Published:Updated:

கெமிஸ்ட்ரி... நோபல்... பெண்கள்... இந்த காம்போவில் இருப்பது நான்கே பேர்தான்!

கெமிஸ்ட்ரி... நோபல்... பெண்கள்... இந்த காம்போவில் இருப்பது நான்கே பேர்தான்!
கெமிஸ்ட்ரி... நோபல்... பெண்கள்... இந்த காம்போவில் இருப்பது நான்கே பேர்தான்!

டிஜிட்டல் இந்தியாவை விடுங்கள். அது வலியவர்கள் மற்றும் பணக்காரர்களால் ஆனது. புதிய இந்தியாவை விடுங்கள். அது ஆயிரம் கோடிகளில் சிலைகள் வைத்து அரசியல் ஆதாயம் தேடும் தலைவர்களால் ஆனது. ஆண்களின் இந்தியாவை விடுங்கள். எதிர் பால் இனத்தினர் மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்று கூட அறிய முற்படாதது. பெண்களின் இந்தியா தெரியுமா? அதிகபட்சமாக ஏதாவது ஒரு டிகிரி. பதின்பருவம் தாண்டிய சில மாதங்களிலேயே திருமணம். அதன் பிறகு சொந்தமாக ஒரு கனவுகூட  காண முடியாத வாழ்க்கை. கணவன் வீட்டில் அனுமதித்தால், மேற்கொண்டு படிக்கலாம், வேலைக்கும் போகலாம். எல்லாருக்கும் அப்படி இல்லை என்றாலும், பலருக்கு இப்படித்தானே வாழ்க்கை அமைகிறது?

இந்தியா அல்லது இந்திய வம்சாவளியைச் சார்ந்த எட்டு பேர் இதுவரை நோபல் பரிசு வாங்கியிருக்கிறார்கள். அவற்றுள், அன்னை தெரசா தவிர மற்ற அனைவருமே ஆண்கள். ஆமாம். இந்தியாவை விட மோசமான நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், நம்மை விடச் சாதித்தவர்கள் தானே நமக்கு ரோல் மாடல்கள்? நாடுகளிலும் அதே கணக்கு தானே?

உலக அரங்கில் 1901ம் ஆண்டிலிருந்து 2017ம் ஆண்டு வரை, 48 பெண்கள் மட்டுமே நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். வேதியியல் களத்தில் இந்த எண்கள் இன்னமும் மோசம். அதிலே இதுவரை நான்கு பெண்கள் மட்டுமே நோபல் பரிசு வென்றிருக்கிறார்கள். இதற்குக் காரணம், அறிவியல் பெண்களுக்கான களம் இல்லை என்ற பிற்போக்கு சிந்தனைதான். ஆனால், சாதித்த பெண்களின் கதைகள் ஒவ்வொன்றும் எழுச்சி ஏற்படுத்துவதாகவும், உத்வேகம் மூட்டுவதாகவும் இருக்கும். மேலும் பலர் சாதனைக்களம் காணச் சிவப்பு கம்பளம் விரிக்கும் தன்னம்பிக்கை காவியங்கள் அவை.

மேரி கியூரி (Marie Curie)

  • 1903ம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு
  • 1911ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

போலாந்தின் தலைநகரான வார்ஸாவில் வாழ்ந்து அந்தக் குடும்பத்தில் பெரும்பாலானோர் ஆசிரியர்கள். கல்வியின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இதனால்தான் ஐந்தாவது குழந்தையாக, கடைக்குட்டியாகப் பிறந்தாலும், மேரி கியூரிக்கு பாரிஸ் சென்று உயர்கல்வி பயிலும் வாய்ப்பு அளிக்கப்பட்டது. அங்கேதான், தன் வருங்கால கணவன் பியரி கியூரி (Pierre Curie) அவர்களைச் சந்தித்தார். இருவருக்கும் அறிவியலில் பேரார்வம். இணைந்தே ஆராய்ச்சிகளில் ஈடுபட்டனர். கதிரியக்கம் குறித்து கண்டறிந்த ஹென்றி பெகுயுரேல் (Henri Becquerel) என்பவரின் ஆராய்ச்சி பிடித்துப் போக, அவர் விட்டுச் சென்ற பணியைத் தொடர்ந்து செய்ய முடிவு செய்தனர். பிட்ச்ப்ளேன்ட் (Pitchblende) என்ற கனிமத் தாதிலிருந்து கதிரியக்கம் உடைய யுரேனியம் மட்டுமே எடுப்பார்கள். கியூரி தம்பதிகள், தங்களின் ஆராய்ச்சியில், அதே தாதில் யுரேனியத்தை விட அதிக கதிரியக்க குணமுடைய பொலோனியம் மற்றும் ரேடியம் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த மைல்கல் சாதனைக்காக மேரி கியூரி, தன் கணவர் பியரி கியூரி மற்றும் இந்த ஆராய்ச்சிக்கு வித்திட்ட ஹென்றி பெகுயுரேல் ஆகியோருடன் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.

1906 ஆம் ஆண்டு கணவர் பியரி கியூரி இறந்துவிட, துவண்டு போகாமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் மேரி கியூரி. 1910ம் ஆண்டு, வெற்றிகரமாக பொலோனியம் மற்றும் ரேடியம் உலோகங்களை பிட்ச்ப்ளேன்ட்டிலிருந்து பிரித்து எடுத்தார். இவரின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்த, 1911ம் ஆண்டு, வேதியியலுக்கான நோபல் பரிசையும் வென்றார். இதன் மூலம், இரண்டு அறிவியல் துறைகளில் நோபல் பரிசு வென்ற முதல் நபர் என்ற பெருமையைப் பெற்றார். நோபல் பரிசை வென்றதோடு மட்டுமல்லாமல், மற்றொரு விதையும் நட்டார். அது பின்னர் விருட்சமாக வளர்ந்து சாதித்தது. அந்தக் கதை, அடுத்த கதை.

ஐரீன் ஜோலியட் கியூரி (Irène Joliot-Curie)

  • 1935ம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

ஃபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஐரீன் வேறு யாருமல்ல. மேரி கியூரி மற்றும் பியரி கியூரி தம்பதிக்குப் பிறந்த குழந்தை. அறிவியல் குடும்பம் என்பதால் சிறு வயதிலேயே ஆராய்ச்சிகளில் ஆர்வம். தன் தாயிடமிருந்து நிறையவே கற்றுக்கொண்டார். முதலாம் உலகப் போரின் போது, தன் தாயுடன் இணைந்து எக்ஸ்ரே மெஷின்களை மருத்துவமனைகளுக்கு, இராணுவ தளங்களுக்குக் கொண்டு செல்லும் பணியைச் செய்தார். யுத்தம் முடிந்தவுடன் பாரிஸ் பல்கலைக்கழகத்தில் தன் படிப்பைத் தொடர்ந்தார்.

படிப்பை முடித்தவுடன், தன் பெற்றோர் நிறுவிய பல்கலைக்கழகத்திலேயே பணியாற்றினார். அங்குதான் தன் வருங்கால கணவரான ஃப்ரெடெரிக் ஜோலியட் (Frédéric Joliot) அவர்களைச் சந்தித்தார். இருவரும் இணைந்து கதிரியக்க தனிமங்கள் குறித்த மேரி கியூரியின் ஆராய்ச்சியைத் தொடர்ந்தனர். 1934ம் ஆண்டு, முதன் முதலாகக் கதிரியக்க தன்மையுடைய கூறுகளைச் செயற்கையாக உருவாக்கிக் காட்டினர். இந்தச் சாதனையை கௌரவப்படுத்தும் விதமாக 1935 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டது. இந்தத் தம்பதிக்கு பிறந்த குழந்தைகளில் ஹெலன் லேஞ்சாவின் ஜோலியட் (Hélène Langevin-Joliot) என்பவர் அணு இயற்பியலாளராகவும், பியர் ஜோலியட் (Pierre Joliot) என்பவர் உயிரியலாளராகவும் கோலோச்சி வருகின்றனர்.

டோரதி க்ரோஃபூட் ஹாட்ஜ்கின் (Dorothy Hodgkin)

  • 1964 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

எகிப்தில் பிறந்த பிரிட்டிஷ் குடிமகளான டோரதியின் ஆய்வாளர் வாழ்க்கை தொடங்க பெரும் காரணமாக அமைந்தது சிறுவயதில் அவருக்குக் கிடைத்த ஒரு வேதியியல் புத்தகம். அது படிகங்களைக் குறித்த ஆராய்ச்சிகளுக்கான புத்தகம். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நல்ல முறையில் கற்றுத்தேர்ந்த போதும், பெண் என்ற காரணத்தால் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. சரியான வேலையும் கிடைக்கவில்லை. இறுதியில் நவீன மூலக்கூறு உயிரியலில் கில்லாடியான J.D. பெர்னல் வாய்ப்பளித்தார். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். படிகங்கள் குறித்த ஆராய்ச்சியில் முழு மூச்சாக இறங்கினார்.

1930 களில் பெரிய மற்றும் சிக்கலான மூலக்கூறுகளின் தன்மைகள் எப்படியிருக்கின்றன என்பது குறித்த ஆராய்ச்சிகள் செய்தார். படிகங்கள் வழியே எக்ஸ்ரே கதிர்கள் செல்லும் போது, அது உருவாக்கும் படங்கள் அந்தப் படிகங்களின் தன்மையை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்ற உண்மையைக் கண்டறிந்தார். இதன் மூலம், 1946 ஆம் ஆண்டு பெனிசிலின் கட்டமைப்பு மற்றும் 1956 ஆம் ஆண்டு மிகவும் சிக்கலான வைட்டமின் B12 கட்டமைப்பு எப்படி இருக்கும் என்று படம் பிடித்துக்காட்டினார். இவரின் இந்த மாயாஜால சாதனைக்காக 1964 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

அடா E. யோனாத் (Ada E. Yonath)

  • 2009 ஆம் ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு

1939 ஆம் ஆண்டு தற்போதைய இஸ்ரேலில் இருக்கும் ஜெருசலேம் நகரில் பிறந்தார் அடா E. யோனாத். அவரது தந்தை ஒரு யூத குரு என்ற போதிலும், அவரின் குடும்பம் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வாழ்ந்து வந்தது. ஜெருசலேமில் இருக்கும் ஹீப்ரு பல்கலைக்கழகத்தில் வேதியியல் கற்றுத் தேர்ந்தார். அதன்பின் வேய்ஸ்மன் இன்ஸ்டிட்யூட் ஆப் சயின்ஸில் முனைவர் பட்டம் பெற்றார். அங்கேயே ஆராய்ச்சியாளராகப் பணியாற்றத் தொடங்கினார். பின்பு பல ஐரோப்பிய மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தன் பணியைத் தொடர்ந்தார்.

நம் உடலில் புரதத்தை உருவாக்கும் ரிபோசோம்கள் வேதியியல் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்துகிறது. 1970களில் தன் சக ஆராய்ச்சியாளர்களுடன் இந்த ரிபோசோம்கள் குறித்த ஆராய்ச்சியைத் தொடங்கினார் அடா. அது கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் தொடர்ந்தது. இறுதியாக எக்ஸ்ரே படிகவியல் பயன்படுத்தி ரிபோசோம்கள் எப்படியிருக்கும் என்று முப்பரிமாண முறையில் உயிர்கொடுத்து விளக்கினார். பின்னாளில், இது ஆன்டிபயாடிக் மருத்துகள் தயாரிக்க பெரிதும் உதவி செய்தது. இதற்காக 2009 ஆம்  ஆண்டிற்கான வேதியியல் நோபல் பரிசு இவருடன் சேர்ந்து மேலும் இருவருக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

பெண்களால் அறிவியல் துறையில் என்ன சாதிக்க முடியும் என்ற பல நூற்றாண்டு கால மூடத்தனமான கேள்விக்கு, ஆண்பால், பெண்பால் என்ற பாகுபாடு அறிவுக்கு இல்லை, உழைப்புக்கு இல்லை, முயற்சிக்கு இல்லை என்று பதிலளித்தவர்களில் இந்த நால்வரும் முக்கியமானவர்கள். அவர்கள் வாழ்ந்த நாடுகளில் தற்போது இருக்கின்ற சிறுமிகளின் கைகளில் அறிவியல் புத்தகங்களைக் கொண்டு சேர்த்த பெருமை இவர்களையே சாரும். ஆனால், இவர்கள் உருவாக முக்கிய காரணம் அதற்கான வாய்ப்புகள் மற்றும் சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்த, பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சக ஊழியர்கள். எனவே, உங்கள் குழந்தைகள் அறிவியலில் ஆர்வமாக இருந்தால், இது நமக்குச் சரிவராது என்று கூறி அந்தக் கனவை சிதைத்து விடாதீர்கள். பின்னாளில், அந்தக் கனவுகள் நோபல் பரிசு வரை நீளலாம்!