Published:Updated:

செயலிழந்ததா தமிழக அரசு? - ஆதாரங்களை அடுக்கும் 'சட்டப்பஞ்சாயத்து'

செயலிழந்ததா தமிழக அரசு? - ஆதாரங்களை அடுக்கும் 'சட்டப்பஞ்சாயத்து'
செயலிழந்ததா தமிழக அரசு? - ஆதாரங்களை அடுக்கும் 'சட்டப்பஞ்சாயத்து'

டகிழக்குப் பருவ மழை பெய்யத்தொடங்கி 5 நாள்கள்தான் ஆகிறது. இந்தப் பருவமழை முடிய இன்னும் 41 நாள்கள் உள்ள நிலையில், கடந்த இரண்டு நாள் மழைக்கே சென்னை மாநகரம் தண்ணீரில் தத்தளிக்கிறது. பல இடங்களிலும் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளதால், மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளும் பெண்களும் வெளியே செல்லமுடியாமல் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர்.

''இப்படிச் சென்னை நகரமே வெள்ளத்தில் தத்தளிப்பதற்குக் காரணமே, செயலிழந்துபோன தமிழக அரசின் நிர்வாகம்தான்'' எனக் கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். '2015-ம் ஆண்டு வெள்ளம் மிகப் பெரிய பாடத்தைக் கற்பித்தும் ஆட்சியாளர்கள் இன்று வரை திருந்தாமல், அப்படியே உள்ளனர்' என்றும் அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ''டெங்குவுக்குப் பலி, மழைக்குப் பலி என மக்களின் உயிர்ப் பலி தொடர்ந்துகொண்டேயிருந்தாலும்கூட அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், சிரித்துக்கொண்டே விழா எடுத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். இந்த லட்சணத்தில், 'இது பொற்கால ஆட்சி' என்று பொங்கிப் பொங்கி மகிழ்கிறார்கள்'' என்று கொதிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். 

இதுகுறித்துப் பேசிய சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோ, ''சிங்காரச் சென்னை என்றும் அமெரிக்காவைப் போன்ற நகரம் என்றும் சென்னையின் அழகை ஆட்சியாளர்கள் மார்தட்டிக்கொள்கிறார்கள். இருளில் முழ்கியிருப்பதும், வீட்டுக்குள் வசிக்க முடியாமல் இருப்பதும்தான் சிங்காரச் சென்னையா. 2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தில் 75 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். 3,59,171 குடிசைகள் சேதமடைந்ததால், வாழ்வாதாரங்களை இழந்து மக்கள் தவித்தனர். 27 லட்சம் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால்,  பாதிக்கப்பட்டவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு நிவாரண உதவிக்காகக் கையேந்தி நின்றனர். இப்படியான பாடங்களைப் படித்த பிறகாவது உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தியிருக்க வேண்டாமா. உள்ளாட்சி அமைப்புகள் சரியான முறையில் செயல்பட்டிருந்தால், டெங்கு பலியைத் தடுத்திருக்க முடியும். அந்தத் துயரத்தைக் கடப்பதற்குள் தற்போது மழைப் பலியும் தொடங்கியுள்ளது.  

அரசின் அலட்சியத்தால், கொடுங்கையூரில் மின்சாரம் தாக்கிக் கொடுமையான சாவு நடந்துள்ளது. பாவனா, யுவஸ்ரீ என இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் உயிரிழப்புகளுக்கு யார் காரணம். இந்த அரசாங்கம் முற்றிலும் மக்களைக் காக்கத் தவறிவிட்டது. இனியும் தாமதிக்கக் கூடாது. சமூக ஆர்வலர்கள் வைக்கும் யோசனைகளுக்கு இந்த அரசாங்கம் செவிசாய்க்க வேண்டும்" என்றவர் மேலும் தொடர்ந்து பேசினார்.

 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கை :

''2015-ல் ஏற்பட்ட வெள்ள பாதிப்பைப் போன்று மீண்டும் ஏற்படாமல் தடுக்க நாடாளுமன்றத்தில் நிலைக்குழு அமைக்கப்பட்டது. அதில் நீர் நிலை ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற மாநில அரசுக்குப் பரிந்துரைத்தது இந்தக் குழு. மேலும், ஆற்றுப் படுக்கைகளைத் தூர் வாரவும், ஆறுகளைச் சீரமைக்கவும் பரிந்துரைத்தது. 

'பேரிடர் மேலாண்மை' மாநிலப் பட்டியலில் வருவதால், மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும் என்று  மத்திய உள்துறை அமைச்சகம் கூறியிருந்தது. உள்துறை அமைச்சகத்தின் இந்தக் கருத்தை நிலைக்குழு ஏற்க மறுத்துவிட்டது. மேலும், 'தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்தைச் சீர்திருத்தவும், முக்கிய நகரங்களைப் பாதுகாக்கவும் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றும் உறுதிபட அந்த நிலைக்குழு பரிந்துரைத்தது. நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், வெள்ளப் பிரச்னையிலிருந்து ஓரளவுக்கு மீண்டிருக்க முடியும்.

இது இப்படி என்றால், நீர் வழித்தடங்களைத் தூர் வாராத காரணத்தால், ஏரிகளுக்குத் தண்ணீர் போய்ச் சேரவில்லை. சென்னையில் உள்ள முக்கிய 4 ஏரிகளின் மொத்தக் கொள்ளளவு 12 டிஎம்சி. ஆனால், தற்பொழுது 2 டிஎம்சி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. பயன்பாட்டுக்குச் சேகரிக்க வேண்டிய தண்ணீர் எங்கே போகிறது என்றே தெரியவில்லை. தற்போது மழை பாதிப்பு என்றால், மார்ச்  மாதத்துக்குப் பிறகு வறட்சி பாதிப்பில் சிக்கப் போகிறோம். இப்படிப் பலவகையிலும் செயலிழந்துபோன அரசாங்கமாக இந்த அரசாங்கம் இருக்கிறது. 

மழை நீர் வடிகால் ஊழல் : 

மழை நீர் வடிகால்கள் இல்லாமல் எந்த நவீன நகரத்தையும் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது. மழை நீரை வெளியேற்ற சென்னைக்கு 5,000 கி.மீ மழை நீர் வடிகால் தேவை. ஆனால், தற்பொழுது 1,660 கி.மீ மட்டுமே இருக்கிறது. 2012-ல் 3,000 கோடி செலவில், கொசஸ்தலையாறு மற்றும் கோவளத்தில் கட்டப்பட வேண்டிய மழை நீர் வடிகால் பணி இன்னும் ஆரம்பிக்கப்படவே இல்லை. அந்தத் திட்டங்கள் எல்லாம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. 

 சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி (Comptroller and auditor general (CAG) of India) அறிக்கையில், 'எந்தவித அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியும் இல்லாமல், மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளதால், 55 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 'மழை நீர் வடிகால்களைக் கடைசியாக ஆற்றுப் பாதையில் கொண்டுபோய் சேர்க்க முடியாத அளவுக்கு மோசமாகத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக'வும் தெரிவித்திருக்கிறது அந்த அறிக்கை. சென்னையில் 117 இடங்களில், சரியான இணைப்புகள்

இல்லாததால், மழை நீர் வடிகால் வசதி இருந்தும் உபயோகம் இல்லாமல் இருக்கிறது. 

'ஆசியாவில் 1688 - ம் ஆண்டிலேயே முதன்முதலாக ஏற்படுத்தப்பட்ட மாநகராட்சி சென்னை மாநகராட்சி' என்ற பெருமை உண்டு. ஆனால், தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்த நிலையிலும், சாதாரண மழை நீர் வடிகாலைக்கூட சரிவரக் கட்டத் தெரியாத நிலையில் சென்னை மாநகராட்சி இருப்பது வெட்கக்கேடானது.

ஒரு வீட்டுக்கு எந்த அளவுக்கு மின்சார இணைப்பு தேவையோ, அதே அளவுக்கு மழை நீர் வடிகாலும் முக்கியம் என்பதை உள்ளாட்சி அமைப்புகளும் மாநகராட்சியும் உணராதவரை வெள்ளத்தைத் தடுக்க முடியாது. 

2015-ல் ஏற்பட்ட வெள்ளத்தால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதைத் தவிர, நீர் நிலைகளும் நிலத்தடி நீரும் கடுமையாக பாதிக்கப்படவும் செய்தது. குப்பை மற்றும் கழிவு நீர் ஆறுகளில் கலந்ததால், 2016 பிற்பகுதி வரை சென்னையில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2017-ல் 6.5 கோடி ரூபாய் செலவில் காஞ்சிபுரத்தில் குடிமராமத்துப் பணி செயல்படுத்தப்பட்டதாக  அரசு கணக்குக் காட்டியுள்ளது. ஆனால், ஒருநாள் மழைக்கே முடிச்சூர், வரதராஜபுரம், தாம்பரம் பகுதிகள் தண்ணீரில் தத்தளிக்கிறது. இதுதவிர 247 கோடி ரூபாய் செலவில், தாம்பரத்தில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்ட வெள்ளத் தடுப்புத் திட்டமும் காற்றில் பறந்துவிட்டது. இப்படிப் பலவகையிலும் மக்களைப் பிரச்னைக்குள் தள்ளிவிட்டது இந்த அரசாங்கம்" என்று குமுறி முடித்தார் சிவ.இளங்கோ.