Published:Updated:

‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 7

‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 7
‘அமெரிக்காவின் உயிரியல் ஆயுதம்’ - டெங்குவை வென்ற கியூபாவின் கதை! அத்தியாயம் - 7

கியூபாவின் 1981 டெங்கு கொள்ளைக்குப் பலியான 158 பேரில், 101 பேர் குழந்தைகள் என்பது அந்த நாட்டையே உலுக்கி எடுத்துவிட்டது. பொதுசுகாதாரத் துறையின் வியத்தகு செயற்பாடுகளைத் தாண்டி இயற்கையின் பாதிப்பா அல்லது கியூபாவின் எதிரித் தரப்பிலிருந்து உருவாக்கப்பட்ட செயற்கை நோயா என கியூப அரசு, ஆட்சிசெய்யும் பொதுவுடைமைக் கட்சி, மருத்துவர் வல்லுநர்கள், உயிரிநுட்பவியலாளர்கள் என பல தரப்பிலும் கடுமையாக எடுத்துக்கொண்டனர். 

அந்த சமயத்தில் நடந்த அரசு விழாவில் பேசிய கியூபாவின் மறைந்த தலைவர் பிடல் காஸ்ட்ரோவின் பேச்சு, இன்றளவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது.

“இந்த ஆண்டு கியூபாவில் ரத்தக்கசிவு டெங்குக் காய்ச்சலை நம் நாட்டுக்குள் பரப்ப சி.ஐ.ஏ. உளவு அமைப்பு வேலைசெய்திருக்கிறது. புரட்சியின் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடர்ந்து முயற்சிசெய்வதைப் போல, நமது மக்கள், விலங்குகள், சர்க்கரை போன்ற தாவரங்கள் மீது நோய்க்கிருமியை ஏவிவிடுவதையும் உறுதியாகச் சொல்லமுடியும். இந்த முறை டெங்குவை உண்டாக்கிய வைரஸ், நம் நாட்டில் இதற்கு முன் இங்கு இருந்ததே இல்லை” என்பதைக் குறிப்பிட்டார், காஸ்ட்ரோ.

மேலும், “டெங்கு கொள்ளையை அழிக்கப் போராடிக்கொண்டிருக்கும் நமக்கு, முதலில் மாலத்தியான் பூச்சிமருந்தைக் கொள்முதல்செய்ய வேண்டிவந்தது. மெக்சிகோவில் உள்ள லுக்காவா நிறுவனத்திடமிருந்து வாங்குவது நமது திட்டம். அது ஓர் அமெரிக்க - மெக்சிகோ கூட்டு நிறுவனம். கியூபாவில் பயன்படுத்த எனத் தெரிந்துகொண்டு அந்த மருந்தை நமக்கு விற்க அந்த நிறுவனம் மறுத்துவிட்டது. அதையடுத்து, பேயர் நிறுவனம் நமக்குத் தேவையான மருந்துகளை விற்க விருப்பம் தெரிவித்தது. ஒருவழியாக 20 டன் மருந்தை கிளாரிட்டா கப்பல் மூலம் மெக்சிகோவின் டாம்பிகோ துறைமுகத்திலிருந்து அனுப்ப வேண்டும் என உடன்பாடும் செய்துகொண்டோம். ஆனால், பேயர் நிறுவனமானது ஏற்றுமதி செய்யும்போது, அது பற்றிய விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்; ஏனெனில் அந்த நிறுவனம், அமெரிக்காவிலிருந்து தனக்கு மூலப்பொருளாக மாலத்தியான் பூச்சிமருந்தை இறக்குமதி செய்துவருகிறது. லுக்காவா நிறுவனத்தின் ஒப்புதல் இல்லாமல் பேயர் நிறுவனம் நமக்கு பூச்சிமருந்தை ஏற்றுமதிசெய்ய முடியாது. முன்பைப் போலவே பேயரின் பூச்சிமருந்தை கப்பல் மூலம் ஏற்றுமதிசெய்ய பேயருக்கு லுக்காவா நிறுவனம் ஒப்புதல் தரவில்லை. மிக மோசமான கட்டத்துக்குத் தள்ளப்பட்டோம். 

லுக்காவாவின் மறுப்பை அடுத்து, மெக்சிகோ அரசுக்கு நெருக்கமான நபர்களையும் அரசு அதிகாரிகளையும் தொடர்புகொண்டு பேசினோம். நமது தொடர் முயற்சிகளின் விளைவாகவும், பேயர் நிறுவனமானது நமக்கு மருந்தை விற்க விரும்பியதாலும், 30 டன் லுக்காத்தியான் பூச்சிமருந்தை (அதாவது பேயரின் மாலத்தியான்), விமானம் மூலம் கொண்டுவரப்பட்டது. 

ஐரோப்பாவிலிருந்து மாலத்தியானை விமானத்தில் கொண்டுவருவதற்கு மட்டும் டன்னுக்கு 5 ஆயிரம் டாலர் செலவானது. அதாவது அதன் உற்பத்திச்செலவைவிட மூன்றரை மடங்கு தொகையை நாம் செலவழித்துள்ளோம். உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்த பரந்த அமெரிக்க சுகாதார அலுவலகத்தின் மூலம், ஐ.நா விதிகளுக்கு அமைய, அமெரிக்காவிலிருந்து நேரடியாக இந்த மருந்தை இறக்குமதிசெய்ய முயற்சிகள் நடந்தபோதும், வேண்டுகோள் மறுக்கப்பட்டதால், இதுவரை நாம் ஒரு டன் மருந்தைக்கூடப் பெறமுடியவில்லை” என்று காஸ்ட்ரோ கூறினார். 

இது மட்டுமல்ல, “கொசு ஒழிப்புக்கான 90 லெக்கோ மருந்துதெளிப்பான்களைக் கொள்முதல் செய்யக்கூட நம்மால் முடியவில்லை. அமெரிக்காவில் தயார்செய்யப்பட்ட இந்த தெளிப்பான்களை இரு வெவ்வேறு நாடுகளில் முயற்சிகள் செய்தபோது, ஒரே நாளில் அவை மறுத்துவிட்டன என்பது வியப்பளிக்கிறது” என்று கூறிய காஸ்ட்ரோ, ஆதாரமாக, அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடந்த விவாதக் குறிப்புகளையும் அமெரிக்காவில் செய்யப்பட்ட ஆய்வு முடிவுகள், வல்லுநர்களின் கருத்துகளையும் குறிப்பிட்டுக் காட்டினார். 
கியூபாவின் முக்கிய வருவாயான சர்க்கரை உற்பத்தியைப் பாதிக்க, அமெரிக்க அரசு உயிரியல் ஆயுதங்களைத் தயாரிப்பதாகவும் சொன்ன காஸ்ட்ரொ, அதனுடன் சேர்ந்துதான் டெங்குவைப் பரப்பும் கொசுக்களைத் தயாரிக்கும் ரகசிய ஆலைகள் இயங்குகின்றன என்றும் கூறினார். 

“ஏற்கெனவே கியூபாவின் சர்க்கரை உற்பத்தி, கால்நடைகளுக்கு எதிராக உயிரியல் ஆயுதமாக நச்சுக்கிருமிகளை சி.ஐ.ஏ மூலம்  ஏவ காரியங்கள் நடக்கின்றன. சோவியத் ரஷிய ஒன்றியத்தில் வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி, பரப்புவதற்காக ரகசியத் தளங்களை அமெரிக்க அரசு நடத்திவருகிறது. பால்ட்டிமோர் தீவில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 4 ஆயிரம் படையினர் அல்லாத பணியாளர்களும் ஆயிரம் படையினரும் பணியாற்றுகின்றனர். வியட்நாம் போரில் செலவழித்ததைவிட அதிகமாக இதற்கு அமெரிக்க அரசு நிதியை ஒதுக்கியுள்ளது. 

மேரிலாண்ட் தீவில் உள்ள போர்ட் டெட்ரிக் தளம், 1,300 ஏக்கர் பரப்பைக் கொண்டது. 2,500 படையினர் அல்லாத பணியாளர்களும் 500 படையினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தத் தளத்தின் முக்கியப் பணி, பலவகையான உயிரியல் ஆயுதங்களை உருவாக்குவதே! இரண்டாம் உலகப்போர் காலத்தில் இது பல ‘வேலை’களைச் செய்தது. அப்போதிருந்து தொடர்ந்து இதில் வளர்ச்சி அடைந்துவருகிறது. இத்துடன் உயிரியல் ஆயுதங்களைக் கொண்டு ஒரு தற்காப்புப் போரை நடத்துவதற்கான அனைத்து கருவிகளையும் தயாரிப்புகளையும் கட்டுப்படுத்தவும் செய்கிறது. நாலு சுவர்களுக்குள் அனைத்துவகையான வேதியியல், உயிரியல் ஆயுதங்களை உருவாக்கும் விஞ்ஞானிகள் அமெரிக்காவின் ஆறு படைத்தளங்களிலும் உலகம் முழுவதும் 70 பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுசாரா அமைப்புகளில் பணியாற்றுகிறார்கள். இவர்கள், நிறமில்லாத, வாசனை இல்லாத கூருணர்வை உருவாக்கும் வாயுக்கள், ஆண்டிபயாட்டிக்குகளுக்கு எதிரான பாக்டீரியாக்கள் போன்ற உயிர்க்கொல்லிகளை உருவாக்கவும் மேம்படுத்தவும் செய்கிறார்கள். இதை நான் சொல்லவில்லை, சீமெர் ஹெர்ஷ் எனும் அமெரிக்க எழுத்தாளர் ஒரு கட்டுரையில் எழுதியவைதான்!” என, தான் வைத்த குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களாக பலவற்றையும் அடுக்கிய காஸ்ட்ரோ, 

“இவ்வளவை எல்லாம் செய்தவர்கள் இதுவரை கியூபா கேள்விப்பட்டிராத, ஆசியாவில்- இந்தியாவின் லாகூரில் தோன்றியுள்ள புதிய வைரஸை இங்கு பரப்பி, உயிரியல் ஆயுதமாகப் பயன்படுத்துகிறது” என்று அழுத்தமாகச் சொல்லவும் செய்தார். மறுநாளே, இந்தக் குற்றச்சாட்டுகள் எல்லாம் எந்தவித அடிப்படையும் இல்லாதவை என மறுத்தது, அமெரிக்க நாட்டின் அரசுத் துறை. 

இது ஒரு புறம் நடக்க, இன்னொரு பக்கம், டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் கியூப வல்லுநர்கள் நடத்திய ஆய்வுகளில், புதிய முடிவுகள் கிடைத்தன. அவை என்ன? 

(அடுத்து வரும்..)