Published:Updated:

பதற்றம்... பயம்... பரிதவிப்பு... ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால்? #VikatanExclusive

பதற்றம்... பயம்... பரிதவிப்பு... ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால்? #VikatanExclusive
பதற்றம்... பயம்... பரிதவிப்பு... ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால்? #VikatanExclusive

யானையிடம் சிக்கி மனிதர்கள் பலியாவது தொடர்பாக எத்தனையோ செய்திகளை நாம் படித்திருப்போம். அந்த மனிதர்களுக்காக வருந்தியிருப்போம். ஒரு யானை ஊருக்குள் சிக்கிக்கொண்டால் என்ன நடக்கும்?  மனிதர்கள் எப்படியெல்லாம்  ரியாக்ட் செய்வார்கள்?   

‘கோயம்புத்தூர் மாவட்டம், வீரபாண்டி புதூர் என்கிற கிராமத்தில் உள்ள ஒரு குட்டையில் இன்று ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது’ என்ற செய்தி அறிந்த உடனேயே அந்தப் பகுதியில் ஆஜராகிவிட்டோம். அது மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதி. ஒவ்வொரு தோட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் மின் வேலிகளைப் பார்க்கும்போதே அங்கே யானைகள் வருவது வாடிக்கையான ஒன்று என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. அங்கு வாழும் மக்களுக்கு யானைகளெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பதை அவர்களின் பேச்சே நமக்கு புரியவைக்கிறது. ஆனாலும், சிக்கிக்கொண்ட யானையை வேடிக்கைப் பார்க்க திருவிழாவைப் போல நின்றது கூட்டம். 
 
கூட்டத்தைக் கடந்து எட்டிப்பார்த்தால் ஒரு குட்டை. கருவேல மரங்களும் முட்புதர்களும் நிறைந்த குட்டையில் தேங்கி நிற்கிறது சமீபத்தில் பெய்த மழைநீர். ’அதோ.. எட்டிப் பார்க்குது பார்... தந்தத்தைத் தூக்குது பார்..’ உற்சாக மிகுதியில் தனக்கு அருகில் இருந்த ஒருவரின் தலையை திருப்பி திருப்பிக் காட்டிக்கொண்டிருந்தார் ஒருவர். அவர் காட்டிய திசையை நோக்கி பார்வையை செலுத்தினால், முட்புதர்களுக்கு மத்தியில் பரிதாபமாக நின்று கொண்டிருந்த அந்த யானையின் பாதி உருவம் தெரிந்தது. "பத்து வயசுதான் ஆகுதாம். இது... குட்டி  ஆண் யானை சார்"  என்றபடி விறுவிறுப்பாக  நமக்கு விவரம் சொல்ல ஆரம்பித்தார் ஒருவர். “எங்க ஊர்ல டாய்லெட் வசதியெல்லாம் இல்ல. காலையில இங்கதான் ஒதுங்குவோம். இன்னைக்கு காலையில வரும்போது 3 யானைங்க கூட்டமா நின்னு இங்க தண்ணி குடிச்சிருக்கு. அதைப் பாத்த சனங்க, ஊருக்குள்ள யானை புகுந்திருச்சின்னு கத்த.. ஊர் மக்கள்லாம் ஓடிவந்து அடிச்சி துரத்திருக்காங்க. மிரண்டு போன யானைங்க விரண்டு ஓடியிருக்கு. ரெண்டு யானைங்க தப்பிச்சோம் பொழைச்சோம்னு ஓடிருச்சி. இந்தக் குட்டி மட்டும் இங்க மாட்டிக்கிருச்சி. உடனே ஃபாரஸ்ட்காரவங்களுக்கு தகவல் கொடுத்துட்டோம்.” என்றபடி நாம் செல்வதற்கு முந்தைய ஃப்ளாஷ்பேக் சொன்னார்.

வனத்துறையினர் 25க்கும் மேற்பட்டோர் அந்தக் குட்டையைச் சுற்றிலும் நின்று யானையை விரட்ட ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். வேடிக்கைப் பார்க்கும் மக்கள் கூட்டமும் அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. நேரம் 10 மணியைத் தொட்டிருந்தது. திடீரென்று, புதருக்குள் இருந்து வெளியே வந்து நின்றது அந்த யானை. அப்போதுதான் அந்த யானையின் வால் துண்டிக்கப்பட்டு இருப்பது நம் கண்ணுக்குத் தெரிந்தது. அதன்பிறகுதான் புரிந்தது,  அந்த யானை சேற்றுக்குள் சிக்கி நகர முடியாமல் தத்தளிக்கவில்லை. அந்த யானைக்கு யார் உதவியும் தேவை இல்லை. அந்த யானையை அந்த இடத்திலிருந்து நகரவிடாமல் சுற்றிலும் நின்ற மக்கள்தான் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை. அந்த யானை ஏதாவது ஒரு வழியில் தப்பித்துவிடலாம் என்று எந்தப் பக்கம் திரும்பினாலும் மக்கள் நிற்கிறார்கள். பின் எப்படி அந்த யானை வெளியேறும்.? ஆனால், அதை விரட்ட வேண்டும். அது எப்படி சாத்தியம்?  

சுற்றிலும் நின்ற வனத்துறையினர் பட்டாசு வெடிக்க ஆரம்பித்தார்கள். கையில் வைத்திருந்த வெடிகளை பற்றவைத்து யானையை நோக்கி வீசினார்கள். யானை என்ன செய்யப்போகிறதோ என்ற பதற்றம் எல்லோரையும் தொற்றிக்கொண்டது. சில வெடிகள் யானைக்கு அருகில் விழுந்து வெடித்தன. எல்லோரும், குர்ரே... குர்ரே... என்று கோரஸாக கத்தினார்கள்.அச்சமடைந்த யானை பிளிறியபடி அங்கும் இங்கும் ஓடியது. அங்கிருந்து வெளியேற முயன்று சீறியது. சுற்றி நின்ற மக்கள் எல்லாம் சிதறி ஓடினார்கள். ஆனால், அந்த யானைக்கு அங்கிருந்து வெளியேற பயம். வெடிச்சத்தம் அடங்கியதும் அங்கேயே வந்து நின்று கொண்டது. அந்த யானையை உடனடியாக விரட்ட முடியாது என்று வனத்துறையினர் முடிவெடுத்துவிட்டார்கள். கம்பீரமாய் காட்டுக்குள் உலாவ வேண்டிய யானை. இப்படி ஒரு சூழலுக்கு ஆளாகி அல்லாடியபடி அந்த குட்டைக்குள் நிற்கதியாய் நின்ற காட்சி கலங்கடித்துவிட்டது. அந்த யானையின் நிலையிலிருந்துப் பார்த்தால் சுற்றி நின்ற மக்கள் (நான் உட்பட) அத்தனைபேரும் அந்த யானைக்கு பிசாசுகளாகத்தான் தெரிவோம். இடையில் சாப்பிட, டீ குடிக்க என்று ஷிப்ட் அடிப்படையில் வீட்டுக்குப் போன மக்கள் திரும்பவும் அங்கேயே வந்து நின்று கொண்டார்கள். இடையிடையில் யானைகள் தொல்லை தாங்கவில்லை என்று டிவிகளுக்கு ஆவேசப் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இருள் சூழும்வரை இதே நிலைதான்.   

அந்த யானை யாரிடம் போய் சொல்லும்... மனிதர்கள் தொல்லை தாங்க முடியவில்லை என்று?