Published:Updated:

விஷத்தை விதைக்கின்றனவா குழந்தைகளுக்கான வேடிக்கை பாடல்கள்? #VikatanExclusive

விஷத்தை விதைக்கின்றனவா குழந்தைகளுக்கான வேடிக்கை பாடல்கள்? #VikatanExclusive
விஷத்தை விதைக்கின்றனவா குழந்தைகளுக்கான வேடிக்கை பாடல்கள்? #VikatanExclusive

விளையாட இடம் கிடைக்காத நகரச் சூழலில், மொபைல் கேம்களும் டிவி-க்களும் குழந்தைகளின் நேரத்தை ஆக்கிரமித்துக்கொள்கின்றன. ‘குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்பட வேண்டும். உடல்ரீதியான இயக்கமே இல்லாமல் எலெக்ட்ரானிக் சாதனங்களின்முன் அமர்ந்துகொண்டிருப்பது அவர்களின் ஆளுமையை வீணடித்துவிடும்' எனக் கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது ஒருபுறமிருக்க, சிறுவர், சிறுமியருக்கான சித்திரக்கதைகளை வழங்கும் குழந்தைகளுக்கான யூடியூப் சேனலில், ‘விளையாட்டுப் பாடல்கள்' என்னும் எபிசோடில் சமூகம் ஏற்கெனவே கொண்டிருக்கும் பாகுபாடுகள், அருவருப்பு உணர்வு, இனப்பாகுபாடு போன்ற ஸ்டீரியோ டைப் அபத்தங்களை நியாயப்படுத்தியும் இயல்பான ஒன்றாகவும் காட்டி கதாபாத்திரங்கள் சித்திரிக்கப்பட்டுள்ளன.

இந்த அனிமேஷன் சேனலில் ஒவ்வொரு பாடலும்  5 லட்சம், 9 லட்சம்  பார்வையாளர் எண்ணிக்கையைப் பெற்றுள்ளது. கதைப் பாடல்களின் தொடக்கத்திலேயே மதியழகன் தலைமையிலான தணிக்கைக் குழு வழங்கிய தணிக்கைச் சான்றிதழ் காட்டப்படுகிறது. அதிலிருந்து என்ன புரிந்துகொள்ள வேண்டும், குழந்தைகள் பார்க்கலாம் என்றா, `நிச்சயம் அப்படியொரு முன்முடிவுக்கு வரக் கூடாது' என சினிமா தணிக்கையின் தரம் கூறுகிறது என்றாலும், வயதுவந்தவர்களும் பார்க்கக்கூடாத உள்ளடக்கத்தை அது கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. 

தணிக்கைச் சான்றிதழ் நிறைவுற்றதும் `விளையாட்டுப் பாடல்கள்' என்ற தலைப்பு வருகிறது. நாட்டாமை தோரணையில் ஒரு முதியவர் கொங்கு வட்டாரமொழியில் பேச, அப்படியே அவரது குடும்பம் அறிமுகமாகிறது. தன் மகன் வீட்டுக்குச் செல்ல ரயில்நிலையத்தில் காத்திருக்கும்போது தன் மனைவியிடம், “பராக்குப் பார்த்துட்டு எங்கேயாவது தொலைஞ்சிபோயிடீன்னா, இந்த வயசுல நான் ரெண்டாம் கல்யாணம் முடிக்க முடியாது பாரு” என்று ஜோக்கடித்ததாக நினைத்து அவரே சிரித்துக்கொள்கிறார். சரி போகட்டும். அது ஜோக்காகவே இருக்கட்டும். குழந்தைகள் கேட்டு ரசிப்பதற்காகவா இந்த ஜோக்குகள்?

நாட்டாமை முதியவரின் மொத்தக் குடும்பமும் மகன் வீட்டுக்குச் செல்கிறது. திருநீறு பூசி, ஆரோக்கியமான மெலிந்த உடலுடன், நேர்த்தியாக உடை அணிந்தவர்களாகக் காட்டப்படுகிறார்கள். எல்லோரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போதே, கருத்த, பருத்த தேகமுடைய ஒரு பெண் வீட்டுக்குள் வருகிறார். இவருடைய  பேச்சுவழக்கைக் கண்டு ஆச்சர்யப்படும் விருந்தினரிடம் “தப்பா எடுத்துக்காதீங்க. பாஷைதான் அப்படி(!) மத்தபடி ரொம்ப நல்லவங்க” என்று அந்த வீட்டின் பெண்மணி விளக்கமளிக்கிறார்.

