Published:Updated:

`கட்சி மாறும் 107 எம்.எல்.ஏ-க்கள்?' - பா.ஜ.கவின் `பலே' பிளானால் தவிக்கும் மம்தா!

சமீபத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 60 பேர் அதிரடியாக பா.ஜ.கவில் இணைந்தனர். இந்த அதிர்ச்சியில் இருந்து அக்கட்சி மீளுவதற்குள் திரிணாமுல் காங்கிரஸுக்கு மீண்டும் அதிர்ச்சியளித்துள்ளது பா.ஜ.க.

மம்தா
மம்தா

மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க-வுக்கும் இடையே கடுமையான வார்த்தை போர் நிலவி வருகிறது. மக்களவை தேர்தலுக்கு முன்னதாகவும் தேர்தலின் போதும் பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க குறிப்பிடத்தக்க இடங்களை மேற்குவங்கத்தில் பிடித்தது. இதனால் அடுத்து நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என அக்கட்சி இப்போது இருந்தே வேலைபார்க்க தொடங்கியுள்ளது. சமீபத்தில் திரிணாமுல் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்கள் 60 பேர் அதிரடியாக பா.ஜ.கவில் இணைந்தனர்.

முகுல்ராய்
முகுல்ராய்

இந்த அதிர்ச்சியில் இருந்து அக்கட்சி மீளுவதற்குள் திரிணாமுல், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க வலை விரித்திருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் விதமாக பா.ஜ.க மூத்த தலைவர் முகுல்ராய் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில், ``திரிணாமுல், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 107 எம்.எல்.ஏ-க்களுக்கு பா.ஜ.க-வுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தான்.

அவர்கள் பா.ஜ.கவில் இணைய தயாராகவே இருக்கிறார்கள். இணைப்புக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். மம்தா மீதான அதிருப்தியில் அவர்கள் கட்சி மாறுகிறார்கள்" என புது குண்டை வீசியுள்ளார். இது மம்தாவின் திரிணாமுல் கட்சியில் பெரிய புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தேர்தலுக்கு இரண்டு வருடங்கள் உள்ள நிலையில் இப்போது இருந்தே தேர்தலுக்கான பணிகளை முடுக்கிவிட்டுள்ளார் மம்தா.

மம்தா
மம்தா

தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உடன் ஒப்பந்தம் செய்துள்ள மம்தா அடுத்த முறையும் ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்பதில் குறிக்கோளாக உள்ளார். இந்த வேளையில் பா.ஜ.கவின் எம்எல்ஏக்கள் இழுப்பு முயற்சி அவருக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது.