Published:Updated:

லைக் பண்ணுங்க்ஜி லைஃப் நல்லா இருக்கும் !

நா.சிபிச்சக்கரவர்த்தி, பா.ஜான்ஸன், கார்க்கிபவா

'ஒண்ணா இருக்கிற புருஷன் - பொண்டாட்டியைப் பிரிச்சுவைக்கிற அதே சமூக வலைதளங்கள்தான், எங்கேயோ இருக்கிற நட்சத்திரப் பிரபலங்களையும் சாமானியனையும் சேர்த்துவைக்குது. இன்ன தேதிக்கு ரங்கநாதன் தெருவைவிட பரபரப்பான சந்து... ட்விட்டர், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள்தான். அதில் தமிழகத்தின் வரலாறு, தகராறுகளைப் படைக்கும் பிரபலங்கள் என்ன பண்ணிட்டு இருக்காங்க? ஜாலியான ஒரு ரவுண்டு அடிக்கலாம்... வாங்க! 

லைக் பண்ணுங்க்ஜி லைஃப் நல்லா இருக்கும் !

'என்னப்பா லுக்கு... நான் இங்க சீனியர் தெரியும்ல?’னு ஆளுக்கு முந்தி சவுண்டுவிடுறார் நடிகர் சித்தார்த். ஆறு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே ட்விட்டர் ரேஷன் கார்டு வெச்சிருக்காராம். ஐந்து லட்சம் ஃபாலோயர்ஸ் வந்தப்ப சந்தோஷத்துல திக்குமுக்காடி நண்பர்களுக்கு ஹோட்டல்ல பார்ட்டி கொடுத்துக் கொண்டாடியவர், 'ஜிகர்தண்டா’ படம் வெளிவர முடியாம திக்குமுக்காடினப்ப ட்விட்டர்லதான் புலம்பினார்.

'எப்ப வந்தேங்கிறது முக்கியம் இல்லை... புல்லட் எப்படி இறங்குச்சுங்கிறதுதான் முக்கியம்’னு படத்துல மட்டும் இல்லை... ட்விட்டர்லயும் பன்ச் அடிக்கிறார் விஜய். மத்தவங்களைப்போல இளைய தளபதி அடிக்கடி போஸ்ட், போட்டோ போடுறது இல்லை. ஆனா, மூணு மாசத்துக்கு ஒரு தடவை லைவ் சாட்டுக்கு வருவார். அப்போ ரசிகர்கள் கேட்கிற தாறுமாறு கேள்விகளுக்கு, சமாளிஃபிக்கேஷனா பதில் சொல்லிட்டு, திடுக்குனு காணாமப்போயிடுவார்.

இவர் இப்படின்னா, பல்லு துலக்கிறதுல இருந்து போர்வையைப் போத்திக்கிட்டு தூங்குறது வரை அப்டேட்டிடுவாரு நம்ம 'கொக்கி குமாரு’ தனுஷ். இதுல ஒருநாள் அண்ணன் செல்வராகவன் தன் கல்லூரிப் படங்களை ஷேர் பண்ணி, 'மலரும் நினைவுகள்’னு உருக... அதுக்கு தம்பி டங்காமாரி, 'அடேய் அண்ணா... எனக்கு காலேஜ்னா எப்படி இருக்கும்னே தெரியாம பண்ணிட்டியே!’னு செல்லமா எகிற, அண்ணனும் தம்பியும் பாசமழைப் பொழிய... அது 'பாசவெறி’ வைரல்.

லைக் பண்ணுங்க்ஜி லைஃப் நல்லா இருக்கும் !

'கொலவெறி ஹிட்’டுக்கு அமிதாப்ஜியுடன் டின்னர், 'ஷமிதாப்’ல அமிதாப்ஜிகூட ஆக்டிங்’னு தனுஷ் தன் மொத்த வாழ்க்கை வரலாறையும்  ட்விட்டர் கல்வெட்டுல பதிவுபண்ணிட்டே இருக்காப்ல!

ஒல்லிகில்லி தம்பி அனிருத், இசையமைக்க கீபோர்டு பட்டன் அமுக்கிறதைவிட, ட்விட் அடிக்கத்தான் நிறைய பட்டன் அமுக்குவாரா இருக்கும். ஊர் உலகத்தையே 'கொஞ்சம் நடிங்க பாஸ்’னு டப்பிங் கொடுக்கவைச்ச டப்ஸ்மாஷ் கலாசாரத்தை, தமிழ்நாட்டுக்கு அறிமுகப்படுத்தினது நம்ம 'கொலவெறி’ பிரதர்தான். தனுஷ§ம் அனிருத்தும் சேர்ந்து என்ன பண்ணாங்க தெரியுமா? 'நான், ட்விட்டர்ல இல்லைங்க; சாலிகிராமத்துலதான் இருக்கேன்’னு ஜோக் அடிச்சுட்டு இருந்த சிவகார்த்திகேயனையும் நெட்ல கோத்துவிட்டாங்க. ஆனா, பார்ட்டி இன்னும் பேட்டைக்குள்ள ரௌடியா ஃபார்ம் ஆகலை. சமூலநல மெசேஜ்களை மட்டும் அப்பப்போ தட்டிவிடுகிறார்.

லைக் பண்ணுங்க்ஜி லைஃப் நல்லா இருக்கும் !

ஆஃப்லைன்ல சாம்பாரும் பீட்ரூட்டுமா இருந்த சிம்பு-தனுஷ், ஆன்லைன்ல பிரியாணி-லெக் பீஸ் கூட்டணி! சிம்பு கழுத்தைக் கட்டிக்கிட்டு தனுஷ் 'முஸ்தஃபா... முஸ்தஃபா...’ பாட்டு பாடுற படங்கள் வெளியானப்ப, யாரும் முதல்ல நம்பலை. ஆனா, அப்பாலிக்கா ரெண்டு பேரும் வரிசையா பார்ட்டி போட்டோக்களைப் போட, நடுவுல நயன்தாராவும் 'தம்ஸ்-அப்’ காட்ட... 'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பு இல்லை’ மனநிலைக்கு மாறியது தமிழகம்.

சிக்குறப்ப சிக்ஸர் சாத்துற கிறிஸ் கெயில் மாதிரி, வம்பு ட்விட்டுக்குக் காத்திருந்து அள்ளு கிளப்புவார் சிம்பு. ' 'என்னை அறிந்தால்’ படம் புடிக்காதவன் மென்டல்’, 'சூப்பர் ஸ்டார் புடிக்காதவன் கிராக்’னு மனசுல தோணுவதை எல்லாம் ட்விட் ஆக்கிடுவார் இந்த அப்பாவி மனசுக்காரர். அதே சமயம், ' 'வாலு’ படம் எப்ப சார் வரும்?’னு தினம் 40 பேர் கேட்கிறதை நினைச்சு சந்தோஷப்படுறதா, துக்கப்படுறதானு தெரியாம குழம்பிட்டு இருக்கார் சிம்பு.

ஊர் உலகத்துக்கே இனிமா கொடுப்பாங்க நெட்டிசன்ஸ். ஆனா, அவங்களுக்கே கிலி கொடுப்பார் ஒருத்தர். 'ஸ்கிரீன்லதான் அவங்க எல்லாம் ஹீரோ. இங்க நான்தான் ஹீரோ, ஜீரோ எல்லாமே! ஏய்... அதாரு, உதாரு’னு  சவுண்டு கொடுக்கிற பிரேம்ஜி அமரன்தான் அவர். தல ஆன்லைனுக்கு வந்தா 13 சண்டை, 27 தகராறு, 39 ரத்தக் காவு என முடியும்.  அஜித் ரசிகர்களை ஆதரிச்சு, விஜய் ரசிகர்களைக் கலாய்க்கிறது இவருக்கு டைம்பாஸ். அதுக்காக பிலுபிலுனு பிடிக்கிற ஃபேன் குரூப்ஸைக் கன்னாபின்னானு ரொம்பக் கெட்டக் கெட்ட வார்த்தையில திட்டிவிட்ருவார். ஆனா, மறுநாள் அந்த டுவிட் தடயங்களை அழிச்சுட்டு, 'என்னப்பா... நல்லா இருக்கீங்களா? இந்த நாள் மட்டும் அல்ல... எல்லா நாளுமே இனிய நாள் ஆகட்டும்’னு 'அந்நியன்’ வாழ்க்கை வாழ்றார்.

'பேரைக் கேட்டாலே சும்மா அதிருதில்ல..!’னு ட்விட்டரே 'வெரிஃபை’ பண்ணி வரவேற்றது நம்ம ரஜினியைத்தான். ஆனா, 'கோச்சடையான்’ புரமோஷனுக்கு வந்தவர், அப்புறம் மோடிஜிக்கு ஒரு வாழ்த்து போஸ்ட் பண்ணதோடு ஆளைக் காணலை. இமயமலையை மறந்ததுபோலவே, இணையவலையையும் மறந்துட்டார். ஆனா, மறுபக்கம் ஃபேஸ்புக் பக்கம், கேவாய்மொழி சேனல்னு அப்பப்போ உலகத்துக்கு, தன் செய்திகளைச் சொல்லிட்டே இருக்கார் கமல்.

அதிர்ச்சிக் கருத்துக்கள் சொன்னாதான் ஹீரோக்கள் பக்கம் கவனம் திரும்பும். ஆனா, அழகழகான போட்டோக்களை போட்டே அபார லைக்ஸ் குவிக்கிறாங்க ஹீரோயின்ஸ். சோஷியல் நெட்வொர்க் டார்லிங்னா... த்ரிஷாதான். செல்லக்குட்டி கேட்பரியுடன் செல்ஃபி,  இன்ஸ்டாகிராமில் பார்ட்டி வீடியோ என ஒவ்வொரு நொடியையும் அப்டேட் செய்வாங்க இந்த பார்ட்டி பியூட்டி. அழகியின் பிறந்த நாளுக்கு அத்தனை 'வுட்’ பிரபலங்களும் வாழ்த்துக்களைக் குவிப்பாங்க. காதல், கல்யாணம், பிரேக்-அப் தகவல்களை ட்விட்டர்லயே சூசகமா சொல்லிருவாங்க நம்ம ஜெஸ்ஸி. இப்பக்கூட,  'நான் ஜாலியா சிங்கிளா இருக்கேன்’னு 'ஹேப்பி அண்ணாச்சி’ ரியாக்ஷன் கொடுத்திருக்காங்க த்ரிஷ்.

ரசிகர்கள் எழுதுறதுல தனக்குப் பிடிச்சதை ரீ-டுவிட் செய்றதுல செல்ஃபி புள்ள சமந்தா, ஒரு செல்லப்புள்ள! ஆண்ட்ரியா, ஹன்சிகா, ஏமி ஜாக்சனுக்கு எல்லாம் ஃபேஸ்புக்னா... அது ஒரு போட்டோ ஆல்பம்... அம்புட்டுதேன்.

இந்தப் பழக்கவழக்கமான ஹீரோயின் களிடையே, அப்பா மாதிரியே வித்தியாச ஸ்டன்ட் அடிக்கிறது ஸ்ருதி மட்டும்தான். 'ஹேய்... ஏரோப்ளேன்ல ஜன்னல் ஸீட்’னு குதூகலிக்கிறதுல இருந்து, 'வீட்ல திருடன் புகுந்துட்டான்’னு கிடுகிடுக்கிறது வரை உலகத்துக்குத் தகவல் சொல்லிட்டே இருப்பாங்க.  

லைக் பண்ணுங்க்ஜி லைஃப் நல்லா இருக்கும் !

