Published:Updated:

''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி
''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி

''ஜெயலலிதாவின் 75 அப்போலோ நாள்கள்!’’ ஆவணங்களைக் கேட்கிறார் ஆறுமுகசாமி

ஜெயலலிதா மரணத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்களை வெளிக்கொண்டுவர நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், 'ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம்' என்று அறிவித்துள்ளது. 75 நாள்கள் என்னென்ன நடந்தது என்பது தொடர்பாக தகவல் வைத்திருப்போர் விசாரணை ஆணையத்துக்கு அந்தத் தகவலைச் சத்திய பிரமாண  உறுதிமொழிப் பத்திரவடிவில் கொடுக்கலாம்.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மருத்துவமனையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்ட ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பிறகு கடந்த டிசம்பர் 5-ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். மருத்துவனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரைப் பார்க்க அப்போதைய பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் உள்ளிட்ட வி.ஐ.பி-க்கள் யாரையும் அனுமதிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதோடு, மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவரின் எந்தவொரு புகைப்படமும் வெளியாகாததால், அவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக அ.தி.மு.க தொண்டர்களிடையே குமுறல் எழுந்தது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. ஓ.பன்னீர்செல்வமும், ''நீதி விசாரணை வேண்டும்'' எனக் குரல் கொடுத்தார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைந்த பிறகு, ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அதன்படி நீதிபதி ஆறுமுகசாமி, சில தினங்களுக்கு முன்னர் விசாரணை ஆணையத்தின் தலைவராகப் பொறுப்பேற்று விசாரணையைத் தொடங்கினார். இந்நிலையில் 'நீதியரசர் ஆறுமுகசாமி, விசாரணை ஆணையத்தின் அதிகாரம் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அந்த ஆணையத்தின் செயலாளர் நா.பன்னீர்செல்வம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். 

அதில், ''ஜெயலலிதாவின் அகால மரணம் குறித்து விசாரணை செய்வதற்காகத் தமிழக அரசு 25.09.2017 அன்று, ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அ.ஆறுமுகசாமி-யைக் கொண்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் ஒன்றை நியமித்தது. அதன் அதிகாரவரம்பு, '22.09.2016 அன்று காலஞ்சென்ற முதலமைச்சர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான சூழ்நிலைகள் மற்றும் அவர் துரதிஷ்டவசமாக இறந்த நாளான 5.12.2016 வரை அவருக்கு அளிக்கப்பட்ட அடுத்தடுத்த சிகிச்சைகள் குறித்தும் விசாரணை செய்தல்" என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் பொருண்மை குறித்து தனிப்பட்ட முறையில் நேரடியாக அறிந்தவர்களும், நேரடித் தொடர்பு உடையவர்களும், அதுகுறித்து அவர்களுக்குத் தெரிந்த தகவலை சத்தியப் பிரமாண உறுதிமொழிப் பத்திரவடிவத்தில் (அசல் மற்றும் இரு நகல்களுடன்) தகுந்த ஆவணங்கள் இருப்பின், 'மாண்புமிகு நீதியரசர் திரு அ.ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், முதல் தளம், கலாஸ் மகால் புராதன கட்டடம், எழிலகம் அருகில், சேப்பாக்கம், சென்னை 600 005 (Email ID -justicearumughaswamycoi@gmail.com) என்ற முகவரியில் அமைந்துள்ள ஆணையத்திடம் 2017-ம் ஆண்டு நவம்பர் 22-ம் தேதி அன்று அல்லது அதற்கு முன்னதாக, நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம்'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையை நீதிபதி ஆறுமுகசாமி ஏற்கெனவே தொடங்கி விட்டார். பொறுப்பேற்ற பிறகு, ஜெயலலிதா மரணம் தொடர்பாக 15 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸூக்குக் கிடைக்கும் பதில் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணையை அவர் தொடங்கவுள்ளார். மேலும், நேற்று வரை விசாரணை ஆணையத்திற்கு, பல்வேறு தகவல்களுடன் கூடிய 20 பதிவுத்தபால்கள் வந்துள்ளன. இந்நிலையில்தான் இந்த அறிவிக்கையை விசாரணை ஆணையம் வெளியிட்டிருக்கிறது. 

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் தனது பணிகளைத் தொடங்கிவிட்டது. ஆணையத்திடம் அளிக்கப்படும் ஆதாரங்கள், அரசியலில் என்னென்ன பூதாகரங்களைக் கிளப்பப்போகிறதோ...?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு