Published:Updated:

"கூடங்குளம் அணுஉலையில் ஏதோ பிரச்னை இருக்கு" - சந்தேகிக்கும் அணுசக்தி நிபுணர் ரமணா #VikatanExclusive

"கூடங்குளம் அணுஉலையில் ஏதோ பிரச்னை இருக்கு" - சந்தேகிக்கும் அணுசக்தி நிபுணர் ரமணா #VikatanExclusive
"கூடங்குளம் அணுஉலையில் ஏதோ பிரச்னை இருக்கு" - சந்தேகிக்கும் அணுசக்தி நிபுணர் ரமணா #VikatanExclusive

ணு உலை பற்றிய இந்தியாவின் நிலைப்பாடு எப்போதும் சர்ச்சை ஏற்படுத்தக் கூடியதாகவே இருந்துவருகிறது. பெரும்பாலான நாடுகள் மின்சாரத்துக்கு ஒரே தீர்வு அணு உலைதான் என நம்ப ஆரம்பித்து அதற்கான பணிகளிலும் ஈடுபட ஆரம்பித்தன. ஆனால், செர்னோபில் அணு உலை விபத்துக்குப் பின்னர் சில நாடுகள் அணு உலை திட்டத்திலிருந்து பின்வாங்கின. அடுத்தது ஜப்பானில் இருந்த புகுஷிமா அணு உலை விபத்து. இது அணு உலைகளின் மீது அக்கறையைக் காட்டிய மற்ற சில நாடுகளையும் ஆட்டம் காணவைத்தது. ஆனால், அதற்குப் பின்னரும்கூட ஒருசில நாடுகள் அணு உலைகளைக் கட்டுவதில் தீவிரம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்தியாவோ, இன்னும் ஒருபடி மேலே போய் (கூடங்குளம் அணு மின் நிலைய விரிவாக்கப் பணிகள் உட்பட)  2020-க்குள் மேலும் பத்து அணு உலைகளைக் கட்டுவோம் என அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியிலும், அணு உலை அறிவிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், அணுசக்தி இயற்பியலாளருமான முனைவர் எம்.வி ரமணாவிடம் விவாதித்தோம். அணுசக்தி பற்றிய அவருடனான அனுபவத்தில் இருந்து பதில்களைப் பகிர்ந்துகொண்டார்.

"சமீபத்தில் அணு ஆயுத ஒழிப்புக்கு ஆதரவாகப் போராடி வரும் ஐகான் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?" 

"ஐகான் அமைப்பு, 'அணு ஆயுதத்தால் நிச்சயம் மக்களுக்கு அழிவு நேர்ந்து கொண்டுதான் இருக்கும்' என்ற கருத்தை வலுவாக அனைத்து நாடுகளுக்கும் எடுத்துச் சென்றது. இதனைப் பல நாடுகளும் கலந்து விவாதித்திருக்கின்றன. குறிப்பாக ஐக்கிய நாடுகள் சபை, 'அணு ஆயுதம் வைத்திருப்பது சட்டவிரோதமானது' என்று திட்ட வரைவு கொண்டுவந்துள்ளது. இதில் 122 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. மேலும், அணு ஆயுதத்தால் ஏற்படும் இழப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது இந்த அமைப்பு. இதற்காகத்தான் ஐகான் அமைப்புக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இது பாராட்டத்தக்க ஒன்றுதான்"

"அதிகமான மின்சாரத் தேவைக்கு அணு உலைகள் அவசியமான ஒன்றுதானே?" 

"மின்சார சேமிப்புத் துறை முக்கியத்துவம் வாய்ந்த துறைதான். மின் உற்பத்திக்காக முதலீடு செய்யும் வேளையில் மின் சேமிப்புக்கான ஆராய்ச்சியில் அதிக முதலீடு செய்ய வேண்டும். அணு உலைகளிலிருந்து பெறக்கூடிய மின்சாரம் அதிக செலவிலும், அதிக இயற்கை வளங்களை அழித்து கிடைக்கக் கூடிய ஒன்று"

"உலக நாடுகள் அணு உலைகளை எப்படிப் பார்க்கிறது? அதில் இந்தியாவின் பார்வை எப்படி இருக்கிறது?" 

"உலக நாடுகளில் பெரும்பாலான நாடுகள் புகுஷிமா விபத்துக்குப் பின்னர் அணு உலை திட்டத்திலிருந்து பின்வாங்கிவிட்டன. மற்ற நாடுகள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை நோக்கித் திரும்பிவிட்டன. இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் இன்னும் அணு உலை ஆற்றல் வளங்களைக் கெட்டியாக பிடித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்தியா அணு உலைகளை அதிகமாக நிறுவ வேண்டும் என்பதில்தான் குறியாக இருக்கிறது" 

"இந்தியாவில் 'மைல்ஸ்டோன்' என்று சொல்லப்பட்ட கூடங்குளம் அணு உலை அடிக்கடி பழுதாகிறதே, அது பற்றிய உங்கள் கருத்து என்ன?" 

"கூடங்குளம் அணு உலை சரியா தவறா என்பது பற்றி தெளிவாகச் சொல்ல முடியாது. உள்ளே என்ன நடக்கிறது என்பது வெளியே இருக்கும் நமக்கு நிச்சயமாகத் தெரியாது. ஒரு அணு உலை புதிதாக ஆரம்பிக்கப்பட்டால் சில வருடங்களுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாது. ஆனால், கூடங்குளம் அணு உலை 40 முறைக்கு மேல் பழுதடைந்து நிறுத்தப்பட்டுள்ளது. கூடங்குளம் இதுவரைக்கும் முழுமையான மின் உற்பத்தியையும் எட்டவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஏற்பட்ட கோளாறு காரணமாகக் கடந்த ஐந்து மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கூடங்குளம் அணு உலை. தற்போதுதான் மீண்டும் மின் உற்பத்தியைத் துவக்கியுள்ளது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இரண்டாவது அலகில் மின் உற்பத்தி துவக்கம் என அறிவிக்கப்பட்டு இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. ஒரு அணு உலையை எரிபொருள் நிரப்பும் பணிக்காக 30 முதல் அதிகபட்சமாக 60 நாள்கள் வரைக்கும் நிறுத்தி வைக்கலாம். ஆனால், ஐந்து மாதமாக நிறுத்தி வைப்பது சற்று சந்தேகத்தைக் கொடுக்கிறது. கூடங்குளம் அணு உலையில் பிரச்னை இருப்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது"

"ஈனுலைகளை இந்தியா ஆரம்பிக்கப்போகிறதே அதுபற்றிய உங்கள் கருத்து என்ன?" 

1960-களின் தொடக்கத்தில் ஈனுலைகள் முன்னெடுக்கப்பட்டன. பின்னர் அதில் பயன்படுத்தப்படும் திரவ சோடியம், ஜப்பான் மாஞ்சு ஈனுலையில் ஏற்பட்ட 'சோடியம் தீ' உள்ளிட்ட காரணங்களாலும் உலகம் முழுவதும் ஈனுலைகள் கைவிடப்பட்டு விட்டன. திரவ சோடியம் காற்றிலோ, நீரிலோ கலந்தால் எளிதில் தீப்பிடித்துவிடும். ரஷ்யாவைத் தவிர வேறு எங்கும் ஈனுலைகள் உலகில் கிடையாது. ஈனுலை அதிக பாதுகாப்பைக் கொண்டது எனச் சொல்லி இந்தியா மட்டும் அதில் அதி தீவிர கவனம் செலுத்துவது பலனைக் கொடுக்காது. இந்தியாவிலேயே 2003-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட திட்டம் இன்னும் துவங்கப்படாமலேயே இருக்கிறது. 

"புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பின்னர், ஜப்பான் முன்னாள் பிரதமர் நவடோ கான் எந்த அணு உலையும் பாதுகாப்பானது கிடையாது என்று சொல்லியிருப்பது பற்றி உங்கள் கருத்து என்ன?" 

"எந்த அணு உலையும் நூறு சதவிகிதம் பாதுகாப்பானது என்று சொல்லிவிட முடியாது. பெரிய இயற்கை சீற்றத்துக்கு முன்னரும் எதுவும் நிலைக்காது. அது ஏற்படுத்தும் பாதிப்பு மிகப்பெரிய பேரழிவினை உண்டாக்கும். அதை எதிர்கொள்ளும் மனிதனின் கடைசி சந்ததி வரைக்கும் அந்த பாதிப்பு தொடரும். அவர் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்" 

"அணு உலைகள் வெளியேற்றும் கழிவு மற்றும் விபத்தால் நூறு கி.மீ-க்கு அப்பாலும் அணுக்களின் தாக்கம் இருக்கும் என்பது உண்மையா?" 

"நிச்சயமாக இருக்க வாய்ப்பு உண்டு. விபத்து ஏற்படும்போது காற்று மற்றும் நீரில் கலக்கும் தனிமங்கள் மற்றும் கதிர்வீச்சுக்கள் நிச்சயமாக அதனுடன் பயணிக்கும். அதனால் அணுக்களின் தாக்கம் நிலத்தடியிலும் இருக்க வாய்ப்புக்கள் அதிகம். அதேபோல ஒரு அணு உலை அமைக்கப்பட்டால் நிச்சயமாக மக்கள் அதன் அருகில் வசிக்க முடியாது. நீர், நிலம் உள்ளிட்ட அதிகமான இயற்கை வளங்கள் நிச்சயமாக அழிக்கப்படும்"