Published:Updated:

’மூன்று மந்திரங்கள்!' - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் - 10

’மூன்று மந்திரங்கள்!' - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் - 10
’மூன்று மந்திரங்கள்!' - டெங்குவை வென்ற கியூபாவின் கதை - அத்தியாயம் - 10

ஏற்கெனவே கியூபா நாடு முழுவதும் அன்றைய கணக்குப்படி, 24,221 பேர் சுகாதார அமைச்சகத்தின் கீழ் கொசு அழிப்புக்கான பணியில் பணியாற்றிவந்தனர். அதில், 221 துறைத் தலைவர்கள், 311 உயிரியலாளர்கள், பூச்சியியலாளர்கள் உட்பட 434 நுட்பவியலாளர்கள், 130 மெக்கானிக்குகள், 18,556 ஆப்பரேட்டர்கள் உட்பட பல தரப்பினரும் இடம்பெற்றிருந்தனர். 

இத்துடன் 1981 கொள்ளை பாதிப்புக்கு முன்னரே பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுகாதாரத் துறைப் பணியாளர்களைக் கொண்ட, ’தடுப்பரண் படை’யும் அமைக்கப்பட்டது. மாணவர்கள், இளம் தொழிலாளர் ராணுவம், சமூகப் பணியாளர்கள் பயிற்சிப் பள்ளி, செவிலியர் பயிற்சிப் பள்ளி ஆகியவற்றிலிருந்து தொண்டர்களைத் திரட்டுவதும் நடந்தது. 

மூன்றாவதாக, இளம் கம்யூனிஸ்ட்டுகள் சங்கம், புரட்சியைத் தக்கவைப்பதற்கான குழு போன்ற அமைப்புகளிலிருந்து தொடக்கத்திலேயே 10,737 பேரைக் கொண்ட பெரும் கொசு அழிப்புப் படை அமைக்கப்பட்டது. 

பிரிவுகளின் தன்மைக்கு ஏற்ப சீரான தன்மை கொண்டுவரப்பட்டது. உடையும் தொப்பியும் வெவ்வேறு நிறங்களில் ஒவ்வொரு குழுவுக்கும் அளிக்கப்பட்டது. சிறப்பான பணியைச் செய்தவர்களுக்கு உரிய அங்கீகாரமும் கௌரவமும் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. 

காஸ்ட்ரோ அப்போது, இந்தப் பணி குறித்து, “ இது கடுமையானதும் சிக்கலானதுமான வேலை; கியூபாவின் புரட்சிகர ஆண்களும் பெண்களும் எங்கு இருக்கிறார்களோ அங்கு பேயோபிசாசோ இருக்கமுடியாது” எனக் கூறியது, அப்படியே பொருந்தும்.

பொதுவாக, கொசு ஒழிப்பில், புழு நிலை, வளர்ந்த நிலை ஆகிய இரண்டிலுமே தீவிரம் காட்டப்பட்டது. குப்பைகளை அகற்றல், கொசு முட்டையிடும் இடங்களை அழிப்பது, கொசுப்புழுக்களை அழிப்பது, நச்சுவாயு அடிப்பது, மூடப்பட்ட வீடுகளில் தடுப்புமுயற்சிகள், கட்டுப்பாடான- தொடர்ச்சியான மதிப்பீடு ஆகியவை அடிப்படைப் பணிகளாக இருந்தன. 

முதன்மை அதிகாரி தினமும் கூட்டங்களை நடத்தினார். இந்தக் கூட்டங்களில் என்ன நடக்கிறது என்பது வானொலி, தொலைக்காட்சி, பிற ஊடகங்களில் அலசப்பட்டன. இது ஒரு முக்கியக் கருவியாக மாறி, நகராட்சி அளவில் எடுத்துக்கொண்டால், பொதுமக்கள், தொண்டர்கள், அரசு ஊழியர்களுக்கு என ஊடகச் செய்திகள் செயல்பாட்டுக்கான தகவல்களாக இருந்தன. இது முகத்துக்கு முகம் ஆளுக்கு ஆள் என ஒருவகையான நேரடிக் கற்பித்தலாகவும் எதிர்பார்க்காத பலனையும் உண்டாக்கியது. 

உள்ளூர் அளவில் பாலிகிளினிக்குகளில், நகராட்சி அலுவலகங்களில் மாகாண சபைகளின் வழிகாட்டலில் ஒவ்வொரு 12 மணி நேரத்துக்கும் ஒரு முறை பகுப்பாய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 

2001 கடைசி வாரக் கணக்குப்படி அந்த ஆண்டு டெங்குக் காய்ச்சலால் 11,432 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது; அதில் 69 பேர் டெங்கு ரத்தக்கசிவால் பாதிக்கப்பட்டு, இரண்டு பேருக்கு உயிரிழப்பும் ஏற்பட்டது. அடுத்த ஆண்டில், பாதிக்கப்பட்ட 3,012 பேரில் 12 பேருக்கு ரத்தக்கசிவு உண்டாகி, ஒருவர் உயிரிழந்தார். 
அதைத் தொடர்ந்த இரண்டு ஆண்டுகளில் பாதிப்பும் இல்லாமல், உயிரிழப்பும் நிகழாமலும் தடுக்கப்பட்டது.  

2005-ல் 75 பேருக்கு பாதிப்பு பதிவாகியிருந்தாலும் ஆய்வகத்தில் உறுதிசெய்யப்படவில்லை. 2008-ல் 28 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. ரத்தக்கசிவு பிரச்னை அறவே இல்லை. 2009-ல் 70 பேர், 2014-ல் 1,430 பேர், 2015-ல் 1,691 பேர், 2016-ல் 1,836 பேர் , நடப்பு ஆண்டில் கடந்த மாதம் 27- ஆம் தேதிவரை 270 பேர் என டெங்கு பாதிப்பு பதிவாகியுள்ளது. ஆனால், உயிரிழப்பு நிகழாமல் கியூபா அரசு தொடர்ந்து தன் மக்களைக் காத்துவருகிறது. 
கொள்ளைநோய்க்கு எதிரான கியூபாவின் போரில், ஒரு மந்திரத்தைப் போல, ’அமைப்பு - ஒழுங்கு - செயல்பாட்டில் ஒற்றுமை’ ஆகியன ஒரு மும்மணிமொழியாக இருந்துவருகிறது எனப் பாராட்டுடன் மதிப்பீடும் தருகிறார்கள், உலகளாவிய வல்லுநர்கள். 

இது மட்டுமன்றி, கியூபாவின் தலைநகர் ஹவானா அருகில் உள்ள பெட்ரோ கௌரி மருத்துவ ஆய்வுக்கழகத்தை, உலக சுகாதார நிறுவனமானது(WHO) தன்னுடைய ’பரந்த அமெரிக்க சுகாதாரக் கழகத்தின்’(PAHO) ஒத்துழைப்பு மையமாக இணைத்துக்கொண்டு, அதன் மூலம் பல்வேறு சர்வதேச பயிற்சிப் பட்டறைகளையும் ஆய்வரங்குகளையும் பல ஆண்டுகளாக நடத்திவருகிறது.  

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்த மருத்துவக் கழகத்தின் மூலமான 15 ஆவது சர்வதேச டெங்கு பயிற்சிப் பட்டறையை உலக சுகாதார நிறுவனம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அதில், உலக சுகாதார நிறுவனம், அமெரிக்கா, வெனிசுலா, கனடா, கொலம்பியா, சிங்கப்பூர், சுவீடன், பெல்ஜியம், ஜெர்மனி, அர்ஜென்டினா உட்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த மருத்துவர்கள் மற்றும் பூச்சியியல், கொள்ளைநோயியல், சுகாதாரவியல், நுண்ணுயிரியியல் போன்ற துறைகளின் வல்லுநர்கள் இதில் கலந்துகொண்டனர்.  

அமெரிக்கா போன்ற நாடுகளின் ராணுவ வல்லமையை வைத்து, உலக அளவில் வல்லரசுகள் என மதிப்பிடப்பட்டாலும், அவற்றின் பொதுச்சுகாதாரம், மருத்துவ சிகிச்சை வழங்கலானது உலக அளவில் முன்மாதிரியாக இல்லை என்பதை, வேறு எந்த அமைப்பும் அல்ல, சாட்சாத், அமெரிக்காவால் ஆதிக்கம்செலுத்தப்படும் ஐ.நா.வின் அமைப்புகளே சொல்லாமல் சொல்லுகின்றன. 

டெங்குக் கொள்ளையைப் பொறுத்தவரை, வந்த பின்னர் தரப்படும் மருத்துவ சிகிச்சையானாலும் வரும்முன் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளானலும் கியூபாவை மருத்துவ வல்லரசு எனக் கூறுவது பொருத்தமாகவே இருக்கும்! 

தரவுகளுக்கான சான்றாதாரங்கள்:

உலக சுகாதார நிறுவனம்(WHO), பரந்த அமெரிக்க சுகாதார அமைப்பு(PAHO) ஆகியவற்றின் வெளியீடுகள், லான்செட், மெடிக் ரிவ்யூ ஆகிய மருத்துவ ஆய்விதழ்கள், தற்சார்பான மருத்துவ ஆய்வாளர்களின் ஆய்வேடுகள் மற்றும் கட்டுரைகள்.   

(நிறைவடைந்தது)