Published:Updated:

கொசுவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 6

கொசுவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 6
கொசுவுக்கு எதிரான வான்வழித் தாக்குதல்! - டெங்குவை வென்ற கியூபாவின் கதை- அத்தியாயம் 6

ஆண்டு முழுவதும் 20 முதல் 34 டிகிரிவரை வெப்பநிலை நிலவக்கூடிய கியூபாவானது, டெங்கு நோய் பரவுவதற்கான வெப்பமண்டல தட்பவெப்பத்தைக் கொண்டது. கியூபாவில் 1828-ம் ஆண்டில் முதலில் நான்கு டெங்கு பாதிப்புகள் பதிவாகின.

டெங்குக் காய்ச்சல் கியூபாவில் தொடங்கியபோது அதற்கு இந்தப் பெயர் இல்லை. கேடட், சிவப்புக் காய்ச்சல், மஞ்சள் காய்ச்சல் என பல பெயர்கள் சூட்டப்பட்டன. டெங்குவின் பாதிப்பால் கழுத்து இறுக்கத்துடன் புடைத்தபடி நிமிர்ந்து நடக்கவேண்டிய நிலைக்கு நோயாளி தள்ளப்படுவார். இயல்பாக இப்படியாக கழுத்து புடைக்க நடக்கும் மேட்டுக்குடியினரை டேண்டி எனப்பட்டதால், கியூபாவில் டெங்கு பாதிப்பு உண்டானபோது, ஸ்பானிய மொழியில் டெங்கு என்ற பெயர் வந்துள்ளது. கிழக்கு ஆப்பிரிக்காவின் ஸ்வாகிலி மொழியில் உள்ள ‘கி டிங்க பெபோ’ எனும் சொல் மூலத்திலிருந்து ஸ்பானியத்துக்கு வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 1869-ல் லண்டன் ராயல் மருத்துவர் கல்லூரியானது டெங்குவின் பெயரை அங்கீகரித்தது. 

1971 டெங்கு கொள்ளை நோய் 

கியூபாவில் புரட்சிகர அரசாங்கம் அதிகாரத்துக்கு வந்தபின்னர் 1977-ல் முதல்முதலாக கொள்ளை நோயாக டெங்கு பரவியது. சாண்டியாகோ டி கூபா நகரில் முதல் டெங்குக் காய்ச்சல் பாதிப்பு பதிவாகின. ’டென் - 1’ வைரஸ்தான் அப்போதைய டெங்கு தாக்கத்துக்குக் காரணம் எனக் கண்டறியப்பட்டது. 

டெங்குவைப் பரப்பும் கொசுக்களை அழிக்க விமானம் மூலம் கடலோரப் பகுதிகளில் மருந்தடிக்கப்பட்டது. நீர்நிலைகளில் பட்டவுடன் சிதறும்படியான மருந்து ஏவுகணைகள் விமானம் மூலம் செலுத்தப்பட்டன. 1977 செப்டம்பரில் 241 முறைகளும், அக்டோபரில் 14 முறைகளும், நவம்பரில் 146 முறைகளும் 1978 ஜனவரியில் 136 முறைகளும் என விமானம் மூலம் மருந்தடிக்கப்பட்டது. 

வீடுகளிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் மருந்து தெளிப்பதும் கொசுக்களை அழிக்கும் பிற நடவடிக்கைகளும் முடுக்கிவிடப்பட்டன. 12, 13, 323 கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்கள் தேடி அழிக்கப்பட்டன. 

கட்டடக் கூரைகள், மழைநீர் வடிகால்கள், கொசுக்கள் தங்கி, இனப்பெருக்கம் செய்யக்கூடிய நீரோடிகளில் பூச்சிக்கொல்லி மருந்தடித்து ஆயிரக்கணக்கான தூய்மைப்படுத்தும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. 

1981 டெங்கு கொள்ளை நோய்

மூன்றாண்டுகள் இடைவெளியில் கியூபாவில் அடுத்த டெங்குக் கொள்ளை நோய் ஆகஸ்ட் 26-ம் நாள் தொடங்கியது. அந்தக் கொள்ளையில் அப்போதைய ஓரியண்ட் சர் மாகாணத்தில் (இப்போதைய கிரான்மா, சாந்தியாகோ டி கூபா, குவாண்டனாமோ மாகாணங்கள்) மொத்தம் 23, 887 டெங்கு பாதிப்புகள் பதிவாகின. அதாவது ஒரு லட்சத்துக்கு 2618.9 பேருக்கு பாதிப்பு. இதில் ‘டென் - 2’ வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் ஆசியாவுக்கு வெளியில் முதலாக இந்தக் கொள்ளை பாதிப்பு ஏற்பட்டிருந்தது. 

அப்போது வைரசைப் பரப்பும் கொசுக்களை ஒழிக்க தீவிரமாகவும் அதிகமான ஆட்களைக் கொண்டும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. டிராக்டர்கள், இழுவை வண்டிகள், சிறிய மற்றும் முதுகில் சுமந்து செல்லக்கூடிய மருந்து தெளிப்பான்கள் என ஏராளமான கருவிகள் இதில் பயன்படுத்தப்பட்டன. 

ஒரு லட்சத்துக்கு 42 ஆயிரத்து 424 குடியிருப்புப் பகுதிகள் பசூக்கா எனும் கருவிகளைக் கொண்டும் 74,436 ஆப்பிள்கள் மோட்டார் சைக்கிள்களைக் கொண்டும், 33,493 ஆப்பிள்கள் லெகோ எனும் கருவிகளைக் கொண்டும், 3,469 ஆப்பிள்கள் டிஃபா கருவிகளைக் கொண்டும் மருந்தடிக்கப்பட்டன. 16 லட்சத்துக்கு 73 ஆயிரம் மீட்டர் நீளம் கால்வாய்ப் பணிகள் செய்யப்பட்டன. நாட்டின் உள்பகுதிகளிலும் அதே ஆண்டில் இரண்டு முறைகள் வான்வழி மருந்து தெளிப்பும் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த நடவடிக்கைகளையும் மீறி, 1981 டெங்குக் கொள்ளையால் 3 லட்சத்து 44 ஆயிரத்து 203 பேர் பாதிக்கப்பட்டனர். 158 பேர் உயிரிழந்தனர். 

ஏற்கெனவே நன்றாகச் செயல்பட்டுவரும் மருத்துவக் கட்டமைப்புடன் டெங்கு ஒழிப்புப் பணியில் அரசுத் துறையினருடன் பொதுமக்களின் பங்கேற்பும் இணைந்ததால், அதிக பாதிப்பு நிகழாமல் கட்டுப்படுத்த முடிந்தது. சிறிய ஊரகப் பகுதி முதல் மாகாணம், தேசிய மட்டம்வரை அரசுத் துறையினரின் செயல்பாடுகளைக் கண்காணிக்க, மக்கள் பிரதிநிதிகள் மாதத்துக்கு ஒரு முறை கூடி, பணிகளைப் பற்றி சம்பந்தப்பட்டவர்களை வைத்தே ஆய்வுசெய்தனர். பணிகளின் சாதகம், பாதகம், வெற்றி, முன்னேற்றம், பின்னடைவு போன்ற நிலைகள் அலசி ஆராயப்பட்டு, அடுத்த கட்டத்துக்கான பொதுமுடிவும் உருவாக்கப்பட்டது. 

கியூபா பெண்கள் கூட்டமைப்பு, புரட்சியைத் தக்கவைப்பதற்கான குழுக்கள் ஆகியவை இதில் முக்கியப் பங்கு வகித்தன. மாதம்தோறும் அந்தந்தப் பகுதிகளின்  பொதுநிர்வாகம், ஆட்சி செயல்பாடு, அடிப்படை வசதிக் குறைபாடுகள், நிறைவேற்றவேண்டிய தேவைகள் ஆகியவைகுறித்து இவர்கள் ஆலோசித்து முடிவுசெய்தனர். கொசு ஒழிப்பிலும் இந்த முறை பெரிதாகக் கைகொடுத்தது. 

அமெரிக்காவின் சதி!

(அடுத்து வரும்..)