Published:Updated:

மொழிவாரி மாகாணங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டனவா? தமிழ்நாடு உதயமான தினப் பகிர்வு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மொழிவாரி மாகாணங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டனவா? தமிழ்நாடு உதயமான தினப் பகிர்வு
மொழிவாரி மாகாணங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டனவா? தமிழ்நாடு உதயமான தினப் பகிர்வு

மொழிவாரி மாகாணங்கள் சரியாகப் பிரிக்கப்பட்டனவா? தமிழ்நாடு உதயமான தினப் பகிர்வு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

`தமிழ்நாடு தமிழருக்கே' என்ற பெரியாரின் முழக்கங்கள் ஆவேசமாக மக்கள் மத்தியில் ஒலித்துக்கொண்டிருந்த காலம் அது. மா.பொ.சி-யின் `தமிழரசுக் கழகமும் சங்கரலிங்கனார், நேசமணி போன்ற பல தலைவர்களும் தீவிரமாகப் போராடிவந்தனர். அந்தப் போராட்டங்களின் பலன்தான் இன்றைய தமிழகம். தமிழர்கள் வாழும் நிலப்பரப்பு தனி மாநிலமாக மாறி, இன்றுடன் 61 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதியில் நம் நாடு மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. 

இந்த 61 ஆண்டுகளில் நாம் இழந்தவை, அடைந்தவை குறித்துப்  பார்ப்போம்.

முதன்முதலாகப் பிரிக்கப்பட்ட மாநிலம்: 

சுதந்திரம் அடைவதற்கு முன்பே பல்வேறு தரப்பினரால் `மாகாணங்கள், மொழிவாரியாகப் பிரிக்கப்பட வேண்டும்' என்ற

கோரிக்கை முன்வைக்கப்பட்டது. மொழிவாரி மாகாணமாகப் பிரிக்கப்பட்ட முதல் மாநிலம் `ஒடிசா'தான்.  `ஒடிசா தேசத்தின் தந்தை' என அழைக்கப்படும் மதுசூதன்தாஸ் தலைமையில் ஒடிசா தனி மாநிலமாகப்  பிரிக்கப்பட வேண்டும் எனப் போராட்டம் நடந்தது. அதன் விளைவாக 1912-ம் ஆண்டில் வங்கத்திலிருந்து பீகாரும் ஒடிசாவும் பிரிக்கப்பட்டு `பீகார் - ஒடிசா' மாகாணம் உருவானது. அதன் பிறகு, 1935-ம் ஆண்டில் ஒடிசா தனி மாகாணமாகப் பிரிக்கப்பட்டது. பிறகு தற்போதைய தமிழகம், தெலங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை உள்ளடக்கியிருந்த `மெட்ராஸ் ராஜதானி'யையும் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து முன்வைக்கப்பட்டது. தெலுங்கு பேசும் மக்களுக்கான தனி மாகாணம் அமைக்கக்கோரி ஶ்ரீராமலு என்பவர் காலவரையற்ற உண்ணாவிரதம் மேற்கொண்டு உயிர்விட்டார். 

பெரியார், அண்ணா, ஜீவா, மா.பொ.சி., நேசமணி, சங்கரலிங்கனார் போன்ற தமிழகத் தலைவர்களும் மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கக்கோரி  போராட்டங்கள் நடத்தினர்.  ராஜாஜி, கோல்வாக்கர் போன்றோர் இந்தக் கோரிக்கையை ஏற்கவில்லை. போராட்டங்கள் வீரியமாகவே, 1953-ம் ஆண்டில் நேரு  கோரிக்கையை ஏற்று, அதற்கான குழுவை அமைத்தார். அதன்படி 1956-ம் ஆண்டு நவம்பர் முதல் தேதி 16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களாக நாடு பிரிக்கப்பட்டது. பிறகு புவியியல் கூறுகளைக்கொண்டும் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.  மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டது வளர்ச்சிக்கான, மக்களின் மேம்பாட்டுக்கான போக்காகப் பலரால் கூறப்படுகிறது. வளர்ச்சியான போக்கு அல்ல எனவும் சிலரால் கருத்துத் தெரிவிக்கப்படுகிறது. 

மொழிவாரி மாகாணங்கள் சரியான முறையில் பிரிக்கப்பட்டனவா?  

மொழிவாரி மாகாணங்கள் பிரிக்கப்பட்டதற்கான நோக்கம் நிறைவேறியதா, மாநிலங்கள் பிரிக்கப்பட்டதில், தமிழகத் தலைவர்களின் பங்கு என்ன -  என்பது குறித்து எழுத்தாளர் பா.செயப்பிரகாசத்திடம் பேசினோம்.

