Published:Updated:

"ஆட்சியில் எமக்கு பங்கு வேண்டும் !”

டி.அருள் எழிலன், படம்: கே.ராஜசேகரன்

ந்தப் பக்கமும் பகைத்துக்கொள்ளாமல் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணியைக் கூட்ட நினைக்கிறார் தொல்.திருமாவளவன். 25 வருட அரசியல் அனுபவம், 'தொலைநோக்குப் பார்வை’யுடன் எதையும் அளந்து பார்க்கும் பக்குவத்தை நிரப்பியிருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரிடம்... 

''ஆரம்ப காலத்தில் 'அடங்க மறு... அத்துமீறு...’ என்றெல்லாம் ஆவேசம் காட்டினீர்கள். ஆனால், இப்போது சமரசங்களோடு வாழப் பழகிவிட்டீர்களா?''

''அடங்க மறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பி அடி... போன்ற முழக்கங்கள், குறிப்பிட்ட காலத்துக்குள் நீர்த்துவிடுபவை அல்ல; ஆதிக்கம் நீடிக்கும் காலம் வரை அவை நீடித்திருப்பவை. குறிப்பிட்ட இனத்துக்கோ, சாதிக்கோ அல்லாமல் ஒடுக்கப்படுகிற அனைவருக்குமான முழக்கங்கள் அவை. அந்த வகையில் எங்கள் போர்க்குணம் அப்படியேதான் இருக்கிறது. ஆனால், எங்கள் எழுச்சியைக் கட்டுப்படுத்த நினைத்தவர்கள் அந்த முழக்கங்களைக்கொண்டு எங்களை வன்முறையாளர்களாக, தீவிரவாதிகளாகச் சித்திரிக்கப் பார்த்தார்கள். உண்மையில், எங்கள் அணுகுமுறை பக்குவமானது. நடுநிலையாளர்கள் அதைத் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.''

'' ' விடுதலைச் சிறுத்தைகள் எங்கள் தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம்’ என, பா.ம.க தலைவர் ஜி.கே.மணி அழைப்பு விடுத்திருக்கிறாரே?''

''விடுதலைச் சிறுத்தைகள் மீது இதுவரை யாருமே சுமத்தாத அவதூறுப் பழிகளைச் சுமத்தியவர்கள் பா.ம.க-வினர். அரசியலில் ஆதாயம் கிடைக்கும் என்றால் அவர்கள் எதையும் செய்வார்கள்... பேசுவார்கள்.

   "ஆட்சியில் எமக்கு பங்கு வேண்டும் !”

2011-ம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் ஒரே கூட்டணியில் போட்டியிட்டோம். அவர்கள் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை என்றவுடன், மிக மோசமான விமர்சனங்களை எங்கள் மீது சுமத்தினார்கள். தலித் வெறுப்பு அரசியலை வளர்த்து, அப்பாவி வன்னிய மக்களை ஒருங்கிணைத்தார்கள். இதுதான் அவர்களுடைய வரலாறு. இப்போது என்னைக் கூட்டணிக்கு அழைக்கிறார்கள் என்றால், அதில் ஏதோ உள்நோக்கம் உள்ளது. அவர்களை எந்தக் காலத்திலும் நம்ப முடியாது.''

''உள்நோக்கம் என்றால்..?''

''தேர்தலுக்காக அவர்கள் கூட்டணிவைக்க விரும்பும் சக்திகள், 'விடுதலைச் சிறுத்தைகளோடு இணைந்து வாருங்கள்’ என அறிவுறுத்தியிருக்கலாம் அல்லது வேறு பெரிய சக்திகளோடு நாங்கள் இணைந்துவிடக் கூடாது என அதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், உறவாடிக் கெடுக்கும் எண்ணமாகவும் இருக்கலாம். எனவே, சாதியையும் மதத்தையும் வைத்து அரசியல் செய்கிறவர்களுடன் தேர்தலுக்காகக்கூட இனி இணையக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இதனால், 'தலித் மக்களுக்கும் வன்னிய மக்களுக்கும் இடையே இணக்கமான புரிதல் ஏற்படும் சூழல் கெட்டுப்போகுமே...’ எனக் குற்றம் சொல்வார்கள். முன்பு, வன்னிய மக்களின் ஐந்து சதவிகித வாக்கு வங்கியை வைத்திருந்த பா.ம.க., இன்று ஒன்றரை சதவிகித வாக்குகளை மட்டுமே வைத்திருக்கிறது. இதுதான் வன்னிய மக்களிடம் அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு. தவிரவும் பா.ம.க-வோடு நல்லிணக்கமாக இருந்தால்தான், அது வன்னிய மக்களோடு நல்லிணக்கமாக இருப்பதாக அர்த்தமாகும் என்ற எண்ணமே தவறானது.''