அடுத்த நொடியே, அந்தக் கறுத்த பெண் கதாபாத்திரம் தன் மகனைக் குறித்து, “கடைக்குப் போன செல்வம் பேமானி இன்னும் வரலை. அவனைத் தேடிப்போன அவங்கப்பன் பொறம்போக்கு எங்கே போனான்னு தெரியலை.”

இது போதாதென கறுத்த பெண், கணவனோடு நடத்தும் உரையாடல்…

கணவன்:  இப்ப இன்னாத்துக்கு திருவிழாக்குப் போணும்னு கூவுற நீயி. பக்கத்து வூட்டுக்காரரு பணக்காரரு. அவங்கப்பா வெவசாயி. நாம அவங்ககூட போவ முடியுமா? துட்டுக்கு எங்கடி போவ? மங்கம்மா... நாம் மருவாதையா வாழ்ற குடும்பம், பேரு கெட்டுபோவும்.

மனைவி: இங்க பாரு வாய்ல கெட்டவார்த்தையா வந்திரும் பாத்துக்க. அவங்ககூட கிராமத்துக்குக் கூட்டுபோனா என்னாய்யா உன் மருவாதை கெட்டுப்போவுது? குடிச்சிட்டு ரோட்ல பன்னிங்களோடுப் படுத்துக்கிடக்கும்போது  எங்கய்யா போச்சு உன் மருவாதை? எங்காத்தா என்ன பெத்துபோட்டது  சிந்தாதிரிப்பேட்டை, உனக்கு கழுத்த நீட்டுனது தண்டையார்பேட்டை. இந்த ரெண்டு  ஊர தவிர, என்னயா தெரியும் எனக்கு? இங்க இருக்கிற வண்டலூருக்குக் கூட்டுபோய் ஒரு கொரங்காவது காமிச்சிருக்கியாய்யா?''

கணவன்: அதான் வூட்லயே ஒரு கொரங்க பெத்துப்போட்டிருக்கியே, இதுல ஒனக்கு வண்டலூர் வேற பார்க்கணுமா?

 மனைவி: கொரங்கா இருந்தாலும் என் மவன் ஹனுமார் மாதிரி. ஃபேமஸா வருவான்... என்கிறார்.

மீண்டும் சில காட்சிகளை அடுத்து,

கணவன்: ஏன் மங்கம்மா, என்ன திடீர்னு புள்ளைக்குப் பால் கொடுத்து மாஞ்சாபோடுறே? என்னா நடக்குது இங்க?

மனைவி: அவன் என்ன காத்தாடியா?

கணவன்: இந்த பாரு, உன் பேச்சைக் கேட்டுதான் வரேன். செலவுக்கு துட்டு, கிட்டு கேட்டுராதே... பஸ் துட்டு அவங்க தந்திருவாங்கல?

மனைவி: அட என்னாய்யா உன்கூட பெரிய பேஜாரா கீது. எத்தனவாட்டியா சொல்றது, எல்லாச் செலவும் அவங்க போட்டிருவாங்கன்னு, அவங்கென்ன உன்னை மாதிரின்னு நெனச்சியா, பொன்ஜாதிக்கு பூ வாங்கிக் கொடுக்கவே கணக்கு பாப்பே நீ!''

“சரி, நான் வெளியே போயிட்டு வரேன்'' எனக் கிளம்பும் கணவனிடம்,

“பொட்டிக்கடைகிட்ட நின்னு பொகையா விடுவ, நீ எங்க போவன்னு தெரியாதா!'' என்கிறார் அந்த மனைவி.

எதை நிறுவ முயல்கின்றன இந்த உரையாடல்கள்? 

தண்டையார்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த மக்கள் இத்தகைய தோற்றத்துடன் இருப்பார்கள் என்றா? குடும்பத்தில் உறுப்பினர்களையே கெட்டவார்த்தைகளைச் சொல்லித்தான் அழைப்பார்கள் என்றா? குடித்துவிட்டு பன்றிகளோடு படுத்துக்கிடப்பார்கள் என்றா?  பின்தங்கிய பகுதிகளில் இருப்பவர்கள் மட்டும்தான் புகைவிடுவார்களா?

வடசென்னை அல்லது சென்னைத் தமிழர்கள் குறித்தும், சமூகத்தின் விளிம்புநிலை மக்கள் குறித்தும், எந்தவிதமான சித்திரத்தை குழந்தைகளின் மனதில் பதியவைக்கிறது இந்த வேடிக்கை பாடல்கள்? இந்த வீடியோவைப் பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில்,  2011-ம் ஆண்டு அடையாற்றில் உள்ள தனியார் பள்ளி, கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் சுற்றுவட்டாரத்தில் உள்ள  ஏழை மாணவர்களை  25 சதவிகிதம் வரை சேர்க்கக்கோரும் அரசின் உத்தரவை எதிர்க்கும்படி, தன் பள்ளியின் பெற்றோர்களுக்குத் தனி சுற்றறிக்கை அனுப்பியதை நினைவுப்படுத்துகிறது. அந்தச் சுற்றறிக்கையில், `தரத்தையும் ஒழுக்கத்தையும் பேணும் பள்ளியின்  உரிமைக்கு இனி தொடர்ந்து சட்டபூர்வமான அச்சுறுத்தல் வரும். இதன் காரணமாக, நம் பள்ளியும் அரசுப் பள்ளிகளைப்போல செயல்படும் நிர்பந்தம் வரும். பின்தங்கிய பகுதிகளிலிருந்து வரும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பெரும்பாலான நேரம் செலவிடப்படும் நிலை ஏற்படும். ஆகவே, இந்தச் சட்டத்தை எதிர்த்து உங்கள் குழந்தைகளின் எதிர்கால நலன் கருதி போராட முன்வர வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

‘ஏழைகளை இணைத்துக்கொள்ள மாட்டோம்' என்ற தனியார் பள்ளிச் சுற்றறிக்கை நச்சுத்தன்மைகொண்டது என்பதை சொல்லித் தெரியவேண்டியதில்லை. ஆனால், இந்தப் பாடல்  நச்சுத்தன்மைகொண்டது என்பதைச் சொல்லித்தான் ஆக வேண்டும். இணையதளத்தில் மிகப்பெரிய எண்ணிக்கையிலானவர்கள் அந்த வீடியோக்களை தம் குழந்தைகளுக்குக் காண்பித்தனர். ஆனால், அந்த வீடியோவுக்குக் கீழ் இடம்பெற்ற ஒரு பின்னூட்டம்கூட உள்ளடக்கத்தைக் கண்டிக்கவில்லை. இது எதைக் காட்டுகிறது? சமூகத்தின் பொது மனசாட்சியில், விளிம்புநிலை மக்கள் குறித்த அபிப்பிராயம் பெரிய மாற்றத்தைக் கண்டுவிடவில்லை என்றே புரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தொடர்ந்துகொண்டே வரும் ஸ்டீரியோ டைப் வரையறைகள், சமூக வரையறைகள் மாற்றப்பட வேண்டும் என்ற முயற்சிகள் ஆங்காங்கே துளிர்விடத் தொடங்கியிருக்கும் நிலையில், புறக்கணிக்கப்பட்ட ஏழைகளை, ஏழைக் குழந்தைகளைச் சுற்றி வரையப்படும் இவ்வாறான முதிர்ச்சியற்ற மோசமான சித்திரங்கள் அவர்களை மீண்டும் படுகுழிக்குள் தள்ளும் வாய்ப்பிருப்பதை மறுக்க முடியுமா?

`மெர்சல்' படத்தில், அரசுத் திட்டங்களை விமர்சித்தும், மதத்துக்கு எதிராகவும் எப்படி வசனங்களை வெக்கலாம் எனப் போர்க்கொடி தூக்கியது ஓர் அரசியல் கட்சி. அதற்குப் பரவலான ஊடக வெளிச்சம் கிடைத்தது; விவாதத்துக்குள்ளானது. சமூகநீதிக்குப் பெயர்போன தமிழகத்தில் குழந்தைகளின் மனதில் விதைக்கும் இத்தகைய சித்திரிப்புகளுக்கு எதிரான உரையாடல்கள் தீவிரமாக நிகழ்ந்தாலொழிய, அடுத்த தலைமுறையின் நெஞ்சிலும் நவீன வடிவில் நஞ்சை விதைக்கும் போக்கை நிறுத்த முடியாது.