Published:Updated:

தெலுங்கானா: ஆந்திராவில் 10 மாவட்டங்களில் முழு அடைப்பு!

நகரி:  தெலுங்கானா பேரணியில் போலீசாரின் தாக்குதலை கண்டித்து ஆந்திராவில் 10  மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க கோரி ஹைதராபாத்தில் உசேன் சாகர் ஏரி அருகே  உள்ள நெக்லஸ் சாலையில் பேரணி நடத்த தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு   அழைப்பு விடுத்து இருந்தது.

முதலில் அனுமதி மறுத்த ஆந்திர அரசு பின்னர் காலை 3 மணி முதல் 7 மணிவரை  பேரணி நடத்த அனுமதி வழங்கியது.ஆனால் காலையிலேயே பேரணிக்கு முயன்ற  ஹைதராபாத் உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் தடுத்தனர்.  இதனால் மாணவர்களுக்கும்,போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

சரமாரியாக கற்கள் வீசப்பட்டது போலீசார் பலர் காயம் அடைந்தனர்.இதனால் போலீசார்  தடியடி நடத்தியும், துப்பாக்கிச் சூடு மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும்  மாணவர்களை விரட்டினர். இதேபோல் நேற்று மாலையில் நடந்த தெலுங்கானா  பேரணியிலும் வன்முறை வெடித்தது.

##~~##
இந்நிலையில், போலீசாரின் தாக்குதலை கண்டித்து தெலுங்கானா பகுதியில் உள்ள 10  மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடந்தது. ஐதராபாத் ரங்கா ரெட்டி  மாவட்டம், மெடக், வாரங்கல், நல்கொண்டா உள்ளிட்ட 10 மாவட்டங்களில் பஸ்கள்  ஓடவில்லை. மற்றும் கார், ஆட்டோக்களும் ஓடவில்லை.கல்வி நிறுவனங்களும்  மூடப்பட்டன. இன்று நடை பெறுவதாக இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.
வன்முறை காரணமாக சில ரயில்களும் நிறுத்தப்பட்டன.இதற்கிடையே தனி  தெலுங்கானாவுக்காக அப்பகுதி காங்கிரஸ் அமைச்சர்கள்,எம்.பி., எம்.எல்.ஏக்கள்  தங்கள் பதவியை ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.