Published:Updated:

சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!

சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!
சென்னை மழையில் நனையும் பிளாட்பாரவாசிகளின் கதை..!

பூந்தூறலாகத் தொடங்கி, மிகமிகக் கனமழையாக மாறிய வட கிழக்குப் பருவமழை தற்போது சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளைக் குளிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

ஒதுக்கப்பட்ட நபர்கள்

கொட்டு மழையிலும், அது தந்த குளிர்ச்சியை வீட்டுக்குள் இருந்தபடி சூடான தேநீரோ, காபியோ குடித்தபடி ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்ப்போம். இன்றைய காலகட்டத்தில் மழையை வேடிக்கை பார்க்கும் மனதும், அதற்கான நேரமும் இருக்கிறதா என்று தெரியவில்லை. மாறாக, தொலைக்காட்சியில் மழை பற்றிய செய்திகளைப் பார்த்துக்கொண்டிருப்போம். நமக்கு ஒரு பாதுகாப்பான வீடோ, அலுவலகமோ இருக்கிறது. ஸ்மார்ட்போன் வழியே ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் மழை நிலவரங்களைப் பகிர்ந்துகொள்கிறோம். தேங்கிய மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அதிகார வர்க்கத்தைச் சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கிறோம். ஒரு பாதுகாப்புத் தளத்தில் இருந்து நம்மால் இயங்க முடிகிறது.
சொந்த வீடோ, வாடகை வீடோ, தங்கும் அறைகளோ இல்லாத பெருநகர வீதிகளில் ஓரம்கட்டப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட அல்லது இந்தச் சமூகத்தைப் பார்த்து மனம் வெறுத்த நபர்கள், சாலை ஓர நடைபாதைகளில் முடங்கியிருக்கின்றனர். இந்தப் பருவமழை காலத்தில் அவர்களின் நிலை எப்படி இருக்கும்?

பேச மறுப்பு

சூடான தேநீரைப் பருகிக்கொண்டிருக்கும்போது எப்போதாவது இந்தக் கேள்வி உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா? இந்தக் கேள்வி மனதில் எழுந்த மாத்திரத்தில் கொட்டும் மழையையும், அதில் நனைந்து கொண்டிருக்கும் தெருக்களில் முடங்கியிருக்கும் நபர்களையும் நினைத்து மனம் பதறுகிறது அல்லவா?  இந்த மழையை, நாம் குடிநீராகப் பார்க்கிறோம். விவசாயிகளோ, இதைப் பாசனத்துக்கான நீராகப் பார்க்கின்றனர். தெருவோரத்தில் இருப்பவர்கள் இந்த மழையை எப்படிப் பார்க்கிறார்கள்..?
தெரிந்துகொள்ள கனமழைக்குப் பின், லேசாக வெயில் எட்டிப் பார்த்த பகல்பொழுதில் சென்னை நகர வீதிகளில் முடங்கிக்கிடந்த அவர்களைச் சந்தித்தோம்.
ருக்மணி லட்சுமிபதி சாலையில் ஏர் இந்தியா நிறுவன அலுவலகத்துக்கு எதிரே கூவத்தை ஒட்டி ஒரு மாநகராட்சிப் பூங்கா இருக்கிறது. பூங்காவுக்கு வெளியே நடைபாதையில் தாடியுடன் ஒரு மனிதர் உட்கார்ந்து வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரிடம் சென்று, பேச முயற்சி செய்தோம். நம்மிடம் அவர், ''பேச முடியாது'' என்று மறுத்துவிட்டார். அவரது மறுப்பை மதித்து விலகினோம்.

மழை வரட்டும்

அதே சாலையில், கிறிஸ்தவ தேவாலயத்தின் எதிரே நடைபாதையில் சிலர் உறங்கிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருசிலரிடம் பேசினோம். முனியம்மா என்பவர், "நைட்ல விட்டுவிட்டு மழை. எதுக்க இருக்குற கண் ஆஸ்பத்திரில இருந்தோம். மழை பெய்றது நல்லதுப்பா. தண்ணி கஷ்டம் தீரும். தண்ணி கிடைக்காம, ரெண்டு ரூபா பாக்கெட் தண்ணி வாங்கிக் குடிச்சிட்டிருக்கோம். என்னதான் பாக்கெட் தண்ணி குடிச்சாலும், குழாயில வர்ற தண்ணியைக் குடிச்சாத்தான் தாகம் தீருதுப்பா" என்று மழையை வரவேற்கிறார்.


அருவருக்கு அருகிலேயே இன்னொருவர் படுத்திருந்தார். நம்மைப் பார்த்ததும் எழுந்து உட்கார்ந்து, ''முருகேசன்'' என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசத்தொடங்கினார்.

"நைட் புல்லா மழை. அதோ இருக்குதே, அந்தக் கடை தாழ்வாரத்துல தங்கியிருந்தேன். இருந்தாலும் தூக்கமே வரல. அதான் இப்ப கொஞ்ச நேரம் தூங்கிட்டிருந்தேன். மழை பெய்யட்டும். அதனால எனக்கு எந்தக் கவலையும் இல்ல. மழை பெய்யாட்டி தண்ணிக்குத்தான் பஞ்சம். இயற்கையை ஒண்ணும் செய்ய முடியாது. போனவருஷம் வர்தா புயல் வந்தப்போ இங்கதான் கிடந்தேன். எவ்வளவோ மழையைப் பார்த்தாச்சு. வரட்டும். மழை நல்லா வரட்டும். வயசானதால தொடர்ந்து வேலைக்குப் போக முடியல. வேலைக்குப் போயி 20 வருஷமாச்சு. சொந்தக்காரங்க எல்லாம் இருக்காங்க. ஆனா, யாரும் என்னையைப் பாத்துக்கமாட்டாங்க. மழையிலேயும், வெயிலுலயேயும் இப்படியே பொழப்புப் போகுது" என்றார் அவர்.

மழையால் கவலை இல்லை

அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாலகிருஷ்ணா, "எங்க அப்பா, அம்மா ஊரு திண்டிவனம். ஆனா, நான் பொறந்தது எல்லாம் இங்கதான். எங்க அப்பா முனுசாமி கை ரிக்‌ஷா இழுத்துத்தான் எங்களை வளத்தாரு. சர்ச் வாசல்ல பிச்சை எடுப்பேன். அதை வெச்சி சாப்பிடுவேன். மழை பெஞ்சா, ஆயிரம் விளக்குல இருக்க பையன் வீட்டுக்குப் போவேன். வீட்டுக்குள்ள நம்மள சேர்க்க மாட்டாங்க. வீட்டுக்கு வெளியே தாழ்வாரத்துல படுத்துப்பேன். நேத்தும் அங்கதான் படுத்திருந்தேன். வேற என்ன செய்யறது" என்றார்.


பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு பிளாட்ஃபாரத்தில் சிலர் தங்கி இருக்கின்றனர். அவர்களில் ஒருவரான குமாரிடம் பேசினோம். "எனக்குச் சொந்த ஊர் தேனி. கல்யாணம் ஆயிடிச்சி. ரெண்டு பையன்க, ஒரு பொண்ணு இருக்காங்க. ஊருப் பக்கம் போயி ரொம்ப நாளாச்சு. கோயில், சர்ச்  இங்கெல்லாம் சாப்பாடு தருவாங்க. மழை பெய்யறப்ப பக்கத்துல இருக்குற பஸ் ஸ்டாப்புல தங்கிடுவேன். மழை பெய்யறதுக்கெல்லாம் கவலைப்படுறது இல்ல" என்றார்.

சட்டி சுட்டதடா...நெஞ்சை சுட்டதடா

அவருக்கு அருகில் ஒரு பெரியவர் இருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "என்கிட்ட பேர் எல்லாம் கேட்கக் கூடாது" என்று நிபந்தனையுடன் பேச ஆரம்பித்தார். "வீட்ல சண்டை போட்டுட்டு இங்க வந்துட்டேன். எம்.எம்.டி.ஏ-வுல பூ வியாபாரம் செஞ்சிக்கிட்டு இருந்தேன். அப்புறம் கொஞ்ச நாள், கேட்டரிங் கம்பெனில, சப்ளையரா வேலைக்குப் போய்க்கிட்டு இருந்தேன். கண்ணுல பார்வை குறைஞ்சிடுச்சு. இப்ப எங்கேயும் வேலைக்குப் போறதில்ல. மழை பெய்றப்போ, ரயில்வே ஸ்டேஷனுக்குள்ள போயி தங்கிக்குவேன்" என்றார்.
அதே பிளாட்ஃபாரத்தில் கொஞ்சம் தள்ளி ஒருவர் உட்கார்ந்திருந்தார். யாரோ கொடுத்துச் சென்ற உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "என்கிட்ட எதுவும் கேட்காதீங்க" என்றவர், சிறிது நேரம் கழித்து தன்னைப் பற்றிய தகவல்களைக் கொட்ட ஆரம்பித்தார்.

"என்னோட பெயர் குமார். ஆந்திரா பார்டர்ல தடா பக்கத்துல ஆரம்பாக்கம்தான் என் சொந்த ஊர். இங்க செக்ரட்டுரேட்டுல எனர்ஜி டிபார்ட்மென்ட்ல ஆபீஸ் அசிஸ்டென்ட்டா வேல பார்த்தேன். 2004-ம் வருஷம் எஸ்மா, டெஸ்மா கொண்டு வந்தப்போ ஜெயில்ல இருந்தேன். பகல்லகூட எனக்கு மது குடிக்கும் பழக்கம் இருக்கு. ஆபீஸுக்குப் போதையோட போவேன். ஆபீஸ்ல கிடைச்ச இடத்துல பகலிலேயே படுத்துக் கிடப்பேன். அதனால என்னை வேலையை விட்டு நீக்கிட்டாங்க. மனம் வெறுத்துப் போனதால, என்ன செய்யறதுன்னு தெரியாம இங்க வந்து தங்கிட்டேன். 'சட்டி சுட்டதடா, நெஞ்சை சுட்டதடா'னு என் வாழ்க்கை ஓடிக்கிட்டு இருக்கு.

மழை வந்தா, இதோ பின்னாடி இருக்குற டிராவல்ஸ் பஸ்ல ஒதுங்கிக்குவேன். டிராவல்ஸ் ஓனர்தான் என்னை அப்பப்ப கவனிச்சுக்கிறார். ரோட்டுல மழை தண்ணீர் ஓடுவதைப் பார்க்கும்போது எனக்கு உற்சாகமா இருக்கும். இப்பத்தான் மழை தொடங்கியிருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல தண்ணீர் ஓடும். தர்மம் செய்பவர்கள் எத்தைனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களால் என்னைப் போன்றவர்களுக்குச் சோறு கிடைக்கிறது. நான் செத்துப் போனால்கூட, என்னை எடுத்துப் போட்டு விடுவதாக டிராவல்ஸ் ஓனர் சொல்லியிருக்கிறார். இதைவிட எனக்கு வேறு என்ன வேணும்" என்கிறார் சிரித்தபடி.

காதல் தந்த துணிச்சல்

எம்.எம்.டி.ஏ அலுவலகத்துக்குப் பின்புறம் இருந்த பிளாட்ஃபாரத்தில் இரண்டு சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு இளம்பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அவரிடம் பேச்சுக் கொடுத்தோம். "எனக்கு சொந்த ஊரு சென்னைதான். எங்க வீட்டுக்காரருக்கும் இதே ஊருதான். நாங்க ரெண்டு பேரும் வேறவேற சாதி. நாங்க காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிட்டோம்.

ரெண்டு பேரு வீட்லேயும் எதிர்ப்பு. எங்க வீட்ல, 'அவரை விட்டுட்டு வீட்டுக்கு வா' என்று சொல்றாங்க. என் புருஷனை விட்டுட்டு எப்படி என்னால அங்கே போக முடியும்? அவரு வீட்லேயும் அப்படித்தான் சொல்றாங்க. என்னை விட்டுட்டு வரச் சொல்றாங்க. அதனால, ரெண்டு வீட்டுக்கும் பிரச்னை வேணாம்னு, இப்படி நாங்க பிளாட்ஃபாரத்துல தங்கிட்டு இருக்கோம்.

நேத்து நைட்டு மழை. அதோ அங்க இருக்குற கடையோட தாழ்வாரத்துல படுத்திருந்தோம். வீட்டுக்காரர், கல்யாண மண்டபங்கள்ல எச்சி இலை எடுக்கிற வேலையில இருக்கார். அவரு வேலை முடிஞ்சு வர்றதுக்கு நைட் ஒரு மணிகூட ஆயிடும். அதுவரைக்கும் குழந்தைகளைப் பாத்துக்கிட்டு இங்கேயேதான் இருப்பேன். எங்க வீட்டுக்காரர் ஏதாவது கொண்டு வருவார்" என்றவரின், கையில் புண்கள் இருந்தன. அதைப் பார்த்து, ''என்ன'' என்று கேட்டோம். "நைட்ல கொசுக்கடி தாங்க முடியல'' என்று சொன்னபடி தன் குழந்தையைத் தூக்கிக் கொஞ்சுகிறார். "உங்க பேரு என்ன" என்று கேட்டோம். "பாரதி" என்கிறார். அதனால்தான் அந்தத் துணிச்சல் என்று நினைத்தபடி கனத்த மனதுடன் திரும்பினோம்.