''தமிழக எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்தோடு பிரதமர் மோடியைச் சந்தித்த நோக்கம் நிறைவேறிவிட்டதா?''

''அது அலுவல் மற்றும் மரியாதைநிமித்தமான வழக்கமான ஒரு சந்திப்புதான். எங்கள் கோரிக்கைகளுக்கு பிரதமர் என்ன பதில் சொல்வார் என்பது எங்களுக்கு முன்னரே தெரியும். அந்தப் பதிலைத்தான் அவரும் சொன்னார். இந்தச் சந்திப்பால் எந்தப் பயனும் விளையப்போவது இல்லை என்பதும் தெரியும். ஆனாலும் அவரைச் சந்தித்தோம். சந்திக்காமல் இருந்தால், நாங்கள் ஒற்றுமையாக இல்லை என்பது போன்ற தோற்றம் உண்டாகிவிடும். அதனாலேயே அது பயன் இல்லாத சந்திப்பாக இருந்தாலும், எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்த பிரதமரைச் சந்தித்தோம்.''

''பயன் இல்லாத சந்திப்பா..?''

   "ஆட்சியில் எமக்கு பங்கு வேண்டும் !”

''பிரதமர், செம்மர வழக்கில் 20 பேர் கொலைக்கு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிடுவார் என்றோ, சந்திரபாபு நாயுடு அரசைக் கலைத்துவிடுவார் என்றோ எதிர்பார்க்க முடியுமா?''

''தலைநகரத்தில் செய்தியாளர் சந்திப்பில் விஜயகாந்த் கோபத்துடன் கடுகடுத்தது சரியா? எதிர்க்கட்சித் தலைவருக்கான கண்ணியமான நடத்தையா அது?''

''சில தனி நபர்களுடைய அரசியல் புரிதல், அணுகுமுறை பற்றி எல்லாம் நான் பேச முடியாது. ஆனால், விஜயகாந்துக்கு எரிச்சலைத் தூண்டி ஆத்திரமூட்ட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செயல்படுகிறார்கள் சிலர். அவர் அதற்கான எதிர்வினையை ஆற்றியிருக்கிறார். எவ்வளவுதான் சீண்டினாலும் பொதுவாழ்வில் உள்ளவர்கள் பொறுமையாகத்தான் இருக்க வேண்டும் என்பது கட்டாயம் அல்ல. செல்லும் இடமெல்லாம் நண்பர் விஜயகாந்திடம் குறிப்பிட்ட சிலர் எரிச்சலூட்டும் கேள்விகளைக் கேட்பதால், அதற்கான எதிர்வினையை அவர் வெளிப்படுத்தினார். இப்படி உள்நோக்கத்தோடு அவரைச் சீண்டுவதை முதலில் கைவிட வேண்டும்.''

'' 'தி.மு.க., அ.தி.மு.க-வோடு கூட்டணி கிடையாது’ என பா.ம.க அறிவித்ததுபோல, உங்களால் அறிவிக்க முடியவில்லையே... ஏன்?''

''இரு கட்சிகளின் நிலைப்பாடு முற்றிலும் வெவ்வேறானது. தி.மு.க., அ.தி.மு.க. என எதுவாக இருந்தாலும், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்கிறோம் நாங்கள். ஆனால், பா.ம.க-வோ கூட்டணியே தங்கள் தலைமையில்தான் என்கிறார்கள். தன் மகனை முதலமைச்சராக்க மற்றவர்கள் ஆதரவைக் கேட்கிறார் அந்தக் கட்சித் தலைவர். ஆக, இரண்டு கட்சிகளுக்கான நோக்கமே எதிரெதிர் திசையில் இருக்கிறது.''

''கடந்த கால கசப்புகளை மனதில் கொண்டு 'தனித்துப் போட்டியிடலாம்’ என்ற மனநிலையில் இருக்கிறார்கள் உங்கள் கட்சித் தொண்டர்கள். ஆனால், இப்போது நீங்கள் மீண்டும் கூட்டணி சமிக்ஞைகளை வெளிப்படுத்துகிறீர்களே?''

''தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க வேண்டாம் எனத் தீர்மானித்தால், அந்தக் கட்சிகளுக்கு மாற்றான வலிமையான அணியை யார் உருவாக்குவார்கள்... அதற்கு யார் தலைமை தாங்குவார்கள்? தி.மு.க., அ.தி.மு.க-வை அப்புறப்படுத்திவிட்டு ஆட்சியைப் பிடிக்கும் வலிமை பெற்ற கட்சி இங்கு இல்லை. அதனாலேயே கூட்டணி அமைக்கும்போது அந்தக் கட்சிகள் ஒருசில தொகுதிகளைக் கொடுத்துவிட்டு, மீதம் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் எங்கள் வாக்குகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது ஒருவகையான அரசியல் சுரண்டல். ஆகவேதான், இந்த முறை நாங்களும் ஆட்சியில் பங்கு கேட்கிறோம். கூட்டணிக் கட்சியில் ஒருவர் வென்றால்கூட, அவரை மந்திரியாக்க வேண்டும். 'ஆட்சியில் சமவிகிதப் பங்கு’ என்பதுதான் உண்மையான ஜனநாயகம். தமிழகத்தில் முதல்முறையாக இந்தக் கருத்தை முன்வைக்கிறோம். ஆனால், தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு எதிரானதாக இந்தக் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டாம். கம்யூனிஸ்ட்கள், ம.தி.மு.க., தே.மு.தி.க., தமிழ் மாநில காங்கிரஸ், காங்கிரஸ், முஸ்லீம் கட்சிகள் ஆகியோரிடமும் இந்தக் கருத்தை வலியுறுத்தவிருக்கிறோம்.''

''ஈழப் படுகொலைகள், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் கொலை... தமிழ்நாடு அரசியல் தலைமைகளால் இந்த விவகாரங்களில் எதையும் ஆக்கபூர்வமாக முன்னெடுக்க முடியவில்லையே?''

''ஈழப் பிரச்னையும், தமிழ்நாட்டு மீனவர் பிரச்னையும் இந்திய அரசின் வெளியுறவுக் கொள்கை தொடர்பான விவகாரங்கள். மத்திய அரசை நிர்பந்தித்து வெளியுறவுக் கொள்கையை மாற்றும் வலிமை, மாநிலக் கட்சிகளின் போராட்டங்களுக்கு இல்லை. போராடும் நமக்கும், அந்த அதிகாரங்கள் பற்றிய புரிதல் வேண்டும்.''

   "ஆட்சியில் எமக்கு பங்கு வேண்டும் !”

''தமிழ்நாட்டுக் கட்சிகளிடையே ஈழத் தமிழர்களுக்கு உண்மையான நண்பன் யார் என நிரூபிக்கவேண்டிய போட்டி, சில ஆண்டுகள் முன்னர் வரை இருந்தது. 2011-ம் ஆண்டு தேர்தலுக்குப் பின்னர் கட்சிகளுக்கு அந்தத் தேவை இல்லாமல் போய்விட்டதே?''

''ஈழப் போராட்டத்தின் தளம் விரிவடைந்து சர்வதேசத் தளத்தை எட்டிவிட்டது. அதை இங்குள்ள தமிழர்கள் வலுப்படுத்த வேண்டும். ஆனால், ஈழத் தமிழர்கள் - தமிழகத் தமிழர்கள் இடையிலான உறவின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாகியிருக்கிறது. உலகத் தமிழர்களுடனான உறவும் பலவீனமாகி இருக்கிறது. இவை சரிசெய்யப்பட வேண்டும்.''

''தமிழ்நாடு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் பணிகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

''ஓ.பன்னீர்செல்வம்தான் தமிழக முதலமைச்சர் என, அவருடைய கட்சியினரே அங்கீகரிக்கவில்லையே. அவரைச் சுதந்திரமாகச் சிந்திக்கவும் செயல்படவும் அவருடைய கட்சியே அனுமதிக்கவில்லை என்பது வேதனைக்குரியது. அவருக்கான மரியாதை கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அவர் தன்னைத்தானே தாழ்த்திக்கொள்கிறார்; தன் இடத்தை தக்கவைத்துக் கொள்ளவே போராடுகிறார்; அது ஒரு தற்காப்புப் போராட்டம்!''