Published:Updated:

”நதிநீர் இணைப்பு பற்றி உண்மை சொன்னால் தேசதுரோக வழக்கா...?!" - கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளிகள்

”நதிநீர் இணைப்பு பற்றி உண்மை சொன்னால் தேசதுரோக வழக்கா...?!" - கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளிகள்
”நதிநீர் இணைப்பு பற்றி உண்மை சொன்னால் தேசதுரோக வழக்கா...?!" - கொதிக்கும் சுற்றுச்சூழல் போராளிகள்

நெடுவாசல் போராட்டம், டெல்டா மாவட்ட எண்ணெய்க் குழாய்கள் பதிப்பு உள்ளிட்ட பல போராட்டங்களில் பங்கெடுத்தவர், மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன். கதிராமங்கலத்திலிருந்து ஓ.என்.ஜி.சி முழுவதுமாக வெளியேற வேண்டும் எனப் போராட்டத்தை இவர் முன்னெடுத்தார். அதனால், இவர்மீது 9 வழக்குகள் பதியப்பட்டு, 45 நாள்கள் சிறைவாசம் இருந்து சில தினங்களுக்கு முன்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

செயராமன் கடந்த அக்டோபர் 22-ம் தேதி "நதிகள் இணைப்புத்திட்டம் – ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா" எனும் தலைப்பில் புத்தகம் வெளியிட்டார். அப்போது நடந்த கருத்தரங்கிலும் பேசினார். கடந்த இரண்டு நாள்களுக்கு முன்னர் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற "காவிரி டெல்டா சிறப்பு வேளாண் மண்டலமும், ஹைட்ரோ கார்பன் திட்டங்களும்" கருத்தரங்கில் கலந்து கொண்டார். அதன்பின்னர் அக்டோபர் 30-ம் தேதி புத்தக வெளியீட்டுக் கருத்தரங்கில் பேசியதால் மயிலாடுதுறை போலீஸார்  தேசதுரோக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுபற்றிய விரிவான விளக்கத்தையும், வழக்கின் விவரத்தையும் பற்றி சமூக ஆர்வலர்களிடம் பல கேள்விகளை முன்வைத்தோம். 

தேசத் துரோக வழக்குப் பதிவு செய்துள்ளதை ஏற்க முடியாது.செயராமன்மீது தேசத் துரோக வழக்கில் 153 - B -யின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மதம், இனம், மொழி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட

ஒரு சமூகத்தவரை நாட்டின் குடியுரிமை அற்றவர் என எழுதினாலோ அல்லது பேசினாலோ இந்த வழக்குப் பாயும். பேராசிரியர் செயராமன் எழுதியுள்ள புத்தகத்தில் ஒரு திட்டத்தை மட்டுமே விமர்சித்து கருத்துகளை முன்வைத்துள்ளார். அதன் பின்னர் கருத்தரங்கிலும் நதிநீர் இணைப்புத் திட்டத்தைப் பற்றி பேசினார். அதற்கும் வழக்குப் பிரிவிற்கும் சம்பந்தமே கிடையாது. ஒரு திட்டத்தை விமர்சிக்க அல்லது தனது கருத்துகளைத் தெரிவிக்க இந்த நாட்டில் இடம் இல்லை என்பதையே இவ்வழக்கு காட்டுகிறது. இவ்வாறு மத்திய அரசு கருத்துரிமையை பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நதி நீர் இணைப்பு திட்டத்திற்கு எதிராகப் பேசுவதையோ அல்லது எழுதுவதையோ குற்றச் செயலாகப் பாவிப்பது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான போராகத்தான் பார்க்கிறோம். இதைப்போன்ற செயல்களால் மக்களுக்காகப் போராடும் அமைப்புகளை அல்லது தனி நபர்களை முடக்கிவிடச் செய்யமுடியும் என்று அரசு  நினைக்கிறது. தமிழக அரசு முன்வந்து இவ்வழக்கை திரும்பப் பெறவில்லை என்றால் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்த வேண்டியிருக்கும்" என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன். 

இதுபற்றி பேராசிரியர் செயராமனிடம் பேசினோம். "சமூகம் அல்லது இனம் என எதையுமே விமர்சிக்கக் கூடிய கருத்துகள் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடவில்லை. இதையெல்லாம் விமர்சித்தால் மட்டுமே 153-B பிரிவின் கீழ் வழக்குப் பதிய முடியும். அரசு சமூகப் போராளிகள்மீது எப்படி வேண்டுமானாலும் வழக்கு பதியலாம் என்பதையே இது காட்டுகிறது. ஒரு திட்டத்தை விமர்சிப்பது எப்படி

தேசத்துரோக வழக்கின் கீழ் வரும்? நதிநீர் இணைப்புத் திட்டத்தை விமர்சிப்பது, அதற்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதுதான் அரசுக்குப் பிடிக்கவில்லை. அரசு விரும்புவதை மட்டும்தான் எழுத வேண்டும், அரசுக்கு எதிராக எழுதினால் குற்றம் என்றால், இது எப்படி உண்மையான ஜனநாயகமாக இருக்க முடியும்? இதை நாங்கள் சட்டப்படி எதிர் கொள்ளத் தயாராக இருக்கிறோம். கடந்த ஜூன் 2 -ம் தேதி எங்களை கைது செய்த காவல்துறை திருச்சி மத்திய சிறையில் அடைத்தது. சிறையில் இருக்கும்போது எழுதப்பட்ட புத்தகம்தான் "நதிகள் இணைப்புத்திட்டம் – ஆறுகளைப் பிடுங்கி விற்கும் இந்தியா". இதில் நதிநீரை கார்ப்பரேட்டுகளிடம் கொடுத்துவிட்டு அவர்களிடமிருந்து மக்களும், விவசாயிகளும் பணம் செலுத்தி வாங்க வேண்டியிருக்கும். ஒரு மாநில மற்றும் அப்பகுதி மக்களுக்குச் சொந்தமான நதிகளை கார்ப்பரேட்களிடம் எப்படி ஒப்படைக்கலாம் என்பது உள்ளிட்ட பல கருத்துகளை முன்வைத்துள்ளேன். இதுதான் மத்திய அரசின் கோபத்திற்குக் காரணம். இது எப்படி தேச விரோதச் செயலாக இருக்கும் என்பது தெரியவில்லை. இவ்வழக்கில் எப்போது வேண்டுமானாலும் கைதாகலாம் என்ற நிலையில் இருப்பதால் இவ்வழக்கை துருப்புச் சீட்டாக மத்திய அரசு பயன்படுத்திக்கொள்ள நினைக்கிறது. மீண்டும் சொல்கிறேன் இது கருத்துரிமைக்கு எதிரான போர்" என்றார். 

ஒரு நாட்டின் இறையாண்மைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் மட்டும்தான் தேசத்துரோக வழக்குகள் பாய வேண்டும். ஆனால், மத்திய அரசு நினைத்துவிட்டால் யார்மீது வேண்டுமானாலும் வழக்குப் பதிவு செய்யும் என்று நினைப்பது நிஜமாகவே கருத்துரிமைக்கு எதிராக நடக்கும் போராகத்தான் இருக்கும். ஏற்கெனவே முன்னர் பதியப்பட்ட வழக்கின் கீழ்தான் தற்போது சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலன் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சுற்றுச்சூழலுக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது எனச் சொன்னால்கூட தேசத்துரோக வழக்கு பாய்வதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோரும் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர்.