Published:Updated:

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

தமிழக முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு, தமிழக அரசியலில் மட்டுமல்ல... கர்நாடக காங்கிரஸ் கட்சிக்குள்ளும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. கர்நாடக உயர் நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மாநில அரசு  செல்லலாமா... வேண்டாமா? என்று கர்நாடக காங்கிரஸுக்குள் பட்டிமன்றமே நடந்து வருகிறது.

இதுபற்றி கர்நாடக மாநில காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் விசாரித்தபோது, ‘‘கர்நாடக காங்கிரஸைப் பொறுத்தவரையில், தமிழக காங்கிரஸைவிட அதிகமான கோஷ்டி பூசல்கள் உள்ளன. கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா தலைமையில் ஒரு கோஷ்டியும் கர்நாடக காங்கிரஸ் மாநிலத் தலைவர் பரமேஸ்வரா தலைமையில் இன்னொரு கோஷ்டியும் இருக்கின்றன. இதுதவிர கர்நாடக முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா, கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் சிவக்குமார்், முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே,  கர்நாடக காங்கிரஸ் சட்டப் பிரிவு மாநில தலைவர் தனஞ்ஜெயா, மாநில திட்டக் குழு துணைத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக  10-க்கும் மேற்பட்ட கோஷ்டிகள் இருக்கின்றன.

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

இந்த கோஷ்டிப்பூசலை பயன்படுத்தித்தான் இப்போது ஜெயலலிதா தரப்பினர் தங்களின் அடுத்த கட்ட நகர்வுகளை செயல்படுத்தி வருகிறார்கள். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா விடுதலையானதாகத் தீர்ப்பு வந்ததும் கர்நாடக காங்கிரஸில் இருந்து யாரும் வாய் திறக்காத நிலையில் தற்போது ஒவ்வொரு காங்கிரஸ் கோஷ்டி தலைவர்களும் இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்துக்கு எடுத்து செல்லக் கூடாது என்று தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகிறார்கள்.

இதற்குக் காரணம், தமிழக முதல்வர் ஜெயலலிதா சார்பாக தமிழகத்தில் இருந்து ஒரு டீம் பெங்களூரு சென்று தங்கியிருக்கிறது. அவர்கள் காங்கிரஸில் உள்ள முக்கியமானவர்கள் எல்லோரையும் தனித்தனியாக சந்தித்துப் பேசி வருகிறார்கள். கர்நாடகாவில் உள்ள அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் தமிழகத்தில் தொழில் செய்பவர்களாக இருக்கிறார்கள். தமிழர்களை நம்பி வாழக்கூடிய நிலையும் இருக்கிறது. இவர்களின் இ்ஷ்ட தெய்வங்கள் அத்தனையும் தமிழகத்தில்தான் இருக்கின்றன.

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

அதனால், முருகனின் அறுபடை வீடுகள், ராமேஸ்வரம், ரங்கம் என்று தமிழகத்துக்கு சென்றபடியேதான் இருக்கிறார்கள். அதனால் எந்தக்காரணத்தைக் கொண்டும் தமிழகத் தலைவர்களைப் பகைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இப்படித்தான் கடந்த வாரத்தில் கர்நாடக மின்சாரத் துறை

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

அமைச்சர் சிவக்குமார், ரங்கம் ரங்கநாதரை வழிபடச் சென்றிருக்கிறார்.

அங்கிருந்த அ.தி.மு.க-வினர் அவருக்குச் சிறப்பான வரவேற்பு கொடுத்து, சிறப்பு தரிசனத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் பத்திரிகையாளர்களிடம், ‘நான் இங்கே வந்ததை அரசியல் ஆக்க வேண்டாம். என் மன அமைதிக்காகத்தான் இங்கு வந்தேன். மேல்முறையீட்டுக்குச் சென்றால் இரு மாநில உறவும் பாதிக்கப்படும்!’ என்று சொல்லியிருக்கிறார்.

இதுதவிர, காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்களை சரிக்கட்டுவதற்காக ஜெயலலிதாவின் நெருங்கிய நண்பரும், முன்னாள் பிரதமரும் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் மூத்த தலைவருமான தேவகவுடாவும் அவரது மகன் குமாரசாமியும் களத்தில் இறங்கி இருப்பதால் இந்தப் பிரச்னையில் கர்நாடக காங்கிரஸ், தெளிவான முடிவு எடுக்க முடியாமல் இருக்கிறது’’ என்கிறார்கள். 

மேலும் அவர்கள், ‘‘இதனால்தான் முதல்வர் சித்தராமையா, ‘இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் நம் தலையீடு  எதுவும் இருக்கக் கூடாது’ என்று தீர்ப்பு வந்த ஓரிரு நாட்களிலேயே காங்கிரஸ் மேலிடத்துக்கு இந்த தீர்ப்பு நகலை அனுப்பிவைத்துவிட்டார். காங்கிரஸ் மேலிடம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று கிரீன் சிக்னல் கொடுத்தும் இன்னும் தயங்கக் காரணம், ஜூன் இறுதியிலோ, ஜூலை முதல் வாரத்திலோ பெங்களூரு மாநகராட்சி தேர்தல் வர இருப்பதுதான். பெங்களூரு சிட்டிக்குள் சுமார் 40 லட்சம் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்கு சென்றால் பெங்களூரு தமிழர்களின் ஓட்டு கர்நாடக காங்கிரஸுக்கு எதிராகப் பதிவாகிவிடும் என்ற பயத்தில்தான் எந்த ஒரு நிலைப்பாடும் எடுக்காமல் தயக்கம் காட்டி வருகிறார். ‘உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செல்வது உறுதி. ஆனால் பெங்களூரு மாநகராட்சித் தேர்தலை முடித்துவிட்டுப் பார்த்துக்கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறது’ என்று அவர் சொல்லி வருகிறார்” என்றும் சொல்கிறார்கள்.

கர்நாடக அரசை சுற்றும் கேள்விகள்.. ஏன் இந்த மெளனம் ?

ஆனால், கர்நாடக பி.ஜே.பி-யினர், ‘ஜெயலலிதா வழக்கு மேல்முறையீடு செய்வது பற்றி உடனே அறிவிக்க வேண்டும்’ என்கின்றனர். பி.ஜே.பி-யைச் சேர்ந்த கர்நாடக சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் ஈஸ்வரப்பா, ‘‘சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட 4 பேரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். அந்தத் தீர்ப்பில் பல குளறுபடிகள் உள்ளதால் மாநில அரசின் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். கர்நாடக தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரும், இந்த வழக்கின் அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவும் கடந்த வாரம் மாநில சட்டத் துறை முதன்மைச் செயலாளர் சங்கப்பாவுக்குப் பரிந்துரை கடிதம் எழுதினார்கள். இதற்கிடையே தீர்ப்பு வந்து பல நாட்கள் ஆகியும் மாநில அரசு  இன்னும் மேல்முறையீடு செய்வது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் மௌனமாக இருப்பது ஏன்? அரசின் மௌனத்தில் உள்நோக்கம் உள்ளதாகத் தெரிகிறது. ஆகவே மாநில அரசின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

இதற்கிடையில் ஜூன் 1-ம் தேதி கர்நாடக சட்டமன்றம் நடக்க இருக்கிறது. அதில் இந்த வழக்கு மேல் முறையீட்டுக்குக் கொண்டு செல்லப் போகிறோம் என்று சொல்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாகவே சொல்கிறார்கள்.

பார்க்கலாம்!

- வீ.கே.ரமேஷ்
படங்கள்: ரமேஷ் கந்தசாமி

அடுத்த கட்டுரைக்கு