Published:Updated:

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா...ஓவர்..ஓவர் !

ஆர்.கே.நகர் அலம்பல்கள்

அக்னி வெயிலைவிட சூடாகவே இருக்கிறது ராதாகிருஷ்ணன் நகர் தொகுதி! “வாக்காள பெருமக்களே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில்..’’ என காதைக் கிழிக்கும் மைக்குகள் இல்லை. துண்டுப் பிரசுரங்கள் இல்லை. பெரிய பெரிய டிஜிட்டல் பேனர்கள் இல்லை. வாகனத்தில் நின்று கைகூப்பி, கையசைத்துச் செல்லும் வேட்பாளர் இல்லை. முதல்வர் ஜெயலலிதா தொகுதி வேட்பாளர் என்பதால், அவரின் ஏஜென்டுகளாக சந்து பொந்துகளில்கூட சர்வசாதாரணமாக வலம் வருகிறார்கள் அமைச்சர்கள்.

அலர்ட்டா இருக்கணுமாம் அமைச்சர்கள்!

எவ்வளவு தொலைவாக இருந்தாலும் நடந்தே செல்லும் அமைச்சர்கள் ரோட்டுக்கடை, பூக்கடை, பெட்டிக்கடை என எல்லா இடங்களிலும் கூலித் தொழிலாளிகள், வயதில் பெரியவர்கள், சிறியவர்கள் என பாகுபாடு இல்லாமல் எல்லோரிடமும் கூப்பிய கையை இறக்காமல், அவர்கள் இடத்துக்கே ஓடோடிச் சென்று சந்திக்கிறார்கள். புழுதிப்படிந்த அழுக்கு மனிதர்களின் கைகளைப் பற்றிக்கொள்கிறார்கள். கைகூப்பி வணங்குகிறார்கள். மறந்தும்கூட கைகளை உயர்த்தி அசைக்காமல் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா...ஓவர்..ஓவர் !

அ.தி.மு.க-வின் வி.ஐ.பி சக்திகள் ஒட்டுமொத்தமாக ஆர்.கே.நகரில் குவிக்கப்பட்டுள்ளன. முதல்வர் தொகுதி என்பதால் முதல்வருக்குக் கொடுக்கும் மரியாதையை அவர்களின் வாக்காளர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். எந்தவித சர்ச்சைகளிலும் சிக்கக் கூடாது என்பதிலும் உஷாராகவே இருக்கிறார்கள் அமைச்சர்கள். ஏரியா உள்ளே வருவதற்கு முன்பே கார்களை நிறுத்தி அரசு லோகோ, கட்சிக் கொடி உள்ளிட்ட அடையாளங்கள் எல்லாவற்றையும் கழற்றி உள்ளே வைத்துவிடுகிறார்கள். ஆகே.நகர் தொகுதி மட்டும் இல்லாமல், ராயபுரம், பாரிமுனை என பக்கத்து ஏரியாக்களில் உள்ள லாட்ஜ்களும் தேர்தல் முடியும் வரை புக்கிங் ஃபுல். கழகப் பொறுப்பாளர்களின் வீடுகள் முழுக்கவே திருவிழாவைப்போல தினம் தினம் பிரியாணி வாசம். வாக்கு சேகரிக்கும்போது தொண்டர்கள் யாரும் கழண்டுகொள்ள முடியாதபடி கணக்குப் போட்டு தலையை எண்ணிக்கொள்கிறார்கள் பொறுப்பாளர்கள். அந்திசாயும் நேரத்தில் ஆர்.கே.நகர் முழுக்க வெடிச்சத்தமும், பேண்டுகள் சத்தமும் காதைக் கிழிக்கிறது. அமைச்சர்கள் வரும் நேரத்தில் தெருக்கள் காலியாக இருக்கக் கூடாது என்பதால் டி.வி-யில் மூழ்கியுள்ள தாய்க்குலங்களை வெளியே வரவழைத்து காத்திருக்க வைக்கும் வைபவங்களும் நடக்கின்றன.

‘அண்ணே... இது முட்டுச் சந்து!’

புதுவண்ணாரப்பேட்டை 39-வது வார்டு தேர்தல் பொறுப்பாளர், போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி. கடந்த 8-ம் தேதி தண்டையார்பேட்டை ரோட்டில் உள்ள தேர்தல் பணிமனையை திறப்பதற்காகத் தடபுடலாக ஏற்பாடு செய்துகொண்டிருந்தார். திறப்பு விழாவுக்கு வரும் நால்வர் அணியை வரவேற்க மாலை 4.30 மணிக்கு வந்துவிட்டார் செந்தில் பாலாஜி. வாக்கு சேகரிக்கும் வியூகங்களைத் தொண்டர்களுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா...ஓவர்..ஓவர் !

‘‘சின்ன சந்தா பாருங்க. பக்கத்திலேயே இருக்கட்டும்’’ என்று செந்தில் பாலாஜி டிப்ஸ் கொடுக்க, சுடலைமுத்து தெரு, கோவிந்தராஜ் தெரு, பொன்னுசாமி தெரு, தனபால் நகர் ஆகிய இடங்களை செந்தில் பாலாஜிக்கு ரூட் போட்டுக் கொடுத்தார்கள் லோக்கல் புள்ளிகள். ‘‘பின்னாடியே எல்லோரையும் வரச் சொல்லுங்க. பாதியிலேயே கழண்டுட போறாங்க” என்று செந்தில் பாலாஜி அலர்ட் அலாரம் அடித்தார். “அதெல்லாம் மிஸ் ஆகாமப் பார்த்துக்குறோம் அண்ணே” என பதில் கிடைத்ததும் புன்னகையோடு தலையசைத்துவிட்டுப் புறப்பட்டார் செந்தில் பாலாஜி.

சிறிது நேரத்தில் ஓ.பி.எஸ் உள்ளிட்ட நால்வர் அணி, தலைமைப் பணிமனைக்கு வந்ததாகத் தகவல் கிடைக்க, காரில் சென்று, நால்வர் குழுவை அழைத்து வந்தார்.  பணிமனை திறப்பு, குத்துவிளக்கு ஏற்றுதல், சிறிது தூரம் வாக்கு சேகரிப்பு என ஃபார்மாலிட்டியை முடித்துவிட்டு அடுத்த ஏரியாவுக்குக் கிளம்பியது நால்வர் அணி.

அதைத் தொடர்ந்து, போட்டு வைத்த ரூட்டில் விறுவிறுவென நடையைக் கட்டினார் செந்தில் பாலாஜி. போருக்குத் தயாரான 23-ம் புலிகேசியைப் போல, கிடைத்த சந்துகளில் எல்லாம் வேகமாக வாக்கிங் போவதைப்போல நடந்தார். ‘‘அண்ணே இது முட்டு சந்து... இந்தப் பக்கம் வழி இல்லை...’’ என்று ‘லகட பாண்டிகள்’ சொல்ல, முன்னரே சொல்வதில்லையா என்று அலுத்துக்கொண்டு அடுத்த பாதைக்கு விரைந்தார்.

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா...ஓவர்..ஓவர் !

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா? ஓவர்... ஓவர்...

நேதாஜி நகரில் உள்ள 6 பூத்களுக்குப் பொறுப்பாளர், அமைச்சர் செல்லூர் ராஜு. 7 பூத்கள் உள்ளவர்களுக்கு மட்டுமே கழகத்தில் தேர்தல் பணிமனை அமைக்கப்படுமாம். செல்லூர் ராஜுவுக்கு 6 பூத்கள் என்பதால் அவருக்குத் தேர்தல் பணிமனை எதுவும் கிடையாது. திருமங்கலம் எம்.எல்.ஏ முத்துராமலிங்கம், மேலூர் எம்.எல்.ஏ சாமி, மதுரை கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ தமிழரசன், சோழவந்தான் எம்.எல்.ஏ கருப்பையா, மதுரை எம்.பி கோபாலகிருஷ்ணன், மதுரை துணை மேயர் கு.திரவியம், மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க-வினர் மதுரையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர். இதனால் மினி மதுரையைப்போல இருக்கிறது நேதாஜி நகர். 

ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா...ஓவர்..ஓவர் !

9-ம் தேதி மாலை நேதாஜி நகரில் உள்ள சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கு ஓ.பி.எஸ் மாலை அணிவித்த பிறகு நேதாஜி நகர் ஏரியாவில் வாக்கு சேகரிக்க தடபுடலாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்கள் மதுரை ஏரியாவாசிகள். 4 மணிக்கு ஓ.பி.எஸ் வருவதாக இருந்தது. 5.30 மணியாகியும் ஓ.பி.எஸ் வரவில்லை.

‘ஓ.பி.எஸ் கிளம்பிட்டாரா... ஓவர்... ஓவர்...’ என்ற ரேஞ்சுக்கு போனில் பேசியபடி இருந்தார் செல்லூர் ராஜு. ஓ.பி.எஸ் வருவதற்கு தாமதமாகும் என தகவல் வந்ததால் எம்.எல்.ஏ-க்களோடு எம்.ஜி.ஆர் சிலைக்கும், சுபாஷ் சந்திரபோஸ் சிலைக்கும் மாலை அணிவித்தார் செல்லூர் ராஜு.  6 மணிக்குத்தான் வந்தார் ஓ.பி.எஸ். தொகுதிக்கு வந்ததும் அரிகிருஷ்ணன் ஐயப்ப சுவாமி ஆலயத்தில் நுழைந்து ஐயப்பனை வழிபட்டுவிட்டு, நேதாஜி நகர் பகுதிகளில் ஓட்டு வேட்டையாடினார்.

‘வயசானவங்களை எழுப்பாதீங்க...’

சுதந்திரபுரம், ஜீவா நகர், ஏகாம்பரம் தெரு, பாரதி நகர் போன்ற பகுதிகள் கால்நடைத் துறை அமைச்சர் சின்னையாவின் ஏரியா. சுதந்திரபுரத்தில் தேர்தல் பணிமனை தயாராகிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்பாகவே வாக்கு சேகரிக்கும் பணி களைகட்டத் தொடங்கிவிட்டது. பக்கத்து ஊர்தான் என்றாலும் காஞ்சிபுரம் மாவட்ட எம்.எல்.ஏ-க்களும், கழக நிர்வாகிகளும் இங்கேயே டென்ட் போட்டுவிட்டார்கள். பக்கத்து ஏரியா என்பதால் வீட்டிலிருந்தே தினமும் வந்துசெல்கிறார் சின்னையா. ‘வயசானவங்களை எழுப்பாதீங்க... யாரையும் தெருவுக்கு அழைச்சிக்கிட்டு வராதீங்க’’ என்று  இடை இடையே தொண்டர்களைக் கட்டுப்படுத்துறார். அலட்டிக்கொள்ளாமல் மாடிப்படிகளில் ஏறி இறங்குகிறார் சின்னையா.
10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில் 37 வேட்பாளர்கள் 39 வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். இந்திய கம்யூனிஸ்ட் இப்போதுதான் களத்தில் இறங்குகிறது. தேர்தல் களத்தை விறுவிறுப்பாக மாற்றுவார்களா கம்யூனிஸ்ட்கள் என்பது போகப்போகத்தான் தெரியும். ‘களத்தில் நிற்கிறேன்... எதிரிகளே இல்லை’’ என முதல்வர் ஜெயலலிதா அன்று சொன்னதை நினைவுபடுத்துகிறது ராதாகிருஷ்ணன் நகர்.

இப்படி தேர்தல் நடந்தால் எதிரிகள் எப்படி இருப்பார்கள்?

- பா.ஜெயவேல்
படங்கள்: வீ.நாகமணி, ப.சரவணக்குமார்

அடுத்த கட்டுரைக்கு