Published:Updated:

“சர்ஜிக்கல் ஆபரேஷன்!” ரெய்டு பின்னணி சொல்லும் தமிழிசை செளந்தர்ராஜன்

“சர்ஜிக்கல் ஆபரேஷன்!” ரெய்டு  பின்னணி சொல்லும் தமிழிசை செளந்தர்ராஜன்
“சர்ஜிக்கல் ஆபரேஷன்!” ரெய்டு பின்னணி சொல்லும் தமிழிசை செளந்தர்ராஜன்

றைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவரின் அக்காள் மகன் தினகரன் உள்ளிட்ட உறவினர்களின் வீடு, அலுவலகங்கள் உள்பட 187 இடங்களில் வருமான வரித்துறையின் இன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். வருமான வரித்துறையினரின் இந்தச் சோதனை நடவடிக்கை என்பது 'அரசியல் உள்நோக்கம் உடையது' என டி.டி.வி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

பொதுவாக தமிழகத்தில் வருமான வரித்துறை சோதனை நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசு உள்நோக்கத்தோடு இவ்வாறான நடவடிக்கையை கையாண்டுவருவதாக பரவலான குற்றச்சாட்டு கூறப்பட்டு வருகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனிடம் பேசினோம்.

"சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் வீடுகளில் நடைபெறும் வருமான வரி சோதனையின் பின்னணியில் மத்திய அரசு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதுகுறித்து உங்கள் கருத்து?"

"இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் பி.ஜே.பி எதிர்பார்த்ததுதான். சசிகலா மற்றும் அவர்களின் உறவினர்கள் சேர்த்து வைத்துள்ள சொத்துக்கள் வருமானத்திற்கு உள்பட்டுத்தான் வாங்கப்பட்டதா? சோதனை நடைபெறும் நிறுவனங்கள், சொத்துக்கள் போன்றவை, வரம்புமீறி சேர்க்கப்பட்டவை என்பது தமிழகத்தில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரிந்ததுதான். 'சசிகலாவின் உறவினர்களுக்கு எத்தனை பினாமி நிறுவனங்கள் இருக்கின்றன' என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம். அப்படியிருக்கும்போது, அரசியல் உள்நோக்கத்துடன் வருமான வரித்துறை சோதனை நடத்துவதாகக் கூறுவதை ஏற்க முடியாது.

அரசியல்ரீதியான நடவடிக்கை என்றால், அதற்கு மேடைபோட்டு அரசியல் ரீதியான கருத்துக்களைப் பேசட்டும். ஆனால், இது அப்படியான நடவடிக்கை இல்லை. வருமான வரித்துறைக்குக் கிடைத்தத் தகவலின் அடிப்படையில், துறை சார்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஒரே நேரத்தில் 170-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்படுவதை அரசியல் உள்நோக்கம் உடையது எனக் கருதக்கூடாது."

"முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ், அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் ஏற்கெனவே வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஆனால், அதன் பின்னர் நடவடிக்கை என்பது இல்லையே? பயமுறுத்துவதற்காகவே இதுபோன்ற சோதனைகள் நடத்தப்படுவதாக பரவலான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?"

"வருமான வரித்துறையினர் சோதனை நடத்துவது மட்டுமே நமக்குத் தெரியும். சோதனையின்போது கைப்பற்றப்படும் ஃபைல்களை ஆய்வு செய்து, வழக்குத் தொடர்வதுபோன்ற சட்டரீதியான நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அவை வெளியுலகிற்கு தெரிவதில்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வருமான வரித்துறை என்பது தன்னாட்சி அதிகாரம் படைத்தது. சந்தேகத்தின் அடிப்படையில் யார் வீட்டிற்கும் வருமான வரித்துறை அதிகாரிகள்,செல்லலாம். அதுபோன்ற சோதனையில் சிக்கக் கூடியவர்களிடம் சரியான கணக்கு இருக்குமேயானால் வெளிப்படையாக சோதனைக்கு ஒத்துழைப்புக் கொடுப்பார்கள். உங்களிடம் கணக்குகள் சரியாக இருந்தால், அவற்றைப் பார்த்துவிட்டு அதிகாரிகள் போய்விடப் போகிறார்கள். அப்படி இருக்கும்போது அனைத்திற்கும் உள்நோக்கம் கற்பித்து, 'அரசியல்ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் இவ்வாறு சோதனை நடத்துகின்றனர்' என்று சொல்வது தவறு. தமிழகத்தில் தினகரன் அணியினர், என்ன வலிமையுடன் உள்ளனர்? பி.ஜே.பி அப்படி என்ன செல்வாக்கு இல்லாமல் இருக்கிறது? இந்திய அளவில் அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி செய்கிற கட்சி பி.ஜே.பி. எனவே, இதுபோன்ற நடவடிக்கைளை அரசியலுடன் தொடர்புபடுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன்." 

"சசிகலாவுக்கும் அவருடைய உறவினர்களுக்கும் பினாமி நிறுவனங்கள் இருப்பதாக ஆவணங்கள் வெளியாகின...​​​​​​ அப்போது எல்லாம் நடவடிக்கை எடுக்கவில்லையே? முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்படுவதால், இந்தநிலையில் அவர்களின் தூண்டுதலின்பேரில் வருமானவரி சோதனை நடைபெறுவதாகச் சொல்லப்படுகிறேதே?

"அப்படியெல்லாம் இல்லை...மத்திய அரசின் கறுப்புப் பண ஒழிப்பு ஆபரேஷன் தொடர்கிறது என்று ஏற்கனவே தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, அந்த நடவடிக்கையின் ஒருபகுதியாக வருமான வரிக்கணக்குகளை தாக்கல் செய்வோர் மற்றும் பினாமி நிறுவனங்களின் விவரங்களை அரசாங்கம் கடந்த ஒரு வருடமாகவே ஆவணப்படுத்திக் கொண்டு வந்துள்ளது. அதன் தொடர்ச்சியாகவே தற்போது நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன. 

குறிப்பாக, தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கை இருந்தபோதிலும் அங்கு ஒரு 'சர்ஜிக்கல் ஆபரேஷன்' தேவையாக இருந்தது. அதேபோன்றுதான் இன்று கறுப்புப் பணத்திற்கு எதிரான 'சர்ஜிக்கல் ஆபரேஷன்' தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அதன் ஒருபகுதியாகவே இந்த சோதனை நடைபெறுகிறது. சசிகலா மற்றும் தினகரனுக்குச் சொந்தமான நிறுவனங்களில் மட்டும்சோதனை நடத்தப்படவில்லை. அரசியல்வாதிகள் என்பதாலேயே சோதனை நடத்தக் கூடாது என்று சொல்ல முடியாது. தற்போது, சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் உறவினர்கள் நிறுவனங்களின் மீது வருமான வரித்துறையினருக்குசந்தேகம் வந்ததால், அவர்கள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்."

"கறுப்புப்பணம் மற்றும் பினாமி நிறுவனங்கள் தினகரன், சசிகலா குடும்பத்தினரிடம் மட்டும் தான் உள்ளதா?"

"ஒரு அரசியல்வாதியின் வீட்டில் சோதனை நடக்கிறது என்பதால் மற்ற அரசியல்வாதிகளையும் அட்டவணைப்படுத்தி, அவர்களின் பெயர்களை 'டிக்' செய்து சோதனை நடத்த முடியாது. வருமான வரித்துறைக்கு இந்த நேரத்தில் தினகரன் மீது சந்தேகம் வந்துள்ளது. அதன் அடிப்படையில் சோதனை நடத்தி வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் ஆட்சியில் உள்ளனர். அவர்களுடைய பிரச்னைகளை அவர்களே கையாள்வார்கள். அவர்களுக்குத் துணையாக பி.ஜே.பி. இருப்பதாகச் சொல்வதை ஏற்க முடியாது. 

தினகரனைப் பொறுத்தவரை, அவர் பெரிய மனிதரும் இல்லை. பி.ஜே.பி-க்கு சவாலான மனிதரும் இல்லை. மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டியது அவசியம். அதன் காரணமாக, கண்காணிப்பு வளையத்திற்குள் அவர்கள் கொண்டு வரப்படுவார்கள். அந்த வளையத்தில் இவர்களும் இருக்கிறார்கள்."  

" 'மத்திய அரசுக்கு எதிராக கருத்து சொல்பவர்கள் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது' என்ற குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக, அண்மையில் 'மெர்சல்' திரைப்படத்திற்கு ஆதரவாக பேசிய நடிகர் விஷால் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. அப்போதும், மத்திய அரசு மீது இவ்வாறான குற்றச்சாட்டு எழுந்ததே?"

"நிச்சயமாக இல்லை. '50 லட்சம் ரூபாய் வரி கட்டவில்லை' என்று விஷாலே ஏற்றுக் கொண்டார் என்பது அனைவருக்கும் தெரியும். விஷால் மத்திய அரசுக்கு எதிராகப் பேசினார் என்பதால், உடனடியாக வருமான வரித்துறையிடம் பேசி அதிகாரிகளை எப்படி வரவழைக்க முடியுமா? அவர் கருத்து தெரிவித்த நேரத்தில், சோதனை நடைபெற்றதால், அப்படியொரு சூழல் அமைந்து விட்டது. எனவே, கட்சித் தலைவர்கள் கையில் வருமான வரித்துறை இருக்கிறது என்று சொல்வதை ஏற்க முடியாது." 

"வருமான வரித்துறையும், ஊழல்கண்காணிப்புத்துறையும் மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே?"

"குற்றம் சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே இருக்கட்டும். மக்களுக்கு நல்லது நடப்பதற்காக, மக்களின் வரிப்பணத்தை வைத்திருப்பவர்கள் மீது வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று தி.மு.க. அறிவித்த அடுத்தநாளே ஸ்டாலின் வீட்டில் சொகுசுக் கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. சோதனை நடத்தியது. அப்போது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 'அந்த சோதனைக்கும், தி.மு.க கூட்டணியில் இருந்து விலகியதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை' எனக் கூறினார். அதையேதான் தற்போது பி.ஜே.பி-யும் சொல்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை." 

"முன்னாள் மத்திய அமைச்சர் சொன்ன பதிலை பிஜேபி ஏற்கிறதா?"

" 'ஸ்டாலின் வீட்டில் சி.பி.ஐ சோதனை நடத்தியபோது, கூட்டணியில் இருந்து திமுக விலகிய தருணம் என்பதால், அப்போது அப்படி அமைந்து விட்டது. அந்தத் தருணம் அப்படி அமைந்து விட்டது' என கூறியிருந்தார். அந்தக் கருத்தை பி.ஜே.பி. ஏற்றுக் கொண்டதாக அர்த்தம் இல்லை. ஆனால், இப்படி ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்தக் கூடிய சம்பவங்கள் அவ்வப்போது ஏற்படும் வாய்ப்புள்ளது என்பதற்காக, அந்தச் சம்பவத்தை சுட்டிக்காட்டினேன்" என்றார்.