Published:Updated:

250 நாள் இலக்கு !

’ஜெ.’ கவுண்ட்டவுண்எஸ்.ஏ.எம். பர்க்கத் அலி ,படங்கள்: சு.குமரேசன்

'மக்கள் முதல்வர்’ ஜெயலலிதா... இனி 'மாநில முதல்வர்’!

சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்து மீள, 217 நாட்களாகிவிட்டது ஜெயலலிதாவுக்கு. மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் அரியணையில் அமர்ந்துவிட்டாலும், ஜெயலலிதாவை ஏகப்பட்ட சவால்கள் எதிர்கொண்டிருக்கின்றன. ஆனால், அவற்றைச் சமாளிக்க தமிழ்நாடு முதலமைச்சர் வசம் இருப்பதோ, '250 நாட்கள்’தான். என்ன செய்யப்போகிறார் ஜெயலலிதா?

2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும். அதற்கு முன்பே பிப்ரவரி மாதம் 1-ம் தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு ஆட்சியாளர்களால் எதுவும் செய்ய முடியாது. ஆக, 2015-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி தொடங்கி, 2016-ம் ஆண்டு ஜனவரி மாதம் 31-ம் தேதி வரையில் 250 நாட்கள் மட்டுமே ஜெயலலிதா 'முதலமைச்சராக’ அதிகாரம் செலுத்த முடியும். இந்த 250 நாட்களில் ஆட்சி நிர்வாகம், எதிர்க்கட்சிகள், சொத்துக்குவிப்பு வழக்கு, தேர்தல் வியூகம்... என எத்தனை மாயாஜாலங்களை ஜெயலலிதாவால் நிகழ்த்த முடியும்?

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மற்ற அத்தனை சவால்களையும் விட்டுவிடலாம். மனதளவிலும் உடலளவிலும் தன் பழைய உற்சாகத்தை மீட்டெடுக்க வேண்டியதே ஜெயலலிதாவின் பிரதான முனைப்பாக இருக்கும் எனத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலத்துக்கே பெரும் சிக்கலாக வந்த சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு, மனதளவில் அவரை மிகவும் பாதித்திருக்கிறது. தீர்ப்பு உண்டாக்கிய சிக்கல்கள் இப்போது அகன்றுவிட்டாலும், அந்தப் பாதிப்பு உண்டாக்கிய சலனங்களில் இருந்து ஜெயலலிதா இன்னும் முழுமையாக மீளவில்லை என்பதை அவரைப் பார்த்தாலே உணர முடிகிறது.

250 நாள் இலக்கு !

கிட்டத்தட்ட 217 நாட்கள் கழித்து வெளி உலகுக்கு வந்த ஜெயலலிதாவைப் பார்த்ததும், 'அம்மாகிட்ட பழைய உற்சாகம் இல்லையே!’ என அவரது கட்சித் தொண்டர்களே ஆச்சர்யப்பட்டனர். 'இரும்பு மனுஷி’ எனக் கட்சிக்காரர்களால் அழைக்கப்படும் ஜெயலலிதா, முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் வழக்கமான மிடுக்கும் கம்பீரமும் குறைந்தே காணப்பட்டார். பதவிப்பிரமாணத்தை வாசிக்கும்போது, அவரது இயல்பான கணீர் குரலைக் கேட்க முடியவில்லை. 67 வயதிலும் பரபரப்பாக வளைய வந்த ஜெயலலிதாவை, சொத்துக்குவிப்பு வழக்கின் அத்தியாயங்கள் அயற்ச்சிக்குள்ளாக்கின.

பதவியேற்பு விழா அரங்கத்தில், சில அடி தூரம் மட்டுமே ஜெயலலிதா நடக்கும் வகையில், மேடைக்கு மிக அருகில் அவருடைய கார் வந்து நிற்குமாறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. விழாவில் இருக்கையில் நீண்ட நேரம் அமரும் சங்கடத்தைத் தவிர்ப்பதற்காகவே,

28 அமைச்சர்களும் இரண்டு குழுக்களாகப் பிரிந்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்கள். ஆக, உடலளவிலும் மனதளவிலும் தன் பழைய உற்சாகத்தை மீண்டும் மீட்டெடுக்கவே ஜெயலலிதாவுக்கு சில காலம் தேவைப்படும்!

ஜெயலலிதா பதவியேற்றுக்கொண்ட மறுநாள் ஞாயிற்றுக்கிழமை. ஆனால், அன்றே தலைமைச் செயலகம் வந்து 'முதலமைச்சர் பணி’யைத் தொடங்கிவிட்டார் ஜெயலலிதா. சிறைப்பட்டு கிடந்த அம்மா உணவகங்கள், மருந்தகங்கள் செயல்படத் தொடங்கிவிட்டன. முடங்கிக் கிடக்கும் புதிய பேருந்துகள் இயங்கத் தொடங்கலாம். திறப்பு விழா காணாமல் இருக்கும் பல அரசுத் திட்டங்கள், 'காணொளிக் காட்சி’ மூலம் செயல்பாட்டுக்கு வரலாம். சென்னையில் மெட்ரோ ரயில் சேவையின் சிறு பகுதி ஒன்று இயங்கத் தொடங்கும். இப்படி ஏற்கெனவே உருவாக்கத்தில்/முடக்கத்தில் இருக்கும் திட்டங்கள்தான் செயல்பாட்டுக்கு வருமே தவிர, அசரவைக்கும் அளவுக்கு எந்தப் பெரும் சாதனைத் திட்டத்தையும் 250 நாட்களுக்குள் அ.தி.மு.க அரசு நிகழ்த்துவது சந்தேகமே!

போதாக்குறைக்கு, சென்னையில் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் ஜெயலலிதா போட்டியிட்டு, எம்.எல்.ஏ ஆகவேண்டிய நிர்பந்தம். ஆக, இடைத்தேர்தல் பரபரப்புக் கெடுபிடியில் 1லு மாதம் கடக்கும். அப்போது சென்னையில் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் அரசாங்கத்தால் செய்ய முடியாது. முன்னர் 110 விதிகளில் ஜெயலலிதா அறிவித்த பல திட்டங்கள், இந்தக் குறுகிய காலத்தில் நிறைவேற்றிவிடக்கூடிய சாத்தியம் இல்லாத திட்டங்கள். பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட, தற்போது புதிதாக அறிவிக்கப்படும் திட்டங்களை நிறைவேற்ற... இன்னும் ஓர் ஐந்து ஆண்டு காலம் ஜெயலலிதாவுக்குத் தேவைப்படும். அதனால், மிச்சம் இருக்கும் 250 நாட்களில் இலவச மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப், ஆடு-மாடு போன்றவற்றை விநியோகிக்கத்தான் அ.தி.மு.க அரசு மெனக்கெடும்.

முன்பெல்லாம், தமிழ்நாட்டில் பா.ஜ.க-தான் அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு அலைபாயும். ஆனால், இப்போது நிலைமை தலைகீழ். '2016-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பா.ஜ.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும்தான் நேரடிப் போட்டி!’ என திண்டுக்கல்லில் பேட்டி கொடுக்கிறார் பா.ஜ.க-வின் ஹெச்.ராஜா. ஆனாலும், மறுநாள் ஜெயலலிதாவின் பதவியேற்பில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. பதவியேற்பு விழாவுக்கு தமிழ்நாடு எதிர்க்கட்சிகள் யாருக்கும் அழைப்பு செல்லாத நிலையில், பா.ஜ.க-வின் பொன்.ராதாகிருஷ்னன்,

ஹெச்.ராஜா மட்டும் எப்படிக் கலந்துகொள்ள முடிந்தது?

இப்படி திக்கெட்டும் மலைக்கவைக்கின்றன சவால்கள். '250 நாட்கள் டெட்லைனுக்குள்’ அவற்றை முறியடிப்பாரா ஜெயலலிதா? 

250 நாள் இலக்கின் சவால்கள்!

1. தமிழ்நாடு பொதுத் துறை நிறுவனங்கள் வாங்கிய கடன்களையும் சேர்த்து அரசின் மொத்தக் கடன், 3 லட்சம் கோடியைத் தாண்டுகிறது. நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் தமிழ்நாட்டை மீட்பது எப்படி?

2. தமிழ்நாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட முதலீட்டாளர்கள் சந்திப்பு, இரண்டு முறை தள்ளிப்போனது. ஆட்சியின் இறுதிக்காலத்தில் நடத்தப்படும் மாநாடு, முதலீட்டாளர்களை ஈர்க்குமா... முதலீடுகளைக் குவிக்குமா?

3. வேளாண் துறை அதிகாரி முத்துக்குமாரசாமி தற்கொலை, 'மாண்புமிகு’வின் லஞ்சப் பசியை வெளிச்சமிட்டுக் காட்ட, சகல துறைகளிலும் வெடித்துக் கிளம்புகின்றன புகார்கள். ஊழல் கறைளைக் களைவது எப்படி?

4. தென் மாவட்டங்களில் கொலைப் பலிகள் 100-ஐ தாண்டி எகிறுகிறது. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சந்திசிரிக்கிறது. மாநிலத்தை 'அமைதிப்பூங்கா’வாக்க என்ன திட்டம் இருக்கிறது?

5. கிரானைட் கொள்ளை, ஆட்சிக்குத் தொல்லை. சகாயம் காட்டவிருக்கும் நிலவளக் காயத்துக்கு ஆட்சியாளர்களிடம் மருந்து இருக்குமா?

6. 'பாலம் இல்லை... குடிநீர் இல்லை... மின்சாரம் இல்லை’ என ஆட்சியின் கடைசி ஓர் ஆண்டில்தான் மக்களின் விரக்திகள், வேதனைகள், சாபங்கள் வெளியே வரும். அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க அதிரடித் திட்டங்கள் என்னென்ன?

7. ஒரு பக்கம் ஸ்டாலின் கூட்டணிச் சங்கிலியை முடுக்க, மறுபக்கம் கூட்டணிக் கப்பலைச் செலுத்துகிறார் விஜயகாந்த். எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓர் அணியில் திரண்டு நின்றால், அந்த மெகா கூட்டணியை எதிர்க்க என்ன வியூகம்?

8. சொத்துக்குவிப்பு வழக்கு, இன்னமும் தலைக்கு மேல் தொங்கிக்கொண்டிருக்கும் கத்திதான். 'சுப்ரீம் கோர்ட்’ அப்பீலில் வழக்கு சூடுபிடித்தால்..?

9. 'சுயலாப’க் காரணங்களுக்காக மத்திய அரசின் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்துக்கு ஆதரவு, கர்நாடக காங்கிரஸ் அரசு மேக்கேதாட்டூ அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் இருப்பது நம்பகத்தன்மையைக் கெடுக்கிறதே... சரிவைச் சமாளிப்பது எப்படி?

10. இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு சமாளிக்க, உடல் ஆரோக்கியம், மனதிடம்... இரண்டையும் உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். செய்வீர்களா... நீங்கள் செய்வீர்களா ஜெயலலிதா?

கலங்கிய சசி...

* பதவியேற்பில் முன் வரிசையின் பிரதான இருக்கைகள், சசிகலா குடும்பத்தினருக்காக ஒதுக்கப்பட்டிருந்தன. அரசாங்கத்தின் எந்தப் பதவியிலும் பொறுப்பிலும் இல்லாத சசிகலா குடும்பத்தினருக்கு, எந்த புரோட்டோகாலின்படி இடம் ஒதுக்கினார்கள் என்பது அரசாங்கத்துக்கே வெளிச்சம். ஜெயலலிதாவைப் போலவே பச்சை நிற சேலை அணிந்து இருந்த சசிகலா, 'ஜெ.ஜெயலலிதா எனும் நான்...’ என ஜெயலலிதா பதவியேற்றபோது, கலங்கிய கண்களை கைக்குட்டையால் துடைத்துக்கொண்டார்.

250 நாள் இலக்கு !

* ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையானபோது, 'நீங்கள் மீண்டும் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எப்போதும் உங்களுக்கு ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் அமைதி கிடைப்பதற்கு வாழ்த்துகிறேன்’ என வாழ்த்து அனுப்பினார் ரஜினி. சோதனையான அந்தச் சமயம், முக்கியமானவர்கள்கூட தனக்கு ஆதரவாகப் பேசாத நிலையில், எதிர்பாராதவிதத்தில் வந்த ரஜினியின் வாழ்த்து ஜெயலலிதாவுக்கு பெரும் மகிழ்ச்சியை உண்டாக்கியது. அதனால்தான் பதவியேற்பு விழாவுக்கு ரஜினிக்கு சிறப்பு அழைப்பு!