Published:Updated:

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு
காப்பீட்டுத்துறையில் அந்நிய நேரடி முதலீடு: ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

சென்னை: காப்பீட்டுத்துறையில், ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை மத்திய அரசு  அனுமதித்திருப்பதற்கு முதலமைச்சர் ஜெயலலிதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்  கூறியிருப்பதாவது:-

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, சாதாரண மக்கள், சிறு வியாபாரிகள், குறு விவசாயிகள்  ஆகியோரின் துன்பங்களைப் பார்த்து கொஞ்சமும்கூட அஞ்சாமல் இருந்து வருகிறது.  பாராளுமன்றத்திற்கு உடனடியாக தேர்தல் வரும் என்று எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்,  மத்திய அரசாங்கம் தனக்கு எதிரான மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளை மூடி மறைக்கும்  வகையில், காப்பீடு மற்றும் ஓய்வூதியத்துறையில் அந்நிய நேரடி முதலீடு குறித்த  அறிவிப்புகளை வெளியிட்டிருப்பது மக்களை திசை திருப்பும் செயலாகும்.

பொருளாதார தேக்கத்தை சரிசெய்யவும், இதுவரை இல்லாத அளவுக்கு பொருளாதார  வளர்ச்சியை துரிதப்படுத்தவும் வகை செய்யக்கூடிய மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்று  சொல்லிக்கொண்டு, காப்பீடு மற்றும் ஓய்வூதியத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு மத்திய  அமைச்சரவை அனுமதி அளித்திருப்பது அவசரகதியில் எடுக்கப்பட்ட முடிவாகும்.

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணைய சட்டமசோதா 2011 மற்றும்  காப்பீட்டு சட்டம் (திருத்தம்) சட்டமசோதா 2008 ஆகிய இரண்டு சட்டமசோதாக்களையும்  பாராளுமன்றத்திலும், டெல்லி மேல்-சபையிலும் நிறைவேற்றினால் மட்டுமே,  காப்பீட்டுத்துறையில், அந்நிய நேரடி முதலீடு 26 சதவீதத்தில் இருந்து 49 சதவீதமாக  அதிகரிக்கவும், ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதம் அனுமதிக்கவும்  முடியும். ஆனால், இந்த சட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் ஐக்கிய முற்போக்கு  கூட்டணி அரசு நிறைய பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

காப்பீட்டுத்துறையில் ஏற்கனவே 26 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டிருக்கின்ற  போதிலும், அதனால் குறிப்பிடத்தக்க பலன் எதுவும் கிடைக்கவில்லை. காப்பீட்டுத்துறையில்  அந௫நிய நேரடி முதலீட்டை 49 சதவீதமாக அதிகரிக்கக்கூடாது என்று பாராளுமன்ற நிலைக்குழு  பரிந்துரை செய்துள்ளது. அதையும் மீறி 49 சதவீத அந்நிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி  அளித்தால் விபரீதம் ஏற்படும்.

இதுபோன்ற முக்கியத்துவம் வாய்ந்த துறையை ஆபத்திற்குள்ளாக்குவதற்கு மத்திய அரசுக்கு  உரிமை இருக்கிறதா? இல்லையா? என்பது விவாதத்திற்குரிய பிரச்சினையாகும். காப்பீட்டு  நிறுவனங்களை தொடங்குவதற்கு முதலீட்டு அளவை ரூ.50 கோடியாக குறைத்திருப்பதன்  மூலம் அனுபவம் இல்லாத, திறமை இல்லாத சிறிய நிறுவனங்கள் காளான் போல  தோன்றிவிடும். அதனால் காப்பீட்டுத்துறைக்கு பெரும் அபாயம் ஏற்படும். அதன் காரணமாக,  பொதுமக்கள் தேவையில்லாமல் நிச்சயமற்ற, இடர்பாடு மிகுந்த சூழலுக்கு ஆளாக நேரிடும்.

ஓய்வூதிய நிதியில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்திருப்பதும், மூத்த குடிமக்களின்  உள்நாட்டு சேமிப்புகளை அதிக இடர்பாடு உள்ள, முன்கூட்டி கணிக்க முடியாத பங்கு  மார்க்கெட்டில் முதலீடு செய்வது, மூத்த குடிமக்களின் எதிர்காலத்தை பயங்கரமான இடர்பாட்டுச்  சூழலுக்கு கொண்டு போய்விடும்.

காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை கூடுதலாக அனுமதித்தால், தனியார் காப்பீட்டு  நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் உருவாவதற்கும், அவை ஆதிக்கம் செலுத்தவும்  வகைசெய்யும். தனியார் நிறுவனங்களின் நோக்கமே லாபம் சம்பாதிப்பதில்தான் இருக்கும்.  அதன்விளைவாக, நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் எல்.ஐ.சி. போன்ற  பொத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். அதனால், நாட்டின்  வளர்ச்சி நடைமுறைகள் கடுமையாக பாதிக்கப்படும்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை ஏமாற்றக்கூடிய ஒரு தந்திரம் மட்டுமல்ல, மோசமான,  தேவையில்லாத இடர்பாடும்கூட. பொதுமக்களுக்கு ஊறு விளைவிக்கக்கூடிய முடிவுகளை  மறைப்பதும், மிகப்பெரிய பொருளாதார சீர்திருத்தம் என்ற பெயரில் அவற்றை ஊக்குவிப்பதும்  நாட்டு மக்களை ஏமாற்றும் செயல் ஆகும். எந்த வார்த்தை ஜாலமும் உண்மையை மாற்றிவிட  முடியாது. சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் மத்திய அரசின் இந்த நடவடிக்கையை  நான் கடுமையாக எதிர்க்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.