Published:Updated:

"திருமாவுக்கு ஓர் ஆலோசனை !”

ரகளை ராமதாஸ்டி.அருள் எழிலன், படங்கள்: கே.ராஜசேகரன்

''இன்னைக்கு என்னோட ட்வீட் படிச்சீங்களா? நாலு ட்வீட் போட்டிருக்கேன்'' என ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தார் ராமதாஸ். அதில் ஒன்று, இப்படி இருந்தது. 

'வழங்கப்பட்ட தீர்ப்பை மாற்ற முடியுமா?’ - காவல் துறை போட்டித் தேர்வில் கேள்வி. குமாரசாமி வழங்கிய தீர்ப்பின் பாதிப்புதான் இது.

அ.தி.மு.க ஆட்சியை, அன்றாடம் தனது அறிக்கைகள் மூலம் வறுத்தெடுக்கிறார் மருத்துவர் ராமதாஸ். கூடவே சமூக வலைதளங்களிலும். கூட்டணி, தேர்தல் பங்கீடு தொடர்பான எந்த அனுசரிப்பு அரசியலும் இல்லாமல் தனி ஆவர்த்தனத்துக்குத் தயார் என்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''ஆமாம் எங்களுடைய முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸை அறிவித்த நாள் முதல், தேர்தல் களத்தில் இறங்கிவிட்டோம். வட மாவட்டங்களில் கிராமம்தோறும் இளைஞர்களைத் திரட்டி குழுக்கள் அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 100 இளைஞர்கள், இளம் பெண்களைக்கொண்டு குழுக்கள் உருவாக்கி, அவர்களுக்கு 'மந்திர எண்கள்’ என்ற பெயரைச் சூட்டியுள்ளோம்.

மந்திரத்தால் மாங்காய் விழாது. ஆனால், இந்த மந்திர எண்கள் எங்களுக்கு வெற்றி வாய்ப்பைக் கொடுக்கும் வாக்குகளைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள். அதுபோல வட மாவட்டங்களில் மட்டும் அல்லாமல் மேற்கு மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் நாங்கள் ஆழமாகக் கால் ஊன்ற தனிக் கவனம் எடுத்து செயல்படுகிறோம். வரவிருக்கும் தேர்தல்களில் எங்கள் தலைமையிலான கூட்டணி, 130 இடங்களில் வெற்றி பெறும்.''

"திருமாவுக்கு ஓர் ஆலோசனை !”

'' 'பா.ம.க தலைமையை ஏற்றுக்கொள்ளும் கட்சிகளுடன் கூட்டணி’ என்கிறீர்கள். உங்கள் தலைமையை ஏற்றுக்கொள்ள எந்தக் கட்சி இதுவரை முன்வந்துள்ளது?''

''சில கட்சிகளிடம் இருந்து சமிக்ஞைகள் வந்திருக்கின்றன. ஆனால், அவை எந்தக் கட்சிகள் என இப்போது சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் மிகப் பெரிய அரசியல் வெற்றிடம் உள்ளது. 50 ஆண்டு கால கழகங்களின் ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது என்ற சிந்தனை அனைத்து மட்டங்களிலும் பரவி, அரசியல்ரீதியாக மாற்றம் வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள். அந்த மாற்று, நாங்கள்தான் என அறிவித்து இருக்கிறோம். இந்த ஆண்டு இறுதியில் ஊழலை எதிர்ப்பவர்கள், எங்கள் தலைமையில் வருவார்கள்.''

''தி.மு.க-வும் தே.மு.தி.க-வும் சட்டமன்றத் தேர்தல் அரங்கில் நெருங்கி வருவதுபோலத் தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி அமைந்தால், வட மாவட்டங்களில் பா.ம.க அதை எப்படி எதிர்கொள்ளும்?''

''தே.மு.தி.க., தி.மு.க இரு கட்சிகளுமே மக்களால் புறக்கணிக்கப்பட்ட கட்சிகள். பாரம்பரியம்மிக்க தி.மு.க-வால் ஒரு நாடாளுமன்ற தொகுதியில்கூட வெல்ல முடியவில்லை. ஆனால், நாங்கள் எங்களின் சொந்த பலத்தில் வென்றிருக்கிறோம். ஆக, தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க யார் வந்தாலும் சரி, நாங்கள்தான் இங்கே மக்களுக்கு மாற்று. நாங்களே வெல்வோம்.''

''பா.ம.க அனைத்துத் தரப்பினரோடும் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால், அரசியல் அரங்கில் நீங்கள் தனித்துவிடப்படும் அறிகுறிகள் தென்படுகின்றனவே?''

''நாங்கள் தனித்துவத்தோடு அரசியல் செய்கிறோம். கண்ணியமான வளர்ச்சி அரசியலை முன்வைக்கிறோம். நாங்கள் தனித்துவிடப்படுகிறோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. எங்களைத் தனிமைப்படுத்த நினைப்பவர்கள் எங்களைப்போல தனித்து போட்டியிடட்டும். அப்போது தெரியும் யார் மக்களோடு இருக்கிறார்கள் என்று.''

''கூட்டணி அரசியலையே விரும்புகிறது தி.மு.க. உங்களின் பொது எதிரியான ஜெயலலிதாவை வீழ்த்த, நீங்கள் ஏன் தி.மு.க-வோடு கூட்டணி சேரக் கூடாது?''

''அ.தி.மு.க., தி.மு.க இரண்டுமே பொது எதிரிகள்தான். கடந்த பல ஆண்டுகளாக நான் இதைச் சொல்லி வருகிறேன். அ.தி.மு.க., தி.மு.க இரு கட்சிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்றுதான் நாங்கள் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறோம். எங்கள் நிலைப்பாடு அப்படி இருக்க, நாங்கள் எப்படி அவர்களுடன் கூட்டணி சேர முடியும்?''

''ஜெயலலிதா போட்டியிட இருக்கும் இடைத்தேர்தலில், பா.ம.க ஏன் ஒரு வேட்பாளரை நிறுத்தக் கூடாது?''

''இடைத்தேர்தல்களே வேண்டாம் என்பதுதான் என் நிலைப்பாடு. ஏனென்றால், ஏற்கெனவே இரு ஃபார்முலாக்கள் உள்ளன. தி.மு.க-வுக்குத் திருமங்கலம், அ.தி.மு.க-வுக்குத் திருவரங்கம். 5,000 தொடங்கி 6,000 ரூபாய் வரை இந்தத் தேர்தல்களில் ஓட்டுக்கு விலை நிர்ணயித்தனர். ஜெயலலிதா போட்டியிடப்போகும் இடைத்தேர்தலில் 7,000 முதல் 8,000 ரூபாய் வரை வாக்குகளுக்குக் கூடுதலாகவே விலை நிர்ணயிப்பார்கள். ஆகவே, எந்தக் கட்சிகளும் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டியது இல்லை. ஜெயலலிதா வென்றதாக அவர்களே அறிவித்துவிட்டுப் போகலாம்.''

''சொத்துக்குவிப்பு வழக்கில் விடுதலையான ஜெயலலிதாவுக்கு, மோடி வாழ்த்துச் சொல்கிறார்; பதவியேற்பு விழாவில் தமிழக பா.ஜ.க-வினர் பங்கேற்கிறார்கள். வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில், ஜெயலலிதாவுக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தப்போவதாக தமிழக பா.ஜ.க சொல்கிறது. இது அரசியல் நாகரிகமா... நாடகமா?''

''இதை எப்படி ஆரோக்கியமான அரசியல் எனச் சொல்ல முடியும்? அரசியல் பருவநிலைக்கு ஏற்ப பா.ஜ.க தன் நிலையை மாற்றிக்கொள்கிறது. இவ்வளவு பெரிய ஊழல் வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையானது ஒரு பக்கம் இருந்தாலும், கடந்த நான்கு ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியின் ஊழல்கள் சொல்லி மாளாது. நாங்கள் ஆளுநரிடம் 216 பக்க அறிக்கை கொடுத்தோம். பொதுப்பணித் துறை ஊழல் அதிகாரிகளின் பட்டியலை சிலர் வெளியிடுகிறார்கள். எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க அரசை, பா.ஜ.க பாராட்டுவது நாகரிகமாகத் தெரியவில்லை. அதுபோல நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பில் குற்றவாளியாகி, சிறைக்குச் சென்ற ஜெயலலிதா, ஜாமீனில் வந்த பிறகு மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி போயஸ் இல்லத்தில் அவரைச் சந்தித்தார். அந்தச் சந்திப்புக்குப் பின்னர்தான் வருமான வரி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். இப்போது பல்வேறு தரப்பினரின் கடும் விமர்சனங்களுக்கு மத்தியில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. பா.ஜ.க-வினர் அவசர அவசரமாக வாழ்த்துகிறார்கள். இவை எல்லாம் அரசியல் அரங்கில் மிகப் பெரிய கேள்விகளை உருவாக்கியிருக்கின்றன.''

"திருமாவுக்கு ஓர் ஆலோசனை !”

''ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், ஜெயலலிதாவுக்கு மக்கள் ஆதரவு இருப்பதாக பொதுவாக கருத்து நிலவுகிறதே?''

''மக்களிடம் ஜெயலலிதாவுக்கு ஆதரவு இல்லை. சில ஊடகங்களும், அதிகாரிகளும், உளவுத் துறையும் இணைந்து உருவாக்கும் பொய்யான தோற்றம் அது. முதன்முதலாக முதல்வராகி, வளர்ப்பு மகன் திருமணத்தை ஜெயலலிதாவும் சசிகலாவும் நடத்திய அந்தக் காலத்தில் நடந்த ஊழல் ஆட்சிக்காக ஜெயலலிதாவை மக்கள் தண்டித்தார்கள். அதுபோல இன்னும் இரண்டே மாதங்களில் எல்லாம் தலைகீழாக மாறும். இப்போது நடந்துகொண்டிருக்கும் ஊழல்களுக்காகவும், செய்த தவறுகளுக்காகவும் மக்கள் ஜெயலலிதாவைத் தண்டிப்பார்கள்.''

''நீதிபதி குமாரசாமியின் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்ய, ஏன் இவ்வளவு தாமதம்... தயக்கம்?''

''இது தொடர்பாக நாங்கள் கர்நாடகா அரசுக்கும், வழக்குரைஞர் ஆச்சார்யாவுக்கும், கர்நாடக அரசின் தலைமை வழக்குரைஞர் ரவி வர்ம குமாருக்கும் கடிதம் எழுதினோம். சட்டரீதியான இந்த உரிமைப் போராட்டம் ஓய்ந்துவிடக் கூடாது என்ற கவலையில் இருந்தபோது, கலைஞர் மேல்முறையீடு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறார். அவரது அறிவிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவருக்கு என் நன்றிகளும் வாழ்த்துகளும்.''

''ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் ரஜினிகாந்த், இளையராஜா போன்றோர் கலந்துகொண்டது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?''

''கடந்த தி.மு.க ஆட்சியில் ஒரு விழா நடந்தபோது அதில் கலந்துகொண்ட நடிகர் அஜித் 'இந்த மாதிரி விழாக்களுக்கு வர வேண்டும் என நிர்பந்திக்கிறார்கள்’ என அந்த விழா மேடையிலேயே பகிரங்கமாகக் குற்றம் சுமத்தினார். கலைஞரை மேடையில் வைத்துக்கொண்டே அஜித் இதைச் சொன்னார். கலைஞர் அருகே அமர்ந்து இருந்த ரஜினி உடனே எழுந்து நின்று, அஜித்தின் பேச்சுக்குக் கைதட்டி, தன் வரவேற்பை வெளிப்படுத்தினார். அதே ரஜினி, இன்று ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு என்ன நிர்பந்தமோ? தங்களுக்கு வேண்டாதவர்களைப் பழிவாங்கும் நிலை இருப்பதால், ஆட்சியாளர்களை அனு சரித்துப்போகவேண்டிய தேவையும் நிர்பந்தமும் திரைத் துறையினருக்கு இருக்கிறது. இதைவிட வேறு என்ன காரணம் இருக்க முடியும்?''

''ஒரு எதிர்க்கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளன?''

"திருமாவுக்கு ஓர் ஆலோசனை !”

''தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற ஒன்று இருப்பதாக மக்களும் கருதவில்லை; நாங்களும் கருதவில்லை. அவருடைய நடவடிக்கைகளை தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இதில் நான் சொல்ல என்ன இருக்கிறது? பொறுப்பான ஓர் எதிர்க்கட்சியாகச் செயல்படுவது நாங்கள் மட்டும்தான். ஆளும் கட்சி செய்யும் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது மட்டும் அல்ல, அதற்கான  பரிகாரங்களையும் சொல்கிறோம்.''

''சமீபத்தில் அனைத்துக் கட்சி உறுப்பினர்களோடும் பிரதமரைச் சந்திக்க விஜயகாந்த் டெல்லி சென்றபோது, பா.ம.க-வுக்குப் பல முறை அழைப்புவிடுத்தும் நீங்கள் அந்த அழைப்பை நிராகரித்து, அந்தப் பயணத்தையே புறக்கணித்தீர்களே ஏன்?''

