Published:Updated:

ஸ்டாலின் ஒன் மேன் ஷோ !

டார்கெட் - ஏப்ரல் - 2016விகடன் டீம், படம்: பா.காளிமுத்து

'முதலமைச்சர் ஜெயலலிதா’ அலைக்கு மத்தியிலும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்! 

'மதுர குலுங்க... குலுங்க’ அட்டகாசப் பேரணி ஒன்றை நடத்தி முடித்திருக்கிறார் ஸ்டாலின். 'நம்மை ஏமாற்றிய நான்கு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் ஆளும் கட்சிக்கு எதிராக அரங்கேறிய அந்தப் பேரணியில், வித்தியாசமான பல காட்சிகள் இடம்பெற்றன. மதுரைப் பேரணியில் கலைஞர் கருணாநிதி கலந்துகொள்ளவில்லை என்பது, முன்னரே அறிவிக்கப்பட்டுவிட்டது. அழகிரியின் 'ஹோம் கிரவுண்டில்’ நடக்கும் கூட்டத்துக்கு, ஆரவார விளம்பரங்கள் எதுவும் செய்யப்படவில்லை. மாநிலம் முழுக்க 'ஜெயலலிதா விடுதலை’ ஜுரமும் அக்னி நட்சத்திர வெயிலும் உச்சத்தில் தகித்துக்கொண்டிருந்த சமயத்தில் அரங்கேறியக் கூட்டம், கடல் அலைகளையும் மிஞ்சும் வகையில் திரண்டக் கூட்டம்... நிச்சயம் தி.மு.க-வே எதிர்பாராத ஆச்சர்யம்!

சமீபமாகவே ஸ்டாலினின் செயல்பாடுகளில் பளிச்சிடும் மாற்றம். மாற்றுக் கட்சித் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திப்பது முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக இயங்குவது வரை, தனது ஒவ்வொரு நடவடிக்கையையும் திட்டமிட்டு அமைத்துக்கொள்கிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன், நாடு முழுக்க 500 பொதுக்கூட்டங்களுக்கு மேல் பேசினார் நரேந்திர மோடி. அதுபோலவே, ஸ்டாலினும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்து இப்போதே தமிழக உலாவைத் தொடக்கிவிட்டாராம். அந்த முனைப்பின் முதல் முயற்சிக்குக் கிடைத்த பிரமாண்ட வெற்றி, ஸ்டாலினை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தியிருக்கிறது.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
ஸ்டாலின் ஒன் மேன் ஷோ !

தி.மு.க முகாமிலும் 'மு.க.ஸ்டாலின்... தமிழ்நாடு முதலமைச்சர் பதவிக்கு’ என தளபதியைச் செதுக்கத் தொடங்கிவிட்டார்கள். அதற்காக மோடி ஃபார்முலாவில் இருந்து வியூகம் வகுக்கிறார்களாம். அதன் ஒரு சாம்பிள்தான் 'மதுரைப் பேரணி’.

மைக் டெஸ்ட்டிங் தொடங்கி நன்றியுரை வரையிலான வரம்புகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு மதுரை கூட்டத்துக்குப் புது விதி தீட்டியிருக்கிறது ஸ்டாலின் டீம். 'இரவு 10 மணி வரை பொதுக்கூட்டம், சிறப்புப் பேச்சாளர்கள் பேசுவதற்கு முன்பு ஒரு டஜன் பேச்சாளரின் உரைகள்’ எனத் தமிழக அரசியல் பொதுக்கூட்ட இலக்கணங்களைத் தகர்த்துவிட்டு, ஸ்டாலினை மட்டுமே பேசவைத்திருக்கிறார்கள்.

சொல்லப்போனால் இத்தனை பிரமாண்ட ஏற்பாடுகளோடு கருணாநிதிக்கே தெரியாமல் அந்தக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறது ஸ்டாலின் மருமகன் சபரீசன், மகேஷ் அடங்கிய டீம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலின் துருப்புச் சீட்டாக ஸ்டாலினை மட்டுமே முன்னிலைப்படுத்தவிருக்கிறது தி.மு.க. மதுரையைத் தொடர்ந்து கடலூர், சென்னை, கோவை... என அடுத்தடுத்த பொதுக்கூட்டங்களுக்குப் பிறகு, திருச்சியில் நடக்கவிருக்கும் கூட்டத்தில் இன்னொரு பிரமாண்ட ஆச்சர்யம் காத்திருக்கிறதாம். அக்டோபர் மாதம், கட்சியின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை அறிவித்துவிடுவாராம் கருணாநிதி. ஆக, 'ஒன் மேன் ஷோ’வாகத் தமிழ்நாட்டை வலம் வரவிருக்கிறார் தி.மு.க-வின் தளபதி!

ஸ்டாலின் ஒன் மேன் ஷோ !

மதுரை கூட்டத்தில் என்ன விசேஷம்?

'எம்.ஆர்.டி’ எனக் குறிப்பிடப்படும் ஒருங்கிணைந்த மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய மாவட்ட நிர்வாகங்களைக் கட்டுப்படுத்தும் 'தென் மண்டலச் செயலாளர்’ பொறுப்பில் இருந்து அழகிரி நீக்கப்பட்டு சரியாக 14 மாதங்களுக்குப் பிறகு, மதுரையில் அரங்கேறி இருக்கிறது இந்த மாநாடு. ஆனால், இதற்கான ஏற்பாடுகள் இந்த வருட ஆரம்பத்தில் இருந்தே பரபரத்துக்கொண்டிருந்தன. 'மதுரையில் மண்டல மாநாடுபோல பிரமாண்டப் பொதுக்கூட்டம் நடத்தலாம்’ என நிர்வாகிகள் சொன்னபோது, 'தலைவர் இல்லாம கூட்டம் போடுறது சரியா?’ எனச் சின்னதாகத் தயங்கியிருக்கிறார் ஸ்டாலின். 'இந்தத் தயக்கம் எல்லாம் வேண்டாம். உங்க பலத்தை நம்ம கட்சிகாரங்களே புரிஞ்சுக்கணும்!’ என தென் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் வலியுறுத்தவே, ஸ்டாலின் உற்சாகமாகச் சம்மதித்திருக்கிறார்.

வழக்கமான அரசியல் மேடையாக இல்லாமல், உயர மறைப்புகள் இல்லாமல் அகலமாக அமைக்கப்பட்டிருந்தது மதுரை பொதுக்கூட்ட மேடை. 120 அடி நீளம், 32 அடி அகலம் கொண்ட பிரமாண்ட மேடையின் நடுவில் ஸ்டாலினுக்குத் தனி இருக்கை. அவருக்கு இரு புறமும் மாவட்டச் செயலாளர்களுக்கான இருக்கைகள். அவ்வளவுதான். சின்னச் சின்ன வரவேற்பு அறிவிப்புகளுக்குப் பிறகு, ஸ்டாலின் மட்டுமே பிரதானமாகப் பேசியிருக்கிறார். மாலை 4 மணிக்குத் தொடங்கிய கூட்டம், மாலை 6.30 மணிக்கு முடிந்துவிட்டது. 100 ஏக்கருக்கும் மேல் பரந்து விரிந்து இருந்த மதுரை புறநகர் சாலையின் அந்தப் பிராந்தியம் முழுக்கவே மனிதத் தலைகள் மொய்த்துக் கிடந்ததைப் பார்த்தால், லட்சக்கணக்கில் திரண்டிருப்பது புரிந்தது.

அ.தி.மு.க அரசு 'நான்கு ஆண்டு சாதனை’ விளம்பரங்களைத் தொடங்கியிருக்க, அதற்குப் பதிலடி கொடுப்பதுபோல 'நம்மை ஏமாற்றிய நான்கு ஆண்டுகள்’ என்ற தலைப்பில் ஆளும் கட்சியைப் பிடிபிடி எனப் பிடித்தார் ஸ்டாலின். அரசு ஊழியர்களை, தற்கொலைக்குத் தூண்டிய ஊழல் முதல் முட்டை கொள்முதல் ஊழல் வரை 30 விதமான ஊழல் சம்பவங்களைக் குறிப்பிட்டு அரசுக்கு எதிராக பரேடு நடத்தினார். ஸ்டாலினின் இந்தப் புது சீற்றத்துக்கு, கூட்டத்தினரிடையே அபார வரவேற்பு.

கூட்டம் முடிந்து சென்னைக்குத் திரும்பிய ஸ்டாலின், கருணாநிதியைச் சந்தித்திருக்கிறார். அப்போது ஸ்டாலின் உற்சாகத்தைப் பகிர்ந்துகொள்ளும் முன்பே, 'மதுரை கூட்டத்தில் தொண்டர்களிடமும் எழுச்சி; ஸ்டாலின் பேச்சிலும் எழுச்சி’ என கருணாநிதியே வாய் நிறையப் பாராட்டினாராம். அகம் மகிழ்ந்துவிட்டார் ஸ்டாலின்!

'டார்கெட் ஏப்ரல்-2016’ நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிட்டார் ஸ்டாலின். ஒரு வருடத்துக்கும் குறைவாகவே இருக்கிறது நாட்கள். மதுரை கூட்டம்போலவே தொடர் பொதுக்கூட்டங்களுக்கும் தேதிகள் குறிக்கப்பட்டுவிட்டன. ஒரு வருடத்துக்கான சுற்றுப்பயணம் வகுப்பட்டுவிட்டது. இடைவிடாமல் இடியென முழங்கப்போகிறார் ஸ்டாலின். வெறும் பொதுக்கூட்டங்கள் மட்டுமல்ல... முக்கியமான நிகழ்ச்சிகள், சந்திப்புகள் எல்லாம் அரங்கேறப்போகின்றன. தேர்தல் அறிக்கை தயாரிப்பு வரையில் தயாராகிவிட்டார். ரெடி... ஸ்டார்ட்... கோ... என வேகம் எடுக்கத் தொடங்கிவிட்டது டார்கெட்.

டெயில்பீஸ்: மதுரையில் கூட்டம் நடந்தபோது, அழகிரி மதுரையில் இல்லை!