சினிமா பிரபலங்கள் கலர்ஃபுல் மசாலா சேர்த்தா, காரசாரக் கரைச்சல் கொடுக்கிறாங்க நம்ம அரசியல்வாதிகள். கருணாநிதி முதல் ஆளா ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கம் எட்டிப் பார்த்தப்ப, 'தமிழ்த் தாத்தா... இது எங்க ஏரியா’னு கொக்கரிச்சாங்க நெட்டிசன்ஸ். ஆனா, 'தகத்தாயத் தமிழர்’ ஆண்ட்ராயிடைவிட அதிவேகமா அப்டேட் ஆனார். ஜெயலலிதா அரசாங்கத்தை ஒரு பக்கம் திட்டிக்கிட்டே, வட இந்தியப் பெண்கள் தனக்கு ராக்கி கட்டும் போட்டோ போட்டு ரக்‌ஷாபந்தன் வாழ்த்து போஸ்ட் போட்டுட்டு, இந்தப் பக்கம் 'சச்சின் புத்தகம் படித்தேன்... படி தேன்’னு டிரெண்டிங்ல பிக்கப் ஆகிட்டார். 'ஃபேஸ்புக் கண்டுபிடித்த தம்பி மார்க் ஸுக்கர்பெர்க்குக்கு வாழ்த்துக்கள்’னு தலைவர் ஃபேஸ்புக்லயே போஸ்ட் போட்டப்ப, 'ஆஹா’னு அசந்து நின்னது மெய்நிகர் தமிழ் உலகம்.

ஓ.பி.எஸ்-ஸுக்குக் குட்டு, பிரிட்டன் பிரதமருக்கு ஷொட்டு எனப் பரபரப்பவர், நாட்டுல எந்த நல்லது கெட்டதும் நடக்காதப்ப, 'அந்த நாள் ஞாபகம்... நெஞ்சிலே வந்ததே...’னு அண்ணா, எம்.ஜி.ஆர்., சிவாஜியுடனான  ஆல்பங்களை அப்லோடி ஆதரவுகளை அள்ளுவார். ஐ.பி.எல்-ல சி.எஸ்.கே ஜெயிக்கிறப்ப, தோனியுடன் கையைப் பிடிச்சுட்டு இருக்கும் போட்டோ போட்டு 'நார்த் இந்தியா’வையே பேஸ்தடிக்க வைப்பார் பாருங்க... அக்மார்க் கலைஞர்தனம்!

அரசியலோ... ஆன்லைனோ... அப்பாவுக்கு அடுத்த இடம்தானே தளபதிக்கு! அன்னன்னைக்கு டிரெண்டுக்கு ஏற்ப கருத்தோ, படமோ போட்டு அப்ளாஸ் அள்ளுறது மு.க.ஸ்டாலின் பாலிசி. தொழிலாளர் தினத்துக்கு  சிவப்புச் சட்டை டி.பி., சென்னையில் ஐ.பி.எல் போட்டியில் மஞ்சள் ஜெர்ஸி படம் அப்லோடு என 'டாபிக்கல் டச்’ கொடுப்பதில் தளபதி வழி... தனி வழி. ஆனா, தளபதி சார்பா 'யாரோ சிலர்’ அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்தியதில் தி.மு.க-வே திக்குமுக்காடிருச்சு.

'டாட்... அப்பாவும் புள்ளையுமா ஏதோ பண்றாங்க’ என அப்பாவுக்குத் தகவல் சொல்லிட்டு, 'தொபுகடீர்’னு சமூக வலைதளக் குளத்தில் குதிச்சவர் பா.ம.க அன்புமணி. ஆனா, அவர் வர்றதுக்கு முன்னாடியே ட்விட்டர்ல ஏகப்பட்ட 'மஞ்சள் டி.பி’-க்கள் ஆக்ரோஷ ஆக்டிவ். அவங்க கட்சித் தலைவனை யாராச்சும் சீண்டினால், சம்பந்தப்பட்டவங்க டைம்லனுக்குப் போய் மரத்தை வெட்டிப் போட்டு அராஜகம் பண்ணுவாங்க. இதுபோக வட்டம், மாவட்டம், ஒன்றியம்னு ஒவ்வொரு பகுதி செயலாளர்களும் முண்டாசுக் கட்டி முஷ்டி முறுக்கிட்டு இருப்பாங்க. ஆனா, இவங்க எல்லாம் படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்டரா இருந்தவர் சுப்பிரமணியன் சுவாமி. 'நான் இப்போ நியூஸ் எக்ஸ் சேனல் லைவ்ல பேசிட்டு இருக்கேன்’னு லைவ் நிகழ்ச்சியின்போதே லைவ் டுவீட்ஸ் போடுற ஜெகஜ்ஜால கில்லாடி. 'ஜெயலலிதா வழக்குல 11-ம் தேதி தீர்ப்பு’ என அவருடைய ஃபாலோயர்ஸுக்குத்தான் முதல்ல ஸ்கூப் கிடைக்கும்.

சினிமா பாதி... அரசியல் மீதி கலந்து செஞ்ச கலவை குஷ்பு.  ஹன்சிகாவுடன் ஒரு செல்ஃபி போஸ்ட் பண்ண அடுத்த நாளே, அன்னை சோனியாவோடு இருக்கிற ஒரு போட்டோ அப்லோடு ஆகும். அ.தி.மு.க அமைச்சர்களைப் பற்றிய ஊழல் புகாரின் எக்ஸெல் ஷீட்டை ஆளுநர்கிட்ட கொடுத்துட்டு ஜப்பானுக்குப் பறந்தவங்க, 'ஜப்பான்ல இந்திய சிம்கார்டு சிக்னல் வேஸ்ட்’னு செய்தி சொல்வாங்க!

இதுக்கு நடுவுல சமூக வலைதளங்கள்ல சரமாரி கலவரம் கிளப்புறது ஃபேக் ஐ.டி-க்கள். கமல் பெயரில் குபீரென தோன்றியது ஒரு அக்கவுன்ட். பாலிவுட் பிரபலம் சேகர் கபூர் அதில், 'ஹாய் கமல்’ என ஸ்டேட்டஸிட, 'உண்மையான கமல்தானோ’ என பற்றியது பரபரப்பு. ஆனால், 'அது போங்கு’ என ஸ்ருதி சொல்லிய பிறகே, 'அது கமல் இல்லை. ஆனா, இருந்திருந்தா நல்லா இருக்கும்’ என டுவீட் அடித்தார்கள்.

பிரபலங்கள் சுடச்சுட ஏதேனும் சர்ச்சைக்கு திரி கிள்ளினால், உடனே அதற்கும் 'ஃபன் கிளப்’ தொடங்கிவிடுவார்கள். 'லிங்கா’ வெளியான சமயம், கே.எஸ்.ரவிகுமார் 'க்ளைமாக்ஸ் பிடிக்கலைன்னா எந்திரிச்சுப் போங்க’ எனக் கொந்தளிக்க, அதை 'மீம்ஸில்’ வறுத்தது போதாதென, அவர் பெயரில் போலி கணக்கு தொடங்கியும் களேபரப்படுத்தினார்கள்.

ஓரஞ்சாரமா போறவங்களையும் இழுத்துப் போட்டு காரஞ்சாரமா காயப்படுத்தி அனுப்பினாலும், அந்த மெய்நிகர் உலகத்தை தவிர்க்க முடியாம தத்தளிக்கிறாங்க பிரபலங்களும் சாமானியர்களும்!

சீனியர் சிங்கங்கள் என்ன பண்றாங்க?

ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் இளைய திறமைசாலிகளை வாழ்த்திக் கொண்டிருந்தார். ஆனால், 'ஷமிதாப்’ படத்தை ஒரு  விமர்சகர் கண்டபடி கலாய்க்க, 'ஃபீலிங் ஹார்ட். ட்விட்டரே வேணாம்’ என சிலநாள் விட்டு விடுதலையானார். பின்னர் மனம் மாறி மீண்டும் உலகத்துடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார். இயக்குநர் முருகதாஸ் தன் படங்களுக்கான டைட்டில் முதல் உதவி இயக்குநர்கள் வரை சமூக வலைதளங்களில் சிக்கினால்... ஒரே லபக்தான். தன்னைப் பத்தி எதுவும் பேசிக்காத ஷங்கர், 'ஐ’ பட நடிப்புக்காக விக்ரம் பட்ட கஷ்டங்களை உடனுக்குடன் பதிவு செய்தார். சோசியல் மீடியாவில் செம ஜாலியா ஜமாய்க்கிறது இசையமைப்பாளர்களும் பாடகர்களும்தான். 'என்னை அறிந்தால்’ படத்தின் கடைசிக்கட்ட டென்ஷன் தருணங்களின்போது, ஸ்டூடியோவிலேயே  கௌதம் மேனன் சுருண்டு படுத்துத் தூங்கும் படத்தைப் பதிந்தார் ஹாரிஸ். ஸ்டூடியோவில் ஸ்ரேயா கோஷல் பாடுவதை போஸ்ட் பண்ணுவதற்காகவே, அடிக்கடி அவரை தன் இசையில் பாட வைப்பார் போல இமான்.  ஏ.ஆர்.ரஹ்மான் ட்விட்டர் பக்கம் இங்கிலீஷ் சினிமா கணக்கா புரிந்தும் புரியாமலும் இன்டர்நேஷனலா இருக்கும். இளையராஜா பேர்லயும் அக்கவுன்ட் இருக்கு. ஆனா, அதை அவர் பையன் யுவன்ஷங்கரே ஃபாலோ பண்ணாததால, அது போலினு காலி பண்ணிட்டாங்க! 

ஸ்போர்ட்ஸ் கோட்டா!

விளையாட்டு உலக பிரபலங்கள் என்ன பண்றாங்க?

ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஷ்வின் ட்விட்டரில் செம ஆக்டிவ். அதுவும் மனைவி ப்ரீத்தியுடன்தான் அவ்வளவு பாசப் பரிமாற்றமும். வீட்ல பேசிக்கவேண்டியதை எல்லாம், ட்விட்டர்லயே பேசிக்குவாங்க. ஆனா, அதுல பாருங்க.. அஷ்வினின் டுவீட்ஸ் மொத்தமே 1,180-தான். ஆனா, அவர் மனைவியோ 17,070 டுவீட்ஸ்!

ஸ்குவாஷ் செல்லம் தீபிகா பலிக்கல், ட்விட்டர் கேர்ள். 'ட்விட்டரா... எங்கே இருக்கு அந்த ஊர்?’னு கேட்ட தன் பார்ட்னர் ஜோஷ்னாவை, இங்கே இழுத்துட்டு வந்துட்டாங்க. இப்போ ரெண்டு பேரும் அதுல செம ஸ்கோர்! 

டொன்ட்டடொயிங்!

டி.வி-யில் மட்டும் இல்லை... ட்விட்டரிலும் அரட்டைக் கேடிதான் டி.டி. பிரபலங்களுடனான செல்ஃபி முதல் 'நல்ல மனுஷன்’, 'மேடமுக்கு என்னா தன்னம்பிக்கை தெரியுமா?’ என்ற ரீதியில் பாராட்டுப் பத்திரங்கள் வாசிப்பார். சன் மியூசிக் அஞ்சனா தன் ஃபாலோயர்கள் விரும்பும் பாடல்களை சேனலில் ஒளிபரப்பும் அளவுக்கு சமூக வலைதள அடிக்ட்.

ரேடியோவில் கலாய் கலாய் என வறுக்கும் ஆர்.ஜே பாலாஜி, சமூக வலைதளத்தில் எடுத்திருப்பதோ சமூக ஆர்வலர் அவதாரம்! 'அஜித், விஜய் ரசிகர்கள் ஏன் சண்டை போடுறீங்க? சமாதானம்... சமாதானம்...’னு வெள்ளைக் கொடி காட்டுறதுல இருந்து, ஏழைகளுக்கு பிரியாணி பார்சல் கொடுக்கிற வரை.. 'குட் பாய்’ இமேஜ் வாங்கியிருக்கார்!