டனம்
சென்னை: ரயிலில் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணங்களின் மீது இன்றுமுதல் 12 சதவீத சேவை வரி விதிக்கப்படும் நிலையில், இதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," பெட்ரோல் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு உருளை வழங்குவதில் கட்டுப்பாடு, சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீடு, என்ற ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளின் வரிசையில், ரயில் மூலம் எடுத்துச் செல்லப்படும் சரக்குகளுக்கான கட்டணங்களின் மீது 12 சதவீத சேவை வரியை விதித்து மக்களை ஆற்றொணாத் துயரத்திற்கு திமுக. தலைவர் கருணாநிதியின் "வழிகாட்டுதலின்'' பேரில் செயல்படும் மத்திய அரசு ஆளாக்கியுள்ளது. இது, "எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினார் போல்'' அமைந்துள்ளது.
இந்திய ரயில்வே அமைச்சகம் தனது 27.9.2012 நாளிட்ட அறிவிக்கையில், சரக்குகளுக்கான 30 சதவீத கட்டணத்தின் மீது 12 சதவீத சேவை வரி விதிக்கப்படும் என்றும், அந்த சேவை வரி மீது 2 சதவீத கல்வி வரியும், 1 சதவீத உயர்கல்வி வரியும் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.
ரயிலில் உயர் வகுப்புகளில் பயணம் செய்பவர்களுக்கான கட்டணங்களின் மீதும் சேவை வரி, அதன் மீதான கல்வி வரி மற்றும் உயர்கல்வி வரி ஆகியவை விதிக்கப்பட்டுள்ளன.
சலுகைக் கட்டணத்தில் பிரயாணம் செய்யக்கூடிய மூத்த குடிமக்கள், சிறுவர்-சிறுமியர், மாற்றுத் திறனாளிகள் போன்றோருக்கும் இந்த வரிவிதிப்பு பொருந்தும் என்றும், முன்பதிவு செய்யப்பட்ட பயணச் சீட்டை ரத்து செய்தாலும், சேவை வரிக் கட்டணம் ரயில்வே நிர்வாகத்தால் திரும்பித் தரப்படமாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
##~~##
மேலும், ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கான கட்டணங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு வகைகளுக்கான கட்டணங்கள் ஆகியவற்றின் மீதும் சேவை வரி விதிக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது.சரக்குகளுக்கான 30 சதவீத கட்டணத்தின் மீது சேவை வரி, அதன்மீது கல்வி வரி மற்றும் உயர்கல்வி வரி விதிக்கப்படுவதன் மூலம் அனைத்துப் பொருட்களின் விலைகள் மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் பணவீக்கம் மேலும் உயரக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ரயில்வே துறையின் சார்பில் நடப்பாண்டில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டிலேயே, இந்த இனங்களின் கீழ் சேவை வரி விதிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருந்த போதும்,அப்போது மத்திய காங்கிரஸ் கூட்டணியில் முக்கிய அங்கம் வகித்த ஒரு கட்சியின் நிர்பந்தத்தின் காரணமாக கடந்த 6 மாதங்களாக இந்த வரிவிதிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தற்போது அந்தக் கட்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து விலகியுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தற்போது அங்கம் வகிக்கும் கட்சிகள் இதனை எதிர்க்காது என்பதை அடிப்படையாக வைத்தும், சேவை வரி விதிப்பை நடைமுறைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி ஆகும்.
பொதுமக்களும், பொருளாதார வல்லுநர்களும், விஷம் போல் உயர்ந்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்த வேண்டும் என்றும், உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கொண்டிருக்கின்ற வேளையில், மத்திய அரசின் இந்த நடவடிக்கை "பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டை பாக்கிற்கு என்ன விலை என்று சொல்லுகிறார்கள்'' என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் முற்றிலும் முரணாக அமைந்துள்ளது.
மத்திய அரசின் இதுபோன்ற மக்கள் விரோதச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தச் சேவை வரி விதிப்பினை உடனடியாக கைவிட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.