``இந்திய மக்கள் சுதந்திரம் பெறுவதற்கு முன்பே அடிப்படை வசதிகள் கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். மொழிவாரியாக மாநிலங்கள் பிரித்த பிறகும் இன்று வரை மக்களுக்கான உரிமைகள் எதுவும் முழுமையாகக் கிடைக்கவில்லை. தலைவர்களும் அந்தந்த மொழி பேசும் மக்கள் அதிகம் உள்ள மாகாணங்களைத் தனியாகப் பிரிக்கச் சொல்லியே போராடினர். மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்த அரசு, அதைச் சரியான முறையில் பிரிக்கவில்லை. 1954-ம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அந்த மூன்று உறுப்பினர் எல்லை நிர்ணயக் குழுவுக்கு, பசல் அலி எனும் பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர் தலைவராகவும், கே.எம்.பணிக்கர் என்கிற கேரளாவைச் சேர்ந்தவரும், எஸ்.என்.குன்ஸ்ரு என்கிற இந்திக்காரரும் மற்ற உறுப்பினர்களாக இருந்தனர். தமிழர் யாரும் உறுப்பினராக நியமிக்கப்படவில்லை. இதில் பாரபட்சம் காட்டப்பட்டது. அந்தக் குழு 10.10.1955-ம் ஆண்டில் அறிக்கை வெளியிட்டது. குறிப்பிட்ட பகுதியில் எந்த மொழியைப் பேசுபவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனரோ அந்த மொழிக்குரிய மாநிலத்தோடு அதை இணைப்பதுதான் சரியான முறை. ஆனால், அப்படிப் பிரிக்கவில்லை. அரசின் செயல்பாடுகள் அனைத்தும் வடக்குப் பிராந்தியங்களை நோக்கியே இருந்தன. பல்வேறு மாநிலத்தில் எல்லைப்பரப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் போராட்டங்கள் நடைபெற்றன" என்றார். 

எல்லைகளைப் பிரிப்பதில் வஞ்சிக்கப்பட்ட தமிழ்நாடு: 

தமிழகத்தின்  எல்லைகளைப் பிரிப்பதில் என்னென்ன பிரச்னைகள் ஏற்பட்டன என்பது குறித்து கேட்டபோது, அதிர்ச்சியளிக்கும் சில தகவல்களைக் கூறினார்.

``ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் நமக்குமான தண்ணீர்ப் பிரச்னைகள் எல்லைப் பிரச்னையால் ஏற்பட்ட ஒன்றுதான். மொழிவாரி மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டபோது தமிழ் மொழி பேசுபவர்கள் அதிகம் வாழும் பகுதியான சித்தூர், திருப்பதி உள்ளிட்ட பகுதிகளை நாம் இழந்தோம். இதனால்தான் இன்றைக்கு ஏற்பட்டுள்ள பாலாறு, பொன்னையாறு, பழவேற்காடு ஏரி பிரச்னைகள் தீர்க்க முடியாமல் இருக்கின்றன. ம.பொ.சி-யின் தீவிரப் போராட்டத்தால் திருத்தணியைப் பெற்றோம். இல்லையெனில், திருத்தணியும் இன்றைக்கு ஆந்திராவிடம்தான் இருந்திருக்கும். கேரளத்திடம் தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, பாலக்காடு போன்ற பகுதிகளை இழந்தோம். கர்நாடகத்திடம் `வெங்காலூர்' என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, கோலார் தங்கவயல் போன்ற பல பகுதிகளையும் நாம் இழந்துள்ளோம். இதனால் தமிழகத்தின் காவிரிநீரைப் பெறுவதில் இன்று வரை இழுபறி நீடிக்கிறது. கேரளத்திடம் இழந்த பகுதியால் முல்லைப் பெரியாறு, நெய்யாறு, ஆழியாறு – பரம்பிக்குளம் போன்ற நீர் ஆதாரங்களை இழந்தோம். கன்னியாகுமரியும்கூட நம்மைவிட்டு பிரிந்திருக்கும். நேசமணியின் போராட்டத்தால் தக்கவைக்கப்பட்டது" என வேதனையுடன் தன் கருத்தைப் பதிவுசெய்தார்.

``புதுச்சேரி அடைந்த அளவுக்கான முன்னேற்றத்தைக்கூட நம்மால் அடையமுடியவில்லை. மத்திய அரசாங்கம் எப்போதும் வடக்கு மாநிலங்கள் குறித்தே கவலைப்பட்டு வருகின்றனவே தவிர, தெற்கு மாநிலங்களை அது பொருட்படுத்தவேயில்லை. இங்கு உள்ள அரசியல்வாதிகளோ, சுயாட்சித் தத்துவம் தெரியாத ஆட்சியை நடத்திவருகிறார்கள்'' என்றார்.

தமிழ்நாடு தனி மாநிலமாக மாறிவிட்டாலும், நமக்கான உரிமைகள் நமக்கு முறையாகக் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை. நம் உரிமைகளைக் கேட்டு வாங்கவேண்டியவர்கள், எப்போதும் குதிரை பேர அரசியலில் தீவிரமாக உள்ளனர். நாம் இன்று சந்திக்கும் அத்தனை உரிமைப் பிரச்னைகளுக்குப் பின்னாலும் நமக்கு இழைக்கப்பட்ட அநீதியும் உள்ளது என்பதுதான் நிதர்சனம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு