பிரீமியம் ஸ்டோரி
தலையங்கம்
தலையங்கம்

ளர்ச்சி, முன்னேற்றம், மத ஒற்றுமை ஆகிய நோக்கங்களை முன்வைத்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடி உண்ணாவிரதம் இருக்க... அரசியல் அரங்கின் கவனம் இப்போது அவர் பக்கம். இப்படி உண்ணாவிரதம் இருக்க அவருக்கு என்ன தகுதி உள்ளது என்ற கண்டனக் கேள்வியை காங்கிரஸ் எழுப்பி இருக்கிறது.

கோடிகளை இறைத்து, பல கவர்ச்சி அம்சங்களுடன் தாங்கள் நடத்தும் மாநாடுகளுக்கும் பொதுக் கூட்டங்களுக்கும் திரளாத கூட்டத்தை அண்ணா ஹஜாரேவால் வெற்றிகரமாக ஈர்க்க முடிந்ததைப் பார்த்த பிறகு, அரசியல்வாதிகளுக்கு இயல்பாகவே ஒரு படபடப்பு ஏற்பட்டு இருப்பதைப் பார்க்க முடிகிறது. இன்றைய அரசியல் போக்கின் மீதும் அரசியல்வாதிகளின் நடத்தையின் மீதும் மக்களுக்கு எழுந்து இருக்கும் சந்தேகமும் கோபமும்தான் ஹஜாரேவின் பின்னால் பேராதரவாகத் திரண்டது. அதை உணர்ந்தும் உணராதவர்களாக, 'உண்ணாவிரதம் இருப்பவர்கள் எல்லோருமே புனிதர்கள்' என்ற மாயத் தோற்றத்தை விதைக்கும் ஆபத்தான காரியத்தில் அரசியல்வாதிகள் இறங்கிவிட்டார்களோ என்று தோன்றுகிறது!

'தூய நோக்கத்தை முன்னிறுத்தி, எளிமையான வழிமுறைகளைக் கடைப்பிடித்து, உறுதியோடு நின்று எதிர்ப்பைக் காட்டுவதுதான் சத்தியாகிரகம்' என்பது மகாத்மா காந்தி கற்றுக் கொடுத்த பாடம். அப்படியிருக்க... அரசியல்ரீதியான உள்நோக்கங்களுடன், அரசு இயந்திரத்தின் உதவியோடு பலமாக விளம்பரப்படுத்தி, பல்வேறு தரப்பினரையும் கட்டாயப்படுத்தி அழைத்து வந்து 'ஆதரவு' காட்டினால், அது தூய்மையான உண்ணாவிரதமாக உரு மாறாது!

''எனது மாநிலத்தில் இனி மத மாச்சர்யங்களுக்கு மறந்தும் இடம் கொடுக்கப் போவது இல்லை’' என்று நரேந்திர மோடி அளித்திருக்கும் உறுதிமொழி உண்மையாகவே கடைப்பிடிக்கப்பட்டால் மட்டுமே, அவருடைய உண்ணாவிரதம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டதாக அமையும். காந்திய வழிமுறைகள் அரசியல் வேடதாரிகளுக்கான அஸ்திரமாகப் பயன்பட்டுவிடுமோ என்ற அச்சத்துக்கும் இடம் இல்லாமல் போகும்; உண்ணாநோன்பின் புனிதமும் காக்கப்படும்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு