Published:Updated:

”மழை நிவாரணம் வேண்டாம்... மீன் மார்க்கெட்டைத் திரும்பக் கொடுங்க!” - கதறும் நடுக்குப்பம் மக்கள்... #VikatanExclusive

”மழை நிவாரணம் வேண்டாம்... மீன் மார்க்கெட்டைத் திரும்பக் கொடுங்க!” - கதறும் நடுக்குப்பம் மக்கள்... #VikatanExclusive
”மழை நிவாரணம் வேண்டாம்... மீன் மார்க்கெட்டைத் திரும்பக் கொடுங்க!” - கதறும் நடுக்குப்பம் மக்கள்... #VikatanExclusive

'சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நகர் தெரியுமா?' ம்... 'ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின்போது சென்னைக் காவல்துறையால், எரிக்கப்பட்ட நடுக்குப்பம் பகுதி மீன் மார்க்கெட்' என்று சொன்னால் உங்களுக்குத் தெரியவரலாம்... வடகிழக்குப் பருவமழையின் காரணமாக சென்னையில் நேற்று இரவு பெய்த 20.2 செ.மீ பேய் மழையின் தாக்கம் மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியையும் விட்டுவைக்கவில்லை.  

''2015-ம் ஆண்டு பெருவெள்ளம் தொடங்கி தங்கள் பகுதிக்குச் சாபக்கேடு பிடித்துக்கொண்டது'' என்று புலம்புகின்றனர் இந்தப் பகுதி மக்கள். ''இரண்டு வருஷம் முன்னாடி வெள்ளம் வந்தப்ப எங்க பகுதியில எல்லாம் தண்ணி புகுந்துருச்சுங்க. அதுக்குப் பிறகு முன்னபின்ன தெரியாதவங்க எல்லாம் வந்து உதவி செஞ்சு எங்களை வெள்ளத்திலிருந்து மீட்டாங்க. அதுக்குப்பிறகு மீண்டும் மீன் மார்க்கெட் வந்து தொழில் பழைய நிலைமைக்குத் திரும்ப ஒரு வாரம் ஆச்சு. பிறகு கடந்த ஜனவரியில் இதே மாதிரி சமயத்தில்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டம் ஆரம்பிச்சது. போராட்டம் நடந்தது என்னவோ கடலில்தான்... ஆனால், போலீஸ் எங்க குப்பத்தைப் பதம் பார்த்தாங்க... மீன் மார்க்கெட் தீக்கிரையாப் போச்சு. அதற்குப் பிறகும் முன்ன பின்ன தெரியாத நிறைய பேர் வந்து உதவினாங்க.. எங்க பொருளாதாரம் எல்லாம் போன நிலையில அவங்க கொடுத்த பொருள்களை வெச்சுத்தான் திரும்பவும் மீன் மார்க்கெட் தொடங்கினோம். ஆனால், எரிஞ்சுபோன மார்க்கெட்டை மீண்டும் கட்டித்தர மட்டும் அரசு முன்வந்துச்சு. மினிஸ்டர் ஜெயக்குமார்தான் சீக்கிரமே கட்டித்தரோம்னு வாக்குறுதி கொடுத்தாரு. ஆனா, என்ன நடந்துச்சுனு தெரியல... செங்கல் அடுக்கி சிமென்ட் பூசினதோட அப்படியே மார்க்கெட் வேலைங்க நிக்குது. குடிச்சுட்டு சீட்டு ஆடறவங்களுக்குத்தான் இந்த அரைகுறை மீன்மார்க்கெட் கட்டடம் பயன்படுது. இந்தக் கட்டடத்துக்கு எதிர்ல இருக்குற ஐஸ் உடைக்கற இடத்துலதான் தற்காலிகமா நாங்க வியாபாரம் செய்துட்டு இருக்கோம். இதற்கு நடுவுல கொஞ்ச நாளாவே கடல் சொரப்பா ( படகுகள் பயணம் செய்யமுடியாதபடி அலை மிக அதிகமாக இருப்பது)  இருக்கறதால, எங்க ஏரியால யாருமே மீன் பிடிக்கப் போகலை. இருந்த மீனை வெச்சு வியாபாரம் செய்துட்டுருக்கோம். நேத்து பெய்ஞ்ச மழையில எங்க கடைக்குள்ள எல்லாம் இடுப்பளவு தண்ணி போயிடுச்சு. பொட்டியில் வெச்சிருந்த மீன் எல்லாம் தண்ணியோட அடிச்சிக்கிட்டுப் போயிடுச்சு. மீதம் இருந்த மீனையும் யார் யாரோ வந்து எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க. ஒவ்வொருத்தரும் பத்தாயிரம் இருபதாயிரம் ரூபாய்க்கெல்லாம் வியாபாரத்துக்கு மீன் வாங்கி வெச்சிருந்தோம். அத்தனையும் போச்சு...” என்று கவலை தோய்ந்த குரலுடன் பகிர்கின்றனர் மார்க்கெட்டில் மீன் விற்கும் பெண்கள். 

''உதவி ஏதாவது தேவைப்படுகிறதா?'' என்று நாம் கேட்டதும், “எங்களுக்கு வெள்ளத்தப்பையும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தப்பவும் கிடைச்ச நிவாரணம் உதவியெல்லாம் போதும். முன்னபின்ன தெரியாதவங்க எத்தனை நாளைக்குத்தான் உதவுவாங்க...? இந்த மார்க்கெட்டை எரிச்சது அரசு ஆட்கள்தான். அதனால் எங்க மார்க்கெட்டை  அந்த அமைச்சர் ஒழுங்கா பழையபடி கட்டித்தந்தாலே போதும்... நாங்க பொழச்சிப்போம். மார்க்கெட் கட்டத் தொடங்கின வேகத்துக்குக் கட்டிமுடிச்சிருந்தா... நாங்களும் பழையபடி மார்கெட்டுலையே வியாபாரம் நடத்தியிருப்போம். எங்க மீன் எல்லாமும் பத்திரமா இருந்திருக்கும். இப்படி எங்களுடைய உழைப்பை இழந்துட்டு திக்கு தெரியாம நிக்கமாட்டோம்”  என்கின்றனர்.

தண்ணீரில் தங்கள் உழைப்பு அத்தனையும் அடித்துச்சென்ற பிறகும், 'இலவசம் வேண்டாம், எங்கள் வாழ்வாதாரத்தை மட்டும் மீட்டுக் கொடுங்கள் போதும்' என்று உறுதியாகக் கேட்கின்றார்கள் இவர்கள். மீட்டுத்தரப்படுமா?