''தே.மு.தி.க-வை ஒரு கட்சியாகவோ, விஜயகாந்தை ஒரு தலைவராகவோகூட நாங்கள் கருதவில்லை. அந்தக் கட்சிக்கென என்ன செயல்திட்டம், கொள்கை உள்ளது? நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்தபோது நாங்கள் வைத்த முதல் நிபந்தனையே தே.மு.தி.க கூட்டணியில் இடம்பெறக் கூடாது என்பதுதான். ஆனால், அவர்கள் அதைக் கேட்கவில்லை. இதனால் ஈடுபாடு காட்டாமல் வேண்டா வெறுப்பாகத்தான் அந்தக் கூட்டணியில் இருந்தோம். இது மாதிரி ஒரு நிலையில் விஜயகாந்த் தலைமையில் சென்று எங்கள் தரத்தை குறைத்துக்கொள்ள விரும்பாததால், நாங்கள் ஒதுங்கிக்கொண்டோம். இதில் என்ன தவறு இருக்கிறது?''

''மு.க.ஸ்டாலினுக்கும் அன்புமணிக்கும் இடையில் நடந்த அறிக்கைப் போரை கவனித்தீர்களா?''

''ஆமாம். அது அனைத்தையும் படித்தேன். அன்புமணி எழுப்பிய 20 கேள்விகளில் ஒரு கேள்விக்குக்கூட ஸ்டாலின் பதில் சொல்லவில்லை. வேறு எதை எதையோ பேசுகிறாரே தவிர, அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லாமல் நழுவுகிறார் ஸ்டாலின்.''

''தி.மு.க-வின் தரப்பில் தாமரைச்செல்வன் எம்.பி கேட்ட கேள்விகளுக்குக்கூட அன்புமணி பதில் சொல்லவில்லையே?''

''தாமரைச்செல்வனை தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கட்டும். எங்களின் முதல்வர் வேட்பாளரான அன்புமணி, அதற்கு பதில் சொல்வார். தாமரைச்செல்வனை அறிவிப்பது இருக்கட்டும், கலைஞர், ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பாரா? ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க, கலைஞரே ஒப்புக்கொள்ள மாட்டார். அவரே இன்னும் முதல்வர் கனவில்தான் இருக்கிறார். ஸ்டாலின் முதல்வர் வேட்பாளராக இல்லாதபோதிலும், முன்னாள் துணை முதல்வர், தளபதி என்கிற அடிப்படையில் அவரோடு வாதிக்க விரும்புகிறோம். ஆனால், தாமரைச்செல்வன் என்ற அம்பை எங்கள் மீது எய்கிறார்கள் தி.மு.க-வினர்.''

'' 'பா.ம.க இடம்பெறும் அணியில் நாங்கள் இடம்பெற மாட்டோம்’ என்கிறார் திருமா. வட மாவட்டங்களில் இரு சமூகங்களின் நன்மை கருதி மூத்த அரசியல் தலைவரான நீங்கள், திருமாவுடன் சுமுக உறவுக்கு வித்திடலாமே?''

''தென் மாவட்டங்களில் சாதிக் கலவரம் நடந்தபோது நான் தலையிட்டு, இரு தரப்புக்கும் இடையில் சமாதானம் செய்துவைத்தேன். தலித் மக்களுக்கு நான் செய்த பணிகளைப் பாராட்டி அவரே எனக்கு அம்பேத்கர் விருது கொடுத்தவர்தான். ஆனாலும், தர்மபுரி சம்பவம் நடந்தபோது அதில் கடுகளவுக்குக்கூட எனக்கோ, என் கட்சிக்கோ தொடர்பு இல்லை என, அப்போது லண்டனில் இருந்த திருமாவிடமே கூறினேன். ஆனாலும், என்னை அவதூறு பேசி சூழலைக் கெடுத்தார்கள். இவர்கள் செய்த கட்டப்பஞ்சாயத்தால்தான் அந்தத் தற்கொலை நடந்தது. அதைக் கொலை என மாற்றினார்கள். ஆனால், மரக்காணத்தில் எங்கள் இளைஞர்கள் இருவரைக் கொலை செய்தார்கள். என்ன செய்ய? அரசும் அதிகாரமும் அவர்களின் பக்கம் இருந்ததால், நானும் என் கட்சியினரும் சிறைக்குச் சென்றோம்.

இனி சமூக நல்லிணக்கத்துக்காக, இவர்களோடு எப்போதும் இணைய முடியாது. அரசியலில் திருமா செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான். இதை அவர் அறிவுரையாக அல்ல; ஆலோசனையாக மட்டும் எடுத்துக்கொள்ளலாம். அவர் எந்தப் பிரிவு தலித் மக்களின் தலைவர் எனத் தன்னை சொல்லிக்கொள்கிறாரோ, அந்த மக்களின் வாக்கு வங்கியை நம்பி அவர் எங்களைப்போல தனித்து நின்று தேர்தலைச் சந்திக்கட்டும். அதை அவர் செய்வார் என நம்புகிறேன்.''